Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

தண்ணீர்… தண்ணீர் …

Posted by அகத்தீ Labels:

 


தண்ணீர்… தண்ணீர் …

 

”காலை எட்டு மணி சுகர் லெவல் குறையும் நேரம்  பல் தேய்க்காமல்” டீ பிஸ்கெட் சாப்பிட்டாச்சு …

அப்படியே ஒரு மணி நேரம் கழித்து டிபன்  ஹோட்டலில் ஆர்டர் பண்ணி வரவழைத்து சாப்பிட்டாசு ..

காலைக்கடன் முடிக்காமல் பாட்டில் குடிநீரில் முகம் கழுவி புறப்பட்டாச்சு ..”

இப்படி ஒரு செய்தியை பதிவிட்டாலே ‘ என்னாச்சு இவருக்கு ?’ என கேள்வி எழும் .

 

எங்கள் அடுக்ககத்தில் சனிக்கிழமை காலை எல்லோரும் சந்தித்த பிரச்சனையை என் பாணியில் சொன்னேன் அவ்வளவுதான்.

 

எங்கள் அடுக்ககத்தில் முதல் நாள் வெள்ளிக்கிழமை இரவே தண்ணீர் பிரச்சனை … காலைக்குள் சரியாகிவிடும் என்கிற நம்பிக்கை… காலையில் கடும் நெருக்கடி சொட்டுத்தண்ணி இல்லை .. நான்கு கேன் தண்ணீர் விலைக்கு வாங்கித்தான் சனிக்கிழமை பொழுது ஓடியது … தண்ணீர் வாங்காவிடில் மேலே விவரித்த நிலைதான  ஏற்பட்டிருக்கும்.

 

அந்த அடுக்ககத்தில் வீடு வாங்கும் போது 2017 ல் பின்னால் ஏரி , சுற்றி சோளவயல் காற்றும் நீரும் சுற்றுச்சூழலும் ஈர்த்தன . பொதுவாய் பெங்களூரில் பல இடங்களில் அப்போதே தண்ணீர் பஞ்சம் . பின்னால் உள்ள ஏரி பெங்களூரின் மிகப் பழமையான ஏரிகளில் ஒன்று . இங்கு தண்ணீருக்கு தட்டுப்பாடு இருக்காது என நம்பினோம்.

 

இங்கு வந்த பிறகு ஒரு நாள் ஏரியிலிருந்து துர்நாற்றம் … மெல்ல விசாரித்த போது அருகிலுள்ள ஒரு மருந்து தொழிற்சாலை தன் ரசாயணக் கழிவுகளை ஏரிக்கு திருப்பிவிட்டுவிட்டது . அதன் பின் அது தொடர்கதை ஆனது .அதிகார வர்க்கம் வாங்க வேண்டியதை வாங்கிக் கொண்டு குறட்டை விட்டது . விளைவு ஏரிக்கரை ஓரம் செழிதோங்கி நின்ற மரங்கள் பட்டுப் போயின ; கருப்பு நிறமானது .பசுமை தொலைந்தது .மீன்கள் செத்து மடிந்தன . குப்பைக் கழிவுகளின் தேக்கமாக ஏரி சிதிலமடைந்தது.

 

 

ஏரியைத் தூய்மைப்படுத்த கோரிக்கை எழுந்தது .தன்னார்வ அமைப்புகள் வழக்கு தொடுத்தன .அவர்கள் வழியில் போராடின . அவர்களின் கையெழுத்து இயக்கங்களில் நான் கொஞ்சம் பங்கேற்றேன் . ஒருவழியாக நீதிமன்றம் தலையிட , அரசு மற்றும்  தனியார் கூட்டுறவுடன்  ஏரியை மீட்டு புனரமைத்து  படகுத்துறையுடன் பூங்காவாக மாற்றுவதாக அறிவித்தது .

 

அந்தப் பகுதி சோளவயல்கள் காணாமல் போயின , சுற்றி அடுக்குமாடி வீடுகள் முளைத்தன . எங்கள் அடுக்ககத்தில் 450 அடி யில் நான்கு ஆழ்துளைக் கிணறு உண்டு .இப்போது சுற்றி சுற்றி 800 அடி / ஆயிரம் அடி பலர் ஆழ்துளைக் கிணறுகள் தோண்டிவிட்டனர்

 .  ஆழ்துளாய் கிணறுகளை இருபதடிக்கு ஒன்று போட்டால் பூமி தாங்குமா ? இதனைக் கட்டுப்படுத்த சட்ட வழிகாட்டல் உண்டா ? கண்காணிப்பு உண்டா ? டேங்கரில் தண்ணீர் விற்கும் கம்பெனிகள் நான்கு வந்தன 1500 அடி ஆழ்குழாய் போட்டு உறிஞ்சினர் . கட்டுப்படுத்துவது யார் ? எங்கள் அடுக்கக தண்ணீர் மட்டம் குறைய ஆரம்பித்தது .

 

ஏரி மீட்பு பணி துவங்கி விட்டது .மகிழ்ச்சி . ரசாயண கழிவு கலந்த நீர் வடிக்கப்பட்டுவிட்டது … பணிகள் துவங்கி விட்டன . ஏரி இப்போது மைதானமாக காட்சி அளிக்கிறது .. பணி முடிய ஓராண்டாகும் என்கின்றனர் ..மேலும் நீளலாம்…ஏரியை மீட்டால் போதும்….

 

ஏரி தண்ணீர் வற்றியதும் எங்கள் அடுக்கக குழாய் கண்ணீர் சிந்தத் துவங்கிவிட்டன . சுமார் நூறு குடித்தனங்களுக்கு டேங்கரில் தண்ணீர் எனில் என்ன ஆகும் ?  இன்னும் நூறு வீடுகள் காலியாக உள்ளன .அவற்றிலும் குடிவந்தால் என்ன ஆகும் ?நீர் நிபுணர்கள் ஆலோசனை ஆய்வு என தொடங்கி உள்ளனர் .. தற்காலிகமாக டேங்கரே கதி . மெயிண்டனன்ஸ் சார்ஜ் அதிகரிக்கலாம் . இது வளர்ச்சியின் சவால்தான் . ஆனால் எச்சரிக்கை .

 

நாங்கள் இங்கு வந்ததுதான் 2017 ஆனால் 2010 லேயே இங்கு பணி துவங்கி விட்டது . ஆழ்துளை கிணறுகள் கட்டுமானம் தொடங்கி இன்றுவரை தண்ணீர் தந்துள்ளன. இப்போது அவை சோர்ந்துவிட்டதோ !

 

இது ஓர் அடுக்ககப் பிரச்சனை மட்டுமல்ல ; போதிய திட்டமிடல் இன்றி வீங்கிப் பெருக்கும் புறநகர்கள் எல்லாம் சந்திக்கும் சவால் . வெள்ளமும் வறட்சியும் இயற்கையானவை .அதில் திட்டமிடலின்றி சிக்கிக் கொள்ளும் வீக்கம் வளர்ச்சியா ? அரசுகள் யோசித்து முறைப்படுத்த வேண்டாமா ?

 

பெங்களூர் இப்போதே போக்குவரத்து நெரிசல் மேலும் பலபகுதிகளின் தண்ணீர் தட்டுப்பாடு டேங்கர் லாரியே கதி  மழை வந்தால் திணறல் … வருங்காலம் மிகவும் சவாலாக இருக்கும் என எச்சரிக்கின்றனர் வல்லுநர்கள் . என்ன செய்யப் போகிறார்கள் ஆட்சியாளர்கள் ?

 

சுபொஅ.

02/08/25.


நானும் ஒரு காலத்தில் ஊடகத்தில்

Posted by அகத்தீ Labels:

 

நானும் ஒரு காலத்தில் ஊடகத்தில் பணியாற்றியவன் என்கிற முறையில் பழைய ஊடக நண்பர்களோடு தனிப்பட்ட முறையில் உரையாடிக் கொண்டிருந்த போது மனது ரொம்பவே வலித்தது . ஊடகங்கள் இந்த அளவா சீர்கெட்டுப் போயிருக்கு என எண்ணிக் கலங்கினேன்.

 

முதலில் ஊடகத்தில் பணியாற்றும் ஊழியர்களின் பணிப் பாதுகாப்பின்மையும் , ஊதிய விகிதமும் .பணிச்சூழலும் கவலை அளிக்கிறது. கிட்டத்தட்ட அத்துக்கூலி போல் ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் . வலுவான போராட்ட குணமிக்க தொழிற்சங்க அமைப்பு கிட்டத்தட்ட இல்லாமல் போய்விட்டது .

 

செய்தி என்பது வாங்கும் காசுக்கு ஏற்ப என்றாகிக் கொண்டிருக்கிறது ; அதாவது ஊடக முதலாளிகள் வாங்கும் தொகைக்கு ஏற்ப எனப் புரிந்து கொள்க . முதல்வர் போன்ற ஒன்றிரண்டு பேர் பேட்டிகளே காசு வாங்காமல் செய்தியாகும் அதுவும் அந்தந்த ஊடக அரசியல் சார்புக்கு ஏற்ப. மற்றபடி யார் பேட்டி ஆயினும் காசை அள்ளிக் கொடுக்காமல் வராது . அதிலும் ஹோட்டல் ,பிரைவேட் ஹாஸ்பிடல் இவற்றில் காம்போ  என்பது போல் இங்கும் பலவித காம்போக்களை/ பேக்கேஜ்களை மீடியா முதலாளிகள் வைத்துள்ளனர் .

 

அதேபோல் யூடியூப் சேனல் ஒவ்வொன்றுக்கும் யார் யார் பினாமி என பழைய நண்பர்கள் சொல்லும் போது அதிர்ச்சியாக இருக்கிறது . நடுநிலையாவது புண்ணாக்காவது ? சொல்லுகிற செய்தியில் ஒன்றிரண்டு தகவலாவது சரியாக இருந்தால் அது குதிரைக் கொம்புதான் .

 

ஒரு காலத்தில்  ஒரு சிறு பகுதி செய்தியாளர்கள் காசுக்கு மண்டையைச் சொறிவார்கள் ,அது கேவலமாகக் கருதப்படும் . இன்று மதிப்புக்குரிய ஏடுகளின் செய்தியாளர்களும் வாங்கத் தவறுவதில்லை .அதை வாங்கி பங்கு போட்டுக் கொடுக்க ஏஜென்சி போல் செயல்படுபவர் சிலர் இருக்கிறார்களாம். ஊடக முதலாளிகளே இதை சம்பளக் குறைப்பின் மூலம்  ஊக்குவிப்பதாகச் சொல்லப்படுகிறது .

 

ஊடக தர்மம் .ஊடக அறம் . என்பதெல்லாம் வெறும் சொற்சிலம்பமாகிக் கொண்டிருக்கிறது . அறம் நடுநிலை என வேடம் பூணும் ஊடகங்கள் பலவும் கூட பின்னால் இருந்து இயக்குபவர்கள் செயல்திட்டத்தோடுதான் இணைந்து செயல்படுகின்றனவாம் .

 

காரல் மார்கஸ் சும்மாவா சொன்னார் , “ ஒவ்வொரு சொல்லுக்குப் பின்னாலும் ஓர் வர்க்கத்தின் நலன் ஒளிந்து கொண்டிருக்கிறது.” இங்கு வர்ண நலமும் ஒளிந்து கொண்டிருக்கிறது என்று சேர்த்துப் புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது .

 

சுபொஅ

20/08/25

ஈகோ ....

Posted by அகத்தீ Labels:

 


அண்மையில் ஸ்ரீரசாவும் அருணனும் உரிய அங்கீகாரம் கிடைக்காத நிலை குறித்து பொதுவான கருத்தொன்றை முகநூலில் பதிவிட்டிருந்தனர் . அதே போன்ற ஓர் கருத்தை தி.க வைச் சார்ந்த பெல் ஆறுமுகமும் பதிவிட்டிருந்தார். அதையொட்டி பலரும் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தனர் . பொதுவாழ்வில் ஈடுபடும் பலரும் சந்திக்கும் பிரச்சனை இது .

 

ஆரம்பச் சூழலில் தீவிரமாக செயலாற்றும் போது இயக்க வளர்ச்சியின் நிர்ப்பந்தத்தால் எதிர்பாராமலே அங்கீகாரம் கிடைத்துவிடும் . மேலே செல்லச்  செல்ல தலைமையின் விருப்பு வெறுப்பு ஈகோ எல்லாமும் சேரும் , மேலும் பல்வேறு அக ,புறக் காரணிகளும் வினைப்படும் , விளைவு ஒரு கட்டத்தில் தேங்க நேரிடும் .அப்போது சோர்வு தட்டும் .பலர் தடுமாறும் இடமும் தடம்மாறும் இடமும் அதுதான் .ஆனால் அந்த தடுமாற்றமும் தடமாற்றமும் அதுவரை போற்றி பின்பற்றிய சித்தாந்தத்தை விட்டு விலகச் செய்துவிடும் .இச்சூழலில் சித்தாந்த உறுதியோடு தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு தம்மால் இயன்ற பணியைத் தொடர்வோரே லட்சியவாதி ஆவார் . ஒரு பேட்டியில் ஃபிடல் காஸ்ட்டிரோ கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஈகோ பெரும் சவாலாக உள்ளது என்று வருந்துவார் . கட்சிகளில் மட்டுமல்ல நிறுவனங்கள் , தலைமை இடங்கள் எங்கும் ஈகோ பெரும் தலைவலியாகவே இருக்கிறது . இது மனித உறவுகளின் பிரச்சனை .

 

இதனைப் பற்றி பேசிக்கொண்டிருந்த போது ஆன்மீகம்தான் இதற்கு ஒரு மருந்து என்றார் ஓர் அன்பர் . மதபீடங்களிலும் வெடித்து குமுறும் ஈகோ குறித்து சுட்டியபோது மவுனமானர் .மேலும் சொன்னார் ஆச்சார அனுஷ்டானங்களில் மூழ்கியோரும் யோகா தியானம் என அலைவோர்களும் உட்சபட்ச ஈகோ வெளிப்படுத்துவதை ஒப்புக் கொண்டார்.

 

விமர்சனம் சுயவிமர்சனம்தான் சிறந்த மாமருந்து .மார்க்சியம் வழிகாட்டியது .ஆயின்  பிறரை  விமர்சனம் செய்யும் போது விரியும்  இதயம் சுயவிமர்சனம் என்கிற போது ஒட்டிச் சுருங்கிவிடுகிறது .அந்த மருந்து வீரியமற்றுப் போகிறது . அறிவுத் திருக்கோயில் வேதாத்திரி மகிரிஷி அகத்தாய்வு என்கிற ஒன்றை தம் சீடர்களுக்கு அறிமுகம் செய்தார் . ஆனால் அங்கும் ஓர் சடங்காகாகவே மாறிப்போனது . கிறுத்துவ மதத்தில் பாவமன்னிப்பு கேட்பது கிட்டத்தட்ட வெறும் கேலிக்கூத்தானதுபோல்தான்.

 

ஆக .ஈகோவுக்கு எதிரான போராட்டத்தில் விமர்சனத்துக்கு செவி கொடுப்பதும் சுயவிமர்சனமாய் வாய்திறப்பதுக்கும் மாற்று வேறு இல்லையே !

 

செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்

கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.   (குறள் .389)

 

கேட்கக்கூசும் விமர்சனங்களையும் பொறுமையோடு செவிமடுத்து தன்னை சுயவிமர்சனம் செய்து கொள்ளும் பண்புதான் பொதுவாழ்வில் மிகத்தேவை .ஆயின் அதுவே இங்கு பெரும் பற்றாக்குறை .என் செய்ய ?

 

[ இவை ஒரு சகதோழரோடு அலைபேசியில் உரையாட நேர்ந்த போது பரிமாறிக்கொண்ட கருத்துகள் . தனிப்பட்ட முறையில் யாரையும் சுட்டுவன அல்ல ]

 

சுபொஅ.

02/07/25.


ரெளத்திரம் பழகிக்கொண்டே இருக்கிறேன்……

Posted by அகத்தீ Labels:

 


ரெளத்திரம் பழகிக்கொண்டே இருக்கிறேன்……

 

நேற்று முழுவதும் என் பிறந்த நாளுக்கு [15/6/1953] வாழ்த்துமழை பொழிந்த அனைத்து உள்ளங்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்.தோழமை அன்பில் திக்குமுக்காடிப் போனேன். நன்றி ! நன்றி! நான் ஓர் கம்யூனிஸ்ட் என்பதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி [ மார்க்சிஸ்ட்] உறுப்பினர் என்பதுமே என் மகிழ்வும் பெருமையும்.

 

இந்த ஆண்டு பிறந்த நாளை வர்ஜீனியாவில் பேரப்பிள்ளைகளோடு கழித்த பின்னார் 16 ஆம் தேதிதான் ஊர்திரும்பத் திட்டமிட்டிருந்தோம் . எதிர்பாராவிதமாக கிழே விழுந்து என் இணையருக்கு இடது கை தோள்பட்டை அருகே முறிவு ஏற்பட்டதால் அவசரமாக ஆறாம் தேதியே புறப்பட்டு பெங்களூர் வந்து அறுவை சிகிட்சை செய்ய வேண்டியதாயிற்று . இப்போது நலம் மீண்டு வருகிறார். வாழ்வும் போராட்டமும் பிரிக்கவே முடியாதது . இன்பமும் துன்பமும் இரவும் பகலுமாய் மாறி மாறி கடந்து போய்க்கொண்டே இருக்கும் .இதுதானே வாழ்க்கை .

 

நாங்கள் அவசரமாக ஊர் திரும்ப நேரிட்ட போதும் என் மகன் வழிப் பேரன் முகிலன் [ வயது 11 ]அவசர அவசரமாக ஒரு மணி நேரத்தில் வரைந்து அளித்த ஓவியமே இப்பிறந்த நாளுக்கு நான் பெரிதும் மகிழும் பரிசாகும் . இங்கே அந்த ஓவியத்தைப் பகிர்ந்துள்ளேன் மகிழ்வோடு . என் மகள் வழிப் பெயரன்  சஞ்சை ஹஷ்மி பெரியாரை அம்பேத்கரை மார்க்ஸைப் பயிலத் தொடங்கி இருக்கிறான் என மகள் சொல்லும் செய்தியைவிட எனக்கு  இனிய பிறந்த நாள் பரிசு உண்டா ? பேத்திகள் சங்கமித்திரா ,மேகா சொன்ன வாழ்த்தினும் பெரிதுண்டோ !

 

என் ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் முகநூலிலும் அலைபேசியிலும் என்னை வாழ்த்தி மகிழும் அன்புத் தோழர் K.சின்னையா குரலை இனி கேட்கவே முடியாது என்பதே இந்நாளில் என் பெரும் துயரம் .என் பேரிழப்பு.

 

வயது ஒன்று கூடிவிட்டது . அனுபவம் மேலும் பக்குவப்படுத்திவிட்டது . ஆனாலும் உலகிலும் இந்தியாவிலும் நிலவும் சமூக அரசியல் சூழல் நெஞ்சம் பதைக்க வைக்கிறது . யுத்த வெறி ,சுரண்டல் வெறி ,மதவெறி ,சாதிவெறி,இனவெறி,நிறவெறி ,தேசியவெறி,மொழிவெறி ,பிரதேசவெறி ,என எந்தப் பெயரால் வெறி கொள்ளினும் வெறுப்பு இருள் சூழும் ;அன்பு பலியாகும்;மானுடம் தேம்பி அழும். இதற்கு எதிராய் ரெளத்திரம் பழகிக்கொண்டே இருக்கிறேன். போரற்ற உலகம் , சுரண்டல் எதிர்ப்பு , சமத்துவம் , அறிவியல் பார்வை ,சமூகநீதி ,பகுத்தறிவு,பாலின சமத்துவம், மானுட அன்பு , ஆதிக்க எதிர்ப்பு ,மூடநம்பிக்கை எதிர்ப்பு , இவற்றை என்னால் இயன்றவரை பேசிக் கொண்டே இருக்கிறேன் . எழுதிக் கொண்டே இருக்கிறேன் .இனியும் தொடரும் . இதுவே என் பிறந்த நாள் செய்தி.

 

வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் மீண்டும் நெஞ்சம் நிறைந்த நன்றி !

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

16/06/25.

 

 


அண்டா வாயும் அகல வாயும்

Posted by அகத்தீ Labels:

 




அண்டா வாய் … அகல வாய்…..

 

 

எந்த ஊருக்கு போனாலும் அந்த ஊரு சாப்பாட்டை ருசி பார்த்துவிட வேண்டும் .  “நண்டு திங்கிற ஊரில் நடுகண்டம் நமக்கு” என்பது சொலவடை . உங்களுக்கு ஏதேனும் மருத்துவரீதியான ஒவ்வாமை இருக்குமெனில் மட்டுமே தவிர்க்கலாம் என்பது பொதுவிதி .

 

ஆகவே ,நீங்கள் அமெரிக்கா போனால் அங்கு ஸ்பெஷல் ஹும் பர்க்கர் [HUMBURGER] தான்  .  அதுவும் மாட்டுக்கறி பன்றிக்கறி பர்க்கர்தான் .  வெஜ்ஜெல்லாம் கிடையாது .அதைச் சாப்பிடாமல் வரலாமோ ! ஆயின் ,அதைச் சாப்பிட உங்களுக்கு முன்கூட்டியே ஸ்பெஷல் பயிற்சி தேவை . அதாவது உங்கள் வாயை அண்டா வாயாகவும் அகல வாயாகவும் ஆக்கிப் பழக வேண்டு .மூன்று நான்கு அங்குலம் வாயைத் திறக்காமல் பர்க்கரை வாயில் நுழைக்கவே முடியாது .அமெரிக்காவில் பலர் இரண்டு கையாலும் வாயில் பர்க்கரை திணிப்பதை பார்த்தபோது எனக்கு அப்படித்தான் தோன்றியது .

 

சரி ! வாயைக் கிழிக்கும் பயிற்சி தேவை இல்லை . காபி மட்டும் குடிக்கலாம் எனில் அதற்கும் “ நீட்” தேர்வு எழுத வேண்டும் . சும்மா சொல்லவில்லை . ஒரு நாள் ஒரு காபி ஷாப்பில் என் மருமகள் எங்களுக்கு காபி ஆர்டர் செய்த போது பார்த்தேன் . சும்மா காபி என கேட்க முடியாது . உடனே கம்ப்யூட்டர் நிறைய கேள்வி கேட்கும் . உங்களுக்கு அந்த ரக இந்த ரக காபி கொட்டையா எந்த ரக காபி கொட்டை , பாலூற்றியா ஊற்றாமலா , பாலெனில் எந்தப்பால் மாட்டுப்பாலா அந்தப்பாலா இந்தப்பாலா , சர்க்கரை வேண்டுமா வேண்டாமா , சர்க்கரை வேண்டுமெனில் அந்தச் சர்க்கரையா இந்தச் சர்க்கரையா எந்தச் சர்க்கரை , சூடாகாவா ஐஸ் காபியா , அந்தக் கோப்பையிலா இந்தக் கோப்பையிலா  இப்படி அது கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லி முடிக்கும் முன் காபி குடிக்கும் ஆசையே போய்விடும் போலிருக்கிறது . [ ஒரு சினிமாகூட இதைக் கேலி செய்து வந்துள்ளது ]

 

இன்னொரு நாள் சப்வே என்ப்படுகிற நீண்ட மெக்சிக்கன் வெஜ் பர்க்கர் ஆர்டர் போட  மருமகளுடன் உடன் இருந்தேன் அப்போது கம்ப்யூட்டர் கேட்ட கேள்விகளுக்கு என்னிடம் பதிலே இல்லை ; மருமகளிடம் கேள்விகளைத் தள்ளிவிட்டுவிட்டு நான் வேடிக்கை மட்டும் பார்த்தேன் .  நெடிய பரிட்சைக்கு பின்தான் பர்க்கர் வந்தது .அங்கு எல்லாமும் அப்படித்தான் வரும் .

 

 

ஆனால் ஒன்று ,வடிவேல் ஊத்தப்பம் ஆர்டர் சொன்ன கதைபோல் இருக்காது ; நாம் கேட்டபடியே வரும் .

 

எந்த நாட்டுக்குப் போனாலும் அந்த நாட்டு ஸ்பெஷல் என்னவென்று கேட்கவும் சாப்பிடவும் கூட பொது அறிவு தேவைப்படுகிறது …

 

கோமியம் குடிக்கவும் மாட்டுச் சாணி உருட்டி விழுங்கவும் மட்டும் பகுத்தறிவு தேவைப்படாது . ஆமாம். ஆமாம்….  

 

சுபொஅ.

03/06/25

வர்ஜீனியா .

 

 


வள்ளுவன் தமிழ் மையம்

Posted by அகத்தீ Labels:

 





 

 


 “இடுக்கண் வருங்கால் நகுக அதனை

அடுத்தூர்வது அஃதொப்ப தில்.”   ( திருக்குறள் : 621)

 

துன்பங்களைக் கண்டு கலங்காதிரு ! முகமலர்ச்சியோடு எதிர்கொள் ! அதுவே அதனை வெல்வதற்குத் தக்க வழி . அடுத்து இன்பம் காத்திருக்கும் .

 

இன்று என் மனம் ஏனோ இதில்  நிலைகுத்தி நிற்கிறது .  

 

 சனிக் கிழமை [ 31/05/25 ] வர்ஜீனியாவில் எமது நாள் அப்படித்தான் நகர்ந்தது சற்று எதிர்மறையாக . இன்பமும் துன்பமும் மாறி மாறி வருவதுதானே !

 

ஆம். அன்று காலை எழுந்தது முதல் இரவு உணவு வரை . ஒரே உற்சாகம் .மகிழ்ச்சி . அடுத்தூர்ந்தது .. ? கடைசியில் பார்ப்போம். அது சொந்தக் கதை .

 

இங்கு ஓர் புகைப்  படத்தில் ஏடுகள் தொங்கிக் கொண்டிருக்கும் . அது எழில் கொஞ்சும் “திருக்குறள் ஆலமரம்” . அதில் தொங்கும் 1330 திருக்குறள்களையும் தம் கையால் வரைந்தவர்கள் மாணவச் செல்வங்கள் . ஆசிரியர்களும் இதர தன்னார்வலர்களும் கூடி வடிவமைத்த இந்த திருக்குறள் ஆலமரத்தை வ.த.மை ஆம் வர்ஜீனியாவில் உள்ள  “வள்ளுவன் தமிழ் மையம்”  சாதித்திருக்கிறது .

 

15 ஆண்டுகளுக்கு முன் 15 மாணவர்களுடன்  துவக்கப்பட்ட  வள்ளுவன் தமிழ் மையம் எனும் தமிழ் கற்றுக் கொடுக்கும் பள்ளி இன்று முதல் நிலை முதல் எட்டாம் நிலை வரை 700 மாணவர்களுடன் ஆலமரமாக வளர்ந்துள்ளது . சனிக்கிழமை தோறும் நடக்கும் இப்பள்ளியில் முழுக்க முழுக்க ஊதியமின்றி உழைக்கும் ஆசிரியர்கள் தன்னார்வலர்கள் தன் பிள்ளைகளுக்கு தமிழ் கற்றுக் கொடுக்க ஆர்வம் காட்டும் தமிழ் மக்களின் பேராதரவு இவையே அடிஉரம் .

 

இப்பள்ளியின் 15 வது ஆண்டுவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது . அமெரிக்க தேசிய கீதம் அதைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்ந்து என  எடுத்த எடுப்பிலேயே தன் பண்பாட்டு முத்திரையை வலுவாய் பதித்தது . நிகழ்வின் கருப்பொருள் வள்ளுவமே . வள்ளுவமும் தமிழுமே நிகழ்வு நெடுக ஓங்கி ஒலித்தது .

 

மாணவ மாணவிகளின் ஒவ்வொரு கலைநிகழ்வுக்கும் இடையில் மாணவர் இருவரின் அறிமுக உரையாடலும் வள்ளுவம் சார்ந்தே அமைந்தது . மாணவர் பங்கேற்கும் ஓர் ‘மினி பட்டி மன்றமும் ‘ இடம் பெற்றது .அதுவும் வள்ளுவம் சார்ந்ததே .

 

மொத்தம் 44 நிகழ்வுகள் இடம் பெற்றன ஒவ்வொன்றும் தமிழ் தமிழ்  என முழங்கின .தமிழ் பண்பாடு மிளிர்ந்தது .பறை , ஒயில் ,கும்மி , முளைப்பாரி ,காவடி , பொய்க்கால்குதிரை ,சிலம்பம் , வாய்ப்பாட்டு ,சேர்ந்திசை ,பரதநாட்டியம் ,கர்நாடக இசை , அறிவியல் விழிப்புணர்வு என கலக்கி எடுத்தனர் . சாதி ,மத வண்ணம் எங்கும் பூசிக்கொள்ளாத தமிழ் உணர்வாக வள்ளுவன் உணர்வாக மொத்த நிகழ்வும் எம்மைக் கட்டிப் போட்டது . ஏதேனும் ஒன்றை மட்டும் தனியே குறித்தால் நிகழ்வின் ஊடும் பாவுமாய் இருந்த மனிதமும் பண்பாடும் முழுதாய் பிரதிபலிக்காது என்பதால் பொதுவாய்ச் சொன்னோம். ஆயினும் நிகழ்வு முழுக்க நாட்டுபுறவியலும் தமிழும் தமிழ் பண்பாடும் நீக்கமற நிரவி இருந்தது குறிபிடத்தக்கது . ஆகவேதான் இறுதிவரை கைதட்டலும் ஆரவாரமும் அரங்கில் நிரம்பி வழிந்தோடியது .

 

என் பேரன் முகிலன்  காவடி ,பொய்க்கால்குதிரை ஆடியதும் ; என்  பேத்தி மேகா பறை இசைக்கு ஆடியதும் எமக்கு பெரு மகிழ்ச்சி . மிகுந்த மனநிறைவு.

 

 

அமெரிக்க செனட் உறுப்பினர் . நாடாளுமன்ற உறுப்பினர் . தூதுரக அதிகாரி உட்பட பலர் சிறப்பு விருந்தனராக வந்து கலந்து கொண்டதும் ; செனட் சார்பாக வள்ளுவன் தமிழ் மையத்தைப் பாராட்டி பட்டயம் வழங்கியதும் குறிப்பிடத்தக்கது .  எட்டாம் நிலை தேர்வு பெற்றவர்களுக்கு பட்டம் அளிக்கப்பட்டது . தமிழ்நாடு அரசு வழிகாட்டுதலோடும் பாடதிட்டங்கள் , தேர்வு எல்லாம் வடிவமைக்கப்படுவதால் அமெரிக்க கல்வித்துறையும் இங்கு பெறும் சான்றிதழை அங்கீகரிக்கிறது . தனிப்பட்ட யாரையும் முன் நிறுத்தாமல் குழுவாக அனைவரும் இயங்கியதும் வெளிப்பட்டதும் அந்த அமைப்பைப் பாராட்டத் தோன்றியது .

 

வர்ஜீனியாவிலும் அமெரிக்காவின் பல மாநிலங்களிலும் இதுபோல் தமிழ் கற்பிக்க பலவேறு பள்ளிகள் நடத்தப்படுவதாக அறிகிறோம்.

 

வள்ளுவன் தமிழ் மையம் போல் மற்றவைகளும் இயங்குமெனில் நிச்சயம் மகிழ்ச்சியே !

 

காலை 11 மணிக்கு துவங்கிய நிகழ்வுகள் இரவு 7 மணிக்குத்தான் நிறைவுற்றது [ இடையில் மதிய உணவு , மாலை சிற்றுண்டி  இரவு உணவும் அங்கேதான் ஏற்பாடு]

 

இந்த நிகழ்வுகளை ஒருங்கிணைத்த அனைவருக்கும் பாராட்டுகள்

 

காலை முதல் மாலைவரை வர்ஜீனியாவில் இருக்கும் உணர்வே யாருக்கும் இல்லை .தமிழ்நாட்டில் ஒரு பள்ளியில் கூடிக் கொண்டாடிய மன நிறைவு .

 

########################

 

இரவு உணவை முடித்து அரங்கிலிருந்து புறப்படும் போது என் இணையருக்கு சின்ன விபத்து . உடன் மருத்துவ சிகிட்சையின் பொருட்டு எம் பயணத்தை பத்துநாட்கள் முன்நகர்த்த [ ஜூன்5 , 6 ]வேண்டியதாகிவிட்டது . ஜூன் 6 இரவு பெங்களூர் வந்து சேர்வேன் .ஆபத்தொன்றும் இல்லை . பயப்படத் தேவை  இல்லை . அமெரிக்க மருத்துவத்துறையின் கோரமும் கொடூரமும் பகற்கொள்ளையும் புரிந்தது .பிறகு எழுதுவேன்.   

 

ஆரம்பத்தில் சுட்டிய குறளுக்கு மீண்டும் செல்கிறேன்.

 

சுபொஅ.

02/06/26

வர்ஜீனியா .

 



RIP / BABY BIRD / MAY 19. 2025 . VERGINIA “

Posted by அகத்தீ Labels:

 


முதல் நாள் மாலை  மாலை நேரம் பள்ளி பஸ்ஸில் இருந்து திமுதிமுவென இறங்கிய குழ்ந்தைகள் இருபதடி தள்ளி நின்றனர் . உச்சுக்கொட்டினர் .சில குழந்தைகள் அழுதன . என்ன நடக்கிறது என எட்டிப் பார்த்தேன். இரண்டு அங்குல நீளம்கூட இராத பிறந்த குட்டு குருவி ஒன்று இறந்து கிடந்தது. என் பேரனும் பேத்தியும் பாவம் என வருந்தினர். வீடு வந்துவிட்டோம்.

 

மறுநாள் பள்ளிக்கு போகும் போது அதே இடத்தில் குழந்தைகள் கூட்டம் . செடிகளில் இருந்து பூக்களைப் பறித்துக் கொண்டு அவ்விடம் நோக்கி ஓடுகின்றனர் .

 

ஆர்வத்தோடு நானும் சென்றேன் . ஒரு செடியோரம் மண்ணைக் குவித்து ஒரு குட்டி சமாதி .அதன் மீது ஒரு சிறிய அட்டை .அந்த அட்டையில்  “ RIP / BABY BIRD / MAY 19. 2025 . VERGINIA “ கறுப்பு மையால் எழுதி சொருகி இருக்கிறது . குழந்தைகள் அதன் மீது மலர்களைத் தூவி அஞ்சலி செய்கின்றனர்.

 

ஒரு நிமிடம் உறைந்துவிட்டேன் . என் பேரனும் பேத்தியும் மலர் பறித்து வந்து அஞ்சலி செய்தனர் .சிலிர்த்தேன்.

 

என்னுள் ஒரு கேள்வி விஸ்வரூபமெடுக்கிறது . ஓர் குட்டி குருவியின் மரணத்துக்கு வருந்தி கண்ணீர் விடும் குழந்தைகள் மனம் எங்கே ? ஆயிரக் கணக்கான குழந்தைகளுக்கு உணவை எடுத்துச் செல்லவும் வழிவிடாமல் காஸாவை முற்றுகையிட்டு குழந்தைகளைக் கொல்லும் இஸ்ரேலிய ஜியோனிச யூதவெறி எங்கே ?

 

சுபொஅ.

22/05/25.

வர்ஜீனியா .


அமெரிக்காவும் அப்படித்தான் .

Posted by அகத்தீ Labels:

 


அண்மையில்  படுக்கை அறை ,அடுக்களை ,கழிப்பிடம் ,வரவேற்பறை உள்ளடங்கிய நகரும் கார் ஒன்றில் என் நண்பர் கதை சொல்லி பவா செல்லதுரை அமெரிக்காவில் 8000 கி.மீ சாலை வழிப் பயணம் மேற்கொண்டு ஊர் திரும்பி இருக்கிறார் . அவர் ஒரு நிகழ்வில் பேசியது யூ டியூப்பில் காணக் கிடைக்கிறது .

 

அதில் அமெரிக்காவில் விரும்பிய போது டீ காபி குடிக்க தெருவோர டீக்கடைகள் இல்லாததையும் , இங்கு வழங்கப்படும் உணவில் காரசாரம் இல்லாமை குறித்தும் சொந்த ஊர் பெருமிதத்தையும் பேசியுள்ளார் . இது பொதுவானது . நான் இங்கு மகனுடன் சாதா காரில் பயணிக்கும் போதும் இதே உணர்வு எனக்கும் ஏற்பட்டது . அது பிழையில்லை .

 

ஆனால் அவரது பதிவினை சிலர் வன்மத்தோடு விமர்சிப்பதை ஏற்க முடியவில்லை .

 

புதிய சூழல் எல்லோருக்கும் ஒரேப் போல் இருக்காது .

 

அதே நேரம் ஒரு நாட்டில் சில நாட்கள் பயணித்துவிட்டு ஒரு சில இடங்களை பார்த்துவிட்டு இதுதான் அந்த நாடு என சொல்லிவிடக்கூடாது . ஒரு நாட்டை பற்றி அறிய அங்கேயே தங்கி மனம்போல் பயணித்து மக்களிடம் ஊடாடி வரலாறு பண்பாட்டை படித்தறிந்தே முடிவுக்கு வர வேண்டும் .

 

பொதுப்பார்வையில் ஒவ்வொரு நாட்டிலும் பயணிக்கும் போது சில நல்ல அம்சங்கள் பளிச்செனக் கண்ணில் படும் .அதுபோல் சில அம்சங்கள் பளிச்சென உறுத்தவும் செய்யும் . இரண்டும் கலந்ததுதான் எல்லா நாடும். அமெரிக்காவும் அப்படித்தான் .

 

இந்த ஊரின் தூய்மையும் , அகலமான சாலை வசதியும் , பசுமைச் சூழலும் போக்குவரத்து விதிகளை மதிக்கும் மாண்பும் வியக்க வைக்கிறது. அவர்களுக்கு விரிந்த நிலப்பரப்பும் , மக்கள் தொகை அடர்த்தி மிகக் குறைவாக இருப்பதும் நல் வாய்ப்பு . அது வந்தேறிகளின் நாடு என்பதால் சொந்தப் பண்பாடு எனக் குறிப்பிட்டுச் சொல்ல ஏதுமில்லை . அதன் சொந்த பூர்வகுடிகளான செவ்விந்தியர்களை லட்சக்  கணக்கில் அழித்து அதன் இரத்தச் சகதியில் எழுப்ப்பட்ட நாடல்லவா அது ? அதன் வரலாறும் சில நூறு ஆண்டுகள் தாமே ! ஆகவே ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட நவீன நகர நாகரீகம் வேருன்ற முடிந்தது . அதன் ஒழுங்கமைப்பு உங்களை நிச்சயம் கவரவே செய்யும் .

 

பெரும்பாலும்  “இயந்திர வாழ்க்கைதான்” இங்கு என்பது என் தனிப்பட்ட கருத்து . இங்கே தனிமனித சுதந்திரம் அதிகம் பேசப்படுவதற்கும் மனிதன் தனித்தனி தீவுபோல் தாமரை இலைத் தண்ணீராய் வாழ்வதும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதா ? சமூக உளவியல் ஆய்வாளர்கள் விடை யிறுக்க வேண்டிய கேள்வி .

 

கருக்கலைப்பு இங்கு சட்டவிரோதமானது .  கிறுத்துவ மதப் பழமைவாதக் கண்ணோட்டம் . இதனால் இங்கு பெண்கள் சுமக்கும் வலி அளவிட முடியாது . இதன் விளைவான ஆணாதிக்கமும் இங்கு மிகப்பெரும் சாபக்கேடாய் பெண்கள் வாழ்வில் இடியாய் விழுகிறது . அன்றாடம் பெருகும் தனித்துவாழும் பெண்களின் போராட்ட வாழ்வும் வலியும்  இச்சமூகத்தின் பெருமையா ? கண்ணீரா ?

 

குழந்தைகள் உரிமைக்கு முக்கியத்துவம் கொடுப்பது வியக்க வைக்கிறது . ஆயினும் நம் பண்பாட்டு வழியில் சிலவற்றோடு உடன்பட சிரமமாக இருக்கிறது . குழந்தைகளை அடிப்பது மட்டுமல்ல கண்டிப்பதுகூட விசாரணைக்கு உள்ளாகிவிடும் . குழந்தைகள் தனித்து தூங்க வேண்டும் , சாப்பிடுவது குளிப்பது எல்லாம் சுயமாக செய்ய பழக்க வேண்டும் .சுயசார்பு நல்லதுதான் .ஆயின் அது இயந்திரத்தனமாக செய்யப்படுகிறதோ ! அல்லது நாம் செக்குமாட்டுத் தனத்திலிருந்து விடுபட முடியாமல் தவிக்கிறோமா ? அங்கு வாழும் இந்தியர்கள் பிரச்சனை இது .

 

அங்கு பள்ளிப்பாடங்களில் குடும்பத்தின் முக்கியத்துவம் வலியுறுத்தப்படுகிறது . ஃபேமிலி ட்டிரி [ family tree ] எனும் குடும்பப் பாரம்பரியம் குறித்த சிந்தனை செய்முறைத் தேர்வு வழி தேடி கண்டுபிடிக்க படம் வரைய நிர்ப்பந்திக்கிறது . நம் நாட்டில் தந்தை வழிப் பாரம்பரியம் மட்டுமே பேசப்படும் சூழலில் இங்கு இருபக்க பாரம்பரியமும் தேடப்படுவது நல்லது . அதுபோல் வேற்றுமை பாராட்டக் கூடாது என்கிற ஜனநாயக மாண்பு பள்ளி பாடத்திட்டத்திலேயே ஒரு பகுதி .ஆயினும் வெள்ளை ஆதிக்க மனோபாவமும் ஆணாதிக்க உணர்வும் சமூக உளவியலில் இங்கு இன்னும் வலுவாக நிலவுவது முரண்.

 

இங்கு கல்வியில் சீன மாணவர்களும் இந்திய மாணவர்களுமே முதலிடத்தில் இருக்கிறார்கள் . சீனர்கள் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறத் துவங்கிவிட்டனர் .இனி இந்தியர்களின் வேலைவாய்ப்பு சவாலாகும் என்பது இங்கு பொதுக்கருத்து .இங்கு சங்கிகளின் செயல்பாட்டால் இந்தியர்களின் மீதான ஒவ்வாமை அதிகரித்து வருகிறது . இவை எல்லாம் பலரோடு உரையாடிய போது வெளிப்பட்டவையே !

 

மருத்துவ வசதி என்பது இங்கு பெரும்பாலோருக்கு எட்டாத உயரத்தில் .. அமெரிக்காவில் காப்பீடு இல்லாமல் எதுவும் நடக்காது . காப்பீடும் பெருமளவு கைகொடுக்காது . இதன் எதிரொலியாக அண்மையில் நியூயார்க் ஹோட்டல் முகப்பில் ஓர் தனியார் மருத்துவக் காப்பீட்டு உயரதிகாரியை ஓர் இளைஞன் சுட்டுக்கொன்றான் .அவனைக் காப்பாற்ற அமெரிக்க இளையர் உலகமே கைகோர்த்து நிதி திரட்டி எழுந்தது கண்டோம்.  இங்கு வழக்கைச் சந்திக்கப் பயந்து பெரும்பாலன மருத்துவர்கள் அனைத்து சோதனை முடிவும் வராமல் ஒரு பாரசிட்டமால் மாத்திரைக்கூட தரமாட்டார்கள் . மருத்துவ பில் மிகமிகமிக அதிகம். கனடாவில் மருத்துவம் இலவசம் . ஆனால் மருத்துவ சேவையில் அதிருப்தி அதிகம் . இந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் மருத்துவ வசதி மிகச் சிறப்பு . அரசு ஆரம்ப சுகாதார மையங்களும் , அரசு மருத்துவ மனைகளும் மிக நன்று .நிழலின் அருமை வெயிலில்தான் தெரிகிறது

 

இங்குள்ள தட்டவெப்ப சூழ்நிலை ஆண்டில் பெரும்பகுதி பொது நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துகிறது . எனவே உள்ளரங்கம் , வீடு  என கூடடடைந்த வாழ்க்கையாகிவிடுகிறது . அதன் எதிரொலி வசந்த காலம் , கோடை காலத்தில் குடும்ப இன்பச்சுற்றுலா ,பிக்னிக் பண்பாட்டின் கூறாகிவிட்டது .

 

நுகர்வு கலாச்சாரமும் கணிணி யுகமும் இவர்கள் வாழ்வை ஒரு கையடக்க வட்டமாக்கிவிட்டது . இது உலக விதி .இங்கு கூடுதல்  விதி .என் செய்ய ?

 

நல்லதும் கெட்டதுமாக நான் அரைகுறையாய் புரிந்து கொண்டது மட்டுமே அமெரிக்கா அல்ல ; நான் இங்கு பேசுவது மக்களைப் பற்றிதான் ; ஏகாதிபத்திய அரசியலைப் பற்றியது அல்ல .

 

சுபொஅ.

21/05/25,

வர்ஜீனியா.


போரானாலும் பூஜையானாலும் அவர்களுக்கு வர்த்தகமே….

Posted by அகத்தீ Labels:

 


போரானாலும் பூஜையானாலும் அவர்களுக்கு வர்த்தகமே….

நாலு துளசி இலை ஆயிரம் ரூபாய் . ஐந்து வேப்பிலை 500 ரூபாய் . ஐந்து வேப்பம் பூ 600 ரூபாய் . பத்து மாவிலை ஆயிரம் ரூபாய் என்றெல்லாம் சொன்னால் உங்களால் நம்ப முடியுமா ? [டாலரின் ரூபாய் மதிப்பில் விலை பதிந்துள்ளேன். அங்கு டாலரில்தான் விற்பனை.]

மக்களின் நம்பிக்கை ,மூடநம்பிக்கை ,சடங்கு ,சம்பிரதாயம் இவற்றை எல்லாம் காசாக்குவதில் குஜராத் பனியாக்கள் பலே கில்லாடிகள் .

கடல் கடந்து போனாலும் இந்தியர்கள் மண்டையில் உறைந்து போயிருக்கும் பத்தாம்பசலி பழக்க வழக்கங்களை விடமுடியாமல் மல்லுக்கட்டுகிறார்கள் . அவர்கள்தாம் இந்த “சுபம் லாபம்” கோஷ்டிகளின் குறி.

ஆகவே அந்தந்த சீசனுக்கு ஏற்ப சில பூஜைப் பொருட்களையும் சம்பிரதாய பொருட்களையும் சின்ன சின்ன பிளாஸ்டிக் பைகளில் பொட்டலம் போட்டு காசாக்குகிறது அமெரிக்காவில் ”பட்டேல் பிரதர்ஸ்” என்ற குஜராத்தி நிறுவனம் . போரானாலும் பூஜையானாலும் அவர்களுக்கு வர்த்தகமே . முதல் பத்தியிலே சொன்னது அதைத்தான் .விலை சீசன் பண்டிகைகளைப் பொறுத்து ஏறும் இறங்கும் .

பூஜைப் பொருட்களுக்கு என தனிப்பிரிவே உண்டு .அங்கு கடவுள் [ போட்டோ /சிலை ] வியாபாரமும் உண்டு . எல்லா ஆன்மீக உருட்டுகளுக்கும் தேவையான அனைத்தும் விற்பனைக்கு கிடைக்கும்

இந்தியாவில் கிடைக்கும் அனைத்தும் [ புலால் தவிர்த்து ] பட்டேல் பிரதர்ஸில் கிடைக்கும் . மளிகைப் பொருட்கள் ,காய்கறி ,பழங்கள் ,சமையல் சாமான்கள் ,சமூசா ,அல்வா எல்லாம் . இதில் மேலே சொன்னதும் அடக்கம்.

நாங்கள் அங்கே போன அன்று வாசலில் நின்று சில இளம் பெண்கள் ’காடு விழுங்கி’ ஜக்கி வசுதேவின் “மனோத்தத்துவ இஞ்ஜினியரிங்’ கட்டண வகுப்புக்கு அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தனர் .

ஆஹா ! எங்கு போனாலும் ஏமாறவும் ஏமாற்றவும்…. பேஷ் ! பேஷ் !

சுபொஅ.
15/05/25.

thozhar s kumaradas

Posted by அகத்தீ Labels:

 





தோழர் எஸ் கே டி என அன்போடு எல்லோராலும் அழைக்கப்படும் எஸ் .குமாரதாஸ் அவர்கள் எண்பதாவது வயதில் அடியெடுத்து வைப்பதையொட்டி அவரின் பிறந்த நாள் அழைப்பு [தோழர் பாரதி செல்வா விடுத்த அழைப்பு ] கிடைக்கப்பெற்றேன் .மட்டில்லா மகிழ்ச்சி .

நான் கட்டாயம் பங்கேற்றிருக்க வேண்டிய நிகழ்வு . தற்போது அமெரிக்காவில் வர்ஜீனியாவில் மகன் வீட்டில் முகாமிட்டிருப்பதால் வரயியலாத நிலை உள்ளது . என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.

எனக்கும் குமாரதாஸுக்கும் இடையே ஆன உறவுக்கும் , எனக்கும் சிபிஎம் கட்சிக்குமான உறவுக்கும் கிட்டத்தட்ட சம வயது . அவசரகாலத்திற்கு முந்தைய வருடங்களில் முகிழ்த்த உறவு .என்னைக் கட்சியில் துணைக்குழு உறுப்பினராக சேர்த்தவன் . அப்போது அவன் தான் கிளைச் செயலாளர் . கட்சி உறுப்பினராகியதும் அந்தக் கிளையில்தான். என் முதல் கட்சிச் செயலாளர் அவன் தான் .அவன் என்னைவிட ஏழு வயது மூத்தவன் .ஆயினும் இன்றுவரை வாடா போடா என அழைத்துக் கொள்ளும் அந்நியோன்யம் தொடர்கிறது .

கோஷம் போடவும் , உண்டியல் குலுக்கவும் , பிரசுரம் விற்கவும் ,கொடி பிடிக்கவும் இவன்தான் என் குரு

பழவந்தங்கல் ,ஆலந்தூர் ,கிண்டி ,ஆதம்பாகம் ,மீனம்பாக்கம் வட்டாரத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை வளர்க்க அவன் அரும்பாடு பட்டவன் .அவன் நிர்வகித்த மார்க்ஸ் மன்றம் [ பரங்கி மலை ரயில் நிலையம் அருகில் ] எம் பாடிவீடானது . பழவந்தங்கல் எம் ஜி ஆர் நகர் என் வீடும் , பறங்கிமலையில் உள்ள குமாரதாஸ் வீடும் எம் சந்திப்பு மையமானது . புத்தகக் காதலன். இன்குலாப் கவிதை புத்தகம் முதன் முதல் அவன்தான் எனக்குத் தந்தான் . அவனிடம் இருந்து நான் பல புத்தகங்களைச் சுட்டதுண்டு .கேட்டால் சீக்கிரம் தரமாட்டான். அவசரகாலத்தில் முதன் முதல் அவன் புத்தக சேகரிப்பு பெட்டியைப் பார்த்த போது அதுமாதிரி நானும் செய்ய வேண்டும் என ஆசை கொண்டேன்.

மாதர் சங்கத்தை பழவந்தங்கலில் உருவாக்க அவன் பட்ட பாட்டை அருகிருந்து பார்த்தவன் . போராட்ட களத்தில் முகிழ்த்த காதலில் வனஜாவை கைப்பிடித்தவன் . வனஜா இன்று கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் . தன் இணையரின் வளர்ச்சியில் பெரிதும் மகிழ்ந்து துணை நிற்பவன் .அதுமட்டுமல்ல தன் கிளையில் / பழவந்தங்கலில் இருந்த நான் , உ.ரா.வ , து.ஜானகிராமன், சேகர் ,ராஜன் ,விஜயா ஜானகிராமன் என ஒவ்வொருவர் வளர்ச்சியிலும் எல்லையற்ற மகிழ்ச்சி கொண்டவன் . தன்னோடு இருப்பவர்கள் வளர்ச்சியில் மனநிறைவு கொள்கிறவன் .

சிபிஎம் கட்சியில் பார்ப்பனர்கள் உறுப்பினராக தலைவராக நிறைய உண்டு . தோழர் ஏ.பாலசுப்பிரமணியம் , எம் .ஆர் . வெங்கட்ராமன் ,உ.ரா .வரதராஜன் ,மைதிலிசிவராமன் ,எல் ஐ சி கே.என்.ஜி ,ஏ.கே.வீரராகவன் [ டெலிகிராப் / தீக்கதிர்] போன்ற பலர் பூணுலை மட்டுமல்ல பார்ப்பணியத்தையும் முற்றாகத் தூக்கி எறிந்தவர்கள் ; சாதிய சனாதன தடம் அற்றவர்கள் .அந்த வழியில் குமாரதாஸும் அடங்குவான் . “இவனை பார்பனர் என்று சொன்னால்கூட யாரும் நம்பமாட்டார்கள் .” என்று அடிக்கடி ராஜன் [ தற்போது பி.சி அலுவலக ஊழியர் ] கூறுவார் . அந்த அளவு சாதிய மனோநிலையை முற்றும் துறந்தவன் . ஒடுக்கப்பட்ட மக்களோடு இரண்டறக் கலந்தவன் . பல்லாவரம் குவாரி போராட்டமும் ,தோல்பதனிடும் தொழிலாளர்கள் போராட்டமும் ,கல்குட்டை மக்களின் போராட்டமும் இவனின் இயல்பைப் பறை சாற்றும். அடிப்படையில் இவன் ஒரு கூலித்தொழிலாளியாய் வாழ்க்கையைத் துவக்கியவன்தான்.

பல்லாவரம் குவாரித் தொழிலாளர் போராட்டம் ஒன்று போதுமே அவனின் உறுதியையும் மனிதத்தையும் போற்ற ; அப்போராட்டத்தில் அவனோடு நானும் இருந்தேன் என்பது என் மகிழ்ச்சி .அப்போராட்டத்தில் நான் எழுதிய பாடல் சிகரம் ஏட்டிலும் வெளியானது .

அவன் சில நேரங்களில் வருத்தமும் மனத்தாங்கலுமாய் புலம்புவான் . நானும் சின்னையாவும் உரிமையுடன் கடுமையாகத் திட்டுவோம் .அவன் புலம்பல் கட்சி வளர்ச்சியில் அக்கறை கொண்டது என்பதையும் அறிவோம். வயதுக்கும் உடல்நிலைக்கும் மீறி அவன் உழைப்பதை கொஞ்சம் குறைக்கச் சொல்லி வற்புறுத்துவோம் .கேட்க மாட்டான்.

விடாப்பிடியான தொழிலாளிவர்க்கப் போராளி. எண்பது வயதிலும் மார்க்சிஸ்ட் கட்சி மீது மாளாக் காதல் கொண்டவன் .இன்றும் கட்சிக்காக தன்னால் இயன்ற பணிகளை மட்டுமல்ல சற்று அதிகமாகவே செய்கிறவன் . அவனது கட்சி விசுவாசம் அளவிடற்கரியது .

குமாரதாஸ் – வனஜா இணையர்கள் கட்சியின் பொக்கிஷம் .அக்குடும்பமும்தான் .

குமாரதாஸை அலைபேசியில் நேரில் எப்படி வாழ்த்துவனோ அப்படியே உரிமையோடு இப்போதும் வாழ்த்துகிறேன் !

” வாழ்க பல்லாண்டுடா ! வயது எண்பதிலேயும் ஆக்டீவா இருக்கே சந்தோஷப்படு ! உன் உழைப்பு வீண்போகாதுடா ! நேரில் வர இயலவில்லை மன்னிச்சிடு ! வாழ்க வனஜா குமாரதாஸ் ஜோடி !”

சுபொஅ.
09/04/25.வர்ஜீனியா .

குறிப்பு : நான் புகைப்பட ஆர்வலன் அல்லன் .எந்த புகைப்பட சேகரிப்பும் என்னிடம் இல்லை . முகநூலில் தேடி இரண்டு படங்கள் பதிந்துள்ளேன்.




சிபிஎம் அகில இந்திய மாநாடுகளும் நானும் …..

Posted by அகத்தீ Labels:

 






சிபிஎம் அகில இந்திய மாநாடுகளும் நானும் …..

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி [மார்க்சிஸ்ட்] யின் 24 வது அகில இந்திய மாநாடு மதுரையில் 2025 ஏப்ரல் 2- 6 தேதிகளில் நடைபெற உள்ளது . மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகளை கட்சி முடுக்கிவிட்டுள்ளது .

 

என் நினைவலைகள் பின்னோக்கி குமிழியிட்டன .

 

1985 ஆம் ஆண்டு கட்சியின் 12 வது அகில இந்திய மாநாடு மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடை பெற்றபோது நான் அதில்  மாநாட்டுப் பிரதிநிதியாக முதன் முறையாகப் பங்கேற்றேன் . அந்த அனுபவம் இன்னும் நெஞ்சில் கனந்து கொண்டிருக்கிறது .தோழர் ஜோதிபாசு அப்போது அங்கு முதலமைச்சராகப் பொறுப்பு வகித்தார் . அவரை ஜோதிபாபு என வங்கமே கொண்டாடிக் கொண்டிருந்ததை நேரில் கண்டேன் . அகில இந்திய மாநாட்டின் விவாத முறை , ஒழுங்கு , உட்கட்சி ஜனநாயகம் என ஒவ்வொன்றும் என்னுள் பெரும் உற்சாகத்தையும் உத்வேகத்தையும் உசுப்பிவிட்டன.

 

இன்னொரு புறம் தனிப்பட்ட முறையில் ஒரு அனுபவம் ஏற்பட்டது .  உணவு இடைவேளையில் நான் என் பர்சை தவற விட்டுவிட்டேன் . என்னோடு மாநாட்டு அரங்கை வலம் வந்து கொண்டிருந்த தோழர் .டி.லட்சுமணனிடம் சொன்னேன் . கவலைபடாதே கிடைத்துவிடும் என்றார் . மாலை 4 மணிக்கு மாநாடு மீண்டும் துவங்கிய போது ” ஒரு பர்ஸ் கிடைத்திருப்பதாக” வரவேற்புக் குழுவினர் அறிவிப்பு வர போய் வாங்கி வந்தேன் . அன்றே தோழர் டி.லட்சுமணனோடு சென்று  மாநாட்டு பந்தலில் விற்பனைக்கு வைத்திருந்த கருநீலம் சிவப்பு வெள்ளை நிறம் கலந்த ஒரு அழகிய ஸ்வெட்டரை என்  மகள் பானுவுக்காக வாங்கினேன் . அவள் அணிந்து பின்னர் என் மகன் சங்கர் அணிந்து ,பேரன்கள் சஞ்சை ,சங்கமித்ரா எல்லோரும் அணிந்து இன்னும் என் மகளிடம் பத்திரமாக என் மாநாட்டு நினைவைச் சொல்லிக் கொண்டிருக்கிறது .

 

1988 ஆம் ஆண்டு கேரள மாநிலம்  திருவனந்தபுரத்தில் கட்சியின் 13 வது அகில இந்திய மாநாடு நடைபெற்ற போது இரண்டாவது முறையாக மாநாட்டுப் பிரதிநிதியாகப் பங்கேற்றேன் .தோழர்கள் இ எம் எஸ்  ,ஈ.கே .நாயனார் எல்லோரும் பங்கேற்று நடத்திய பாங்கு என்னை வியக்க வைத்தது .மாநாட்டில் கேரள மண்ணின் பண்பாடும் கலையும் எழிலும் கொஞ்சிக் குலவியதைக் கண்டு பெருமிதம் கொண்டேன் .மண்ணில் வேரூன்றி நிற்பதென்பதின் சாரம் இதுவென ஒவ்வொரு தோழரிடமும் சொல்லி மகிழ்ந்தேன் . “ அகத்தி ! நீ அடிக்கடி சொல்லிக் கொண்டே இருக்கிற மண்ணின் மணம் எங்கும் இருப்பதைப் பார்த்தாயா ?” என சக தமிழ்நாட்டுத் தோழர்கள் என்னிடம் சொன்னபோது நான் இங்கு வாதிட்டுக் கொண்டிருப்பது மிகச்சரியானதே என உணர்ந்து மகிழ்ந்தேன்.

 

1992 ஆம் ஆண்டு கட்சியின் 14 வது அகில இந்திய மாநாடு தமிழ்நாட்டில்  சென்னையில் நடை பெற்ற போது அதில் மாநாட்டு வரவேற்புக் குழுவில் அங்கமாகி  களப்பணியாளனாய் குறிப்பாக பல்வேறு பொது நிகழ்வுகள் கலை இலக்கிய பண்பாட்டு கூறுகளை ஒருங்கிணைப்பதில் பங்கேற்று சுழன்றது மறக்க இயலா நினைவுகளை என்னுள் ஆழப்பதித்தது .

 

1998 ஆம் ஆண்டு  கட்சியின் 16 வது அகில இந்திய மாநாடு மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில்  நடைபெற்ற போது நான மூன்றாவது முறையாக மாநாட்டுப் பிரதிநிதியாகப் பங்கேற்றேன் . இம்மாட்டில்தான் ஜோதிபாசு அதற்கு முன் தெரிவித்த , “ வரலாற்றுப் பிழை” [historical plunder ] என்கிற கருத்து பெரும் விவாதமானது . தமிழ் நாட்டுப் பிரதிநிதிகள் தனியாக விவாதித்த போது  ஜோதிபாசு சொன்ன கருத்தோடு உடன்பட்டு கை உயர்த்தியவர்களில் நானும் ஒருவன் . அப்போது கை உயர்த்தாத என் தமிழ்நாட்டு சகாக்கள் சிலர் மாநாட்டு வாக்கெடுப்பில் கை உயர்த்தியைதைக் கண்டேன் . மாநாட்டு மேடையில் வீற்றிருந்த ஜோதிபாசு ,ஹர்கிஷன் சிங் இருவர் மட்டுமே புன்முறுவலுடன் கம்பீரமாகக் கை உயர்த்தியதைப் பார்த்தேன் . தம் கருத்து மாநாட்டில் நிராகரிக்கப்படும் என்பதை நன்கு அறிந்த மூத்த தலைவர்கள் இருவரும்  உறுதியாகக்  கை உயர்த்தியதன் மூலம் கருத்தை முன் வைப்பதில் ஓர் கம்யூனிஸ்ட் எப்படி நேர்மையுடன் இருப்பார்கள் என  செயல்வழி  நிரூபித்தனர் .மாநாடு அவர்கள் கருத்தை நிராகரித்தது .மாநாட்டு முடிவுக்கு அவர்கள் கட்டுப்பட்டனர் .கட்சியின் அமைப்பு ஒழுங்கு இதுவென மாநாடு பறை சாற்றியது .  நான் இன்னும் அக்கருத்தில் உடன்பாடு உடையவனாகவே தனிப்பட்ட முறையில் உள்ளேன்.

 

2005 ஆம் ஆண்டு  கட்சியின் 18 வது அகில இந்திய மாநாடு நியூ டெல்லியில் நடைபெற்ற போது நான்காவது முறையாக மாநாட்டுப் பிரதிநிதியாகப் பங்கேற்றேன் . அந்த மாநாட்டின் போது வெளிநாட்டுப் பிரதிநிதிகளை ஒருங்கிணைத்து கவனித்து வந்த தோழர் உ.ரா.வரதராஜன் இலங்கையில் இருந்து வந்திருந்த ஜெவிபி  [ ஜன விமுக்தி பெரமுனா ]கட்சியின் தலைவர்களோடு நடைபெற்ற ஓர் சந்திப்பில் என்னையும் பங்கு பெறச் செய்தார் . தமிழர் உரிமை என்கிற தமிழ்நாட்டு உணர்வோடு நான் சொன்ன கருத்துகளை காதுகொடுத்து கேட்டபின், “ உங்கள் உணர்வைப் புரிந்து கொள்கிறோம் . நாங்கள் எங்கள் மாநாடுகளில் ஆழமாக விவாதித்து வருகிறோம் . தமிழர் சிங்களர் இருதரப்பாரும் ஏற்கும் தீர்வை நோக்கி நகர முயல்வோம்.” என்றனர் .எனக்குத் திருப்தி ஏற்படவில்லை .இப்போது இலங்கையில் ஏற்பட்டு வரும் நிகழ்வுப் போக்குகள் கொஞ்சம் நம்பிக்கை ஊட்டுகின்றன . இக்கட்சி மாநாட்டின் ஒரு பகுதியாக கட்சி பத்திரிகைகளில் பணியாற்றும் தோழர்கள் தனியாகச் சந்தித்து கருத்துப் பரிமாற்றம் செய்ய வழி செய்யப்பட்டது .தோழர் சீத்தாராம் யெச்சூரி பங்கேற்று ஆரோக்கியமான வழிகாட்டல்களை வழங்கினார் .

 

2008 ஆம் ஆண்டு கோவையில் அகில இந்திய மாநாடு நடைபெற்ற போது தீக்கதிர் பணிகளை ஒருங்கிணைப்பவராக பங்கேற்றேன் . இதர கட்சிப் பத்திரிகைகளுடன் நெருங்கிய உரையாடல் நடத்த வாய்ப்பேற்பட்டது .

 

2012  கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடைபெற்ற கட்சியில் அகில இந்திய 20 வது மாநாட்டில் ஐந்தாவது முறையாகவும் கடைசி முறையாகவும் பங்கேற்றேன் .ஆம் அதற்கு சற்று முன் நாகையில் நடைபெற்ற மாநில மாநாட்டில் நான் மாநிலக்குழுவிலிருந்து  சுயவிருப்பத்தின் அடிப்படையில் விடைபெற்றேன் ; 2013 ல் முழுநேர ஊழியர் பொறுப்பில் இருந்தும் சுயவிருப்பத்தின் பேரில் விடை பெற்றேன் .எனவே இம்மாநாடு நான் பங்கேற்ற கடைசி அகில இந்திய மாநாடு ஆகிப்போனது .

 

இம்மாநாட்டில் கட்சியின் வரலாற்றுக் கண்காட்சி நெஞ்சை நெகிழ வைத்தது .ஓர் கண்காட்சி எப்படி தரவுகளோடும் உயிர்ப்போடும் விளங்க வேண்டும் என்பதன் சாட்சியாய் இருந்தது . பார்த்து வியந்தேன் . வரலாற்றில் நுழைந்து உணர்ச்சி மேலிட நின்றேன்.

 

இம்மாநாட்டைத் தொடர்ந்து தீக்கதிர் நாளேட்டில் நான்கு நாட்கள் தொடர் கட்டுரை எழுதினேன் .[  akatheee.blogspot.com ல் இன்னும் கிடைக்கிறது . 2012 ஏப்ரல் மாதம் தேடவும். ] பரவலாக வரவேற்பு பெற்றது .மாநாட்டில் பங்கேற்ற உணர்வைத் தந்ததாக பல தோழர்கள் பாராட்டினார்கள் .

 

தற்போது அகில இந்திய  24 வது மாநாடு மதுரையில் நடைபெற உள்ள சூழலில் இவற்றை நினைத்துப் பார்த்தேன் .நம் வியூகத்தை கூர்மைப்படுத்தவும் கருத்தொற்றுமை அமைப்பொற்றுமை ஓங்கவும் மாநாடு படிக்கல்லாகட்டும்!  வெல்க சிபிஎம் ! வெல்க பாசிச எதிர்ப்புப் போர் !

 

சுபொஅ.

10/02/2025


ரயிலோடும்…… செங்கொடியோடும் …..

Posted by அகத்தீ Labels:

 




ரயிலோடும்……  செங்கொடியோடும் …..

 

[ தென்சென்னை சிபிஎம் மாநில மாநாட்டை யொட்டி வெளியிடப்படும் மலருக்கான கட்டுரை ]

 

சு.பொ.அகத்தியலிங்கம் .

 

[ நினைவில் இருந்து எழுதுவதால் சில முக்கிய பெயர்கள்கூட விடுப்பட்டிருக்கலாம் . நிகழ்வுகள் குறித்த செய்தி காலவரிசையில் இல்லாமல் இருக்கலாம் .பொறுத்தருள்வீர்]

ழவந்தங்கலில் ரயில்வே நிலையம் அருகிலுள்ள எம் ஜி ஆர் நகரில் ஓர் குடிசையில் 1973 முதல் 1981 தாய் ,தந்தை ,அண்ணன் ,தம்பியோடு நான் குடியிருந்தேன் . எனது இடது சிந்தனை வலுப்பெற்றதும் நான் மார்கிசிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரானதும்  ,ஊழியரானதும் ,என் குடும்பமே கட்சி சிந்தனைக்கு ஆட்பட்டதும் அக்காலகட்டம்தான் . ரயிலும் என் அன்றாட வாழ்வும் அரசியல் பயணமும் பின்னிப் பிணைந்தது . கட்சியோடு நான் கட்டுண்டதில் ரயிலுக்கும் மிகப்பெரிய பங்குண்டு.

 

ரயிலில் நான் , தோழர்கள் குமாரதாஸ் , ஆர்பிஐ கேண்டின் பத்மநாபன் , உ.ரா.வரதராஜன் ,விஸ்வம்பரன் ,முண்டன் , ராஜன் , கோபிநாத் ,தீனா ,கந்தன் என் சகோதரர் சு.பொ.நாராயணன் ,ஜெயலட்சுமி ,முஸ்த்திரி  ,டிரைவர் ராஜி ,சேகர் , விஜய ஜானகிராமன் .ராமச்சந்திரன் [ இவர் பின்னர் ஒதுங்கிவிட்டார் ] ஆகியோர் ரயிலில் பிரச்சாரம் செய்து கட்சிப் பிரசுரங்கள் விற்ற நினைவு இன்னும் பசுமையாய் உள்ளது .

 

பழவந்தங்கலில் புறப்பட்டு பீச் சென்று அங்கிருந்து தாம்பரம் அங்கிருந்து பழவந்தங்கல் என பிரசுரம் விற்றபடியே பயணிப்போம் . ஒவ்வொரு ஸ்டேஷனிலும் பெட்டி மாறுவோம் . வழியில் கே.எம். ஹரிபட் ,சி.பி.தாமோதரன் ,மைதிலி சிவராமன் ,டி.ஜானகிராமன் , வழக்கறிஞர் சிவாஜி , டி.லட்சுமணன் ,ஸ்ரீதர் உடபட பலரை ரயிலில் சந்திப்போம் .

 

ஒருவர் பேச மற்றவர்கள் பெட்டிக்குள் சுறுசுறுப்பாய் துண்டுபிரசுர விநியோகம் நிதி வசூல் என சுழல்வோம். நான் பிரசுர விற்பனைக்கும் என் சகோதரர் தீக்கதிர் விற்பனைக்கும் பொறுப்பு .ரயிலில் உரத்த குரலில் பேசுவது நானும் , உ.ரா.வரதராஜனுமே [அவர் அப்போது ஆர் பி ஐயில் பணியாற்றிய போதும்  துணிந்து செய்வார்]குமாராதாஸ் ஆகியோரே . உண்டி வசூலில் பத்மநாபன் ,ராஜன் ,முண்டன் கில்லாடிகள் .

 

இது முடிந்த பிறகு டீக்கடையில் டீ ,பட்டர் பிஸ்கெட் அதைத் தொடர்ந்து என் குடிசையிலோ பத்மநாபன்  குடிசையிலோ அரசியல் அரட்டை ,விவாதம் அந்த நாட்கள் மறக்க முடியாதவை .

 

பறங்கிமலையிலிருந்து மீனம்பாக்கம் வரை தீக்கதி விநியோகம் செய்வது என் சகோதரர் தோழர் சு.பொ.நாராயணுனும் நானுமே .

 

ஆலந்தூர் ரயில் நிலையத்திற்கு அருகில் மாடியில் இருந்த ஓர் அறையில் அவசரகாலத்தில் பல தோழர்கள் சந்திப்போம் . நான் ,அண்ணாமலை ,வி.பா.கணேசன் , ஹரிபரந்தாமன் , சூணாம்பேடு வரதராசன் , செங்கல்பட்டு ராதாகிருஷ்ணன் ,சி.மணி, போஸ்டல் சின்ராஜ் ,ராஜன்மணி இன்னும் பலர் . ரகசிய கடிதம் செய்திகள் பரிமாற தலைமறைவுத் தலைவர்களோடு உறவு கொள்ள அது ஒரு தகவல் மையம் போல் இயங்கியது . தோழர் ஏ.கே.பத்மநாபன் அடிக்கடி வந்து தகவல் பரிமாறிச் செல்வார்.

 

பழவந்தங்கலில் தோழர் குமாரசாமி அறையில் தலைமறைவாக இருந்த தோழர்கள் பி.ஆர்.பரமேஸ்வரன் ,வே.மீனாட்சிசுந்தரம் போன்றோர் அடிக்கடி வந்து தங்கிச் செல்வர் .தோழர் து .ஜானகிராமன் ,கே.எம்.ஹரிபட் , சிவாஜி மிசாவில் கைதாகிவிட்டனர் .தோழர் சி.பி.தாமோதரனும் இறுதியில் கைதாகிவிட்டார்.

 

ரயில்வே லைனை ஒட்டி பறங்கிமலையில் மார்க்ஸ் மன்றம் இயங்கியது .பின்னர் பழவந்தங்கலில் வெண்மணிப் படிப்பகம் திறந்தோம் . சைதையில் தோழர் வை.கிருஷ்ணசாமி தட்சிணாமூர்த்தியின் அறை இன்னொரு சந்திப்பு மையம் .

 

சேத்துப்பட்டில் செபாஸ்டின் , க.மாதவ் வடபழநியில் கல்யாணசுந்தரம் உடபட பலர் ரயில் மூலம் தினசரி இணைந்து பணியாற்றியவர் ஆவார். சைதையில் உத்தண்டராமன் ,சிவகுமார் [சினிமா பேராசிரியராகிவிட்டவர்] தாம்பரம்தேவப்பிரகாஷ் ,ஸ்டாலின் மணி என பட்டியல் நீளும்.

 

பழவந்தங்கலில் 1976 ல் சோஷலிஸ்ட் வாலிபர் முன்னணியை உருவாக்கினோம் . நான் அதன் செயலாளர் .மாவட்ட அமைப்பும் அவசரகால பேயிரிட்டில் உருவாக்கினோம். 1977 முதல் மாவட்ட மாநாட்டில் நான் செயலாளர் ஆனேன் .

 

அப்போது சென்னை பீச்சுக்கு இடையே மின்சார ரயில் மீட்டர் கேஜ் ரயில்தான் .நாலு பெட்டி தான் .கூட்டம் நிரம்பி வழியும் . சிலநேரம் எட்டு பெட்டி இணைக்கப்படும்.  மீட்டர் கேஜை அகலரயில் பாதை ஆக்க வேண்டும் .பெண்களுக்கு தனிப் பெட்டி இணைக்க வேண்டும் . முதலிய கோரிக்கைகளை இணைத்து தினசரி மாலை ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் .கையெழுத்து இயக்கமும் நடத்துவோம் . எங்கள் போராட்டம் பெரும் அறிமுகமானது .பேராதரவு பெருகியது .

 

இந்த ஆர்ப்பாட்டங்களில் நான் பேசும் போது , “ நாங்கள் நெரிசலில் பயணிக்கும் போது  சொகுசு பயணத்துக்கு முதல் வகுப்பு பெட்டி ஏன் ?” என கேட்டேன் .ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த தோழர் என் .சங்கரய்யா என்னை அழைத்து .தினசரி ஆர்ப்பாட்டம் நல்லது .கோரிக்கைகள் நல்லது .பேசும்போது ஜாக்கிரதையாக இருங்கள் .முதல் வகுப்பில் பயணிப்போரை எதிரியாக்க வேண்டாம் . இப்படி சில யோசனைகளைச் சொன்னார் .

 

லட்சம் கையெழுத்துகளுடன் மூர்மார்கெட்டில் இருந்து ரயில்வே தலைமை அலுவலகம் வரை ஊர்வலமாகச் சென்றோம் .டிஜிஎம் கோவில் பிள்ளையை சந்தித்து மனு கொடுத்தோம் .தோழர் அய்யலுதான் அதற்கு ஏற்பாடு செய்தார் .எங்கள் கோரிக்கையை வலுப்படுத்த ஆதாரங்கள் ,புள்ளி விவரங்கள் அவர்தான் தந்தார் .ஆகவேதான் எங்களின் துண்டுப் பிரசுரம் எல்லோரையும் ஈர்த்தது .போராட்டம்  விளைவாய் முதலில் ஒண்பது பெட்டி கோரிகையும் பெண்களுக்கு தனிப்பெட்டி கோரிக்கையும் நிறைவேறியது .பின்னர் அகல ரயில்பாதையும் வந்தது .இதற்கான போராட்டத்திற்கு விதை போட்ட மகிழ்ச்சி நமக்கு இருப்பது இயற்கை .ஆனால் வெற்றியின் உரிமையை வலுவாக பதிவு செய்யத் தவறிவிட்டோம். இதயம் பேசுகிறது இதழில் தோழர் க.சின்னையாவும் ,சரஸ்வதி வரதராஜனும் அளித்த பேச்சியே முக்கிய பதிவு . ராணி மைந்தன் பேட்டி எடுத்திருப்பார் .

 

தூக்குமேடை பாலன் பல்லாவரத்தில் குடியிருந்தார் .அவரை ரயிலில் சந்தித்ததும் அதன் பின் அவரோடு பல நாட்கள் கலந்துரையாடியதும் என் நினைவில் இன்றும் உள்ளது .மலையாள மொழி பெயர்ப்பு நாவல்கள் மீது எனக்கு  அவர் ஈர்ப்பை ஏற்படுத்தியதை மறக்க முடியுமா ? குறிப்பாக  “நூறுபூக்கள் மலரட்டும்” என மலையாளத்தில் உன்னிபுத்தூர் கிருஷ்ணன் எழுதியது என நினைவு. அதுபோல் கேசவதேவ் எனும் எழுத்தாளர் தேசப்பிரிவினையை மையமாக வைத்து எழுதிய பைத்தியக்கார உலகம் போன்றவை புதிய இலக்கியத் தேடலை ஊக்குவித்தன .

 

அவசரகாலத்தில் ஒவ்வொரு ரயில் நிலையச் சுவரிலும் , “கடின உழைப்புக்கு ஈடு இணை ஏதுமில்லை” , “ காலந்தவறாமையே வெற்றியின் முதல்படி” “நாமிருவர் நமக்கிருவர்” இப்படி எண்ணற்ற வாக்கியங்களை மத்திய அரசின் ஆணைப்படி எழுதி வைத்திருப்பார்கள் .நாங்கள் இரவு போய் அதன் கீழே பகடி செய்யும் வார்த்தைகளை எழுதிவிடுவோம் . சுவரெழுத்தில் குமாரதாஸ் நல்ல ஸ்பீடு . தெளிவு . கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை  என்ற வாசகத்தின் கீழ் ஆமாம் ஈடான ஊதியமும் இல்லை ; இணையான போணசும் இல்லை என்று எழுதி வைத்தோம். இப்படி பல .

 

அவசரகாலம் பிரகடனபடுத்தப்பட்ட மறுநாள் முரசொலியில்  இந்திரா முகம் ஹிட்லராக மாறுவதாய் ஒரு கார்ட்டூன் வந்தது .நாங்கள் அதை காப்பி அடித்து பல போஸ்டர்கள் கையால் தயார் செய்து ரயில்களின் உள்பகுதியில் ஒட்டிவிட்டோம். மறுநாள் பரபரப்பானது . படங்கள் வரைவதில் என் இளைய சகோதரர் சு.பொ.ஐயப்பன் கைவண்ணம் உண்டு .

 

பழவந்தங்கலில் தொடர்ந்து பல்வேறு தலைப்புகளில் நடத்தப்பட்ட கூட்டங்கள் குறிப்பிடத் தக்கன.  “ ஜனநாயகமும் சட்டமும் “ என்ற தலைப்பில் தோழர் சந்துருவும் [ பின்னர் நீதிபதியானவர் ] , “ வியட்நாம் வீரகாவியம்” குறித்து மைதிலி சிவராமனும் நடத்திய  வகுப்புகள் குறிப்பிடத்தக்கன . செந்தில்நாதன் , இளவேனில் பங்கேற்ற தமுஎச கூட்டங்களும் அவசரகாலத்திலும் இயங்கிய பாங்கிற்கு சாட்சி .

 

ரயில் மூன்று நான்கு தோழர்கள் உட்கார்ந்து கொண்டு எதிரும் புதிருமாய் பேசத்தொடங்கி சூடான  அரசியல் விவாதத்தை செய்வோம் . கட்சிப் பிரச்சாரம் இப்படி நடக்கும். ரயிலில் அரசியல் பேசுவதில் மெயில் சுப்பாராவ் , டெலிகிராப் ஊழியர் ஏ.கே.வீரராகவன் தனி முத்திரை பதிப்பார்கள் .

 

அவசரகாலத்தின் போது பல்லாவரம் கல்லுடைக்கும் குவாரி போராட்டம் மிக முக்கியமானது . தோழர் எஸ் .குமாரதாஸின் பங்கு அதில் மிக முக்கியமானது . கிட்டத்தட்ட பலமுன்னணி தோழர்கள் அங்கு செல்வோம் .அப்போது திரிசூலம் ஸ்டேஷன் கிடையாது .மீனம்பாக்கத்திலோ பல்லாவரத்திலோ இறங்கி ரயில் லைன் ஓரமாக நடந்து செல்ல வேண்டும் .மைதிலி சிவராமனை பலமுறை அவ்வாறு அழைத்துச் சென்றுள்ளோம் .

 

மேதினம் ,கட்சிக்கூட்டங்களுக்கு ஏழெட்டு பேர் சிவப்புக் கொடியுடன் ரயிலில் பிரச்சாரம் செய்தபடியே பயணிப்பதும் ; ரயிலின் உட்புறத்தில் தொடர்ந்து கையெழுத்து சுவரொட்டிகள் ஓட்டுவதும் எங்களின் வழக்கமாக இருந்தது .

 

இப்படி என் நினைவலைகள் முன்னும் பின்னும் காலக்கிரமமின்றி அலைபாய்ந்து  பழைய நினைவுகளை முன்னுக்கு கொண்டு வருகிறது .மின்சார ரயிலும் நாங்களும் கட்சியும் பின்னிப் பிணைந்திருந்த நாட்கள்.

 

என்னை கட்சி முழுநேர ஊழியராக கட்சி தேர்ந்தெடுத்த செய்தியை முதன் முதல் ரயிலில் மின்சார ரயிலி பயணித்துக் கொண்டே தோழர் கே.எம்.ஹரிபட் சொன்னபோது நம்ப முடியாமல் திணறிய நொடிகள் மறக்க முடியுமா ?

 

கட்சி முழுநேர ஊழியர் என்றால் , “ அமைப்புக்குள் இயங்குவது ; அமைப்பைக் கட்டுவது , போராடுவது  ;போராடத் திரட்டுவது , தத்துவத்தை இடைவிடாது கற்றுக்கொள்வது ; கற்றுக்கொடுப்பது , படிப்பது படிக்கச் செய்வது ,பயணிப்பது பயணிக்கச் செய்வது , முன்னுதாரணமாய் வாழ்வது ; ஏனையோர் வாழத்தூண்டுவது  ” வேறொன்றுமில்லை என தோழர் பி.ஆர் .பரமேஸ்வரன்  அன்று சொன்னது இன்றும் பசுமையாய்.

 

நெஞ்சில் கனல் மணக்கும் நினைவுகளை அசைபோட அசைபோட நீளும்.

குறிப்பு : கட்டுரை அனுப்பிய பிறகும்  பல செய்திகளும் தோழர்கள் பலரும் நினைவில் வந்து போக இரவு முழுவதும் தூக்கம் கெட்டது .அதிகாலை  கொஞ்சம் கண்ணசந்த நேரம் ஒரு கனவு சேத்துப்பட்டு ரயில் நிலையம் அருகே மூத்த மலையாளித் தோழர் பத்மநாபன் வெற்றிலைபாக்குக் கடையில் நிற்கிறேன். இன்னொரு மூத்த மலையாளித் தோழர் டாக்சி டிரைவர் வருகிறார் . என்ன வாலிபரே என அவரை கேலி செய்கிறார் தோழர்கள் செபாஸ்டினும் மாதவும் . அவர் பெயர் ஞாபகத்துக்கு வரவில்லை . தூக்கம் கலைந்து விட்டது . அவசரகாலத்திலும் அதன் பின்னரும் தோழர்கள் தகவல் பரிமாறவும் சந்திக்கவும் அது ஒரு உயிர் மையமாக இருந்தது அல்லவா ?

 

சு.பொ..

 


சரிதானே நான் சொல்றது ...

Posted by அகத்தீ Labels:

 


மாதந்தோறும் முடிவெட்டுவது போல் , தினசரியோ வாரந்தோறுமோ தாடி ,மீசையை ஒழுங்கு செய்வது போல் , அன்றாடம் தலைவாருவது போல் , அவ்வப்போது தலைக்கு சாயம் பூசுவதுபோல் உங்கள் புத்தக அலமாரியையும் குறிப்பிட்ட கால இடைவெளியில் புதுக்கிக் கொண்டே இருந்தால் வீட்டார் மகிழ்வார் .

நீங்கள் வாங்கிய புத்தகங்கள் ,படித்த புத்தகங்கள் அனைத்தையும் காலம் முழுவதும் கட்டிக்காக்க வேண்டியதில்லை .சாத்தியமும் இல்லை . உங்கள் அறிவு முதிர்ச்சிக்கு ஏற்ப தேவையானவற்றை மட்டும் வைத்துக் கொண்டு மற்றவற்றை தேவைப்படும் பிறருக்கோ நூலகங்களுக்கோ கொடுத்தால் பயன் அதிகமாகுமே !

வீட்டு நூலகம் என்பது எல்லாவற்றையும் அடைத்து வைக்கும் பெட்டி அல்ல ; அது அறிவின் தீபம் அதை அணைய விடாமல் ,புழுபூச்சி அரித்துவிடாமல் ,நூலாம்படை அடைந்துவிடாமல் , சுமையாக ஆகிவிடாமல் அவ்வப்போது தூண்டி விட்டு சுடர்விடச் செய்வது மிகமிக அவசியம்.

சரிதானே நான் சொல்றது ...

சுபொஅ.
24/11/24.