Pages

Friday, 5 September 2025

பிள்ளையாரப்பா !

 


பிள்ளையாரப்பா !



குட்டி குட்டி மண்பிள்ளையாரை

டிரம் தண்ணீரில் போட்டு

மூடிவைத்து கரைந்ததும்

வெளியே கொட்டும்

அடுக்கக பக்தர்களை

பிள்ளையாரப்பா ! நீ

பாராட்டி இருக்கவேண்டாமா

சுற்றுச் சூழலை மாசுபடுத்தாதற்காக ?

 

 

குத்துப்பாட்டும்

மூச்சுமுட்டும் மதுநெடியும்

வசூல் வேட்டையும்

வாரிச் சுருட்டலும்

மனதைக் குமட்டுவதால்தான்

தூக்கி வீசும் போது

“அப்பாடா ! தப்பித்தோம்

இந்த ஆண்டு கலவரத்திலிருந்து” என

நிம்மதிப் பெருமூச்சு விடுகிறாரா ?

பாவம் ! அந்தப் பிள்ளையாரப்பா !

 

 

மராமத்துப் பணிக்காக

நீர் முழுவதும் வெளியேற்றப்பட்ட

ஏரியின் ஓரத்தில்

வழிந்தோடிய சாக்கடையில்

வீசிஎறியப்பட்ட பிள்ளையாரப்பா

என்ன நினைத்துக்கொண்டிருப்பார் !

 

 

இரண்டு மூன்று நாட்களாய்

ஒவ்வொரு தெருவிலும்

சுண்டல் ,வடை , இனிப்பு

கொழுக்கட்டை , புலவு என

தன் வாடிக்கையாளர்கள்

வயிற்றை பிள்ளையாரப்பா நிரப்பிட

ஐந்து நாட்களாய்

போண்டா பஜ்ஜி கடையை

மூடிவைத்திருந்த பாட்டி

இன்று கடை திறந்து

சாமியைக் கும்பிடும் நொடியில்

என்ன வேண்டி இருப்பார்

”அடுத்த ஆண்டாவது மூன்று நாளில்

முடித்துக் கொள்ளப்பா பிள்ளையாரப்பா!” என்றா ?

 

சுபொஅ.

06/09/25.


பொம்மலாட்ட ஸ்கிருப்ட்

 


தலையைத் தடவு
கட்டியணை
சிறையில் போடு
மகுடம் சூட்டு
தர்ம யுத்தம் செய் !
சபதம் எடு
தனி ஆவர்த்தனம் வாசி
முட்டி மோது
பிரிந்து போ
தனிக்கடை போடு
கூட்டுச் சேர்
நட்டாற்றில் விடு
அவரைத் தூக்கு
இவரை மிதி
இவரை அவரை
விடாதே துரத்து கைவிலங்கோடு
ஆட்டுவி ! உன் விரல் அசைவில்
வாய் அவனுடையது பேச்சு உன்னுடையது
ஒற்றுமை உதடு சொல்க
சுக்கல் சுக்கலாய் உடைத்தெறி
இனி இவர்களை நம்புவதைவிட
சாணி நக்கியிடம்
சரணடைந்து விடுவதே மேலென
புத்தி பேதலிக்க விடு !
இது அரசியல் இல்லப்பா
நவீன பொம்மலாட்ட ஸ்கிருப்ட் !
'நாக்பூர் ஸ்டைல் கபளீகரம்' !

சுபொஅ.
05/09/25.

Thursday, 4 September 2025

சொல்லித் தீராத உண்மைகள் .

 





 

சொல்லித் தீராத உண்மைகள் .

 

 

இன்றைய ஊடகங்கள் மீதான கோவமும் விமர்சனமும் ஒவ்வொருவருக்கும் இருக்கும் . அவை எல்லாம் ஒரே கோணத்தில் இருக்காது , அவரவர் அரசியல் பார்வைக்கு ஏற்ப இருக்கும் . ஆயினும் உண்மை எது ? தேடுக தொடர்ந்து .

 

களப்பணியாளர்களும் ,ஊடகப் பார்வையாளர்களும் ஊடகத்தில் பணியாற்றுகிறவர்களும் அறிய வேண்டிய உண்மைகளை ‘ விலக மறுக்கும் உண்மைகள்’ என்ற பெயரில் ஒரு கட்டுரைத் தொகுப்பு நூலாக தந்துள்ளார் அ.ப.அருண்கண்ணன் . தாமதமாகத்தான் படித்தேன் . சொல்கிறேன்.

 

இந்நூல் ஐந்து கட்டுரைகளின் தொகுப்பு .இதில் நான்கு கட்டுரைகள் ‘வளரி’என்கிற குறைவான வாசகர் பரப்பைக் கொண்ட ஏட்டில் வெளிவந்தவை .ஒன்று ’தமிழ் இந்து’ நாளேட்டில் வெளிவந்தது .   

 

 சினிமாவை முன்வைத்து பேசுகிறது கட்டுரை ஒன்று .  ஆவணப்படங்களை முன்வைத்து இரண்டு கட்டுரைகள் . புகைப்பட கலைஞனை முன்வைத்து பேசுகிறது இன்னொன்று . கார்ப்பரேட் ஊடக வியாபார அரசியல் பற்றி பேசுகிறது ஒன்று .இப்படி ஐந்தும் தனித்தனியே முகம் காட்டினாலும் இதன் ஊடும் பாவுமாக இருப்பது பாசிச அரசியல் மீதான விமர்சனப் பார்வையே ! பாசிசம் எப்படி ’பொய் பொதிந்த கருத்துத் திணிப்பில்’ மிகவும் நுட்பமாக வினையாற்றுகிறது என்பதை அறிய இக்கட்டுரைகள் நிச்சயம் பயன்படும் .

 

இந்தோநேசியாவில் ஒரு லட்சம் கம்யூனிஸ்டுகளை கொடுங்கோலன் சுகர்னோ படுகொலை செய்ததை நியாயப்படுத்தி  கம்யூனிஸ்டுகளை தேசவிரோதிகளாகச்  சித்தரிக்கும் ‘பெங்கியானன் ஜி30எஸ்/பி.கே.ஐ’ [ pengkhianatan G30S/PKI ]என்றொரு பிரச்சாரப் படத்தை இந்தோநேசிய இராணுவ ஆட்சி தயாரித்து இளைஞர்களை கட்டாயம் பார்க்க வைத்து , அதை ‘ உண்மைவரலாறு ‘ போல் நம்பவைக்க முயன்றது .இதனை முன்னுரையில் சிந்தன் குறிப்பிடுவதை கவனத்தில் வைத்துக்கொண்டே முதல் கட்டுரையை வாசிக்க வேண்டும் .

 

“ வரலாற்று உண்மையை சொல்ல மறுக்கும்’ தி காஷ்மீர் ஃபைல்ஸ்” என்ற படம் விவேக் அக்னி ஹோத்திரி என்பவரால் இயக்கப்பட்டது .1990 ஆம் ஆண்டு காஷ்மீரில் பண்டிட்டுகள் கொல்லப்பட்டதாக சொல்லப்பட்ட செய்தியை ’கொடூர உண்மை வரலாறு போல்’ சித்தரித்து இஸ்லாமிய எதிர்ப்பை விசிறிவிட உருவாக்கப்பட்ட திரைப்படமே அது .  மோடியும் சங்பரிவார்களும் இதனைத்தூக்கிச் சுமந்ததில் இருந்தே அது ’புராணப் புளுகு’ போன்ற ’வரலாற்றுப் புளுகு’ என்பது வெளிச்சமாகவில்லையா ? இதனை காஷ்மீர் வரலாற்றுடனும் சங்பரிவாரின் தீய நோக்கத்தை அம்பலப்படுத்தியும் கட்டுரைக்கு நியாயம் வழங்கியுள்ளார் அருண் கண்ணன் .

 

இதனைப் படிக்கும் போது ‘கேரள ஃபைல்ஸ்’ மற்றும் மராட்டிய திரைப்படம் ‘சாவா’ ஆகிவை எப்படி சிறுபான்மை மக்களை எதிரிகளாக்கியது என்பது நினைவுக்கு வராமல் போகாது . தமிழ்நாட்டிலும் சில திரைப்படங்கள் சாதி ஆதிக்கத்தை நியாயப்படுத்தியும் இஸ்லாமியர்களை துரோகிகளாக சித்தரித்தும்  வருவது கவனத்துக்கு உரியது .ஆக ,திரைப்படத்துறையில் மதவெறி சாதிவெறி அரசியல் தொழில்படத்துவங்கி உள்ளதை மிகவும் கவலையோடும் எச்சரிக்கையோடும் பார்க்க வேண்டிய அவசியத்தை இக்கட்டுரை நம்மிடம் சொல்லுகிறது .

 

 “தந்துரா : உண்மையைப் பிரதிபலிக்கும் ஆவணப்படமா ?” இது பாலஸ்தீனத்தின் கதையைப் பேசும் ஆவணப்படம் . 1948 ஆம் ஆண்டு தந்துரா என்ற கடற்கரை கிராமத்தில் 250 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் ராணுவத்தினரால் கொல்லப்பட்டனர் . இது செய்தி .இதனை இஸ்ரேல் ராணுவம் மறுக்கிறது . இரதரப்பையும் அலசுவது போல் இந்த ஆவணப்படம் தோற்றம் காட்டினும் படுகொலை நடந்தது என்பதை வலுவாகவே முன்வைக்கத் தவறவும் இல்லை .ஆயினும்  ,’” ஆஸ்திரியாவிலும் அமெரிக்காவிலும் பூர்வகுடிகளை கொன்றதை ஒத்துக்கொண்டதுபோல் நாமும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்றும் சொல்கிறார் .  படத்தில் இறுதியில் நினைவுச் சின்னம் அமைப்படுவதுடன் முடிகிறது ,அதில் ’சுதந்திரப்போர் நினைவுச் சின்னம்’ என்றே பொறிக்கப்படுவது இஸ்ரேலின் பக்கத்தில் பார்வையாளரைப் பிடித்துத் தள்ளுகிறது .இப்படத்தை இயக்கியவர் அலோன் ஸ்வாரஸ் .இவர் இஸ்ரேலைச் சார்ந்தவர் .இவர் இடதுசாரி முகாமைச் சார்ந்தவர் எனச் சொல்வதுதான் அதிர்ச்சி . இது உண்மையைப் பிரதிபலிக்கும் ஆவணப்படமா என்பதுதான் கேள்வி . விடை . ஒவ்வொருவரிடமும் மாறுபடும் .

 

இன்னொரு ஆவணப்படம் சார்ந்து எழுதப்பட்ட கட்டுரை ’பாலஸ்தீனத்தின் நெல்சன் மண்டேலா’   சோபியா ஸ்காட் மற்றும் ஜார்ஜியா ஸ்காட் இயக்கிய ‘டுமாரோஸ் ஃபிரீடம்’ எனும் ஆவணப்படத்தை முன்வைத்து பாலஸ்தீனப் போராளி ’மர்வான் பர்குதி’யின் வாழ்க்கையையும் பாலஸ்தீனப் போராட்டத்தின் ஓர் முக்கிய கண்ணியையும் நமக்கு அறிமுகம் செய்கிறது இக்கட்டுரை .

 

“ அதிகாரத்திற்கு எதிராக உண்மையைப் பேசிய புகைப்படக் கலைஞன்’ டேனிஷ் சித்திக் ஆப்கானிஸ்தான் போரின் போது தாலிபான் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார் .உலகமே கண்ணீர் விட்டது . ஆனால் அந்த மாபெரும் இந்திய புகைப்படக் கலைஞனுக்காய் மோடி இரங்கல்கூட தெரிவிக்கவில்லை . இது போதாதா அவர் யார் என்று சொல்ல ? அவரின் புகைப்படக் கருவி எப்போதும் அதிகாரத்திற்கு எதிராகவும் ஒடுக்கப்பட்டோருக்கு ஆதரவாகவுமே படம் பிடித்தது .அவரது புகைப்படங்கள் உண்மையை உரக்கச் சொல்லின . ஊடகங்கள்  மீது ‘இன்னும் நம்பிக்கை இருக்கிறது’ எனச் சொல்ல இத்தகையவர்கள் சாட்சியாகிறார்கள் . ஊடகத்துறையில் செயல்படும் சமூக அக்கறை மிக்க ஊடகக்காரர்களுக்கு இவர் ஓர் முன்னுதாரணம் . வாசியுங்கள் நண்பர்களே !

 

எண்டிடிவி என்கிற தனியார் கார்ப்பரேட் ஊடகம் எப்படி அம்பானியால் விழுங்கப்பட்டது என்பதைச் சொல்லும் கட்டுரை ; ” ஊடக உலகில் பெருமுதலாளிகளின் ஊடுருவல்’.  ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று சொல்லப்படுகிற ஊடகங்கள் ஆட்சி அதிகாரத்தால் எப்படி எல்லாம் சிதைக்கப்படுகிறது ஆட்டுவிக்கப்படுகிறது என்பதன் சாட்சி .

 

இந்நூலை எழுதிய அருண்கண்ணனுக்கு வாழ்த்துகள் !

 

ஊடகம்  சினிமா தொடர்பான நம் பார்வையையைக் கூர்மைப் படுத்த இதுபோன்ற நூல்களை வாசிப்பது களப்பணியாளர்கள் கடமையாகும் . ஊடகங்கள் குறித்தும் ’பொய் பொதிந்த கருத்தித் திணிப்பு’ முயற்சிகள் குறித்தும் எத்தனை நூல்கள் வந்தாலும் சொல்லித் தீராத உண்மைகள் நிறைய இருக்கும் .

 

விலக மறுக்கும் உண்மைகள்  : சினிமா ,ஊடகம் தொடர்பான கட்டுரைகள் ,அ.ப.அருண்கண்ணன்,  பாரதி புத்தகாலயம் ,  www.thamizhbooks.com    / 8778073949  ,

பக்கங்கள் : 72 , விலை  :ரூ. 70 /  

 

சுபொஅ.

05/09/25.

 

 

 

 

 

 


Tuesday, 2 September 2025

நம்மை சுற்றி சுற்றி………………….

 


நம்மை சுற்றி சுற்றி………………….

 

குறுக்குசால் ஓட்டுவது” என்றொரு சொற்றொடர் உண்டு . அதாவது நீ ஒன்றை பேசும் போது திசை மாற்றி வேறொன்றாக திரிப்பது . பொதுவாக இதனை எதிரிகள்தான் செய்வார் . ஆனால் சில நேரம் நண்பர்கள் இப்படிச் செய்யும் போது மிகவும் வருத்தம் மேலிடும் .ஏனெனில் நாமும் அதே தொணியில் பதில் சொல்ல முடியாது அல்லவா ? அப்படி ஒரு சங்கடம் அண்மையில் நேர்ந்தது .

 

பொதுவாக தோழர்  சுபவி யோ அவரது குழுவினரோ பேசுவதை பலநேரங்களில் பகிர்ந்து இருக்கிறோம் . பாசிச எதிர்ப்பு போரில் ஆயுதமாக்கி இருக்கிறோம் . தற்போது சிபிஎம் செயலாளர் ப.சண்முகம் ஆணவக்கொலைக்கு எதிராக பேசும் போது , காதல் திருமணம் சாதிமறுப்பு செய்வோரை ஆணவக்கொலை செய்யும் சூழலில் அப்படி செய்வோர் எங்கள் அலுவலகத்தைப் பயன்படுத்தலாம் என்று சொன்னார் . அவர் பேசுகிறபோது அதற்கு இப்போது ஏற்பாடு இல்லை என்று சொன்னது ஆணவக் கொலைக்கு எதிரான சட்டத்தைத்தான் . அவர் எங்கேயும் ‘ சுயமரியாதைத் திருமணம்’ என்று சொல்லவே இல்லை .அப்படி இருக்க தமிழகத்தில் சுயமரியாதைத் திருமணச் சட்டம் இருப்பது சண்முகத்துக்கு தெரியாதா என நீட்டி முழக்கி ஒரு சகோதரி வீடியோ வெளியிட்டுள்ளார் . சொல்லாத ஒன்றை சொன்னதாகச் சொல்லி பதில் சொல்வது முறையல்ல . சகோதரியின் மாமா கம்யூனிஸ்ட் என்றும் அவர் காதல் திருமணத்திற்கு எதிராக இருந்தாரென்று பதிவிட்டிருக்கிறார் . உண்மையாக இருக்கலாம் . சிபிஎம் கட்சியில் இப்படிபட்ட சம்பவங்கள் எங்கேனும் நிகழ்ந்தால் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்கள் . நானும் என் அண்மைப் பதிவொன்றில் இதனைச் சுட்டியுள்ளேன் . திமுக ,தி.க கட்சிகளும் இப்படி சில தர்ம சங்கடங்களை சந்தித்திருக்கும் . நம் சமூக அமைப்பில் சாதி உணர்வை ஒழிப்பதென்பது இடைவிடா தொடர் போராட்டமே ! அதை சகோதரியும் ஒப்புக் கொள்கிறார் .ஆயினும் சண்முகத்தையும் சிபிஎம் யும் தனிமைப்படுத்தி தாக்க முயல்வது தோழமைக்கு அழகா ? நட்போடுதான் இப்போதும்  கேட்கிறோம்.

 

இப்போது நீயா நானாவின் நாய் விவாதம் பேசுபொருளாகி இருக்கிறது . அது ஒரு ரிக்கார்டட் அண்ட் எடிட் ஷோ தான் . நெடுங்காலமாகவே இப்படித்தான் நடந்து வருகிறது . மொழிப் பிரச்சனை குறித்த ஓர் விவாதத்தை வெளியே வரவிடாமலே சங்கிகள் தடுத்தனர் என்பது அண்மைச் செய்தி .மறக்க முடியுமா?  நீயா நானா தலைப்பும் விவாதமும் எப்போதும் பட்டிமன்ற பாணி  ஒரு வெகுஜன ஊடகத்தின் சமரச வழியே ! அதில் கொஞ்சம் முற்போக்கு சாய்மானம் சில வேளை தென்படலாம் . அதற்கு மேல் செல்ல முடியாது ஏனெனில் அந்த நிகழ்ச்சி விளம்பரதாரரை சார்ந்து வாழ்வதே . நாய் விவாதத்திலும் அதுவே . அரசின் அலட்சியப் போக்கு தொண்டு நிறுவன ஊழல் போன்ற பலவற்றை விட்டுவிட்டு பாதிக்கப்பட்டோர் மீது அனுதாபத்தோடு மட்டுமே அணுகியது . வெறிநாய் ரேபிஸ் நாய்க்கு எதிரான கோபமாக குவிமையமாக்காமல் பொதுவான நாய் எதிர்ப்போர் ஆதரிப்போர் என மாற்றியது இதெல்லாம் கார்ப்பரேட் மீடியா ஸ்டைலே . ஆனால் நாய்கடியால் பாதிக்கப்பட்டோரின் கோபம் ஆக்ரோஷமாக வெளிப்பட்டுவிட்டது நல்ல அம்சம். இப்போது விலங்கபிமானிகளான தொண்டு நிறுவனப் புள்ளிகள் தங்கள் பேச்சு எடிட் செய்யப்பட்டுவிட்டது முழுவீடியோ போடுக என கூக்குரல் போடுவதும் , நீதிமன்றம் போவதும் அவர்களின் தோல்வியைப் பறை சாற்றுகிறது . அந்த ஷோ ’எப்போதுமே எடிட்டட் ஷோதான்’ என தெரியாமலா வந்தார்கள் ? அவ்வளவு அப்பிராணிகளா அவர்கள் ? நம்பமுடியவில்லை … நம்பமுடிய வில்லை…

 

யூ டியூப்பர்களின் ,டிவிக்களின் அரசியல் பரபரப்பு பேச்சுகளின் தரம் கவலை அளிக்கிறது .ஒற்றைவரி , ஒற்றைச் சொல் , அங்கும் இங்கும் வெட்டி ஒட்டிய துண்டுப் படங்கள் இவைதான் நம்மை பரபரப்பாக அரசியல் சமுதாய பிரச்சனைகளை பேசவைக்கும் எனில் சமூகத்தின் மீதான் அக்கறை அல்ல அது ; முழுக்க முழுக்க நாம் எதை பார்க்க வேண்டும் எதைப் பேச வேண்டும் எப்படி சிந்திக்க வேண்டும் என நமக்கு கடிவாளம் போடும் கார்ப்பரேட் யுக ஆளும் வர்க்க கருத்துத் திணிப்பு நாடகமே ! எங்கும் இப்போது நடப்பது அதுவே !

 

ஆக , உண்மையை ஊடகங்களில் தேடுவது தரையில் மணலில் விழுந்த ஊசியைத் தேடுவதே !

 

சுபொஅ.

03/08/25.

 


தண்ணீர்… தண்ணீர் …

 


தண்ணீர்… தண்ணீர் …

 

”காலை எட்டு மணி சுகர் லெவல் குறையும் நேரம்  பல் தேய்க்காமல்” டீ பிஸ்கெட் சாப்பிட்டாச்சு …

அப்படியே ஒரு மணி நேரம் கழித்து டிபன்  ஹோட்டலில் ஆர்டர் பண்ணி வரவழைத்து சாப்பிட்டாசு ..

காலைக்கடன் முடிக்காமல் பாட்டில் குடிநீரில் முகம் கழுவி புறப்பட்டாச்சு ..”

இப்படி ஒரு செய்தியை பதிவிட்டாலே ‘ என்னாச்சு இவருக்கு ?’ என கேள்வி எழும் .

 

எங்கள் அடுக்ககத்தில் சனிக்கிழமை காலை எல்லோரும் சந்தித்த பிரச்சனையை என் பாணியில் சொன்னேன் அவ்வளவுதான்.

 

எங்கள் அடுக்ககத்தில் முதல் நாள் வெள்ளிக்கிழமை இரவே தண்ணீர் பிரச்சனை … காலைக்குள் சரியாகிவிடும் என்கிற நம்பிக்கை… காலையில் கடும் நெருக்கடி சொட்டுத்தண்ணி இல்லை .. நான்கு கேன் தண்ணீர் விலைக்கு வாங்கித்தான் சனிக்கிழமை பொழுது ஓடியது … தண்ணீர் வாங்காவிடில் மேலே விவரித்த நிலைதான  ஏற்பட்டிருக்கும்.

 

அந்த அடுக்ககத்தில் வீடு வாங்கும் போது 2017 ல் பின்னால் ஏரி , சுற்றி சோளவயல் காற்றும் நீரும் சுற்றுச்சூழலும் ஈர்த்தன . பொதுவாய் பெங்களூரில் பல இடங்களில் அப்போதே தண்ணீர் பஞ்சம் . பின்னால் உள்ள ஏரி பெங்களூரின் மிகப் பழமையான ஏரிகளில் ஒன்று . இங்கு தண்ணீருக்கு தட்டுப்பாடு இருக்காது என நம்பினோம்.

 

இங்கு வந்த பிறகு ஒரு நாள் ஏரியிலிருந்து துர்நாற்றம் … மெல்ல விசாரித்த போது அருகிலுள்ள ஒரு மருந்து தொழிற்சாலை தன் ரசாயணக் கழிவுகளை ஏரிக்கு திருப்பிவிட்டுவிட்டது . அதன் பின் அது தொடர்கதை ஆனது .அதிகார வர்க்கம் வாங்க வேண்டியதை வாங்கிக் கொண்டு குறட்டை விட்டது . விளைவு ஏரிக்கரை ஓரம் செழிதோங்கி நின்ற மரங்கள் பட்டுப் போயின ; கருப்பு நிறமானது .பசுமை தொலைந்தது .மீன்கள் செத்து மடிந்தன . குப்பைக் கழிவுகளின் தேக்கமாக ஏரி சிதிலமடைந்தது.

 

 

ஏரியைத் தூய்மைப்படுத்த கோரிக்கை எழுந்தது .தன்னார்வ அமைப்புகள் வழக்கு தொடுத்தன .அவர்கள் வழியில் போராடின . அவர்களின் கையெழுத்து இயக்கங்களில் நான் கொஞ்சம் பங்கேற்றேன் . ஒருவழியாக நீதிமன்றம் தலையிட , அரசு மற்றும்  தனியார் கூட்டுறவுடன்  ஏரியை மீட்டு புனரமைத்து  படகுத்துறையுடன் பூங்காவாக மாற்றுவதாக அறிவித்தது .

 

அந்தப் பகுதி சோளவயல்கள் காணாமல் போயின , சுற்றி அடுக்குமாடி வீடுகள் முளைத்தன . எங்கள் அடுக்ககத்தில் 450 அடி யில் நான்கு ஆழ்துளைக் கிணறு உண்டு .இப்போது சுற்றி சுற்றி 800 அடி / ஆயிரம் அடி பலர் ஆழ்துளைக் கிணறுகள் தோண்டிவிட்டனர்

 .  ஆழ்துளாய் கிணறுகளை இருபதடிக்கு ஒன்று போட்டால் பூமி தாங்குமா ? இதனைக் கட்டுப்படுத்த சட்ட வழிகாட்டல் உண்டா ? கண்காணிப்பு உண்டா ? டேங்கரில் தண்ணீர் விற்கும் கம்பெனிகள் நான்கு வந்தன 1500 அடி ஆழ்குழாய் போட்டு உறிஞ்சினர் . கட்டுப்படுத்துவது யார் ? எங்கள் அடுக்கக தண்ணீர் மட்டம் குறைய ஆரம்பித்தது .

 

ஏரி மீட்பு பணி துவங்கி விட்டது .மகிழ்ச்சி . ரசாயண கழிவு கலந்த நீர் வடிக்கப்பட்டுவிட்டது … பணிகள் துவங்கி விட்டன . ஏரி இப்போது மைதானமாக காட்சி அளிக்கிறது .. பணி முடிய ஓராண்டாகும் என்கின்றனர் ..மேலும் நீளலாம்…ஏரியை மீட்டால் போதும்….

 

ஏரி தண்ணீர் வற்றியதும் எங்கள் அடுக்கக குழாய் கண்ணீர் சிந்தத் துவங்கிவிட்டன . சுமார் நூறு குடித்தனங்களுக்கு டேங்கரில் தண்ணீர் எனில் என்ன ஆகும் ?  இன்னும் நூறு வீடுகள் காலியாக உள்ளன .அவற்றிலும் குடிவந்தால் என்ன ஆகும் ?நீர் நிபுணர்கள் ஆலோசனை ஆய்வு என தொடங்கி உள்ளனர் .. தற்காலிகமாக டேங்கரே கதி . மெயிண்டனன்ஸ் சார்ஜ் அதிகரிக்கலாம் . இது வளர்ச்சியின் சவால்தான் . ஆனால் எச்சரிக்கை .

 

நாங்கள் இங்கு வந்ததுதான் 2017 ஆனால் 2010 லேயே இங்கு பணி துவங்கி விட்டது . ஆழ்துளை கிணறுகள் கட்டுமானம் தொடங்கி இன்றுவரை தண்ணீர் தந்துள்ளன. இப்போது அவை சோர்ந்துவிட்டதோ !

 

இது ஓர் அடுக்ககப் பிரச்சனை மட்டுமல்ல ; போதிய திட்டமிடல் இன்றி வீங்கிப் பெருக்கும் புறநகர்கள் எல்லாம் சந்திக்கும் சவால் . வெள்ளமும் வறட்சியும் இயற்கையானவை .அதில் திட்டமிடலின்றி சிக்கிக் கொள்ளும் வீக்கம் வளர்ச்சியா ? அரசுகள் யோசித்து முறைப்படுத்த வேண்டாமா ?

 

பெங்களூர் இப்போதே போக்குவரத்து நெரிசல் மேலும் பலபகுதிகளின் தண்ணீர் தட்டுப்பாடு டேங்கர் லாரியே கதி  மழை வந்தால் திணறல் … வருங்காலம் மிகவும் சவாலாக இருக்கும் என எச்சரிக்கின்றனர் வல்லுநர்கள் . என்ன செய்யப் போகிறார்கள் ஆட்சியாளர்கள் ?

 

சுபொஅ.

02/08/25.


Sunday, 31 August 2025

நியாயமா ? நாயமா?

 


நியாயமா ? நாயமா?
[ தலைப்பு தோழர் விஜய்சங்கரிடமிருந்து சுட்டது ]

தெருநாய்கள் குறித்து “நீயா நானா”வில் சூடான விவாதம் நடைபெற்றது. விலங்கபிமானிகளின் மனிதாபிமானம் ,கருணை ,அன்பு எல்லாம் எப்படிப்பட்டவை என பட்டவர்த்தனமாக வெளிப்பட்டது . நீங்கள் கட்டாயம் பாருங்கள் !

அந்த விவாதத்தில் வந்த இன்னொரு முக்கிய விவகாரம் என்ன தெரியுமா ? நாய்களை தத்து எடுத்து அதற்கு கருத்தடை செய்ய , தடுப்பூசி போட என இந்த ஜீவகாருண்ய என் ஜி ஓக்கள் அரசிடமும் சில நிறுவனங்களிடமும் சில ஆயிரம் கோடிகள் மானியமாகப் பெறுகின்றனர் . ஆனால் அவர்கள் அப்படி நிதி பெற்று செய்ததாக கணக்குக் காட்டுவதற்கும் உண்மைக்கும் இடையே மிகப்பெரிய இடை வெளி உண்டு . ஆக இங்கு பெருமளவு நிதிசுருட்டல் நடக்கிறது . ஆக பணபாசம்தான் நாய்பாசமாகிறது . இதை விவாதத்தில் சிலர் சுட்டிய போதும் என் ஜி ஒ நபர்கள் கண்டு கொள்ளாமல் கடந்து சென்றனர் . அது விவாதத்தின் மையமாகிவிடக்கூடாது என கவனமாகத் தவிர்த்தனர் .இதை ஊடகங்கள் பேசுவதே இல்லையே . ஊழலைப் பற்றி அன்னா ஹாசாரே மாதிரி செலக்டிவாக பேசும் புனிதப் போலிகளல்லவா இவர்கள் ! சரி ! நாய்க்கு வருவோம் !

பெங்களூரி அஜ்மிரா போன்ற அபார்ட்மெண்டுகளில் நாய் வளர்ப்போர் நாயை வெளியே [ காம்பவுண்டுக்கு உள்ளே ] அழைத்துவரும் போது நாய் பீயை அளாவும் பாதுகாப்பாய் குப்பை தொட்டியில் போடவும் கடமைப்பட்டவர்கள் . மீறினால் அபராதம் உண்டு .

பல அபார்ட்மெண்டுகளில் நாய் பூனை வளர்க்க அனுமதியில்லை .

நான் அமெரிக்கா போயிருந்தேன் .அங்கே தெருநாய்களே இல்லை .ஆனால் காலையிலும் மாலையிலும் நாயை பிடித்துக் கொண்டு நடை பயிற்சி செல்வோர்தான் மிகமிக அதிகம். இன்னும் சொல்லப்போனால் பலர் கையில் இரண்டு நாய்கள் கூட இருக்கும் . நாய்கள் மீது மோதாமல் நடை பயிற்சி செல்வது ஒரு சர்க்கஸ் . மதியம்கூட நாய் நடை இருக்கும் .அதற்கு நேரம் காலம் கிடையாது .நள்ளிரவில் எட்டிப் பார்த்தாலும் நாலுபேர் நாயோடு திரிவார்கள் !

நாய் வளர்ப்பவர்களே நாய் கழிவுகளை அப்புறப்படுத்தி அதற்குரிய தொட்டியில் பாதுகாப்பாக பொதிந்து போடவேண்டும் .சாலையில் நாய் கழிவைவிட்டுச் செல்ல முடியாது . மீறினால் அபராதம் உண்டு .

வயதானவர் வீட்டு நாய்களை காலை மாலை வெளியே அழைத்துச் செல்ல டாக்மென் உண்டு . அது அங்கு ஒரு பிழைப்பாக சிலருக்கு உள்ளது .

நாய் யாரையாவது கடித்தால் நாய் வளர்ப்போரே மருத்துவச் செலவை ஏற்க வேண்டும் . அபராதம் தண்டனை எல்லாம் உண்டு .

வழிநெடுக விலங்கு மருத்துவ மனைகள் உண்டு . வெளிஊர் செல்வோர் சில நாட்கள் பாதுகாப்பாக விட்டுச் செல்ல நாய் காப்பகங்கள் உண்டு . நாய்களுக்கு பியூட்டி பார்லரெல்லாம் உண்டு .சூப்பர் மால்களில் நாய் உணவுகள் ,உடைகள் ,இதர நாய் அயிட்டங்களுக்கு பெரிய செக்ஷன் தனியாக இருக்கிறது .

அங்கு நாயை நாய் என்று சொன்னால் கோவித்துக் கொள்வார்கள் . ஹி ,ஷி , என்று தான் சொல்ல வேண்டும் .

அமெரிக்காவில் நாயாகப் பிறக்க வேண்டும் என்பார்கள் .அந்த அளவு அது செல்லப் பிராணி .

மீண்டும் சொல்கிறேன் அங்கு தெருநாய்கள் ஒன்றைக்கூட பார்க்கவே முடியாது .

இங்கு தெருநாய்கள் பிரச்சனைதான் சவாலனது . அதிலும் ராபிஸ் நாய் பிரச்சனை மிகவும் ஆபத்தானது . இதனை சும்மா மேம்போக்கப் பார்க்க முடியாது .

இங்கே வீட்டில் வளர்ப்போரின் செல்லநாய்கூட தெருவைத்தான் அசுத்தப்படுத்தும் ; அதைக்கூட இந்த விலங்கபிமானிகள் அள்ளி அப்புறப்படுத்த மாட்டார்கள் ! அவ்வளவுதான் அவர்களின் சமூக அக்கறை .

தெருக்கள் எங்கள் குழந்தைகள் ,முதியோர் , மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்பாக நடக்கத்தான் ; வெறிநாய்களின் வேட்டைத்திடல் அல்ல .

12/08/25 அன்று நான் பதிவிட்ட கவிதையை காலப் பொருத்தம் கருதி மீண்டும் …

நரகமா சொர்க்கமா ?



வெறிநாய்களைக் கொல்லாதீர்கள் !
ஜீவகாருண்யம் பேணுங்கள் !
தெருவெல்லாம் வெறிநாய்கள்
பைரவனின் ஆசிர்வாதங்கள்
பச்சைக் குழந்தைக்குத்தான்
பகவானின் ஆசிர்வாதமில்லை
நாய்கடியில் சாதிமத பேதமில்லை
நாள்பார்த்து கோள்பார்த்து நாய்கடிப்பதில்லை
சொல்லுங்கள் ஜீவகருண்யரே !
நாய்கடித்து ரேபிஸில் செத்தால்
போவது சொர்க்கம்மா நரகமா ?

சுபொஅ.
01/09/25.

சுற்றிலும் பேரிரைச்சல்

 


சுற்றிலும் பேரிரைச்சல்

அமைதியாகத் தூங்கிக்கொண்டிருந்தார்

அருகே படுத்திருந்தவர்

‘ஹச்’ என பெரும் தும்மல் போட்டார்

“ தூக்கத்தைக் கெடுக்காமல் தள்ளிப்போய் தும்மு ‘

என்றவாறு தூக்கத்தை தொடர்ந்தார்

சுற்றிலும் பேரிரைச்சலோடு !

 

சுபொஅ.


Thursday, 28 August 2025

அரசியல் பாடம் சொல்லும் நான்கு நூல்கள் ….

 








அரசியல் 

பாடம் சொல்லும் 

நான்கு நூல்கள் ….

 

 

 

 

” நாம் ஏன் கியூபாவின் பக்கம் நிற்க வேண்டும்?” – இ.பா.சிந்தன்

 “பேராற்றலின் குரல்” – கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்

”ஃபிடெல் காஸ்ட்ரோ “ – ஜான் லீ

“ சோசலிச கனவின் தேடல் ; கியூபாவை நோக்கிய பயணம்” – எம் .கண்ணன்

 

ஆகிய நான்கு சிறு நூல்கள் .மொத்தம் 224 பக்கங்கள் . இன்றைய உலக அரசியலையும் உள்ளூர் அரசியலையும் விளங்கிக் கொள்ள எளிய வழிகாட்டி எனில் மிகை அல்ல .

 

சோசலிச கியூபாவை பாதுகாப்போம், ஏகாதிபத்திய சதிகளை முறியடிப்போம்என்ற முழக்கத்தோடு கியூப ஒருமைப்பாட்டு விழா மற்றும் பிடல் காஸ்ட்ரோ நூற்றாண்டு தொடக்க விழா செவ்வாயன்று (ஆக.12) சென்னையில் நடைபெற்றபோது இந்நூல்கள் வெளியிடப்பட்டன.

 

உலக அரசியலைப் புரிந்து கொள்ள என்பது சரி , உள்ளூர் அரசியலுக்கு இதற்கும் என்ன தொடர்பு ? இந்த அறிமுகக் கட்டுரையைப் படியுங்கள் புரியும்.

 

அரசியல் சார்ந்து எழுதும் போது ; ஆய்வு சார்ந்து எழுதுவது , வெகுஜனங்களை நோக்கி மேலோட்டமாக எழுதுவது , தகவல்களைக் கொட்டி எழுதுவது என்கிற மூன்றில் ஏதாவது ஒன்றில் பயணிப்பதே பொதுவாக நடக்கும் .ஆயின் செயலுக்கு உந்தித்தள்ள எழுதுவது தனிக்கலை . இதனை ’கிளர்ச்சிப் பரப்புரை’ எனவும் சொல்லலாம் . தகவல்களும் வேண்டும் , ஒரு வரலாற்று இயங்கியல் பார்வையில் அலசிப் பார்ப்பதாகவும் இருக்க  இருக்க வேண்டும் , எளிதில் போய்ச் சேரும் மொழி நடையும் கைவர வேண்டும் , கடைக்கோடி மனிதரை உசுப்பி போராடத் தூண்ட வேண்டும். இதில் இ.பா.சிந்தன் தேறிக்கொண்டிருக்கிறார் என்பதன் சாட்சிதான் ,          பாலஸ்தீனம்: நம்மால் என்ன செய்ய முடியும்?” என்ற நூலும் , அதனைத் தொடர்ந்து வந்துள்ள  “நாம் ஏன் கியூபாவின் பக்கம் நிற்க வேண்டும்?”எனும் நூலும் . வாழ்த்துகள்!

 

இங்கே மேலே குறிப்பிட்ட நான்கு நூல்களுமே ’கிளர்ச்சி பரப்புரை’ வகைதான் .நான்கும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவையே .நான்கையும் மேலே குறிப்பிட்ட வரிசையில் வாசிக்கும் போது ஓர் அரசியல் சித்திரம் மனதில் நிச்சயம் உருவாகும். எனவே இவற்றை வாலிபர்கள் ,மாணவர்கள் , புதியவர்களிடம் இவற்றை கொண்டு சேர்ப்பதும் மிகுந்த முக்கியமுடைய அரசியல் பணியே !

 

கியூபா என்ற நாட்டின் பழங்குடிகள் யார் ? அவர்கள் பேசிய மொழி என்ன ? அவர்கள் உணவு யாது ? பயிர் யாது ? அங்கு கரும்பு எப்படி வந்தது ? அவர்களின் சுருட்டும் ,கியூப  ரம் [மது] எப்படி புகழ்பெற்றன ? யார் யாரெல்லாம் அங்கு ஆதிக்கம் செலுத்தினர் ? அங்கு வந்து சேர்ந்தோர் யார் யார் ? ஸ்பெயினும் பிரட்டனும் அமெரிக்காவும் அவர்கள் வாழ்வோடு எப்படி விளையாடின ? அமெரிக்கா இன்னும் எப்படி பழிவாங்கிக் கொண்டிருக்கிறது ?  ஏன்  ? அங்கு போராட்ட குணம் அக்னிக் குஞ்சாய் எப்படி அடை காக்கப்படுகிறது ? இப்படி எழும் கேள்விகளுக்கு சுருக்கமாக அதே சமயம் நுட்பமாக விடை சொல்லி கியூபா மீதான நம் பார்வையைக் குவித்துவிடுகிறார் நூலாசிரிய இ.பா.சிந்தன் ‘ நாம் ஏன் கீயூபாவின் பக்கம் நிற்க வேண்டும் ?’ என்ற நூலில் .

 

முதல் அத்தியாயம் ‘இப்படி நடந்துவிட்டால் என்ன ஆகும் ?’ என்ற பதட்டத்தை வாசகரிடம் விதைத்து நூலுக்குள் இழுக்கிறார் . நல்ல கதை சொல்லி உத்தி . வாசித்து முடித்தவுடன் கியூபா மீதான நம் பரிவோ கருணையோ அதையும் தாண்டி ஏகாதிபத்திய எதிர்ப்பாக உருமாற்றம் அடைவதுதான் இந்நூலின் வெற்றி .

 

முறைத்துக்கொண்டே இருந்து துன்ப துயரத்தை சுமப்பதைத் தவிர வேறு எதனைக் கண்டீர்கள் ? பேசாமல் கொஞ்சம் சமரசமாகப் போய்விடலாமே ! காலில் விழுந்தாவது காரியத்தை சாதிக்க வேண்டியதுதானே ? இப்படி எடப்பாடி ஸ்டைலில் கேட்போருக்கு ’உடன்பட்டுப் போவதுதான் தீர்வா ?’ என்கிற ஒண்பதாவது அத்தியாயத்தில் சாட்சிகளோடு பதில் சொல்லி இருக்கிறார் இ.பா.சிந்தன் .

 

இந்நூலில் சேகுவரே குறித்து இன்னும் கொஞ்சம் அதிகம் சேர்த்திருக்கலாமோ ? அதே போல் ஹோசே மார்த்தியின் பொன்மொழிகளை வாக்குமூலங்களை எப்போதும் தன் பேச்சின் ஊடே மேற்கோள் காட்டிக்கொண்டே இருப்பவர் காஸ்டிரோ  ; இந்நூலிலும் அதனை ஒட்டி சில மேற்கோள்களை சேர்த்திருக்கலாமோ ? இவை இல்லாததால் இந்நூல் குறையுடையதாகாது ; இருந்திருந்தால் இன்னும் கூர்மை சேரும் அவ்வளவுதான்.

 

அடுத்து ஜான் லீ ஆண்டர்சனின் எழுத்துகள் வழி  ‘ஃபிடல் காஸ்டிரோ’ குறித்த சிறு அறிமுக நூல் ஜெ. தீபலட்சுமியால் நன்கு தொகுக்குப்பட்டுள்ளது . மொழி பெயர்க்கப்பட்டுள்ளது . இந்நூலிலும் வரலாறும் வாழ்க்கையும் இணைந்து சொல்லப்பட்டுள்ளது பேரழகு . “சேவும் ஃபிடெலும் கம்யூனிஸ்டுகள் என்றால் ,நாமும் கம்யூனிஸ்டுகளே” என அனைவரையும் சொல்லவைத்த பேராளுமை அவர்கள் . அவர்கள் ஊட்டிய உத்வேகமும் அரசியல் விழிப்பும் ஏகாதிபத்திய எதிர்ப்பும் இன்னும் கியூபா முழுவதும் கனன்று கொண்டே இருப்பதின் மந்திரச் சொற்களே காஸ்டிரோ , சேகுவேரா .

 

இந்நூலின் துவக்கத்தில் கியூப ஒருமைப்பாட்டு நிகழ்வொன்றில் கலைஞர் வாசித்த கவிதை இடம் பெற்றுள்ளது . அதில் ,

“கியூபா சின்னஞ் சிறிய நாடு

ஆயிரக்கணக்கான தீவுகள் கொண்ட தேன்கூடு !

தேன்கூடென்று ஏன் சொல்லுகிறேன் தெரியுமா

தெரியாமல் அமெரிக்கா கைவைக்கும் போதெல்லாம்

கொட்டிவிடும் தேனிக்கள் கியூப மக்கள் “ என்கிறார். ஆம்.

 

காஸ்ட்ரோவின் பேச்சாற்றல் உலகோரை வியக்கவைத்தது . அந்த ‘பேராற்றிலின் குரல்’ ஐ கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் உணர்வு பூர்வமாக வெளிப்படுத்தி இருக்கிறார் . வி.நர்மதா மொழியாக்கம் செய்து தந்துள்ளார் . அவர் பேச்சு நம்மிடம் நம்பிக்கையை விதைக்கும் .போரிடத் தூண்டும்.

 

இந்த மூன்று நூல்களும்  கொம்பு சீவும் ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வு எவ்வளவு சரியானது  நியாயமானது  அவசியமானது என்பதை தன் பயணம் மூலம் அறிந்த செய்திகளையும் பெற்ற அனுபவத்தையும் பிசைந்து ’சோஷலிசக் கனவின் தேடல்’ ஆகத் தந்திருக்கிறார் எம் .கண்ணன். உணர்ச்சிகரமான நடை மற்றும் விவரிப்பு வழி இந்நூலில் பல உண்மைகளை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் . நம் நாடு  நேரு ,இந்திரா காலத்தில் கடைப் பிடித்துவந்த வெளிநாட்டுக் கொள்கைகளை கைவிட்டு எப்படிப்பட்ட ஏகாதிபத்தியத்திடம் சரணடைந்துள்ளது என்கிற கசப்பான உண்மையை உணரச் செய்கிறது இந்நூல் .

 

பொருளாதாரத் தடை என்பதன் வலியும் கொடூரமும் எத்தகையது ? அதனை எதிர்த்து நிற்க எத்தகைய அரசியல் உறுதியும் அர்ப்பணிப்பும் தேவை ? இந்நூல் பாடம் சொல்கிறது . ஒரு நாளல்ல ஒரு மாதமல்ல ஒரு வருடமல்ல தொடர்ந்து இந்த முற்றுகை வட்டத்தில் இருக்கும் கியூபர்கள் அதனை எதிர்த்து எழுவது உலகுக்கே அரசியல் பாடமாகும் .அதனை இந்நூல் உணர்த்துகிறது .

 

இ.பா.சிந்தன் நூலின் முதல் அத்தியாயத்தை மீண்டும் வாசித்து எம் .கண்ணன் சொல்லும் செய்திகளையும் சேர்த்து அசைபோட்டால் எவ்வளவு ஆபத்தான ஏகாதிபத்திய எதிரியை நாம் எதிர் கொள்ள வேண்டி இருக்கிறது என்பது புலனாகும் .

 

அதிலும் கண்ணன் எழுதிய நூலின் ஆறாவது அத்தியாயத்தை வாசித்து முடிக்கும் போது , ஒன்று புலனாகிறது  நாம் ” 1.எதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் ? 2.என்ன செய்ய வேண்டும் ? 3.எதைப் பற்றி கவலைப்பட வேண்டும் “ என்பவற்றை உள்ளடக்கிய ”டிஜிட்டல் உலக கருத்து பிரச்சார வடிகட்டிகள்” குறித்தும் ,  ஒரு வகை Hybrid war  மூலம்  சமூக பொருளாதார அமைப்புகளில் நீண்ட கால சீர்குலைவு  ஏற்படுத்துகிற போக்கு குறித்தும் கருத்தரங்கில் நடை பெற்ற விவாதங்களைச் சொல்கிறார் . இது நாம் உள்ளூரிலும் எதிர்கொள்ளும் சவால் அல்லவா ? இந்துத்துவ வெறுப்பு அரசியலை நியாயப்படுத்தியும் , தாரளமய பொருளாதாரத்துக்கு முட்டுக் கொடுத்தும்  இங்கு நம்மிடம்  திணிக்கப்படும் கருத்துப் போர் நினைவுக்கு வரவில்லையா ? “ நாம் வலைப் பின்னல்களை நெய்யும் மக்கள்” [ WE ARE THE PECOPLE WHO WEAVE NET WORKS ] என்கிற நிலையை  எப்படி சாதிக்கப் போகிறோம் ? ஆக உள்ளூர் சவாலும் உலக சவாலும் இணையும் புள்ளிகள் மிகவும் கவலை அளிக்கிறது .

 

இந்த நான்கு நூல்களையும் இளைய தலைமுறையிடம் எடுத்துச் செல்லுங்கள் ! அரசியல் பயிற்சி என்பது அறையில் உட்காரவைத்து போதிப்பது மட்டுமல்ல ; தக்க நூல்களை வாசிக்கச் செய்வதும்தானே !

 

இந்நூல்களை வெளியிட்டவர் :  பாரதி புத்தகாலயம் ,thamizhbooks.com  / 8778073949  , பக்கங்கள் : 244 , விலை  :ரூ. 95 + 30 + 30 + 80 /

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

29/08/25.

 

 

 

 

 

 

 


Wednesday, 27 August 2025

மக்களிசை மேதை எம். பி, சீனிவாசன்

 

மக்களிசை மேதை எம். பி, சீனிவாசன்






நீண்டாநாள் வாசிக்க விரும்பிய புத்தகம் தாமதமாகக் கிடைக்க என் வாசிப்பும் தாமதமாகிவிட்டது . என் இனிய தோழர் மு.இக்பால் அகமது எழுதிய “ மக்களிசை மேதை எம். பி, சீனிவாசன்” நூலை வாசித்து மகிழ்ந்தேன் . தக்க நேரத்தில் எடுக்கப்பட்ட தக்க முயற்சி . நானறிந்த செய்திகளும் அறியாத செய்திகளும் நூல் நெடுக நிறைய இருக்கக் கண்டேன் . கமலாலயன் உள்ளிட்டு பலர் இந்நூல் குறித்து நுட்பமாக அறிமுகம் எழுதிய பின் நான் எழுதுவது சரியல்ல .காரணம் ,நான் பாடலை ரசிப்பேன் .ஆயின் இசை நுட்பம் அறியேன் .

இந்நூல் எம்பிஎஸ் அவர்களின் வாழ்க்கையை , வரலாற்றின் பின்புலத்தில் அவரின் முன் முயற்சிகளை குறிப்பாக தொழிற்சங்கப்பணிகளை , தனித்த இசை முயற்சிகளை தோழமையோடு எடுத்துரைக்கிறது . கம்யூனிஸ்டுகள் தொடக்கம் முதலே கலைஇலக்கிய உலகில் தடம் பத்தித்தனர் ; நாடகம் ,சினிமா உட்பட என்பதன் சாட்சி இந்நூல் . இசை அமைப்பாளர் சங்கம் உட்பட சினிமா உலகில் அவர் போட்ட விதை அதிகம் . அவை மரமாக செழித்து அவர் பெயர் சொல்லி நிற்கின்றன .அவர் கம்யூனிஸ்டாக வாழ்ந்ததினால் இழந்தது அதிகம் ; வாழும் காலத்தில் மட்டுமல்ல ; மறைவுக்கு பின்னும். வரலாற்றில் இருட்டடிப்பு செய்யப்படுகிறார் . இச்சூழலில் வெளிச்சத்துக்கு கொண்டுவர முயலும் மு.இக்பாலின் முயற்சி பெரிதும் பாராட்டப்பட வேண்டியதாகும் .

“ இசைக்கு இன்னொரு பெயர் எம் .பி .சீனிவாசன்
இசையை அவர் இயக்கினாரா
அவரை இசை இயக்கியதா
இசையும் அவருமாய் நம்மை இயக்கினார்கள் “
என தமிழன்பன் சொல்வது சரிதான் .இந்நூல் அதனைச் சொல்லும் .

“ மனினது பணிகள் யாவும் கூட்டாகவே நடை பெறுவதைப் போல ஆதிமனிதனின் இசையும் கூட்டுப் படைப்பாகவே ஒலித்தது .” என்கிறார் எம்பிஎஸ் . நம் மரபிலும் கூட்டாகப் பாடும் வழக்கமே நிலைத்ததை சொல்வதுடன் அதனை ‘ சேர்ந்திசை’ எனும் புதிய வடிவில் செதுக்கி நமக்குத் தந்தவரும் ஆவார் .

சிபிஎம் மாநாட்டை ஒட்டி எம் பி எஸ் அவர்களின் மாணக்கர் ராஜராஜேஸ்வரியை இசை ஆசிரியராக வழிகாட்டியாகக் கொண்டு கவிஞர் வெற்றி வளவன் ஒருங்கிணைப்பில் சென்னையில் ’நெல்சன் மண்டேலா சேர்ந்திசைக் குழு’வை கட்டி எழுப்புவதில் நான் அமைப்பு ரீதியாக உதவியாக இருந்தேன் என்பது மனநிறைவு .என் இணையர் சேர்ந்திசையில் அங்கமாகி இருந்தார் . பல வருடங்கள் சிறப்பாகச் செயல்பட்ட குழு அது .

பல்வேறு பசுமையான நினைவுகளைக் கிளறிவிட்ட நூல் இது . கடைசி எழுபது பக்கம் பல்வேறு தகவல் இணைப்பு போல் ஆகிவிட்டது . வரலாற்றில் அவை பதிவு செய்யப்பட்டாக வேண்டிய செய்திகள், தவிர்க்க முடியாதது . மீண்டும் இக்பாலுக்கு பாராட்டுகள் .

மக்களிசை மேதை எம். பி, சீனிவாசன் , ஆசிரியர் : மு.இக்பால் அகமது வெளியீடு : பரிசல் , தொடர்புக்கு : psrisalbooks2021@gmail.com 93828 53646 / 88257 67500 பக்கங்கள் : 276 , விலை : ரூ.350 /

சுபொஅ.
27/08/25

Monday, 25 August 2025

சாதி மறுப்புத் திருமணங்களும் கம்யூனிஸ்டுகளும் …

 


சாதி மறுப்புத் திருமணங்களும் கம்யூனிஸ்டுகளும் …

சாதி மறுப்புத் திருமணங்களுக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் ஆன உறவு இன்று நேற்று உருவானதல்ல ; கட்சி தொடங்கிய காலம் தொட்டு அது கம்யூனிஸ்ட் கட்சியில் இயல்பானதாக இருந்து வந்த ஒன்றே .

இதை நான் சொல்லக் காரணம் “ சாதிமறுப்புத் திருமணங்களுக்கு சிபிஎம் கட்சி அலுவலக வாசல் எப்போதும் திறந்தே இருக்கும் “ என கட்சியின் மாநிலச் செயலாளர் ப.சண்முகம் கூறியதை எதிர்த்தும் ஆதரித்தும் பலர் கருத்து சொல்கின்றனர் .

எதிர்ப்பவர்கள் யார் என்பதை விளக்கத் தேவை இல்லை . ஆனால் ஆதரிப்போர் சிலர் சிபிஎம் இப்போதுதான் சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிப்பதாகவும் , தாங்கள் மட்டுமே பல்லாண்டுகளாக இப்பணியைச் செய்து வந்ததாகவும் பதிவு போடுகின்றனர் .இந்த நட்பு முரண்பாட்டிற்கு விளக்கம்தான் இந்தப் பதிவு .

தோழர் கே டி கே தங்கமணி , ஆர் நல்லகண்ணு , உமாநாத் , என்.சங்கரய்யா ,பி.ராமமூர்த்தி , ஷாஜாஜி கோவிந்தராஜன் , மைதிலி சிவராமன் ,உ.ரா.வரதராசன் , வாசுகி , பாலகிருஷ்ணன் , ப,சண்முகம் என காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் பட்டியல் போடத் துவங்கினால் பல நூறு பக்கங்கள் தேவைப்படும் . தோழர் என் சங்கரய்யா ஒவ்வொரு மேடையிலும் காதல் திருமணங்களுக்கு பகிரங்கமாக ஊக்கம் தருவார் .அது மட்டுமல்ல ’தன் சகோதரிகளின் காதல் திருமணத்திற்காக வீட்டில் போராடுக’ என வாலிபர் சங்க மாநாட்டில் அழைப்பு விடுத்தவர் என்.சங்கரய்யா . அவர் குடும்பம் சாதி மதங்களின் சங்கமம் .

நான் வாலிபர் சங்கச் செயலாளராக இருந்த போது டெல்லியில் ஓர் நிகழ்வில் மூத்த தோழர் பசவபுன்னையாவோடு தோழர்கள் கலந்துரையாடிக் கொண்டிருந்தபோது பீஹார் தோழர் ஒருவர் தாங்கள் ஒரு காதல் திருமணத்தை சாதிமறுப்பு திருமணத்தை நடத்தி வைத்ததை பெருமையோடு குறிப்பிட்டார்கள் .அப்போது தமிழ்நாடு ,கேரள தோழர்கள் இதெல்லாம் நாங்கள் தொடர்ந்து செய்வதுதானே இதை முன்னுதாரணமாகச் சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்று கேட்டோம் . அப்போது குறுக்கிட்ட தோழர் பசவபுன்னையா , “ தமிழ்நாடு கேரளாவில் சமூகசீர்திருத்தம் ஓரளவு நடந்துள்ளது ஆகவே இது புதுமையாகத் தோன்றாமல் இருக்கலாம் . பீஹார் ,உ.பி போன்ற மாநிலங்களில் இப்படிப்பட்ட திருமணங்கள் சவால்தான் .வாலிபர் சங்க செயல்பாட்டில் இத்தகைய திருமணங்களை ஊக்குவிப்பது மிக முக்கியம் . இந்துத்துவா தலை எடுக்கும் காலம் இது .ஆகவே வருங்காலத்தில் தமிழ்நாட்டிலும் இது முக்கிய கடமையாகும். வாலிபர் சங்கம் தம் கடமையில் இதையும் ஒன்றாகக் கொள்க” என்றார் .

நான் என் அனுபவத்தைச் சொல்லுகிறேன் . நாங்கள் சென்னையில் வாலிபர் சங்கத்தை துவக்கிய போது சந்தித்த முக்கிய பிரச்சனைகளில் காதல் திருமணமும் ஒன்று . அப்போது மாவட்டத் தலைவர்களாகத் திகழ்ந்த தோழர்கள் பி.ஆர்.பரமேஸ்வரன் , வி.பி.சிந்தன் , வே.மீனாட்சிசுந்தரம் ,கே.எம்,ஹரிபட் , மைதிலிசிவராமன் ,உ.ரா.வரதராஜன் ,தலைமையில் சென்னை மாவட்டக்குழு அலுவலகத்தில் சாதிமறுப்புத் திருமணங்கள் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கும் . அதில் பெரும்பாலோர் கட்சி உறுப்பினரகவோ கட்சி ஆதரவாளராகவோ கூட இருக்க மாட்டார்கள் ,கட்சித் தோழர்களின் நண்பர்களாக உறவினர்களாக பிரச்சனையோடு வருவார்கள் . கட்சி ஆதரவுக் கரம் நீட்டும். .எனக்குத் தெரியும் காதல் திருமணங்களுக்கு எதிராக கட்சிக்குள் யாராவது முணுமுணுத்தால் தோழர்கள் தோழர்கள் பி.ஆர்.பியும் விபிசியும் ,மீனாட்சிசுந்தரமும் ,மைதிலிசிவராமனும் அதை சீரியஸான பிரச்சனையாகப் பார்த்து உடனே தலையிட்டு சீர் செய்வார்கள் . காதல் திருமணத்தை எதிர்த்த ஒரிரு தோழர்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளானதும் உண்டு . நாங்கள் நடத்திவைத்த காதல் திருமணங்களில் நூற்றுக்கு தொண்ணூறு வெற்றிகரமான வாழ்வையே தந்தன . தோற்றவை மிக சொற்பம் . ஏற்பாட்டு திருமணங்களிலும் வென்றதும் தோற்றதும் இருக்கத்தானே செய்யும் .

நான் என் பொதுவாழ்வில் முதல்முறை ஓர் இரவு முழுவதும் போலிஸ் ஸ்டேஷனில் இருந்தது ஒரு காதல் திருமணத்தால்தான் . ஆம் .பின்னாளில் கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளராக இருந்த தோழர் சேகர் – கீதா காதல் திருமணத்தை நானும் என் நண்பர்களும் நடத்தி வைத்திட , கீதாவின் வீட்டார் புகார் கொடுக்க போலீஸ் எங்களை கைது செய்து போலீஸ் காவலில் வைத்தது . தோழர் உ.ரா.வரதராஜன் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி புகாரை திரும்பப் பெறச் செய்து திருமணத்துக்கு ஒப்புதல் பெற்றார் . அதன் பின் நான் செய்துவைத்த காதல் திருமணங்களுக்கு கணக்கில்லை .நிறைய . அப்படி திருமணம் செய்தவர் பிள்ளைகளுக்கும் திருமணம் செய்து வைத்துள்ளேன் .

நான் வாலிபர் சங்க மாநிலச் செயலாளராக செயல்பட்ட காலத்திலும் தீக்கதிரில் செயல்பட்ட காலத்திலும் நான் நடத்திவைத்த காதல் திருமணங்கள் ஏராளம் . என் மகன் ,மகள் திருமணங்கள் மட்டுமல்ல ; எங்கள் குடும்பத்திலும் பல நடத்தி வைத்துள்ளேன் . என் குடும்பத்தில் எல்லா சாதி மதங்களும் சங்கமம் .

இப்படி நிறைய குடும்பங்கள் எம் கட்சியில் உண்டு . தற்போது ஆணவப் படுகொலைகள் நடந்துவரும் சூழலில் எம் செயலாளர் தோழர் சண்முகம் சாதி மறுப்பு காதல் திருமணங்களுக்கு ஊக்கம் தரும் வகையில் பேசியது எம் வரலாற்றில் தொடர்ச்சியே . புதிதல்ல . எம் வரலாற்று வேர்அது .

ஆதலினால் காதல் செய்வீர் !

சுபொஅ.

Saturday, 23 August 2025

என்ன நினைத்துக் கொண்டிருப்பார்கள் ?

 


என்ன நினைத்துக் கொண்டிருப்பார்கள் ?

வழக்கமாக நடை பயிற்சிக்கு
உடன்வரும் நண்பர்
ஊர் சென்றிருப்பதால்
தனியாளாக நடந்தேன் .
அன்றாடம் கடந்து போகிற நண்பர் குழுவில்
ஒருவர் திடீரென நிறுத்திக் கேட்டார் ,
“Are u non believer?”

நான் சிரித்துக் கொண்டே சொன்னேன்,
“ நான் மனித சக்தியை நம்புகிறேன்
அறிவியலைப் பின்பற்றுகிறேன்…”

“ சார் ! வேடிக்கை பண்ணாதீங்க உங்களை
ஒரு நாள்கூட கோவிலில் பார்க்கவில்லை
உங்கள் நண்பர் மட்டும்தான் வருகிறார்”
என்றார் அருகில் இருந்தவர்

“ எனக்கு அங்கே எந்த வேலையுமில்லை”
என்றேன் அவர் முகத்தைப் பார்த்தபடி

“ சார் ! ஓப்பணா கேட்கிறேன் நீங்க
கடவுளை நம்புகிறீர்களா இல்லையா ?”
கேட்டார் இன்னொருவர் ரொம்ப சீரியஸாக

நானும் சீரியஸாகச் சொன்னேன் ,
“ அறிவியல் ரீதியாக இல்லாத ஒன்றை
நான் ஏன் நம்பவேண்டும்
நீங்கள் நம்பினால் அது உங்கள் பாடு..”

” சார் ! இதை முதலிலேயே சொன்னால்
இவ்வளவு இழுத்திருக்க வேண்டாமே…”
என்றார் முதலாமவர் சிரித்தபடி …

“ நீங்கள் நம்பிக்கையில்லாதவரா ?
என மொட்டையாகக் கேட்டீர்கள்
எதை எனச் சுட்டவில்லை ஆகவே…”


முடிக்கும் முன்பே குறுக்கிட்டு,
“ சார் ! போதும் ஆளைவிடுங்க ..”

நடை பயிற்சி தொடர்ந்தது
“ மன அமைதிக்கு என்ன செய்கிறீர்கள் ?”
சந்தேகம் கேட்டார் ஒருவர்

“ புத்தகம் தராத அமைதியா ?” என்றேன்
அப்புறம் நடைபயிற்சி மவுன பயிற்சியானது .
புன்னகையுடன் விடை பெற்றேன் .

அந்த ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள்
’தீர்த்தம்’ அருந்த சோமபான கடைக்கு
மெல்ல நடைபோட்டனர் மனமகிழ்ச்சிக்காம்…

சரி ! என்னைப் பற்றி அவர்கள்
என்ன நினைத்துக் கொண்டிருப்பார்கள் ?

சுபொஅ.
23/08/25

Wednesday, 20 August 2025

தூய்மைப் பணியிலிருந்து விடுதலை எப்போது ?

 



தூய்மைப் பணியிலிருந்து விடுதலை எப்போது ?

[ இங்கே நான் சொல்லுவது முழுவதும் என் சொந்தக் கருத்தே.]

தூய்மைப் பணியாளர் போராட்டத்தை ஆதரிக்கிறேன் . அவர்கள் ஊதியம் குறையக்கூடாது என்பது மட்டும் அல்ல அதிகரிக்கவும் வேண்டும் .பணி பாதுகாக்கப்பட வேண்டும் . பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும் .தனியார் மயம் கூடாது . இக்கோரிக்கைகளை ஆதரிப்பதும் திமுக அரசின் ஒட்டுக்குமுறையை எதிர்ப்பதும் முற்றிலும் சரி ! முற்றிலும் நியாயம் ! இது ஒரு புறம் .

தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள ஒடுக்கப்பட்ட சமூகத்தை சமூக இழிவிலிருந்து மீட்க சொல்லப்படும் வாதங்கள் பல. அவை அபத்தமாய் உள்ளன ,கற்பனையாக உள்ளன. சாதிசமூக வேரைச் சரியாக உள்வாங்கதவையாக உள்ளன என்பது என் கருத்து . சில வாதங்களைப் பார்ப்போம்.

1] பணி நிரந்தரம் கூடாது ; அப்போதுதான் வேறு பணி தேடி செல்வார்கள் .
2] ஒடுக்கப்பட்ட சாதியினர் தூய்மைப் பணியிலிருந்து வெளியேற வேண்டும்
3] தூய்மைப் பணிக்கு அதிக ஊதியம் கொடுத்தால் எல்லா சாதியிலிருந்தும் வருவார்கள் .
4] வேறு சாதியினர் தூயமைப் பணிக்கு வந்தால் எல்லாம் இயந்திர மயமாகிவிடும் . நவீன மயமாகிவிடும்.

முதலில் பணி நிரந்தரம் என்பது பொருளாதார ரீதியான குறைந்தபட்ச பாதுகாப்பு . அதில் காலூன்றி தம் சந்ததியினரை படிக்கவைத்து வேறு பணிகளுக்கு அனுப்ப இயலும் . ஆகவே முதல் யோசனையை ஏற்க முடியாது . சமூக பாதுகாப்போடு கூடிய பணி நிரந்தரம் என்பது வர்க்க நலன் ,சமூகநிதி இரண்டிற்கும் அடிப்படையாகும் .

இரண்டாவது , தாங்களாக அப்பணியிலிருந்து வெளியேற வேண்டும் என்பதை நிராகரிக்கவும் முடியாது ;வற்புறுத்தவும் முடியாது .ஒரு காலத்தில் நாடார் சமூகம் என்ன நிலையில் இருந்தனர் ? ஆயின் , சுயமாக வியாபாரம் உள்ளிட்ட துறைகளில் காலூன்றி எழுந்தனர் என்பதும் அதற்கொப்ப அங்கே அக்காலத்தில் ஓர் சமூக விழிப்புணர்வு ஏற்பட்டது என்பதும் அனுபவம் . அதை அப்படியே காப்பி அடிக்க முடியாது .அன்றைய சூழல் வேறு ;இன்றைய சூழல் வேறு . ஆயினும் , படிப்பை கெட்டியாகப் பிடித்து சந்ததியினரை முன்னுக்கு கொண்டுவரலாம் .அதன் மூலம் தூய்மைப் பணியை உதறலாம் .இப்போதே வேறு பணிகளுக்குள் நுழைந்தோ [ அதனை முன்னிட்டு புலம் பெயர்ந்தாவது ] தூய்மைப் பணியை உதறலாம். இது அவரவர் தேர்வைப் பொறுத்தது ;திணிக்க முடியாது . அப்படி உதறி எழுவது அவர்களின் உரிமை விருப்பம் வாய்ப்பு சார்ந்தது . முடிவெடுக்க வேண்டியது அவர்களே !

மூன்று , அதிகச் சம்பளம் கொடுத்தால் எல்லா சாதியினரும் இப்பணிக்கு வந்துவிடுவார்கள் என்பது மிகை மதிப்பீடு . அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சிலர் வரக்கூடும் ; இப்போதும் உள்ளனர் .ஆனால் அவர்கள் குறுக்கு வழிகளில் இப்பணியைச் செய்யாமல் பிறர் தலையில் கட்டிவிட்டு மேய்ப்பனராகி விடுகின்றனர் . அப்படியே செய்ய நேரிட்டாலும்கார்ப்பரேஷன் வேலைஎன வெளியில் சொல்லித் திரிவர் . இப்பணியிலும் உயர் பொறுப்புகளுக்கு வேறு சாதியினர் வருகின்றனர் . அது பதவி கிரீடமாகிவிடுகிறது .sewage engineer கழிவுநீரகற்று பொறியாளர் , wast management expert கழிவு மேலாண்மை வல்லுநர் போன்றவற்றில் வேறு சாதியினர் வந்துவிட்டனர் .ஆனால் அடிமட்டத்தில் குப்பையை ,கழிவை நேரடியாக அகற்றும் பணியில் இன்னும் சாதியில் ஒடுக்கப்பட்டோரே உள்ளதைப் பார்க்க வேண்டும். ஆகவே அதிகச் சம்பளம் கொடுத்தால் இழிவு தொலைந்து எல்லோரும் வருவர் என்பது மிகைக் கற்பனையே !

நான்காவதாக , வேறு சாதியினர் இந்தப் பணிக்கு வந்தால் எல்லாம் நவீனமாகிவிடும் என்பதும் ஓர் மிகைக் கற்பனையே . இன்று அடுப்பங்கரை நவீனமயமாகிவிட்டது ஆயினும் இந்த அறைக்குள்தானே பெண்களைப் பூட்டி வைக்கிறோம். ஏன் எனில் பாலின சமத்துவ சிந்தனை இன்னும் வலுவாக வேர்விடவில்லை என்பதால்தானே . ’கேட்டரிங் டெக்னானலஜிபடிக்க ஆண்கள் அதிகம் முட்டி மோதினாலும் , வீட்டு சமையலறை சுமை முழுவதும் யார் தலையில் ? பெண்கள் தலையில்தானே! ’லெதர் டெக்னாலஜிபடிக்க ஐஐடி போவது யார் ? மேல் சாதியினர் . தோலைப் பதப்படுத்தும் அடிமட்டப் பணியில் இன்னும் யார் உள்ளனர் ? ஒடுக்கப்பட்டோரும் சிறுபான்மையினருமே ! ஆகவே நவீனம் மட்டுமே முழுவிடுதலை தந்துவிடுமா ?

உழவாரப் பணி , கோயில் குளத்தை சுத்தம் செய்வது புண்ணியம் , காந்தி ஆசிரமத்தில் எல்லோரும் தூய்மைப் பணி செய்தனர் , ’தூய்மை இந்தியாஎன கூவி மோடி பெரிதாகத் தப்பட்டம் அடித்தார் . காலங்காலமாகப் பிரச்சாரம் தொடர்கிறது .ஆனாலும் சுற்றுப்புறத் தூய்மையைப் பேணுவது என்பது நம் பழக்க வழக்கமாக பண்பாட்டுக் கூறாக இன்னும் மலரவில்லையே ஏன் ? தடை நம் மூளையில்தான் உள்ளது .

தூய்மைப் பணி என்பது கர்மயோகம் என எழுதி ; அதன் மூலம் சொர்க்கம் நிச்சயம் என மோடி உறுதி சொன்ன பின்பும் குஜராத்தில் கூட வேறு சாதியினர் தூய்மைப் பணிக்கு வந்தனரா ? இல்லையே ! சொர்க்க வாசல் திறக்க வைகுண்ட ஏகாதேசியில் விழித்திருக்கும் ஆன்மீகக் குஞ்சுகள் சொர்க்கத்தற்குஎளிதான ரூட்என மோடி சொன்ன இப்பணியில் வந்தனரா ? தேசபக்தியை பற்றி வாய்கிழியப் பேசும் குஜராத்திகள் இராணுவதில்கூட சேருவதில்லை .அங்கே எல்லோரும் அம்பானி அதானி அல்ல ; வறுமை சூழினும் பாணி பூரி விற்றுப்பிழைத்தாலும் இராணுவத்திற்கு போவதில்லை குஜராத்திகள் . அது ஒரு சமூக இறுக்கம் . ஆக தூய்மைப்பணிக்கு அதிகச் சம்பளமோ நவீனமோ இந்த சமூக இழிவைப் போக்கிவிடும் என்பதும் மிகைக் கற்பனையே !

மெத்தப் படித்தவர்கள் வாழும் எம் அடுக்ககத்தில் குப்பை கொட்ட தனி இடமும் தொட்டியும் உண்டு ; தினசரி பஞ்சாயத்தார் அதை எடுத்துச் செல்வர் . ஆனால் இங்கு குப்பைத் தொட்டியில் போடுவதில்கூட பொறுப்பின்மையே நிலவுகிறது . டூ விலரிலோ காரிலோ பயணித்தபடியே குப்பைப் பையை வீசி எறிவதும் அது எங்கும் சிதறுவதும் வாடிக்கை . தெருக்களிலும் இதே நிலைதான் . மாடியிலிருந்து வீசும் புத்திசாலிகளும் உண்டு . எங்கள் அடுக்ககத்தில் ஹவுஸ் ஹிப்பிங் தூய்மை பணி செய்யும் வேலைக்கு ஊதியம் உயர்த்த வேண்டும் என்ற வாதம் எழுந்த போது , இது பெண்கள் வேலை ஆண் செய்தாலும் குறைவாகத்தான் சம்பளம் கொடுக்க வேண்டும் என வாதிட்ட படித்த நல்ல ஊதியம் வாங்குகிற பிரக்ஸ்பதியைப் பார்த்தேன். குப்பை அள்ளுபவரை மனிதனாகவே மதிப்பதில்லை . கடுமையாக சண்டை நடத்தி ஊதியம் உயர்த்தினோம் . குடியரசு தினத்தில் கொடியேற்றும் வாய்ப்பை அளித்து பெருமைப் படுத்தினோம். இது சும்மா தகலுக்காக .

வீட்டில் குப்பைகளை பெருக்குவது துணி துவைப்பது [ வாஷிங்மெஷின் ஆனாலும் ] , வீட்டை சுத்தம் செய்வது ,பாத்திரம் கழுவுவது எல்லாம் இன்னும் பெண்கள் தலையில்தானே பெரிதும் சுமத்தப்படுகிறது . பெண்களால் இச்சுமையைத் தூக்கி எறிய முடியாத அளவு குடும்பச் சூழல் ,சமூகச்சூழல் . அந்தக் கோபத்தில் கண்ணை மூடிக்கொண்டு குப்பையை வெளியே தூக்கி வீசுகின்றனர் . தெருக்களிலும் இதே நிலைதான் . மாடியிலிருந்து வீசும் புத்திசாலிகளும் உண்டு .

வீட்டுக்கு உள்ளே தூய்மைப் பணி செய்ய பெண்கள் ,வெளியே தூய்மைப் பணி செய்ய ஒரு குறிப்பிட்ட சாதி என்கிற சனாதனப் பார்வை நம் மூளையில் உறைந்திருப்பதால் தூய்மையைப் பற்றிய பொறுப்பற்று குப்பையை கண்டபடி வீசுகிறவராக உள்ளனர் ஆண்களும் பெண்களும் . இந்த கரடு தட்டிப்போன வறட்டுப் பார்வை அனைவர் மூளைகளிலிருந்தும் துடைத்தெறியப்படும் வரை பெரிய மாற்றம் நிகழ வாய்ப்பே இல்லை . ’தூய்மை இந்தியாஅதுவரை வெறும் பேச்சே ! அடித்தளத்திலிருந்து எரிமலைபோல் கலகம் வெடிக்கும் போதே விடை கிடைக்கும் . அதற்காக இப்போதே கனலை விசிறிவிடுவது தவறல்ல . தேவை .

சமூகநீதி பேசுகிறவர்களும் சமத்துவம் பேசுகிறவர்களும் இந்தப் போரில் ஒன்றிணையாமல் விடிவு இல்லை . இதனை உணர்ந்தோமா ?

சுபொஅ.
21/08/25.