Showing posts with label நூல் மதிப்புரை. Show all posts
Showing posts with label நூல் மதிப்புரை. Show all posts

சொல்லித் தீராத உண்மைகள் .

Posted by அகத்தீ Labels:

 





 

சொல்லித் தீராத உண்மைகள் .

 

 

இன்றைய ஊடகங்கள் மீதான கோவமும் விமர்சனமும் ஒவ்வொருவருக்கும் இருக்கும் . அவை எல்லாம் ஒரே கோணத்தில் இருக்காது , அவரவர் அரசியல் பார்வைக்கு ஏற்ப இருக்கும் . ஆயினும் உண்மை எது ? தேடுக தொடர்ந்து .

 

களப்பணியாளர்களும் ,ஊடகப் பார்வையாளர்களும் ஊடகத்தில் பணியாற்றுகிறவர்களும் அறிய வேண்டிய உண்மைகளை ‘ விலக மறுக்கும் உண்மைகள்’ என்ற பெயரில் ஒரு கட்டுரைத் தொகுப்பு நூலாக தந்துள்ளார் அ.ப.அருண்கண்ணன் . தாமதமாகத்தான் படித்தேன் . சொல்கிறேன்.

 

இந்நூல் ஐந்து கட்டுரைகளின் தொகுப்பு .இதில் நான்கு கட்டுரைகள் ‘வளரி’என்கிற குறைவான வாசகர் பரப்பைக் கொண்ட ஏட்டில் வெளிவந்தவை .ஒன்று ’தமிழ் இந்து’ நாளேட்டில் வெளிவந்தது .   

 

 சினிமாவை முன்வைத்து பேசுகிறது கட்டுரை ஒன்று .  ஆவணப்படங்களை முன்வைத்து இரண்டு கட்டுரைகள் . புகைப்பட கலைஞனை முன்வைத்து பேசுகிறது இன்னொன்று . கார்ப்பரேட் ஊடக வியாபார அரசியல் பற்றி பேசுகிறது ஒன்று .இப்படி ஐந்தும் தனித்தனியே முகம் காட்டினாலும் இதன் ஊடும் பாவுமாக இருப்பது பாசிச அரசியல் மீதான விமர்சனப் பார்வையே ! பாசிசம் எப்படி ’பொய் பொதிந்த கருத்துத் திணிப்பில்’ மிகவும் நுட்பமாக வினையாற்றுகிறது என்பதை அறிய இக்கட்டுரைகள் நிச்சயம் பயன்படும் .

 

இந்தோநேசியாவில் ஒரு லட்சம் கம்யூனிஸ்டுகளை கொடுங்கோலன் சுகர்னோ படுகொலை செய்ததை நியாயப்படுத்தி  கம்யூனிஸ்டுகளை தேசவிரோதிகளாகச்  சித்தரிக்கும் ‘பெங்கியானன் ஜி30எஸ்/பி.கே.ஐ’ [ pengkhianatan G30S/PKI ]என்றொரு பிரச்சாரப் படத்தை இந்தோநேசிய இராணுவ ஆட்சி தயாரித்து இளைஞர்களை கட்டாயம் பார்க்க வைத்து , அதை ‘ உண்மைவரலாறு ‘ போல் நம்பவைக்க முயன்றது .இதனை முன்னுரையில் சிந்தன் குறிப்பிடுவதை கவனத்தில் வைத்துக்கொண்டே முதல் கட்டுரையை வாசிக்க வேண்டும் .

 

“ வரலாற்று உண்மையை சொல்ல மறுக்கும்’ தி காஷ்மீர் ஃபைல்ஸ்” என்ற படம் விவேக் அக்னி ஹோத்திரி என்பவரால் இயக்கப்பட்டது .1990 ஆம் ஆண்டு காஷ்மீரில் பண்டிட்டுகள் கொல்லப்பட்டதாக சொல்லப்பட்ட செய்தியை ’கொடூர உண்மை வரலாறு போல்’ சித்தரித்து இஸ்லாமிய எதிர்ப்பை விசிறிவிட உருவாக்கப்பட்ட திரைப்படமே அது .  மோடியும் சங்பரிவார்களும் இதனைத்தூக்கிச் சுமந்ததில் இருந்தே அது ’புராணப் புளுகு’ போன்ற ’வரலாற்றுப் புளுகு’ என்பது வெளிச்சமாகவில்லையா ? இதனை காஷ்மீர் வரலாற்றுடனும் சங்பரிவாரின் தீய நோக்கத்தை அம்பலப்படுத்தியும் கட்டுரைக்கு நியாயம் வழங்கியுள்ளார் அருண் கண்ணன் .

 

இதனைப் படிக்கும் போது ‘கேரள ஃபைல்ஸ்’ மற்றும் மராட்டிய திரைப்படம் ‘சாவா’ ஆகிவை எப்படி சிறுபான்மை மக்களை எதிரிகளாக்கியது என்பது நினைவுக்கு வராமல் போகாது . தமிழ்நாட்டிலும் சில திரைப்படங்கள் சாதி ஆதிக்கத்தை நியாயப்படுத்தியும் இஸ்லாமியர்களை துரோகிகளாக சித்தரித்தும்  வருவது கவனத்துக்கு உரியது .ஆக ,திரைப்படத்துறையில் மதவெறி சாதிவெறி அரசியல் தொழில்படத்துவங்கி உள்ளதை மிகவும் கவலையோடும் எச்சரிக்கையோடும் பார்க்க வேண்டிய அவசியத்தை இக்கட்டுரை நம்மிடம் சொல்லுகிறது .

 

 “தந்துரா : உண்மையைப் பிரதிபலிக்கும் ஆவணப்படமா ?” இது பாலஸ்தீனத்தின் கதையைப் பேசும் ஆவணப்படம் . 1948 ஆம் ஆண்டு தந்துரா என்ற கடற்கரை கிராமத்தில் 250 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் ராணுவத்தினரால் கொல்லப்பட்டனர் . இது செய்தி .இதனை இஸ்ரேல் ராணுவம் மறுக்கிறது . இரதரப்பையும் அலசுவது போல் இந்த ஆவணப்படம் தோற்றம் காட்டினும் படுகொலை நடந்தது என்பதை வலுவாகவே முன்வைக்கத் தவறவும் இல்லை .ஆயினும்  ,’” ஆஸ்திரியாவிலும் அமெரிக்காவிலும் பூர்வகுடிகளை கொன்றதை ஒத்துக்கொண்டதுபோல் நாமும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்றும் சொல்கிறார் .  படத்தில் இறுதியில் நினைவுச் சின்னம் அமைப்படுவதுடன் முடிகிறது ,அதில் ’சுதந்திரப்போர் நினைவுச் சின்னம்’ என்றே பொறிக்கப்படுவது இஸ்ரேலின் பக்கத்தில் பார்வையாளரைப் பிடித்துத் தள்ளுகிறது .இப்படத்தை இயக்கியவர் அலோன் ஸ்வாரஸ் .இவர் இஸ்ரேலைச் சார்ந்தவர் .இவர் இடதுசாரி முகாமைச் சார்ந்தவர் எனச் சொல்வதுதான் அதிர்ச்சி . இது உண்மையைப் பிரதிபலிக்கும் ஆவணப்படமா என்பதுதான் கேள்வி . விடை . ஒவ்வொருவரிடமும் மாறுபடும் .

 

இன்னொரு ஆவணப்படம் சார்ந்து எழுதப்பட்ட கட்டுரை ’பாலஸ்தீனத்தின் நெல்சன் மண்டேலா’   சோபியா ஸ்காட் மற்றும் ஜார்ஜியா ஸ்காட் இயக்கிய ‘டுமாரோஸ் ஃபிரீடம்’ எனும் ஆவணப்படத்தை முன்வைத்து பாலஸ்தீனப் போராளி ’மர்வான் பர்குதி’யின் வாழ்க்கையையும் பாலஸ்தீனப் போராட்டத்தின் ஓர் முக்கிய கண்ணியையும் நமக்கு அறிமுகம் செய்கிறது இக்கட்டுரை .

 

“ அதிகாரத்திற்கு எதிராக உண்மையைப் பேசிய புகைப்படக் கலைஞன்’ டேனிஷ் சித்திக் ஆப்கானிஸ்தான் போரின் போது தாலிபான் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார் .உலகமே கண்ணீர் விட்டது . ஆனால் அந்த மாபெரும் இந்திய புகைப்படக் கலைஞனுக்காய் மோடி இரங்கல்கூட தெரிவிக்கவில்லை . இது போதாதா அவர் யார் என்று சொல்ல ? அவரின் புகைப்படக் கருவி எப்போதும் அதிகாரத்திற்கு எதிராகவும் ஒடுக்கப்பட்டோருக்கு ஆதரவாகவுமே படம் பிடித்தது .அவரது புகைப்படங்கள் உண்மையை உரக்கச் சொல்லின . ஊடகங்கள்  மீது ‘இன்னும் நம்பிக்கை இருக்கிறது’ எனச் சொல்ல இத்தகையவர்கள் சாட்சியாகிறார்கள் . ஊடகத்துறையில் செயல்படும் சமூக அக்கறை மிக்க ஊடகக்காரர்களுக்கு இவர் ஓர் முன்னுதாரணம் . வாசியுங்கள் நண்பர்களே !

 

எண்டிடிவி என்கிற தனியார் கார்ப்பரேட் ஊடகம் எப்படி அம்பானியால் விழுங்கப்பட்டது என்பதைச் சொல்லும் கட்டுரை ; ” ஊடக உலகில் பெருமுதலாளிகளின் ஊடுருவல்’.  ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று சொல்லப்படுகிற ஊடகங்கள் ஆட்சி அதிகாரத்தால் எப்படி எல்லாம் சிதைக்கப்படுகிறது ஆட்டுவிக்கப்படுகிறது என்பதன் சாட்சி .

 

இந்நூலை எழுதிய அருண்கண்ணனுக்கு வாழ்த்துகள் !

 

ஊடகம்  சினிமா தொடர்பான நம் பார்வையையைக் கூர்மைப் படுத்த இதுபோன்ற நூல்களை வாசிப்பது களப்பணியாளர்கள் கடமையாகும் . ஊடகங்கள் குறித்தும் ’பொய் பொதிந்த கருத்தித் திணிப்பு’ முயற்சிகள் குறித்தும் எத்தனை நூல்கள் வந்தாலும் சொல்லித் தீராத உண்மைகள் நிறைய இருக்கும் .

 

விலக மறுக்கும் உண்மைகள்  : சினிமா ,ஊடகம் தொடர்பான கட்டுரைகள் ,அ.ப.அருண்கண்ணன்,  பாரதி புத்தகாலயம் ,  www.thamizhbooks.com    / 8778073949  ,

பக்கங்கள் : 72 , விலை  :ரூ. 70 /  

 

சுபொஅ.

05/09/25.

 

 

 

 

 

 


அரசியல் பாடம் சொல்லும் நான்கு நூல்கள் ….

Posted by அகத்தீ Labels:

 








அரசியல் 

பாடம் சொல்லும் 

நான்கு நூல்கள் ….

 

 

 

 

” நாம் ஏன் கியூபாவின் பக்கம் நிற்க வேண்டும்?” – இ.பா.சிந்தன்

 “பேராற்றலின் குரல்” – கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்

”ஃபிடெல் காஸ்ட்ரோ “ – ஜான் லீ

“ சோசலிச கனவின் தேடல் ; கியூபாவை நோக்கிய பயணம்” – எம் .கண்ணன்

 

ஆகிய நான்கு சிறு நூல்கள் .மொத்தம் 224 பக்கங்கள் . இன்றைய உலக அரசியலையும் உள்ளூர் அரசியலையும் விளங்கிக் கொள்ள எளிய வழிகாட்டி எனில் மிகை அல்ல .

 

சோசலிச கியூபாவை பாதுகாப்போம், ஏகாதிபத்திய சதிகளை முறியடிப்போம்என்ற முழக்கத்தோடு கியூப ஒருமைப்பாட்டு விழா மற்றும் பிடல் காஸ்ட்ரோ நூற்றாண்டு தொடக்க விழா செவ்வாயன்று (ஆக.12) சென்னையில் நடைபெற்றபோது இந்நூல்கள் வெளியிடப்பட்டன.

 

உலக அரசியலைப் புரிந்து கொள்ள என்பது சரி , உள்ளூர் அரசியலுக்கு இதற்கும் என்ன தொடர்பு ? இந்த அறிமுகக் கட்டுரையைப் படியுங்கள் புரியும்.

 

அரசியல் சார்ந்து எழுதும் போது ; ஆய்வு சார்ந்து எழுதுவது , வெகுஜனங்களை நோக்கி மேலோட்டமாக எழுதுவது , தகவல்களைக் கொட்டி எழுதுவது என்கிற மூன்றில் ஏதாவது ஒன்றில் பயணிப்பதே பொதுவாக நடக்கும் .ஆயின் செயலுக்கு உந்தித்தள்ள எழுதுவது தனிக்கலை . இதனை ’கிளர்ச்சிப் பரப்புரை’ எனவும் சொல்லலாம் . தகவல்களும் வேண்டும் , ஒரு வரலாற்று இயங்கியல் பார்வையில் அலசிப் பார்ப்பதாகவும் இருக்க  இருக்க வேண்டும் , எளிதில் போய்ச் சேரும் மொழி நடையும் கைவர வேண்டும் , கடைக்கோடி மனிதரை உசுப்பி போராடத் தூண்ட வேண்டும். இதில் இ.பா.சிந்தன் தேறிக்கொண்டிருக்கிறார் என்பதன் சாட்சிதான் ,          பாலஸ்தீனம்: நம்மால் என்ன செய்ய முடியும்?” என்ற நூலும் , அதனைத் தொடர்ந்து வந்துள்ள  “நாம் ஏன் கியூபாவின் பக்கம் நிற்க வேண்டும்?”எனும் நூலும் . வாழ்த்துகள்!

 

இங்கே மேலே குறிப்பிட்ட நான்கு நூல்களுமே ’கிளர்ச்சி பரப்புரை’ வகைதான் .நான்கும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவையே .நான்கையும் மேலே குறிப்பிட்ட வரிசையில் வாசிக்கும் போது ஓர் அரசியல் சித்திரம் மனதில் நிச்சயம் உருவாகும். எனவே இவற்றை வாலிபர்கள் ,மாணவர்கள் , புதியவர்களிடம் இவற்றை கொண்டு சேர்ப்பதும் மிகுந்த முக்கியமுடைய அரசியல் பணியே !

 

கியூபா என்ற நாட்டின் பழங்குடிகள் யார் ? அவர்கள் பேசிய மொழி என்ன ? அவர்கள் உணவு யாது ? பயிர் யாது ? அங்கு கரும்பு எப்படி வந்தது ? அவர்களின் சுருட்டும் ,கியூப  ரம் [மது] எப்படி புகழ்பெற்றன ? யார் யாரெல்லாம் அங்கு ஆதிக்கம் செலுத்தினர் ? அங்கு வந்து சேர்ந்தோர் யார் யார் ? ஸ்பெயினும் பிரட்டனும் அமெரிக்காவும் அவர்கள் வாழ்வோடு எப்படி விளையாடின ? அமெரிக்கா இன்னும் எப்படி பழிவாங்கிக் கொண்டிருக்கிறது ?  ஏன்  ? அங்கு போராட்ட குணம் அக்னிக் குஞ்சாய் எப்படி அடை காக்கப்படுகிறது ? இப்படி எழும் கேள்விகளுக்கு சுருக்கமாக அதே சமயம் நுட்பமாக விடை சொல்லி கியூபா மீதான நம் பார்வையைக் குவித்துவிடுகிறார் நூலாசிரிய இ.பா.சிந்தன் ‘ நாம் ஏன் கீயூபாவின் பக்கம் நிற்க வேண்டும் ?’ என்ற நூலில் .

 

முதல் அத்தியாயம் ‘இப்படி நடந்துவிட்டால் என்ன ஆகும் ?’ என்ற பதட்டத்தை வாசகரிடம் விதைத்து நூலுக்குள் இழுக்கிறார் . நல்ல கதை சொல்லி உத்தி . வாசித்து முடித்தவுடன் கியூபா மீதான நம் பரிவோ கருணையோ அதையும் தாண்டி ஏகாதிபத்திய எதிர்ப்பாக உருமாற்றம் அடைவதுதான் இந்நூலின் வெற்றி .

 

முறைத்துக்கொண்டே இருந்து துன்ப துயரத்தை சுமப்பதைத் தவிர வேறு எதனைக் கண்டீர்கள் ? பேசாமல் கொஞ்சம் சமரசமாகப் போய்விடலாமே ! காலில் விழுந்தாவது காரியத்தை சாதிக்க வேண்டியதுதானே ? இப்படி எடப்பாடி ஸ்டைலில் கேட்போருக்கு ’உடன்பட்டுப் போவதுதான் தீர்வா ?’ என்கிற ஒண்பதாவது அத்தியாயத்தில் சாட்சிகளோடு பதில் சொல்லி இருக்கிறார் இ.பா.சிந்தன் .

 

இந்நூலில் சேகுவரே குறித்து இன்னும் கொஞ்சம் அதிகம் சேர்த்திருக்கலாமோ ? அதே போல் ஹோசே மார்த்தியின் பொன்மொழிகளை வாக்குமூலங்களை எப்போதும் தன் பேச்சின் ஊடே மேற்கோள் காட்டிக்கொண்டே இருப்பவர் காஸ்டிரோ  ; இந்நூலிலும் அதனை ஒட்டி சில மேற்கோள்களை சேர்த்திருக்கலாமோ ? இவை இல்லாததால் இந்நூல் குறையுடையதாகாது ; இருந்திருந்தால் இன்னும் கூர்மை சேரும் அவ்வளவுதான்.

 

அடுத்து ஜான் லீ ஆண்டர்சனின் எழுத்துகள் வழி  ‘ஃபிடல் காஸ்டிரோ’ குறித்த சிறு அறிமுக நூல் ஜெ. தீபலட்சுமியால் நன்கு தொகுக்குப்பட்டுள்ளது . மொழி பெயர்க்கப்பட்டுள்ளது . இந்நூலிலும் வரலாறும் வாழ்க்கையும் இணைந்து சொல்லப்பட்டுள்ளது பேரழகு . “சேவும் ஃபிடெலும் கம்யூனிஸ்டுகள் என்றால் ,நாமும் கம்யூனிஸ்டுகளே” என அனைவரையும் சொல்லவைத்த பேராளுமை அவர்கள் . அவர்கள் ஊட்டிய உத்வேகமும் அரசியல் விழிப்பும் ஏகாதிபத்திய எதிர்ப்பும் இன்னும் கியூபா முழுவதும் கனன்று கொண்டே இருப்பதின் மந்திரச் சொற்களே காஸ்டிரோ , சேகுவேரா .

 

இந்நூலின் துவக்கத்தில் கியூப ஒருமைப்பாட்டு நிகழ்வொன்றில் கலைஞர் வாசித்த கவிதை இடம் பெற்றுள்ளது . அதில் ,

“கியூபா சின்னஞ் சிறிய நாடு

ஆயிரக்கணக்கான தீவுகள் கொண்ட தேன்கூடு !

தேன்கூடென்று ஏன் சொல்லுகிறேன் தெரியுமா

தெரியாமல் அமெரிக்கா கைவைக்கும் போதெல்லாம்

கொட்டிவிடும் தேனிக்கள் கியூப மக்கள் “ என்கிறார். ஆம்.

 

காஸ்ட்ரோவின் பேச்சாற்றல் உலகோரை வியக்கவைத்தது . அந்த ‘பேராற்றிலின் குரல்’ ஐ கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் உணர்வு பூர்வமாக வெளிப்படுத்தி இருக்கிறார் . வி.நர்மதா மொழியாக்கம் செய்து தந்துள்ளார் . அவர் பேச்சு நம்மிடம் நம்பிக்கையை விதைக்கும் .போரிடத் தூண்டும்.

 

இந்த மூன்று நூல்களும்  கொம்பு சீவும் ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வு எவ்வளவு சரியானது  நியாயமானது  அவசியமானது என்பதை தன் பயணம் மூலம் அறிந்த செய்திகளையும் பெற்ற அனுபவத்தையும் பிசைந்து ’சோஷலிசக் கனவின் தேடல்’ ஆகத் தந்திருக்கிறார் எம் .கண்ணன். உணர்ச்சிகரமான நடை மற்றும் விவரிப்பு வழி இந்நூலில் பல உண்மைகளை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் . நம் நாடு  நேரு ,இந்திரா காலத்தில் கடைப் பிடித்துவந்த வெளிநாட்டுக் கொள்கைகளை கைவிட்டு எப்படிப்பட்ட ஏகாதிபத்தியத்திடம் சரணடைந்துள்ளது என்கிற கசப்பான உண்மையை உணரச் செய்கிறது இந்நூல் .

 

பொருளாதாரத் தடை என்பதன் வலியும் கொடூரமும் எத்தகையது ? அதனை எதிர்த்து நிற்க எத்தகைய அரசியல் உறுதியும் அர்ப்பணிப்பும் தேவை ? இந்நூல் பாடம் சொல்கிறது . ஒரு நாளல்ல ஒரு மாதமல்ல ஒரு வருடமல்ல தொடர்ந்து இந்த முற்றுகை வட்டத்தில் இருக்கும் கியூபர்கள் அதனை எதிர்த்து எழுவது உலகுக்கே அரசியல் பாடமாகும் .அதனை இந்நூல் உணர்த்துகிறது .

 

இ.பா.சிந்தன் நூலின் முதல் அத்தியாயத்தை மீண்டும் வாசித்து எம் .கண்ணன் சொல்லும் செய்திகளையும் சேர்த்து அசைபோட்டால் எவ்வளவு ஆபத்தான ஏகாதிபத்திய எதிரியை நாம் எதிர் கொள்ள வேண்டி இருக்கிறது என்பது புலனாகும் .

 

அதிலும் கண்ணன் எழுதிய நூலின் ஆறாவது அத்தியாயத்தை வாசித்து முடிக்கும் போது , ஒன்று புலனாகிறது  நாம் ” 1.எதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் ? 2.என்ன செய்ய வேண்டும் ? 3.எதைப் பற்றி கவலைப்பட வேண்டும் “ என்பவற்றை உள்ளடக்கிய ”டிஜிட்டல் உலக கருத்து பிரச்சார வடிகட்டிகள்” குறித்தும் ,  ஒரு வகை Hybrid war  மூலம்  சமூக பொருளாதார அமைப்புகளில் நீண்ட கால சீர்குலைவு  ஏற்படுத்துகிற போக்கு குறித்தும் கருத்தரங்கில் நடை பெற்ற விவாதங்களைச் சொல்கிறார் . இது நாம் உள்ளூரிலும் எதிர்கொள்ளும் சவால் அல்லவா ? இந்துத்துவ வெறுப்பு அரசியலை நியாயப்படுத்தியும் , தாரளமய பொருளாதாரத்துக்கு முட்டுக் கொடுத்தும்  இங்கு நம்மிடம்  திணிக்கப்படும் கருத்துப் போர் நினைவுக்கு வரவில்லையா ? “ நாம் வலைப் பின்னல்களை நெய்யும் மக்கள்” [ WE ARE THE PECOPLE WHO WEAVE NET WORKS ] என்கிற நிலையை  எப்படி சாதிக்கப் போகிறோம் ? ஆக உள்ளூர் சவாலும் உலக சவாலும் இணையும் புள்ளிகள் மிகவும் கவலை அளிக்கிறது .

 

இந்த நான்கு நூல்களையும் இளைய தலைமுறையிடம் எடுத்துச் செல்லுங்கள் ! அரசியல் பயிற்சி என்பது அறையில் உட்காரவைத்து போதிப்பது மட்டுமல்ல ; தக்க நூல்களை வாசிக்கச் செய்வதும்தானே !

 

இந்நூல்களை வெளியிட்டவர் :  பாரதி புத்தகாலயம் ,thamizhbooks.com  / 8778073949  , பக்கங்கள் : 244 , விலை  :ரூ. 95 + 30 + 30 + 80 /

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

29/08/25.

 

 

 

 

 

 

 


மக்களிசை மேதை எம். பி, சீனிவாசன்

Posted by அகத்தீ Labels:

 

மக்களிசை மேதை எம். பி, சீனிவாசன்






நீண்டாநாள் வாசிக்க விரும்பிய புத்தகம் தாமதமாகக் கிடைக்க என் வாசிப்பும் தாமதமாகிவிட்டது . என் இனிய தோழர் மு.இக்பால் அகமது எழுதிய “ மக்களிசை மேதை எம். பி, சீனிவாசன்” நூலை வாசித்து மகிழ்ந்தேன் . தக்க நேரத்தில் எடுக்கப்பட்ட தக்க முயற்சி . நானறிந்த செய்திகளும் அறியாத செய்திகளும் நூல் நெடுக நிறைய இருக்கக் கண்டேன் . கமலாலயன் உள்ளிட்டு பலர் இந்நூல் குறித்து நுட்பமாக அறிமுகம் எழுதிய பின் நான் எழுதுவது சரியல்ல .காரணம் ,நான் பாடலை ரசிப்பேன் .ஆயின் இசை நுட்பம் அறியேன் .

இந்நூல் எம்பிஎஸ் அவர்களின் வாழ்க்கையை , வரலாற்றின் பின்புலத்தில் அவரின் முன் முயற்சிகளை குறிப்பாக தொழிற்சங்கப்பணிகளை , தனித்த இசை முயற்சிகளை தோழமையோடு எடுத்துரைக்கிறது . கம்யூனிஸ்டுகள் தொடக்கம் முதலே கலைஇலக்கிய உலகில் தடம் பத்தித்தனர் ; நாடகம் ,சினிமா உட்பட என்பதன் சாட்சி இந்நூல் . இசை அமைப்பாளர் சங்கம் உட்பட சினிமா உலகில் அவர் போட்ட விதை அதிகம் . அவை மரமாக செழித்து அவர் பெயர் சொல்லி நிற்கின்றன .அவர் கம்யூனிஸ்டாக வாழ்ந்ததினால் இழந்தது அதிகம் ; வாழும் காலத்தில் மட்டுமல்ல ; மறைவுக்கு பின்னும். வரலாற்றில் இருட்டடிப்பு செய்யப்படுகிறார் . இச்சூழலில் வெளிச்சத்துக்கு கொண்டுவர முயலும் மு.இக்பாலின் முயற்சி பெரிதும் பாராட்டப்பட வேண்டியதாகும் .

“ இசைக்கு இன்னொரு பெயர் எம் .பி .சீனிவாசன்
இசையை அவர் இயக்கினாரா
அவரை இசை இயக்கியதா
இசையும் அவருமாய் நம்மை இயக்கினார்கள் “
என தமிழன்பன் சொல்வது சரிதான் .இந்நூல் அதனைச் சொல்லும் .

“ மனினது பணிகள் யாவும் கூட்டாகவே நடை பெறுவதைப் போல ஆதிமனிதனின் இசையும் கூட்டுப் படைப்பாகவே ஒலித்தது .” என்கிறார் எம்பிஎஸ் . நம் மரபிலும் கூட்டாகப் பாடும் வழக்கமே நிலைத்ததை சொல்வதுடன் அதனை ‘ சேர்ந்திசை’ எனும் புதிய வடிவில் செதுக்கி நமக்குத் தந்தவரும் ஆவார் .

சிபிஎம் மாநாட்டை ஒட்டி எம் பி எஸ் அவர்களின் மாணக்கர் ராஜராஜேஸ்வரியை இசை ஆசிரியராக வழிகாட்டியாகக் கொண்டு கவிஞர் வெற்றி வளவன் ஒருங்கிணைப்பில் சென்னையில் ’நெல்சன் மண்டேலா சேர்ந்திசைக் குழு’வை கட்டி எழுப்புவதில் நான் அமைப்பு ரீதியாக உதவியாக இருந்தேன் என்பது மனநிறைவு .என் இணையர் சேர்ந்திசையில் அங்கமாகி இருந்தார் . பல வருடங்கள் சிறப்பாகச் செயல்பட்ட குழு அது .

பல்வேறு பசுமையான நினைவுகளைக் கிளறிவிட்ட நூல் இது . கடைசி எழுபது பக்கம் பல்வேறு தகவல் இணைப்பு போல் ஆகிவிட்டது . வரலாற்றில் அவை பதிவு செய்யப்பட்டாக வேண்டிய செய்திகள், தவிர்க்க முடியாதது . மீண்டும் இக்பாலுக்கு பாராட்டுகள் .

மக்களிசை மேதை எம். பி, சீனிவாசன் , ஆசிரியர் : மு.இக்பால் அகமது வெளியீடு : பரிசல் , தொடர்புக்கு : psrisalbooks2021@gmail.com 93828 53646 / 88257 67500 பக்கங்கள் : 276 , விலை : ரூ.350 /

சுபொஅ.
27/08/25

வலிமிகுந்த ஓட்டம் நிற்கவே இல்லை….

Posted by அகத்தீ Labels:

 



வலிமிகுந்த ஓட்டம் நிற்கவே இல்லை….

 

 

சக்தி சூர்யாவின் முதல் நாவல் ‘நரவேட்டை’யை வாசித்து மகிழ்ந்து பாராட்டியவன் நான் . ’சந்தாலி’ நாவல் என் கைக்கு மார்ச் மாதமே கிடைத்துவிட்டது . பல்வேறு சூழல்களால் வாசிப்பு தள்ளிப்போனது . நேற்று [ 26/07/25]தான் வாசித்து முடித்தேன் . தாமதத்திற்கு வருந்துகிறேன் .

 

வரலாற்றில் அலைகுடிகளாக ஆக்கப்பட்டுவிட்ட சந்தால் பழங்குடி மக்கள் தென் இந்திய மாநிலங்களை நோக்கி பிழைப்பு தேடி இடம்பெயர்வதை மறைந்த போராளி ஸ்டேன் சாமிகள்,” மூன்றாவது இடப்பெயர்வு” என்கிறார் . இந்த வரலாற்று செய்திகளோடும் வலிகளோடும் கொங்கு மண்டலம் நோக்கி பிழைப்பு தேடிவரும் வட இந்தியத் தொழிலாளர்கள் நிலையையும் பிசைந்து , சாதி மதம் இனம் கடந்த காதலையும் சமவிகிதத்தில் கலந்து  புனைவாக்கி நம் கையில் கொடுத்திருக்கும் சக்தி சூர்யாவிற்கு வாழ்த்துகள் .

 

முதல் அத்தியாயத்தில் நாகஜோதி எனும் பணக்காரப் பெண்ணின் ஒருதலை இச்சையால் பாதிக்கப்பட்டு , திருடன் என்கிற முத்திரையோடு பிழைப்புதேடி வந்த ஓர் வட இந்திய இளைஞன் செங்கா ஓடத் தொடங்கியதும் அதே தடத்தில்தான் நாவல் பயணிக்கும் என நீங்கள் நினைத்தால் அது பிழையாகிவிடும் . அந்த காட்சிக்கும் அடுத்தடுத்து வருவதற்கும் சம்மந்தம் இல்லை . செங்காவை சபலமற்றவனாகக் காட்ட அந்த முதல் காட்சி தேவைப்பட்டதோ?  அல்லது புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றிய சமூகத்தின் பொது புத்தியை சுட்ட இக்காட்சி அமைக்கப்பட்டதோ? ஈர்ப்பாக அமைந்துவிட்ட நுழைவாயில் .

 

சந்தாலிகளின் உருவமற்ற கடவுள்கள் மாறன் புரூ , போங்கா ,தோட்டக் காவியா , அவர்களின் சாமியாடி ஓஜா ,பபேல் கோபுரம் என பண்பாட்டு காட்சிகள் ,ஓல்சிக் மொழி எனும் சந்தாலி மொழி மெல்ல வழக்கற்றுப் போகும் நிலை ,  கன்யாட்டுகள் ,பட்நாய்க்குகளின் நிலபிரபுத்துவ சாதிய ஆதிக்கம் , சந்தால் மக்களின் கையறு நிலை நாவல் முழுவதும் விரவிக் கிடக்கிறது . கதை நாயகன் செங்கா இந்த சமூகத்திலிருந்து வந்தவன் .ஆனால் தான் ஒரிசாவிலிருந்து வந்தவன் என்றே சொல்லிக் கொள்வான் .இது ஓர் கதைக் களம் .

 

செங்கா கோவையில் ஸ்பின்னிங் மில்லில் பணியாற்றும் சூழல் , அங்கு பல ஊர்களில் இருந்து வந்து சுமங்கலித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் பணிபுரியும் பெண்கள் , இங்கு இவன் சந்திக்கும் மனிதர்கள் , முதலாளித்துவ சுரண்டல் எல்லாம் இன்னொரு கதைக் களமாகிறது .ஆக இந்நாவல் இரண்டு கதைக் களத்தில் பயணிக்கிறது . இரண்டும் நெடுந்தொலைவிலுள்ள கதைக் களங்கள் . பண்பாட்டுச் சூழலும் சமூக உளவியலும் வெவ்வேறானவை . ஆனால் வாழ பிழைப்பு தேடி ஓடுவது ஒன்றே இணைப்புச் சங்கிலி . கடைசிவரை அந்த வலிமிகுந்த ஓட்டம் நிற்கவே இல்லை .

 

சந்தால் பழங்குடி செங்காவின் தந்தை கிஷ்கு கோரா , தாய் செர்மா , தங்கை சித்ரமுகா , பாட்டி பாதல் முர்மு , சித்ரமுகாவின் காதலன் உயர்சாதியான கன்யாட் சமூகத்தைச் சார்ந்த ரித்விக் , கன்யாட் ,பட்நாய்க்  போன்ற ஆதிக்க சமூக ஒடுக்குமுறைகள் எனக் கதை சுழலும் . செங்கா பிழைப்பு தேடி கோவை வந்தவன் .

 

செங்கா  அவன் நண்பன் இஸ்மாயில் ,  ஸ்பின்னிங் மில்லில் உடன் வேலை செய்யும் மஞ்சு , செங்கா மஞ்சு இடையே அரும்பும் காதல் , சிஐடியு சங்கம் தோழர் செல்வராஜ், அவரோடு செங்காவின் தொடர்பு ,விரியும் புதிய பார்வை என கதை வளர்கிறது . செல்லா நோட்டு , ஜல்லிக்கட்டு போராட்டம் ,கொரானா கொடும் தாக்குதல் , சொந்த ஊரை நோக்கி நெடிய கொடிய நடை பயணம் என சமூக அரசியலும் வலுவாக வினையாற்ற கதை மேலும் விரிகிறது . இஸ்மாயில் ,செங்கா ,மஞ்சு இடையே சாதி ,மதம் , இனம் அனைத்தையும் தாண்டிய அன்பும் அரவணைப்பும் ; கொரானா இடப்பெயர்வும் யதார்த்த இந்தியாவை  சித்தரிக்கிறது.

 

நாவல் முடிவதற்குள் ஒரு வன்புணர்வுக் கொலை , ஒரு ஆவேசக் கொலை , நான்கு கொரானா சாவுகள் , ஒருவர் சிறைக் கொட்டடியில் , ஒருவர் மனநிலை பிறழ்ந்து அலைய , காதலி மஞ்சுவை பிணமாக மடியில் சுமந்தபடி பயணம் தொடருமா எனும் கேள்விக்குறியோடு செங்கா என திரைப்படக் காட்சிபோல் அடுத்தடுத்து நகரும் சோகக்காட்சிகள் .

 

இடப்பெயர்வின் வலியும் , மனிதம் கசியும் வாழ்வும்  பாடுபொருளாகி புதிய மானுடப் பார்வையை விதைக்க முனைகிறது . உழைக்கும் பாட்டாளிக்கு சாதி இல்லை ,மதம் இல்லை ,நாடு இல்லை’ என ஓங்கிச் சொல்கிறது இந்நாவல் எனில் மிகை அல்ல .

 

 “ சக்தி சூர்யாவின் நடை மென்மையும் இனிமையும் வாய்ந்த தென்றல் போன்ற அழகியலையும் ,புயலைப் போன்ற வேகத்தையும் ,கொடும் பாலையைப் போன்ற துயரத்தை விவரிக்கும் ஆழத்தையும் கொண்டிருப்பது தனிச் சிறப்பானது.”என சிறந்த எழுத்தாளர் இரா.முருகவேலே பாராட்டியபின் நான் சொல்ல என்ன இருக்கிறது ?

 

அதுபோல் சிறந்த எழுத்தாளர் கமலாலயன் சொல்கிறார் ,” கடைசி ஐம்பது பக்கங்களைப் படிக்கும் போது எழுந்த உணர்வுகளின் அழுத்தம் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை .” ஆம். நாவலை படிக்கும் ஒவ்வொருவரும் இதை உணர்வீர்கள் .

 

 ’நரவேட்டை’நாவலின் களமும் காட்சிகளும் உயிர்த்துடிப்பான நிகழ்வுகளின் வழி நகர்வதே அதன் வெற்றிக்கு அடித்தளம் . ஆனால் ,’ சந்தாலி’ நாவல் சமூக அறிவின் வழி நெய்யப்பட்ட புனைவு . ஆகவே அதற்குரிய பலம் பலவீனம் இரண்டும் உள்ளடக்கியது .

 

புலம் பெயர் தொழிலாளர்களை எப்படிப் பார்க்கப் பழக வேண்டும் என்பதற்கு இந்நாவலைப் படியுங்கள் !

 

சந்தாலி [ நாவல் ], சக்தி சூர்யா , பாரதி புத்தகாலயம் ,thamizhbooks.com  / 8778073949  , பக்கங்கள் : 304 , விலை  :ரூ.310 /

 

 

 

சு.பொ.அகத்தியலிங்கம் .

27/07/25.

 


உதிரிலைகளில் மீந்த பச்சையம்

Posted by அகத்தீ Labels:

 





கவிஞர் .பழ.புகழேந்தியின் “ உதிரிலைகளில் மீந்த பச்சையம்” கவிதைத் தொகுப்பு குறித்து பொன்.குமார் எழுதிய நூலறிமுகத்தை  இரண்டு நாட்களுக்கு முன் இங்கு பகிர்ந்திருந்தேன். அன்றே கவிஞருக்கும் குறும் அஞ்சல் அனுப்பி இருந்தேன். உடனே நூலை அனுப்பி விட்டார் . நேற்றே கிடைத்து விட்டது . நான் வாசித்து நெகிழ்ந்தேன் . என் இணையரும் வாசித்துவிட்டார் .

 

“யதார்த்த வாழ்க்கையின் இயல்பை தத்துரூபமாக எழுதி இருக்கிறார் ,ஆயின் வாசிக்க வாசிக்கப் பயம் தொற்றிக் கொள்கிறது …” என்றார் என் இணையர் .

 

இதனை எதிர்பார்த்துத்தான் முன்னுரையில் பழ.புகழேந்தி எழுதியிருக்கிறார் ,” பெரும்பாலானவர்கள் ‘அழவைக்கிறீர்கள்’ என்றார்கள்.சிலர் ‘அச்சமூட்டுகிறீர்கள்’ என்றார்கள் . இரண்டுமே உண்மையாகக் கூட இருக்கட்டும் . நான் எழுதியதின் நோக்கம் அழவைக்கவோ ,அச்சமூட்டவோ அல்ல. வாசித்து முடித்தபின் ,முதியோர்களைக் கைவிடக்கூடாது என்று மூளையின் ஓரத்தில் ஓர் அக்கறையை ஏற்படுத்தினால் போதும்.”

 

புகழேந்தி எழுத்தின் வீரியமும் அக்கறையும் அதை நோக்கி நகர்த்தின் மகிழ்ச்சியே . ஆயின் வாழ்க்கைச்  சூழல் பெற்றோரைப் பிரிந்து வெகுதூரம் பிழைப்பு நிமித்தம் பிள்ளைகளை விரட்டிவிடுகிறதே! ” முதுமை “ வரமா ? சாபமா ?” எனும் சிறு நூலில் இது குறித்து நான் விவாதித்திருக்கிறேன் .  “முதியோர் இல்லங்கள்” காலத்தின் கட்டாயத் தேவை என்பது என் கருத்து .

 

இந்நூல் பேசுபொருள் முதுமைக் காதல் குறித்தல்லவா ? அதில் வெற்றி பெற்றுள்ளது . புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் முதியோர் காதலை டார்ச் லைட்டாகக் கையில் பிடித்துக் கொண்டு இந்நூலில் பயணித்திருப்பதாய் நூலாசிரியர் சொல்வது மிகை அல்ல.

 

முதுமையில் தோன்றும் கசடுகளற்ற காதல் குறித்து நூலின் ஒவ்வொரு காட்சியும் விரிகிறது . வாசலில் நிற்கும் மரணமும் படுக்கையில் இருக்கும் நோயும் வாழ்வின் வலியும் நூல் நெடுக விரிகிறது . ஏதேனும் ஒரு கவிதையை சுட்டிச் செல்லலாம் எனில் எல்லா கவிதைகளும் போட்டி போடுகின்றன .

 

“ அதிகாரம்தான் செலுத்தியிருக்கிறேன்

உன்னிடம்

முதல் முறையாகக் கெஞ்சுகிறேன்.

போவதெனில்

என்னையும் கூட்டிப் போயேன்.”

 

இருவரும் ஒன்றாய் போக முடியாது . யாரேனும் ஒருவர் முந்தித்தான் ஆக வேண்டும் . இது இயற்கை .ஆயினும்..

 

“நிச்சயமற்ற நாளையை

போர்த்துக் கொண்டுதான்

உறங்குகிறோம்.

 

அப்படியே கண்மூடி விடுவதில்

எந்தச் சிக்கலும் இல்லை.

 

போர்வையை விலக்கி எழப்போவது

நீயா ? நானா ?

என்கிற சந்தேகம்தான்

படுத்துகிறது பெரிதாய்.”

 

பல கவிதைகள் இதனைச் சுற்றியே உள்ளன . வாழ்வின் யதார்த்தம்தான் . ஆனால் அந்த நிச்சயமற்ற வேளையில்தாம்  முதுமையில் காதல் மெய்யாய் கனிகிறதோ?

 

“உலர்ந்து விட்ட

நம் உதடுகளில்

இன்னமும் மிச்சமிருக்கின்றன

நமக்கான முத்தங்கள் .

 

அத்தனை பரிசுத்தமாய் இருக்கும்

அவற்றில்

எச்சில் வாடையும் இல்லை

இப்போது .”

 

என்கிறார் . இன்னொரு இடத்தில்

 

“ நம் தோல்கள்

முற்றிலுமாகச் சுருங்கத் தொடங்கிய பிறகு

நம் காதல்

தன்னைத் தானே

சரி செய்து கொண்டு விட்டிருந்தது .”

 

இன்னும் சொல்கிறார்…

 

“இதயம் நின்று போகும்

அந்த கடைசி நாளில்

நீ மட்டும்தான் இருப்பாய்

மூளையின் மூலை எங்கும்.

கண் முன்னாலும் இருக்க வேண்டும்

என்கிற கவலைதான்

இப்போதெனக்கு .”

 

காதலும் காமமும் முதுமையில் வற்றிவிடுவதில்லை  பக்குவமடைகின்றன என்பது என் கருத்து . ஆயின் நெடுங்காலமாய் வயசாயிடிச்சு  ‘இன்னும் என்ன வேண்டிகிடக்கு’என அங்கலாய்க்கும் பொதுபுத்தி இங்கு நீடிக்கிறது .மேற்கத்திய சமூகத்தில் அப்படி இல்லை . இந்த பொது புத்தியை மாற்ற இன்னும் ஏராளமான முதுமைக் காதல் இலக்கியங்கள் வரவேண்டும் என்பது என் கருத்து மட்டுமல்ல வேண்டுகோளும்கூட.

 

இந்த முதுமையின் தவிப்பை ,ஏக்கத்தை , ஆசையை , அன்பை …. இளைய காதலர்களே ! கொஞ்சம் உள் வாங்குங்கள். ஆதிக்கமற்ற அதிகாரம் செலுத்தாத அன்பும் காதலும் உங்களிடம் இப்போதே முகிழ்க்கட்டும் ! அதுவே இந்நூலின் வெற்றியாய் அமையட்டும் .

 

நூலின் அச்சுக்கோர்ப்பும் வடிவமைப்பும் முகப்பும் படங்களும் ஈர்க்கின்றன.

 

உதிரிலைகளில் மீந்த பச்சையம், பழ.புகழேந்தி ,

மெளவல் பதிப்பகம் ,  nfayha@gmail.com  , mouvalpathipagam@gmail.com

97877 09687 , 94888 40898,    பக்கங்கள்: 96  , விலை : ரூ.130 /

 

சு.பொ.அ.

17/07/25.

 

 


அபிற்கினியாள்....

Posted by அகத்தீ Labels:

 







க.சரவணனின் ‘ அன்பிற்கினியாள் , “ மொத்தம் 14 கதைகள் .அத்தனையும் நீள் கதைகள்” என்பார் ஓவியர் ஸ்ரீரசா .

சமூகத்தின் புண்களை அப்படியே எழுதிச் செல்வது ஓர் வகை . இப்படி சிலராவது யோசித்திருக்கலாமே என்கிற கோணத்தில் கதா பாத்திரங்களை கற்பனை செய்து படைப்பது இன்னொரு வகை . இரண்டும் கலந்தது இச்சிறுகதைகள் .

இடிந்து விழும் நிலையிலுள்ள ஓர் அரசு பள்ளிக்கட்டிடத்தைக் கண்டு பதைபதைக்கும் ஓர் தலைமையாசிரியரும் கரடுதட்டிப்போன அரசு இயந்திரமும்” மேற்கூரை” கதையில் நம்மை பதைபதைக்க வைக்கின்றன.

“டிபன் பாக்ஸ் ”மாறிப்போனதை வைத்து சொல்லும் சேதி மிகப்பெரிது . சுய விமர்சனத்தோடு பிரச்சனைகளை அணுகச் சொல்லும் “நீலதிமிங்கலம்” இப்படி ஒவ்வோர் கதையும் ஓர் சமூகச் செய்தியை உள்ளடக்கி உள்ளது . பொறுப்பான ஆசிரியராக க.சரணன் நூல் நெடுகவும் , நூலுக்கு வெளியேவும் வெளிப்பட்டுள்ளார் .

தொடர்ந்து எழுதி உச்சம் தொட வாழ்த்துகள் !

அன்பிற்கினியாள் , சிறுகதைத் தொகுப்பு , க.சரவணன் , பாரதி புத்தகாலயம் ,பக்கங்கள் 216 ,விலை : ரூ .240/.

சுபொஅ.
15/07/25.

ஏன் வாசிக்க வேண்டும் மணிமேகலையை ?

Posted by அகத்தீ Labels:

 





நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் :

 

 ஏன் வாசிக்க வேண்டும் மணிமேகலையை ?

 [ நன்றி : காக்கைச் சிறகினிலே , மே மாதம் , 2025.]

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

 

மணிமேகலை என் நெஞ்சுக்கு மிகவும் நெருக்கமான காவியம் . இக்காவியம் குறித்து முதுபெரும் தோழர் கே.டி.கே .தங்கமணி , தோழர் .ஜீவபாரதி உள்ளிட்ட சிலரின் நூல்களை வாசித்துள்ளேன் . தீராநதியில் அ.மார்கஸ் தொடராக எழுதிய போது அவ்வப்போது வாசித்துள்ளேன் . மூலமும் உரையும் வாசித்துள்ளேன் . இதற்கு ஈடான இன்னொரு காவியம் இல்லை என்றே சொல்லுவேன் . அந்த அளவு என் மனதைக் கொள்ளை கொண்ட காவியம் இது . இம்முறை அ.மார்க்சின் மணுமேகலை வெளிவந்த சூட்டோடு வாங்கிவிட்டேன் . வெளிநாட்டில் இருந்தபடி வாசித்தேன் . இந்நூலை ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டும் என சிபாரிசு செய்கிறேன் .

 

மணிமேகலை காப்பியத்தின் தனித்துவங்களையும் சிறப்புகளையும் ஓர் இடதுசாரி கூர்நோக்கோடு இந்நூல் நெடுக கட்டுரைகளாகத் தந்துள்ளார் அ.மார்க்ஸ்  . முதல் பாகத்தில் 38 கட்டுரைகளும் , இரண்டாம் பாகத்தில் 22 கட்டுரைகளும் , மூன்றாம் பாகத்தில் [ இரண்டாம் பாகத் தொகுப்பில் அடங்கியது ] 17 கட்டுரைகளும் , முதல் பாகத் தொகுப்பின் இறுதியில் ‘ சாத்தனாரின் மணிமேகலை மூல காப்பியச்  சுருக்கமும்” இடம் பெற்றுள்ளது. .  ‘தீராநதி’யில் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் தொடராக வந்த கட்டுரைகளின் தொகுப்பு என்பதால் அதற்குரிய பலமும் பலவீனமும் உள்ளடக்கியதே இத்தொகுப்பு நூல்.

 

 மணிமேகலை எவ்வளவு உயர்வான சிந்தனைகளை உள்ளடக்கியது என்பதில் ஐயமில்லை .அதனை எடுதுக்காட்டுவதையே  அ. மார்க்ஸின் இந்நூல் தன் முதன்மை இலக்காகக் கொண்டுள்ளது . மணிமேகலை 30 அத்தியாயங்களைக் கொண்டது .மொத்தம் 4758 வரிகள் . 16 கிளைக்கதைகள் . ஒவ்வொரு கிளைக்கதையும் பெளத்த நெறி ஒன்றை வலியுறுத்தும் வண்ணம் அமையப் பெற்றது . எனவே மணிமேகலையின் நூல் கட்டுமானம் சற்று சிக்கலானது . அந்த சிக்கல்களை அறுத்து மணிமேகலை பேசும் அறத்தை படம் பிடிக்கிற சவாலான பணியைத்தான் அ.மார்க்ஸ் செய்துள்ளார்.

 

இரட்டைக் காப்பியங்கள் எனச் சொல்லப்படுகிற சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும்  கண்ணகி ,மணிமேகலை , மாதவி ,சித்திராபதி ,மாசாத்துவன் , அறவாணர் ,இளங்கோ ,சாத்தனார் என முக்கிய பாத்திரங்கள் ஒன்றாக இருப்பினும் பாத்திரங்களை வார்த்ததில் பாரிய வேறுபாடு உண்டு .இதனை இந்நூலில் பல இடங்களின் மார்க்ஸ் நிறுவுகிறார் . குறிப்பாக சிலம்பு சமண காவியமாக இருப்பினும் நூல் நெடுக ஒருவித சமய சமரசம் பேணப்படும் ; ஆனால் மணிமேகலை பெளத்த நெறியை ஓங்கி ஒலிக்கும் .

 

இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தில் கண்ணகியை கடைசியில் பத்தினி தெய்வமாக காட்சிப்படுத்த ஏதுவாக முதல் காண்டத்தில் வர்ணிக்கும் போதே உயர்வு நவிர்ச்சியை கையாள்வதாக ம.பொ.சி தன்  “விளக்கத் தெளிவுரை”யில் சுட்டிக்காட்டுவார் .

  

’மணிமேகலைத் துறவு’ என பெயர் பெற்ற இக்காவியத்தில் ஓர் இளம் பெண் துறவு நோக்கி பயணிக்கும் போதும் , இளம் பெண்ணுக்கே உரிய காதல் , உளவியல் போராட்டம் இவற்றை சாத்தனார் நேர்த்தியாய் சொல்லியிருப்பார் இப்பாங்கை அ.மார்க்ஸ் எடுத்துக் காட்டுகிறார் .

 

பத்தினி என்கிற கோட்பாட்டை மணிமேகலை போற்றவில்லை . மணிமேகலை பத்தினி தெய்வம் கண்ணகியை சந்திக்கும் போது , நீங்கள் “ கற்புக் கடன் பூண்டு  நுங்கடன்..” முடித்தது சரியா ? மதுரையை எரித்தது சரியா என வலுவாகக் கேள்வி எழுப்புகிறார் . பத்தினி கோட்பாட்டை கேள்விக்குள்ளாக்கும் மணிமேகலை மக்களின் உளவியலில் ஆழப்பதிந்துள்ள பத்தினி கருத்தியலை முற்றாக எதிர்நிலையில் நிறுத்தாமல் சமரசமும் செய்கிறது . மணிமேகலை முதலில் அட்சய பாத்திரத்தில் பிச்சை ஏற்க ஆதிரை என்ற பத்தினியைத் தேர்ந்தெடுத்தார் என்பது இதானால்தான் என்கிறார் அ.மார்க்ஸ்  .

 

சைவ மரபினர் நெடுங்காலமாக சிலப்பதிகாரம் ,திருக்குறளை ஏற்றுக்கொண்ட போதிலும் மணிமேகலையை ஏற்க மறுத்தது ஏன் என்கிற கேள்வியை எழுப்பி விடைதேட முயன்றிருக்கிறார் அ.மார்க்ஸ் .

 

“மணிமேகலை அவர்களால் செரித்துக்கொள்ள இயலாத பல அம்சங்களைக் கொண்டிருந்ததுதான் இதன் அடிப்படை . ஒரு பெண்ணுக்கு காப்பிய மரபில் அளிக்கப்படும் பாத்திர இலக்கணங்களை முற்றிலும் மீறியவள் மணிமேகலை காதல் பிரிவு ,கணவனைத் தொழுதெழும்  கற்பு ,இல்வாழ்க்கை , தாய்மை என்கிற பாத்திர மரபு மணிமேகலையில் தலைகீழாகக் கவிழ்க்கப்படுகிறது . காப்பிய நாயகியின் லட்சியம் இல்லறம் அல்ல . இங்கு காப்பியத்தின் பெயரே மணிமேகலைத் துறவு என்பதுதான் “ என்கிறார் அ.மார்க்ஸ்.

 

சீதை ,சீதா என்கிற பெயர்கள் தமிழ்சமூகத்தில் மீண்டும் மீண்டும் பெண்களுக்கு சூட்டப்படுகிறது . சீதையும் ஓர் துயர காவியம்தான் ஆயினும் ஆணாதிக்க சிந்தனைக்கு ஏற்ற அடிமை என்பதால் சமூகம் ஏற்றுக் கொண்டாடுகிறது .ஆயின் ஆட்சிக்கு எதிராக சீறி எழுந்த கண்ணகி பெயரோ , ஊருக்கே பசிப்பிணி போக்கிய  உலக முன்மாதிரி  மணிமேகலை பெயரோ விதிவிலக்கவாகவே இங்கு புழங்குகிறது . இந்த சமூக உளவியலோடு நாம் மறுவாசிப்பு செய்ய வேண்டி இருக்கிறது என்பது என் கருத்து  .

 

” மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்” [ மோசிக்கீரனார் .புறநானூறு 186 ] என்பதே சங்கம் தொட்டு தமிழ்ச் சமூக கருத்தாக்கமாக இருந்து வந்தது . “ மன்னனே உயிர் மக்கள் வெறும் உடல்தான் . மன்னன் நன்றாக இருந்தால்தான் மக்கள் நன்றாக இருக்க முடியும்” என்பது மோசிக்கீரனாரின் வாதம் .ஆனால் மணிமேகலையில்  ஜனநாயகம் சற்று மூச்சுவிடுகிறது . மணிமேகலை சொல்கிறது ,” மன்னவன் மகனே கேள் ! கோ [ அரசன் ] நிலை தவறினால் கோள்களும் நிலை தவறும் . கோள்கள் நிலை தவறினால்  மழை பொய்க்கும் ,மழை பொய்த்தால் மன்னுயிர் [மனிதர்கள் ] அழிவர் . மன்னுயிர் அழிந்தால் மன்னுயிர் எல்லாம் தன்னுயிர் எனக் கருத வேண்டிய மண்ணாள் வேந்தனின் தன்மையும் அழியும்.”[ மணி 7.7 -12] மக்கள்தான் உயிர் .மக்கள் நன்றாக இருந்தால்தான் மன்னன் நன்றாக இருக்க முடியும் “ என மோசிக்கீரனாருக்கு எதிர்நிலையை மணிமேகலை எடுப்பதை அ.மார்க்ஸ் எடுத்துக் காட்டுகிறார் .

 

“ பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் [மழையும்] வளனும் சுரக்க ” இந்திரவிழாவுக்கு அழைப்பு விடப்படுகிறது  முதல் அத்தியாயத்திலேயே . பசிப்பிணிக்கு எதிராக உரக்க ஒலித்த மானுடநேயக் குரலே மணிமேகலை . நூல் நெடுக பெளத்த அறம் ஓங்கி இருப்பினும் பசிப்பிணிக்கு எதிராக ‘அட்சய பாத்திரம்’ எனும் அழகிய கற்பனையைப் படைத்த சாத்தனார் , அதனை முதலில் ஆபுத்திரன் கையில் கொடுக்கிறார் ,பின்னர் அதை மணிமேகலை கையில் தருகிறார் . ஆபுத்திரனின் பிறப்பு என்பது தாய்க்கு தவறான வழியில் பிறந்தவன் , மணிமேகலை கணிகையர் குலத்தில் வந்தவர் . ஆக குல ஒழுக்க விதிகளை சுக்குநூறாக உடைத் தெறிந்து பசிப்பிணியை போக்கும் அட்சய பாத்திரத்தை அவர்கள் கையில் கொடுத்து வற்றா மானுட அன்பே உயர் ஒழுக்கமென நிறுவிய காப்பியம் இது . அ.மார்க்ஸ் தம் கட்டுரைகளில் பல இடங்களில் இதனை எடுத்துக் காட்டுகிறார்.   

 

“காணார் ,கேளார், கால்முடப்பட்டோர் , பேணுநர் இல்லார் ,பிணி நடுக்குற்றார் …” என யார் யாருக்கெல்லாம் பசிப்பிணி ஆற்ற வேண்டும்  என விரிந்து பரந்து  வழிகாட்டுகிறது .இங்கு இன்னொரு செய்தி , ”மாற்றுத் திறனாளி” என்ற சொல்லை இப்போது நாம் ஏற்றுள்ளோம். குருடர் ,செவிடர் ,நொண்டி போன்ற  சொற்களை இழிவெனச் சொல்கிறோம் . சிலப்பதிகாரம் உடபட பழந்தமிழ் இலக்கியங்களில் இச்சொற்களே விரவி இருக்க , மணிமேகலையே மாற்றுச் சொற்களைப் படைத்து முன்னத்தி ஏர் ஆகிறது என்பது என் அபிப்பிராயம் .அ.மார்க்ஸ் இதனைக் கருதில் கொள்ளவில்லை .  அரும்பசி களைய எல்லையற்ற வெளியை உருவாக்கி  இல்லை எனாது வழங்கிய அட்சய பாத்திரக் கற்பனை கூட ஒரு வகை உட்டோபியன் சோஷலிசம் என நான் கருதுவது உண்டு . ஓர் நூலில் எழுதியும் இருக்கிறேன்.  பசிப்பிணி ஆற்ற வேண்டிய மக்கள் தொகுதியாக  காணார் கேளார் என நீளும் பட்டியலில் விலங்கினங்களையும்  சேர்த்த சாத்தனார் ஓரிடத்தில் ‘மடிநல்கூர்த்த மக்கள்’ எனச் சொல்லிச் செல்கிறார் .அது யாரைக் குறிக்கும் என அ. மார்க்ஸ் கேள்வி எழுப்பிச் செல்கிறார் .

 

போரில் வென்று சிறைபிடிக்கப்பட்ட எதிரிநாட்டுக் கைதிகளை இந்திரவிழாவின் போது  விடுதலை செய்ததாக ம.பொ.சி தன் சிலப்பதிகார விளக்கக்கத் தெளிவுரையில் எடுதுக்காட்டுவார் . ஆனால்  “சிறைக்கோட்டத்தையே அறக்கோட்டமாக்கி” மனித உரிமையின் பெருங் குரலாக மணிமேகலை ஒலித்ததை ,மனித உரிமைப் போராளியான அ.மார்க்ஸ் உளம் தோய்ந்து எடுத்துரைத்துள்ளார் .

 

பல்வேறு சமயத்தாருடன் உரையாடி அவர்கள் சமயநெறி அறிந்தாய்ந்து பெளத்தம் சேர்கிறார் மணிமேகலை .அளவைவாதி ,சைவவாதி ,பிரம்மவாதி , வைணவவாதி ,வேதவாதி ,ஆசிகவாதி என எல்லோரிடம் பாடம் கேட்கிறார் . ஆயினும் இறுதியில் பெளத்தமே  உயர்வென சொல்லி முடிக்கிறார் . நீலகேசி பிற சமயத்தை வாதில் வென்று சமணத்தை நிறுவியதுபோல் மணிமேகலை செய்யவில்லை .எல்லா சமய நெறிகளையும் அறிந்து ; பெளத்தமே மேலானது என முடிவுக்கு வருகிறார் . அப்பாத்திரத்தின் வழி வாசகனையும் வரச்செய்யும் காவிய நுட்பம் மணிகேலைக்குரியது , அதே சமயம் சமய பகையை விசிறாமல் பல்வேறு சமயங்களின் இருப்பையும் அங்கீகரிக்கிறது  . அ. மார்க்ஸ் இதனை எடுத்துக் காட்டத் தவறவில்லை .

 

 பட்டினிக்கு எதிரான மாபெரும் மானுட பேரெழுச்சியாகவும் ; பத்தினி கோட்பாடு ,குலதர்மம் இவற்றை மீறி உயர் ஒழுக்கத்தை பறை சாற்றுவதாகவும்  ; ஓர் இளம் பெண் துறவு பூணுவதை மையம் கொண்டதாகவும் அமையப்பெற்ற மணிமேகலையில் , கிளைக்கதைகள் மூலம் பொளத்த அறமே உரைக்கப்படுவதால் இந்நூல் நெடுக தத்துவமும் அறபோதனையும் பிணைந்திருப்பதை அறிவோம் .அதனை  எடுத்துக்காட்ட அ.மார்க்ஸ் தவறவில்லை . அதன் தத்துவப் புலம் குறித்து நான் இங்கு பேசப்புகவில்லை .நூலை வாசித்தறிக !

 

 

இப்படி இந்நூலில் எடுத்துரைக்கப்பட்ட கருத்துகளை சொல்லச் சொல்ல நீளும் ; இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன் . நீங்கள் வாசித்து அறிவது மிகவும் நன்று !

 

குறிப்பாக இரண்டு செய்திகளை சுட்டிக்காட்டுவது அவசியமென்று கருதுகிறேன் .

 

1] எழுத்துப் பிழைகள் உறுத்துகின்றன . தத்துவ வாதம் மிகுந்த பகுதியில் வாசிப்புக்கு இடையூறு செய்கிறது .அடுத்த பதிப்பில் சரி செய்க ! 134 ஆம் பக்கத்தில் 17 வது அத்தியாயத் தலைப்பே “பட்டினி வழிபாடு” என்றிருக்கிறது . ’பத்தினி வழிபாடு’என்றல்லவா இருந்திருக்க வேண்டும் . அத்தியாய உட்பொருளிலும் அப்படியே உள்ளது .

2] கூறியது கூறல் வாரந்தோறும் எழுதும் போது கட்டாயம் தேவைப்படும் ஏனெனில் வாசகர் நினைவுத் தொடர்ச்சிக்காக . ஆனால் நூலாக்கும் போது பத்தி பத்தியாக பக்கம் பக்கமாகக் கூறியது கூறல் மீண்டும் மீண்டும் வருவது வாசிப்புக்கு இடையூறு செய்யும் . எடிட் செய்தால் பக்கங்களின் எண்ணிக்கையும் நிச்சயம் குறையும் .

 

அடுத்த பதிப்பில் இவ்விரண்டையும்  சரி செய்வாரென தோழமையோடு எதிர்பார்க்கிறேன்.

 

இடதுசாரி மற்றும் முற்போக்கு பக்கம் நிற்போர் ,கம்யூனிஸ்ட் கட்சியோடு ஏதோ ஓர்வகையில் தன்னை அடையாளம் காட்டிக் கொள்வோர் ,பாசிச எதிர்ப்பில் தன்னை முன்நிறுத்துவோர் வாசிக்க வேண்டிய காப்பியம்‘  “மணிமேகலை” . அதனை நோக்கி ஆற்றுப்படுத்துகிறார் இந்நூல் வழி அ.மார்க்ஸ் .

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் : மணிமேகலை  [ இரண்டு பாகங்கள் ] , ஆசிரியர் : அ.மார்கஸ் ,வெளியீடு : எழுத்து பிரசுரம் , தொடர்புக்கு : மின்னஞ்சல் : zerodegreepublishing@gmail.com   / 89250 61999 பக்கங்கள் : 350 + 240  / விலை :  ரூ .420 + 290

 

 

 

சு.பொ.அகத்தியலிங்கம் .

05/05/25

வர்ஜீனியா , அமெரிக்கா ,

 

 

 

 

 

 

.