உழைக்கும் பெண்களின் நெடிய போராட்டப் பயணம் : ஓர்ஆய்வு
நர்மதா தேவி எழுதிய “ பெண் : அன்றும் இன்றும்” நூல் எனக்குத்
தாமதமாகத்தான் கிடைத்தது .கிடைத்த பின்னும் இரண்டு வாரங்கள் வேறு சில பணிகள் காரணமாக
இந்நூலைப் புரட்ட முடியவில்லை . கடந்த மூன்று நாட்களில் படித்து முடித்தேன் .தாமதமாயினும்
இந்நூலை படிக்காமல் இருந்ததைவிட இப்போதேனும்
படித்ததற்காக மிகவும் மகிழ்கிறேன் . “better late than
never” இல்லையா ?நீங்களும் இன்னும் படிக்காவிடில்
இனியும் தாமதிக்க வேண்டாமென வேண்டுகோள் விடுகிறேன். பலர் நூல் அறிமுகம் எழுதிவிட்டதால்
நான் சுருங்கச் சொன்னால் போதுமல்லவா ?
பாலின சமத்துவம்
, பெண் விடுதலை , ஆணாதிக்கம் ,பெண்ணியம் இந்த
சொற்கள் வெளிப்பார்வைக்கு மிகவும் பொதுவானவை .ஆனால் அமெரிக்கவின் ஒரு மேல்தட்டு பெண்கள்
குழுவினர் இச்சொற்களைச் சொல்லும் பொருளுக்கும் , இங்கே இராமநாதபுரத்திலோ தர்மபுரியிலோ ஓர் விவசாயக் கூலிப்
பெண் சொல்வதற்கும் ஒரே பொருளில்லை . அவரவர் வர்க்கப் பார்வை அச்சொற்களின் மேல் இயல்பாக
ஒட்டிக் கொள்ளும் .
இச்சொற்களின்
பொருளும் விரிவும் கூர்மையும் காலந்தோறும் மேம்பட்டு வருவதை வரலாற்றுப் போக்கில் பார்ப்பவர்கள்
நிச்சயம் உணர முடியும் . நான் சார்ந்திருந்த இயக்கத்திலும் சரி , எனக்கும் சரி1980 களில் இருந்த பார்வையும் , 1990 களில் இருந்த
பார்வையும் பத்தாண்டுகளுக்கு முன்னால் இருந்த பார்வையும் இன்றைக்கு ஏற்பட்டிருக்கும்
மாற்றமும் சாதாரணமாய் வந்ததில்லை . உள்ளும் புறமும் நடந்த கடும் போராட்டத்தின் விளைவே
.
இந்நூலில்
பாட்டாளி வர்க்கப் பார்வையில் வரலாறு நெடுக
உழைக்கும் பெண்கள் பட்ட பாட்டினையும் அதற்கு எதிராக மெல்ல எழுந்து ஓங்கிய போராட்ட அலைகளையும்
பெற்ற வெற்றிகளையும் நுட்பமாக ஆய்வு செய்து அழகு தமிழில் நமக்குத் தந்திருக்கிற தோழர்
நர்மதா தேவியை எவ்வளவு பாராட்டினாலும் தகும் .
எட்டு பகுதிகளாக
40 அத்தியாயங்களில் இந்நூல் விரிந்திருக்கிறது . முதல் பகுதி ” குடும்பம்- தனிச் சொத்து – அரசு இவற்றின் தோற்றம்”
குறித்து எங்கெல்ஸ் எழுதிய நூலினை அடியொற்றி எளிமையாய் ஓர் அறிமுகம் செய்கிறது .அடுத்த
பகுதி ’ஸ்வீட் கேப்டலிசத்தின்’ உண்மை முகத்தை தொழிற்புரட்சி காலந்தொட்டு படம் பிடிக்கிறது
. முதலாளித்துவம் தன் லாபவெறிக்காகாக பெண்களை எப்படிக் கையாள்கிறது என்பதன் விரிவான
சித்திரமாக உள்ளது . முதலாளித்துவத்தின் இரட்டை வேடமும் சுரண்டலை அதிகப்படுத்தவே என்பதை
இந்நூல் நிரூபிக்கிறது .
காலனி இந்தியாவில்
உழைக்கும் பெண்கள் நிலை ; சுதந்திர இந்தியாவில் உள்ள நிலை , சொல்லுக்கும் செயலுக்கும்
உள்ள இடைவெளி இவற்றை பகுதி நான்கும் பகுதி ஐந்தும் விவரிக்கிறது . குடிமகனுக்கு பெண்பால்
என்ன ? மிகச் சரியான கேள்வி . நீதிக் கட்சியைச் சார்ந்த டி.எம்.நாயர் தமிழ்நாட்டு உழைக்கும்
பெண்கள் குறித்து கூர்மையான தெளிவான பார்வையைக் கொண்டிருந்தார் என்பதை பல எடுத்துக்
காட்டுகளுடன் இந்நூலில் சுட்டி இருப்பதைக் கண்டேன் ; வழக்கமாக நம் வகுப்புகளில் இது
சொல்லப்படாத செய்தி .
சோஷலிசமும்
பெண்களும் எனும் நுட்பமான பொருள் குறித்து ஆறாவது பகுதி நிறைய தகவல்களோடு வெளிச்சம்
போடுகிறது . ஆதியில் தொழிலாளி வர்க்க இயக்கத்துக்குள்ளேயும் பாலின சமத்துவத்தை ஏற்காதவர்
கை ஓங்கி இருந்ததையும் நுட்பமாக நடத்திய கருத்துப் போராட்டத்தையும் இந்நூல் பேசுகிறது
.
என் நினைவுகள்
பின்னோக்கி அசைபோட்டன .அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கங்கத்தின் முதல் அகில இந்திய
அமைப்பு மாநாடு சென்னையில் தாசப் பிரகாஷ் கல்யாண
மண்டபத்தில் 1981 ல் நடைபெற்ற போது அந்த மாநாட்டு அரங்கத்தின் பணிகளை ஒருங்கிணைக்கும்
பணியை எனக்கு கட்சி வழங்கி இருந்தது . அம்பத்தூர் தோழர் சுந்தர்ராஜூம் இந்திய மாணவர்
சங்கத் தோழர் விஜயகுமார் போன்ற தோழர்களும் இணைந்து செய்தோம் .
அப்போது கட்சித்
தலைவர்கள் பலருக்கே பெண்சமத்துவம் குறித்த புரிதல் குறைபாடு உடையதாக இருந்தது . தோழர்
மைதிலி சிவராமன் ,பாப்பா உமாநாத் , ஷாஷாஜி கோவிந்தராஜன் போன்ற தோழர்கள் புரிதலை ஆண் தோழர்களுக்கு ஏற்படுத்த பட்ட பாட்டினை நான் நேரில் பார்த்தவன்
. மாநாட்டின் போது தோழர் மைதிலி சிவராமன் கண்கலங்கியதையும் தோழர் ஏ.பாலசுப்பிரமணியன்
தன் தோளில் சாய்த்த்து மைதிலியை தேற்றி , “ பெண் சமத்துவத்துக்காக கட்சிக்குள்ளும்
போராடத்தான் வேண்டும் . வேறு வழியில்லை . தோழர் கொலந்தாய் , கிளாரா ஷெட்கின் பற்றி
எல்லாம் உங்களுக்கு நான் சொல்லித் தர வேண்டியதில்லை
… நம் நாட்டில் மநுநீதி எல்லோர் மண்டையிலும் இருக்கிறது ..கம்யூனிஸ்டுகளும் விதி விலக்கல்ல
.. போராடுங்கள் கட்சி உங்களோடு இருக்கிறது .படிப்படியாக காய் நகர்த்துவோம். ..” என்றார்
.
பின்னர் ஓர்
சிஐடியு மாநாட்டில் தோழர் பி .டி.ரணதிவே சொன்னார் , “ நாம் மேடையில் பெண்சமத்துவம்
பேசுகிற புரட்சியாளர்களாக இருக்கிறோம் ,வீட்டில் மோசமான இந்துக் கணவர்களாக இருக்கிறோம்
.” இதனை பல கூட்டங்களில் அவர் திரும்பத் திரும்ப
சொல்லியதை நான் கேட்டிருக்கிறேன் .
இந்திய வரலாற்றில்
வீரஞ்செறிந்த தெலுங்கானா போராட்டம் ,வொர்லி பழங்குடி மக்கள் போராட்டம் , கையூர் போராட்டம் ,பொன்மலைப் போராட்டம் என கனல் மணக்கும் நினைவுகளோடு
உணர்ச்சியை உசுப்பி வீரத்தை விதைக்கிறது ஏழாவது பகுதி . இப்பகுதியில் பாபா உமாநாத்
,கே.பி.ஜானகியம்மா , ஷாஷாஜி , ஜானகியம்மாள் ,லட்சுமி அம்மாள் ,ருக்மணி அம்மாள் போன்ற
தலைவர்களைப் பற்றிய குறிப்புகள் நன்று . ஆயின் மைதிலி சிவராமன் பற்றி ஒருவரியில் கடந்துபோனது
சரியல்ல . அவரின் தத்துவார்த்த புரிதலும் சென்னையில் பெண் தொழிலாளர்களைத் திரட்ட அவர்
அர்ப்பணிப்புடன் பணியாற்றியதும் கொஞ்சம் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்பது என் தாழ்மையான
கருத்து .
குறிப்பாக
இந்துத்துவத்தின் கையில் ஆட்சி அதிகாரம் சிக்கி இருக்கும் சூழலில் பாலின சமத்துவத்துகான
போராட்டம் எவ்வளவு முக்கியமானது கடுமையானது என்பதை எட்டாவது பகுதி விளக்குகிறது . மிகச்
சரியாக ஒவ்வொரும் அறிய வேண்டிய- போராட வேண்டிய செய்தி அவை . பெரியாரின் பெண்ணியப் பார்வை
இங்கு சரியாகச் சுட்டப்பட்டிருக்கிறது .இன்றைய
தேவை கருதி அதனை இன்னும் அதிகம் விரிவாகச்
சொல்லி இருக்கலாமோ ?
இந்நூல் மிகுந்த
ஆழமான ஆய்வு நூல் . ஆகவே நிறைய புள்ளிவிவரங்கள் தவிர்க்க முடியாதவைதான் .எனினும் புள்ளிவிவரங்களை
சற்றுக் குறைத்து அவற்றை பிடல் காஸ்ட்ரோ பாணியில் உணர்ச்சி யூட்டும் விதத்தில் சொல்லி
இருக்கலாமோ ? இது என் ஆசை . நூலின் பிழை அல்ல.
பாலின சமத்துவம்
குறித்த பல்வேறு பார்வைகள் திரிபுகள் அதிதீவிர
போக்குகள் உலகெங்கிலும் உள்ளன .இந்தியாவிலும் உண்டு .அவை குறித்து ஓர் அறிமுகமும் ,
பாட்டாளி வர்க்கப் பார்வையே சரி என்பதின் விளக்கமும் இன்னொரு பகுதியாக அடுத்த பதிப்பில்
சேர்க்கலாமே ! இதுவும் என் ஆசையும் யோசனையும்தான் .அது இல்லாவிடிலும் நூலுக்கு எந்த
குறைவும் இல்லை .
பெண் அன்றும் இன்றும் , ஆசிரியர் : நர்மதா தேவி ,
வெளியீடு
: பாரதி புத்தகாலயம் ,தொடர்புக்கு : 044 24332924 / 8778073949
E mail :
bharathiputhakalayam@gmail
/ www.thamizhbooks.com
பக்கங்கள்
: 512 , விலை : ரூ.520 /
சுபொஅ.
17/02/25.
[நேற்றே
16/02/25 இந்த நூல் அறிமுகத்தை எழுதிவிட்டேன் .சரி பார்த்து வெளியிட அவகாசம் இல்லை . பெருமிதத்தோடு 51 வது ஆண்டாக சிபிஎம் கட்சி உறுப்பினர் புதுப்பித்தல் கிளைக் கூட்டத்துக்கு செல்ல வேண்டி இருந்தததால் தாமதமாக இன்று 17/02/25 வெளியிடுகிறேன் . ]