சிபிஎம் அகில இந்திய மாநாடுகளும் நானும் …..

Posted by அகத்தீ Labels:

 






சிபிஎம் அகில இந்திய மாநாடுகளும் நானும் …..

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி [மார்க்சிஸ்ட்] யின் 24 வது அகில இந்திய மாநாடு மதுரையில் 2025 ஏப்ரல் 2- 6 தேதிகளில் நடைபெற உள்ளது . மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகளை கட்சி முடுக்கிவிட்டுள்ளது .

 

என் நினைவலைகள் பின்னோக்கி குமிழியிட்டன .

 

1985 ஆம் ஆண்டு கட்சியின் 12 வது அகில இந்திய மாநாடு மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடை பெற்றபோது நான் அதில்  மாநாட்டுப் பிரதிநிதியாக முதன் முறையாகப் பங்கேற்றேன் . அந்த அனுபவம் இன்னும் நெஞ்சில் கனந்து கொண்டிருக்கிறது .தோழர் ஜோதிபாசு அப்போது அங்கு முதலமைச்சராகப் பொறுப்பு வகித்தார் . அவரை ஜோதிபாபு என வங்கமே கொண்டாடிக் கொண்டிருந்ததை நேரில் கண்டேன் . அகில இந்திய மாநாட்டின் விவாத முறை , ஒழுங்கு , உட்கட்சி ஜனநாயகம் என ஒவ்வொன்றும் என்னுள் பெரும் உற்சாகத்தையும் உத்வேகத்தையும் உசுப்பிவிட்டன.

 

இன்னொரு புறம் தனிப்பட்ட முறையில் ஒரு அனுபவம் ஏற்பட்டது .  உணவு இடைவேளையில் நான் என் பர்சை தவற விட்டுவிட்டேன் . என்னோடு மாநாட்டு அரங்கை வலம் வந்து கொண்டிருந்த தோழர் .டி.லட்சுமணனிடம் சொன்னேன் . கவலைபடாதே கிடைத்துவிடும் என்றார் . மாலை 4 மணிக்கு மாநாடு மீண்டும் துவங்கிய போது ” ஒரு பர்ஸ் கிடைத்திருப்பதாக” வரவேற்புக் குழுவினர் அறிவிப்பு வர போய் வாங்கி வந்தேன் . அன்றே தோழர் டி.லட்சுமணனோடு சென்று  மாநாட்டு பந்தலில் விற்பனைக்கு வைத்திருந்த கருநீலம் சிவப்பு வெள்ளை நிறம் கலந்த ஒரு அழகிய ஸ்வெட்டரை என்  மகள் பானுவுக்காக வாங்கினேன் . அவள் அணிந்து பின்னர் என் மகன் சங்கர் அணிந்து ,பேரன்கள் சஞ்சை ,சங்கமித்ரா எல்லோரும் அணிந்து இன்னும் என் மகளிடம் பத்திரமாக என் மாநாட்டு நினைவைச் சொல்லிக் கொண்டிருக்கிறது .

 

1988 ஆம் ஆண்டு கேரள மாநிலம்  திருவனந்தபுரத்தில் கட்சியின் 13 வது அகில இந்திய மாநாடு நடைபெற்ற போது இரண்டாவது முறையாக மாநாட்டுப் பிரதிநிதியாகப் பங்கேற்றேன் .தோழர்கள் இ எம் எஸ்  ,ஈ.கே .நாயனார் எல்லோரும் பங்கேற்று நடத்திய பாங்கு என்னை வியக்க வைத்தது .மாநாட்டில் கேரள மண்ணின் பண்பாடும் கலையும் எழிலும் கொஞ்சிக் குலவியதைக் கண்டு பெருமிதம் கொண்டேன் .மண்ணில் வேரூன்றி நிற்பதென்பதின் சாரம் இதுவென ஒவ்வொரு தோழரிடமும் சொல்லி மகிழ்ந்தேன் . “ அகத்தி ! நீ அடிக்கடி சொல்லிக் கொண்டே இருக்கிற மண்ணின் மணம் எங்கும் இருப்பதைப் பார்த்தாயா ?” என சக தமிழ்நாட்டுத் தோழர்கள் என்னிடம் சொன்னபோது நான் இங்கு வாதிட்டுக் கொண்டிருப்பது மிகச்சரியானதே என உணர்ந்து மகிழ்ந்தேன்.

 

1992 ஆம் ஆண்டு கட்சியின் 14 வது அகில இந்திய மாநாடு தமிழ்நாட்டில்  சென்னையில் நடை பெற்ற போது அதில் மாநாட்டு வரவேற்புக் குழுவில் அங்கமாகி  களப்பணியாளனாய் குறிப்பாக பல்வேறு பொது நிகழ்வுகள் கலை இலக்கிய பண்பாட்டு கூறுகளை ஒருங்கிணைப்பதில் பங்கேற்று சுழன்றது மறக்க இயலா நினைவுகளை என்னுள் ஆழப்பதித்தது .

 

1998 ஆம் ஆண்டு  கட்சியின் 16 வது அகில இந்திய மாநாடு மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில்  நடைபெற்ற போது நான மூன்றாவது முறையாக மாநாட்டுப் பிரதிநிதியாகப் பங்கேற்றேன் . இம்மாட்டில்தான் ஜோதிபாசு அதற்கு முன் தெரிவித்த , “ வரலாற்றுப் பிழை” [historical plunder ] என்கிற கருத்து பெரும் விவாதமானது . தமிழ் நாட்டுப் பிரதிநிதிகள் தனியாக விவாதித்த போது  ஜோதிபாசு சொன்ன கருத்தோடு உடன்பட்டு கை உயர்த்தியவர்களில் நானும் ஒருவன் . அப்போது கை உயர்த்தாத என் தமிழ்நாட்டு சகாக்கள் சிலர் மாநாட்டு வாக்கெடுப்பில் கை உயர்த்தியைதைக் கண்டேன் . மாநாட்டு மேடையில் வீற்றிருந்த ஜோதிபாசு ,ஹர்கிஷன் சிங் இருவர் மட்டுமே புன்முறுவலுடன் கம்பீரமாகக் கை உயர்த்தியதைப் பார்த்தேன் . தம் கருத்து மாநாட்டில் நிராகரிக்கப்படும் என்பதை நன்கு அறிந்த மூத்த தலைவர்கள் இருவரும்  உறுதியாகக்  கை உயர்த்தியதன் மூலம் கருத்தை முன் வைப்பதில் ஓர் கம்யூனிஸ்ட் எப்படி நேர்மையுடன் இருப்பார்கள் என  செயல்வழி  நிரூபித்தனர் .மாநாடு அவர்கள் கருத்தை நிராகரித்தது .மாநாட்டு முடிவுக்கு அவர்கள் கட்டுப்பட்டனர் .கட்சியின் அமைப்பு ஒழுங்கு இதுவென மாநாடு பறை சாற்றியது .  நான் இன்னும் அக்கருத்தில் உடன்பாடு உடையவனாகவே தனிப்பட்ட முறையில் உள்ளேன்.

 

2005 ஆம் ஆண்டு  கட்சியின் 18 வது அகில இந்திய மாநாடு நியூ டெல்லியில் நடைபெற்ற போது நான்காவது முறையாக மாநாட்டுப் பிரதிநிதியாகப் பங்கேற்றேன் . அந்த மாநாட்டின் போது வெளிநாட்டுப் பிரதிநிதிகளை ஒருங்கிணைத்து கவனித்து வந்த தோழர் உ.ரா.வரதராஜன் இலங்கையில் இருந்து வந்திருந்த ஜெவிபி  [ ஜன விமுக்தி பெரமுனா ]கட்சியின் தலைவர்களோடு நடைபெற்ற ஓர் சந்திப்பில் என்னையும் பங்கு பெறச் செய்தார் . தமிழர் உரிமை என்கிற தமிழ்நாட்டு உணர்வோடு நான் சொன்ன கருத்துகளை காதுகொடுத்து கேட்டபின், “ உங்கள் உணர்வைப் புரிந்து கொள்கிறோம் . நாங்கள் எங்கள் மாநாடுகளில் ஆழமாக விவாதித்து வருகிறோம் . தமிழர் சிங்களர் இருதரப்பாரும் ஏற்கும் தீர்வை நோக்கி நகர முயல்வோம்.” என்றனர் .எனக்குத் திருப்தி ஏற்படவில்லை .இப்போது இலங்கையில் ஏற்பட்டு வரும் நிகழ்வுப் போக்குகள் கொஞ்சம் நம்பிக்கை ஊட்டுகின்றன . இக்கட்சி மாநாட்டின் ஒரு பகுதியாக கட்சி பத்திரிகைகளில் பணியாற்றும் தோழர்கள் தனியாகச் சந்தித்து கருத்துப் பரிமாற்றம் செய்ய வழி செய்யப்பட்டது .தோழர் சீத்தாராம் யெச்சூரி பங்கேற்று ஆரோக்கியமான வழிகாட்டல்களை வழங்கினார் .

 

2008 ஆம் ஆண்டு கோவையில் அகில இந்திய மாநாடு நடைபெற்ற போது தீக்கதிர் பணிகளை ஒருங்கிணைப்பவராக பங்கேற்றேன் . இதர கட்சிப் பத்திரிகைகளுடன் நெருங்கிய உரையாடல் நடத்த வாய்ப்பேற்பட்டது .

 

2012  கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடைபெற்ற கட்சியில் அகில இந்திய 20 வது மாநாட்டில் ஐந்தாவது முறையாகவும் கடைசி முறையாகவும் பங்கேற்றேன் .ஆம் அதற்கு சற்று முன் நாகையில் நடைபெற்ற மாநில மாநாட்டில் நான் மாநிலக்குழுவிலிருந்து  சுயவிருப்பத்தின் அடிப்படையில் விடைபெற்றேன் ; 2013 ல் முழுநேர ஊழியர் பொறுப்பில் இருந்தும் சுயவிருப்பத்தின் பேரில் விடை பெற்றேன் .எனவே இம்மாநாடு நான் பங்கேற்ற கடைசி அகில இந்திய மாநாடு ஆகிப்போனது .

 

இம்மாநாட்டில் கட்சியின் வரலாற்றுக் கண்காட்சி நெஞ்சை நெகிழ வைத்தது .ஓர் கண்காட்சி எப்படி தரவுகளோடும் உயிர்ப்போடும் விளங்க வேண்டும் என்பதன் சாட்சியாய் இருந்தது . பார்த்து வியந்தேன் . வரலாற்றில் நுழைந்து உணர்ச்சி மேலிட நின்றேன்.

 

இம்மாநாட்டைத் தொடர்ந்து தீக்கதிர் நாளேட்டில் நான்கு நாட்கள் தொடர் கட்டுரை எழுதினேன் .[  akatheee.blogspot.com ல் இன்னும் கிடைக்கிறது . 2012 ஏப்ரல் மாதம் தேடவும். ] பரவலாக வரவேற்பு பெற்றது .மாநாட்டில் பங்கேற்ற உணர்வைத் தந்ததாக பல தோழர்கள் பாராட்டினார்கள் .

 

தற்போது அகில இந்திய  24 வது மாநாடு மதுரையில் நடைபெற உள்ள சூழலில் இவற்றை நினைத்துப் பார்த்தேன் .நம் வியூகத்தை கூர்மைப்படுத்தவும் கருத்தொற்றுமை அமைப்பொற்றுமை ஓங்கவும் மாநாடு படிக்கல்லாகட்டும்!  வெல்க சிபிஎம் ! வெல்க பாசிச எதிர்ப்புப் போர் !

 

சுபொஅ.

10/02/2025


0 comments :

Post a Comment