Posted by அகத்தீ Labels:

தொடக்கநிலைக் கேள்வி -பதில் :[2]





சுற்றுச்சூழல் சீரழிவு குறித்து கம்யூனிஸ்டுகள் கவலைப்படுவதில்லையே ....


கேள்வி :
இன்றைய உலகின் முக்கிய சவால்களான புவிவெப்பமாதல் , பருவநிலை மாற்றம் , சுற்றுச்சூழல் சீரழிவு இவை குறித்து தன்னார்வலர் அமைப்புகள் பேசுமளவுக்குச் செயல்படும் அளவுமக்குக்கூட கம்யூனிஸ்ட் இயக்கங்கள் செயல்படுவதில்லையே ஏன் ? வெறுமே ஏகாதிபத்திய எதிர்ப்பு என உதட்டில் உச்சரித்தால் போதுமா ? இன்றைய மிகப்பெரிய அச்சுறுத்தலானச் சுற்றுச்சூழல் அழிவு மற்றும் பருவநிலை மாற்றத்திற்கு (Climate Change) மார்க்சியத்திடம் தீர்வு உள்ளதா?

பதில் :

மேலே உள்ள கேள்வி பலரால் கேட்கப்பட்டவை . வசதிகருதி ஒன்றாக்கி உள்ளேன் .ஆம் அல்லது இல்லை என்று பதில் சொல்வது எளிதாக இருக்கும் , ஆயின் உண்மையை நெருங்காது .இந்தப் பிரச்சனைகள் அனைத்தும் எண்ணற்ற உப கேள்விகளை உள்ளடக்கியது . பேசப்பேச விரிந்துகொண்டே போகும் பொருள் இது . இந்தக் கேள்வி பதில் எல்லைக்குள் தொட்டுக்காட்டுவதே சிரமம்தான் . முயல்கிறேன்.

கதாநாயகன் vs வில்லன்
தேவர்கள் vs அசுரர்கள்
பாவம் vs புண்ணியம்
தீட்டு vs புனிதம்
நல்லது vs கெட்டது
கடவுள் vs சாத்தான் அல்லது பிசாசு அல்லது பேய்

என்பதுபோல் எதிரெதிர் வைத்து விளக்கிவிட இயலாது . ஏனெனில் எல்லாவற்றையும் இப்படித்தான் புரிந்து கொள்ள நாம் பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறோம் . ஆனால் முழு உண்மையைக் காண அப்போக்கு உதவாது .அது மார்க்சிய அணுகுமுறையும் அல்ல.

புவிவெப்பமாதல் , பருவநிலை மாற்றம் ,சுற்றுச்சூழல் சீரழிவு போன்றவை ஒற்றை இரவில் யாரோ ஒருவரால் வெடித்து முளைத்த பிரச்சனைகள் அல்ல .அறிந்தும் அறியாமலும் தேவையின் நிர்ப்பந்தத்திலும் மனித குலம் சிறுகச் சிறுகச் செய்த பிழைகளின் கூட்டுத்தொகையே இன்று நாம் அனுபவிப்பவை.

காடழித்து நகருண்டாக்கிய போதே இயற்கையோடு முரண் துவங்கி விட்டது , ஆனாலும் மனித குலம் இயற்கையோடு மல்லுக்கட்டி மல்லுக்கட்டித்தான் முன்னேறி உள்ளது . தொழிற்புரட்சி எவ்வளவு நன்மைகளைக் கொண்டுவந்ததோ அவ்வளவு எதிர்காலச் சவால்களையும் கொண்டு வந்தது . மூலதனம் எனும் தம் மாபெரும் படைப்பில் காரல் மார்க்ஸ் எல்லையற்று கனிமச் சுரண்டல் ,சூழல் மாசு குறித்து எச்சரிக்கிறார் .

இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாட்டிலும் இயற்கையை பற்றிய நவீன அக்கறையை முதலில் வெளிப்படுத்தியவர்கள் கம்யூனிஸ்ட் எனில் மிகை இல்லை . 1935 அக்டோபர் ’புதுவுலகம்’ ஏட்டில் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் “ உலகம் வறண்டு போகிறதா ?” என கேள்வி எழுப்பி கட்டுரை தீட்டி உள்ளார். அதில், “ எரிகிற நெருப்பை ஏறித் தள்ளுவது போல்” நாம் நம் அறியாமையால் அக்கேட்டை விரைவு படுத்திக் கொண்டிருக்கிறோம் என எச்சரிக்கிறார் .இது போல் சில கட்டுரைகளை அன்றைக்கே எழுதி உள்ளார் .

1930 களில் சிறையிலிருந்து தன் மனைவிக்கு எழுதிய கடிதத்தில் தன் குழந்தைக்குச் சொல்லுமாறு ஒரு குட்டி நாடோடிக் கதையை எழுதுகிறார் இத்தாலியச் சிந்தனையாளர் , கம்யூனிஸ்ட் அண்டோனியா கிராம்ஷி .

“ ஒரு நாள் இரவு வீட்டில் அடுப்பின் மேல் குழந்தைக்கு பாலைச் சுடவைத்து மூடி வைத்துவிட்டு தாய் குழந்தை அருகே படுத்திருக்கிறார் . ஒரு எலி மெல்ல நுழைந்து பாலைக் கொட்டிவிடுகிறது . குழந்தை பசியால் வீறிடுகிறது .தாய் பாலை எடுக்க வருகிறார் . அங்கு கொட்டிக் கிடக்கிறது .தாய் குழந்தையை கொஞ்சி தூங்க வைக்க முயல்கிறார் .குழந்தை பசியால் துடிக்கிறது .இதை ஒளிந்திருந்து பார்த்த எலிக்கு வருத்தம் உண்டாகிறது .

எலி குடுகுடென ஓடி பசுவிடம் கொஞ்சம் பால் கேட்கிறது . ”நானும் பசியாய் இருக்கிறேன் .புல் கொடு ! பால் கொடுக்கிறேன்” என்றது பசு .
புல்லைத் தேடி எலி ஓடியது . பொட்டலாய் கிடக்கிறது . எலி வந்த கதையைச் சொல்கிறது .”சரிதான் . ஆனால் நான் தண்ணீர் இல்லாமல் காய்ந்து கிடக்கிறேன்... கொஞ்சம் தண்ணீர் கொடு புல் தருகிறேன்” என பொட்டல் சொன்னது.

எலி மழையைத் தேடிச் சென்று மேகத்திடம் கேட்டது . மேகம் சொன்னது, “ காடு இல்லாமல் மழை எப்படி சாத்தியம் ? ஒரு மரமேனும் நடு நான் மழை தருகிறேன்.”
எலி தன் சக எலிகளோடு சேர்ந்து மரங்கள் நட்டன .மழை பெய்தது .புல் தழைத்தது .பசு பால் கொடுத்தது .குழந்தை பசி ஆறியது.

இக்கதை கேட்டு வளரும் என் மகன் இயறகையை நேசிப்பான் . சுற்றுச்சூழலைக் காப்பான் என்று சொன்னார் .

ஆக , சுற்றுச்சூழல் ,புவிவெப்பமாதல் , பருவநிலை மாற்றம் உள்ளிட்ட இயற்கையோடான சமநிலை பேனும் விவகாரத்தில் கம்யூனிஸ்டுகள் தாம் உண்மையில் அக்கறை கொண்டவர்கள் . களத்தில் வேறு பலரும் கவர்ச்சியாய் உரக்கப் பேசுகிறார்கள் .ஆனால் அவை அனைத்தும் ஒரு பக்கப் பார்வை .அது தீர்வை நோக்கித் தள்ளாது .

நான் ஓர் எளிமைப் படுத்தப்பட்ட உதாரணம் சொல்லுகிறேன் . கொஞ்சம் நாடகத்தனமானதுதான் ; ஆயின் புரிதல் வசதிக்காக ..... ஒரு தெரு முனையில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன .பன்றிகள் அதை கிளறி நாலபக்கமும் இறைப்பதுடன் நாற்றத்தையும் உசுப்பிவிடுகிறது . பக்கத்து குடிசைப் பகுதியில் பன்றி வளர்ப்போர் உள்ளனர் . இப்போது பழியை மொத்தமாக அவர்கள் மீது போட்டு அவர்களை அங்கே இருந்து துரத்த ஏற்பாடு செய்யலாம் . அதுதான் நடக்கும் .

ஆனால் , தீர்வு அதுவல்ல ; காரணமும் அதுவல்ல . பக்கத்து பெரிய ஹோட்டல்களில் இருந்து கொட்டப்படும் உணவுக் கழிவுகளே அவை ; மேலும் அங்குள்ள கல்யாண மண்டபத்திலிருந்து கொட்டப்படும் கழிவுகளுமே அங்கு மலையாய்க் குவியும் . முதலில் அவற்றை தடுக்கவும் ; பாதுகாப்பாக அப்புறப்படுத்தவும் ஏற்பாடு செய்தால் குப்பை மலை தகர்ந்துவிடும் .அதன் பின் பண்றிகளுக்கு அங்கு எதுவும் கிடைக்காது . பொது மக்களுக்கும் குப்பையை முறையாக அப்புறப்படுத்தப் பயிற்சி அளிக்கலாம்.

ஆனால் ‘ குடிசையும் பன்றியையையும்’ குறிவைப்பதும் பிரச்சாரம் செய்வது எளிது .அதைத்தான் தன்னார்வலர்களும் மேலோட்ட அறிவு ஜீவிகளும் செய்வர் . “ குடிசை அவர்கள் வாழ்விடம் .பன்றி வளர்ப்பு ஓரு தொழில் ;அவர்களின் வாழ்வாதாரம் .பிழைப்பு .அவற்றை பாதுகாக்க வேண்டும் . முறைப்படுத்த வேண்டும் . சுகாதாரமாகச் செய்ய பயிற்சி கொடுக்க வேண்டும் .”- இப்படி கம்யூனிஸ்டுகள் கோரிக்கை வைத்தால் அது பிழையா ? சுற்றுச்சூழல் அக்கறை இன்மையா ?

இந்த உலகம் வெப்பமயமாவதற்கும் , பருவநிலை பொய்ப்பதற்கும் , புவி இயற்கை சமநிலை குலைவதற்கும் , சுற்றுச் சூழல் மாசு கெடுவதற்கும் பிரதானமாக யார் காரணம் ? சோற்றுக்கில்லாத ஏழையா ? அடுப்பெரிக்க விறகு வெட்டிய பெண்ணா ? இல்லை .இல்லவே இல்லை . வரைமுறையின்றி தன் லாபவெறிக்காக இயற்கையச் சுரண்டியதும் சுரண்டிக் கொண்டிருப்பதும் கார்ப்பரேட்டுகள் அல்லவா ? அவர்களைப் பாதுகாக்கும் அரசுகள் ,சட்டங்கள் ,நீதிமன்றங்கள் ,காவல்துறை போன்றவை அல்லவா ? இதை முதன்மைப் படுத்தி தீர்வைத் தேடாமல் புவியைப் பாதுக்காக்க முடியுமா ?

இந்த கார்ப்பரேட்டுகளுக்கு ‘ சமூகப் பொறுப்புணர்வு’ என்கிற பெயரில் தன் வருவாயில் சிறுபகுதியை வரி இல்லாமல் செலவு செய்ய வழிகண்டுள்ளனர் . அதில் தன்னார்வ அமைப்புகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் நிறுவி ‘ மரம் நடுதல் ‘ ‘ இயற்கைக்கு திரும்புதல் ‘ என்றெல்லாம் கண்துடைப்பு நாடகம் ஆடுவார்கள் . ஃபோர்ட் , பில் கேட்ஸ் ,டாட்டா இப்படி பல சொல்லலாம் . இவர்கள் தீவிரமாகப் பேசினாலும் விஷ விருட்சத்தின் வேரை அடையாளம் காட்டாமல் கிளைகளை வெட்டுவது , சருகுகளை அப்புறப்படுத்துவது என திசை திருப்புகிற பணியையே செய்வர் .

உலகநாடுகளின் பல்வேறு மாநாடுகளின் பேச்சுக்கும் செயலுக்கும் சம்மந்தமே இருப்பதில்லை . இயற்கையை சீர்குலைக்கும் அமெரிக்கா ,பிரிட்டன் போன்ற ஏகாதிபத்திய நாடுகள் தன் பங்கை நிறைவேற்றாமல் ஏழை நாடுகளை மிரட்டும் . இதுதான் முதலாளித்துவம் .

சுற்றுச் சூழல் சவால்கள் மிகவும் சிக்கலானது. இதனைப் புரிந்து கொள்ள தட்டையான பார்வை ஒருபோதும் உதவாது .ஒரு பக்கம் எவ்வளவு கடுமையான சூழலில் சிக்கி இருக்கிறோம் , இனி மனித குலம் அவ்வளவுதான் எனத் தோன்றுகிறது . மறு பக்கம் கடுமையான முடிச்சுதான் ஆயின் அவிழ்க்க முடியும் என்கிற நம்பிக்கை ஏற்படுகிறது.

ஒவ்வொரு பிரச்சனையையும் தீர்வை நோக்கி நகர்த்தும் மனிதகுலம் ; ஒவ்வொரு தீர்விலும் புதிய பிரச்சனைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது . ஆயினும் அங்கே முடங்கி விட முடியாது முயன்று முன்னேறி புதிய தீர்வை நோக்கி நகர வேண்டி இருக்கிறது . மீண்டும் புதிய பிரச்சனைகள் … இப்படித்தான் வளர்ச்சியும் இருக்கும் அறிவியலும் இருக்கும் …

’ஓசோன் படலத்தில் ஓட்டை’ என்கிற பிரச்சனை ஓங்கி இருந்த 2000 ஆம் ஆண்டு நான் ஒரு பத்திரிகையாளர் குழுவில் சீனா சென்றிருந்தேன் அங்கு உரையாடும் போது சீனர்கள் சொன்னார்கள் “ ஓசோன் படலம் ஓட்டைவிழுவது உண்மைதான் ;ஆயினும் மீள முடியும் . இயற்கை தீர்வையும் தன்னுள் கொண்டுள்ளது.நாம் கொஞ்சம் திருந்தினால் போதும் “ நாங்கள் நம்பவில்லை . சீனா அதீதமாகப் பேசுகிறது என்றே கருதினோம். அறிவியல் அறிஞர் த.வி.வெங்கடேஸ்வரன் ஒரு கட்டுரையில் இதனை உண்மையென தெளிவு படுத்தி இருக்கிறார் . ஆம். இன்று ஓசோன் படலத்தில் ஓட்டை கிட்ட்த்தட்ட இல்லை .

புவி வெப்பமயமாவதில் இருந்து ’மீள மரம் நடும் விழாக்கள்’ ,’சூரிய ஆற்றல் மின்சார பரப்புரை’ என பொதுவாய் நாம் பேசும் எளிய தீர்வுகள் மட்டுமே முழுமையானதுமல்ல சிக்கலில்லாததுமல்ல . ஒரு தீர்வு இன்னொரு பிரச்சனைக்கு வழி கோலுகிறது .

“இஸ்திரி செய்யாத கசங்கிய ஆடையை அணிவது குற்றம் அல்ல ;தவறும் அல்ல. ஆனால் இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் காலநிலை மாற்றத்தை தடுப்பதில் நாமும் பங்கு வகிப்போம் எனக் கூறுவது ஏமாற்றுவேலை” என த.வி.வெங்கடேஸ்வரன் தம் கட்டுரை ஒன்றில் சுட்டி இருப்பது மிகை அல்ல .உண்மை .

“மீண்டும் பழமைக்குச் செல்வோம்” , ”கோவணம் உடுப்போம்” போன்ற வாதங்கள் சிக்கலின் இறுக்கத்தை முடிச்சை அறியாமல் மேம்போக்காகப் பேசுகிறவையே . அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியால் உண்டான பிரச்சனைகளுக்குத் தீர்வை , கற்பனையாகவோ பழமையான முறையிலோ கட்டமைத்துவிட முடியாது , மாறாக அறிவியல் தொழில் நுட்ப முன்னேற்றத்தில் சுற்றுச்சூழல் பார்வையை இணைத்தே தீர்வு காண முடியும். அதுதான் கம்யூனிஸ்டுகள் சொல்லும் வழி ,மார்க்சியம் கற்றுத்தருவது . வெட்டொன்று துண்டு இரண்டு என்கிற தன்னார்வக் குழுக்களின் அணுகுமுறைக்கு நேர் எதிரானது .அறிவியல் பூர்வமானது .

பெருகும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு , உடை , வாழ்விடம் , கல்வி ,
வேலைவாய்ப்பு ,குடிநீர் போன்றவற்றை அளிக்கத் திட்டமிடும் போது நாம் இயற்கையை பகைத்துக் கொண்டு இதனை செய்துவிட முடியாது .

“ அறிவியல் விரோத சூழல் அடிப்படைவாதிகளையும்,ஆளும் வர்க்கங்களின் வளர்ச்சி மற்றும் சூழல் தொடர்பான மக்கள் விரோதக் கொள்கைகளையும் ...” ஒரு சேர அம்பலப்படுத்தி எதிர்க்க வேண்டும் என ஒரு கட்டுரையில் வெங்கடேஷ் ஆத்ரேயா கூறியிருப்பது மிகச் சரியான அணுகுமுறை ஆகும்.

பொதுவாய் மரபணு தொழில் நுட்பம் ஆபத்தானது என்பது பொதுபுத்தியில் உறைந்துள்ளது .ஆயின் அதே மரபணு மாற்ற தொழில் நுட்பம் அதீத வெப்பத்தை தாக்குப் பிடிக்கும் தாவரங்களை உருவாக்கவும் பயன்படுத்த முடியும் என்கிறது தற்கால அறிவியல் .

“ வருங்காலத்தை நேர்மறை எண்ணங் கொண்டு நவீன தொழில் நுட்ப உதவி கொண்டு எதிர்கொள்வோம்.புவி சூட்டைத் தணிக்கும் முயற்சியில் ஈடுபடுவோம்.” இதுவே நம்பிக்கையின் குரல் .மார்க்சிஸ்ட் குரல் .

பொதுவாய் சூற்றுச்சூழல் தூய்மைவாதிகள் மார்க்சியத்தை எதிராக நிறுத்துவார்கள் .ஆனால் மார்க்சியம்தான் சுற்றுச்சூழல் குறித்த மெய்யான அக்கறை கொண்டிருக்கிறது . ஒருதலைப் பார்வையை கொள்ளாமல் ஒருங்கிணைந்த பார்வையைத் தருகிறது .

சுற்றுசூழல் நெருக்கடியின் பல்வேறு முகங்களை முனைகளை சிக்கல்களை நாம் புரிய முயல வேண்டும் . பிரச்சனைகளும் எளிதல்ல .தீர்வுகளும் எளிதல்ல .பிரச்சனைகள் ஒரே நாளில் வெடித்ததல்ல காலவெளியில் நாம் அறிந்தும் அறியாமலும் செய்தவற்றின் எதிர்வினைகளாகும் . ஆகவே தீர்வு ஒரே நாளில் ஒரே கஷாயத்தில் கிடைத்துவிடாது . நெடிய போராட்டம் . அறிவியல் பார்வையுடன்தான் போராடியாக வேண்டும் .அதற்கு மாற்று ஒரு போதும் இல்லை .

பெருகும் மக்கள் தொகைக்கு வாழ்வளித்துக் கொண்டே புவியைக் காப்பாற்றி அடுத்த தலைமுறையிடம் கையளிக்க நாம் நேற்கொள்ள வேண்டிய போராட்டத்தில் மார்க்சியமே நம்மை வழிநடத்தும் .

இத்துறையில் குவிந்துள்ள ஆங்கில நூல்களில் ஒரு சிறு அளவுகூட தமிழில் வெளிவரவில்லை . அதற்கு முயல வேண்டும் ஆழமாகப் பயிலாமல் அடிப்படைத் தீர்வை கண்டடைவது சாத்தியமில்லை .

[ ஆழமான கேள்வி என்பதால் பதில் கொஞ்சம் நீண்டு விட்டது. அரசியல் பயிற்சிக்கு இது அவசியம்தானே! ]

சு.பொ.அகத்தியலிங்கம் .
05 /09/26.

குறிப்பு : ஒவ்வொரு சனிக்கிழமையும் ‘கேள்வி -பதில்’ வெளிவரும் . நீங்களும் கேள்விகளை அனுப்பலாம்.



முசோலினி கால ‘திமாகி நக்சல்’…. கதை : … வரலாற்றுப் பாடம் …

Posted by அகத்தீ Labels:

 


முசோலினி கால  திமாகி நக்சல்…. கதை : வரலாற்றுப் பாடம்

 

 




பேர் வென்டான்னி தொப்பியாமோ இம்பெதீரே அ க்வெஸ்தோ செர்வெல்லோ தி ஃபுன்சியோனாரே…..

[ Per vent'anni dobbiamo impedire a questo cervello di funzionare ]

 

இது இத்தாலிய வாசகம் ....ஆங்கிலத்தில் இதன் பொருள்.…

"For twenty years we must stop this brain from functioning."

 

தமிழில்ச் சொல்வதாயின்…

"இந்த மூளையை இருபது ஆண்டுகளுக்கு இயங்காமல் தடுக்க வேண்டும்."

 இன்னும் அழுத்தமாகச் சொல்ல வேண்டுமாயின்…..

"இந்த மூளையை இருபது ஆண்டுகள் சிந்திக்க விடாமல் முடக்க வேண்டும்."

 

 இப்படிக் கொக்கரித்தன் இத்தாலியின் நாசிஸ்ட் முசோலினி ….

இரண்டாம் உலகப்போரின் மூன்று சைத்தான்களில் ஒருவர் ; ஆம் ஹிடலர் ,முசோலினி ,தோஜோ என மூன்று சைத்தான்கள்.... 

 

யாரைப் பார்த்துக் கொக்கரித்தான்

இத்தாலிய கம்யூனிஸ்ட் தலைவர் தோழர் அன்டோனியா கிராம்ஸியைப் [ Antonio Gramsci ] பார்த்து …

 

ஏன் கொக்கரித்தான் ?

உழைப்பாளி மக்களைச் சிந்திக்கத்தூண்டியதகாக …

நாசிசத்தை எதிர்க்க அணிதிரட்டியதற்காக …

 

இப்படிக் கொக்கரித்த்து முசோலினியா அல்லது வேறு யாரேனுமா ? எப்போது  ?

 

1926 நவம்பர் 8 ஆம் நாள் நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்ய தடை செய்யப்பட்டிருந்த ‘ விலக்குரிமையை’ மீறி தோழர் கிராம்ஷி கைது செய்யப்பட்டார் …

1928 மே 28 ஆம் நாள் ரோம் நகரில் நடந்த விசாரணையின் போது அரசு தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் மைக்கேல் இஸ்குரோ [Michele Isgrò] இவ்வாறு கொக்கரித்தார் . இது முசோலினியின் குரலாகவே உலகெங்கும் பார்க்கப்பட்டது . இன்றும் பார்க்கப்படுகிறது .

 

அப்படியாயின் கிராம்ஷியின் பேச்சையும் எழுத்தையும் கண்டு முசோலினி எவ்வளவு மிரண்டிருந்தால் இவர் மூளை சிந்திப்பதை நிறுத்த வேண்டும் எனக் கொக்கரித்திருப்பான்…. யோசித்துப் பாருங்கள் …

 

தெற்கு இத்தாலிக்கும் வடக்கு இத்தாலிக்கும் இருக்கும் ஏற்ற தாழ்வுகளைப் பேசினான்…

நாட்டைச் சூறையாடி ஆதிக்கம் செய்யும் சுரண்டலுக்கு எதிராகப் பேசினான்…

உழைக்கும் மக்களை ஒன்று திரட்டப் பேசினான்…

கம்யூனிஸ்டுகள் பண்பாட்டுத்துறையின் சீரிய கவனம் செலுத்தச் சொன்னான் … பாசிசமும் நாசிசமும் நுழையும் துறை அதுவென்பதை தோலுரித்துக் காட்டினான் …

 

 

கோபம் வராதா சர்வாதிகாரிக்கு ?

கோபம் வரதா நாசிஸ்ட் முசோலினிக்கு ?

 

 

1981 ஜனவரி 22 ஆம் நாள் சார்தீனியா நகரில் பிறந்தான் அண்டோனியா கிராம்ஷி.

இளமையிலேயே கம்யூனிஸ்டாக மாறினான் ..

 

34 வயதில் நாசிஸ்ட் முசோலினியால் கைது செய்யப்பட்டான்…முதலில் உஸ்டிகா தீவிலும் பின் பாரி அருகே தூரி சிறையிலுமாக 11 ஆண்டுகள் கொடும் சித்திரவதையை அனுபவித்தான்…. அவன் பிறப்பிலேயே உடல் பலவீனமானவன் ….. சிறை வாழ்க்கை மேலும் அவனை சீர்குலைத்த்து …

 

குத்துயிரும் குலையுயிருமாய் 1937 ஏப்ரல் 21 ஆம் நாள் விடுவிக்கப்பட்டான் …விடுவிக்கப்பட்ட ஆறே நாட்களில் 27 ஏப்ரல் 1937 இல் தன் 46 வது வயதில் இறந்தான் … இது சிறைக்கொலை எனில் மிகை அல்ல….

 

எந்த மூளை சிந்திக்கக்கூடாது என முசோலினி கொக்கரித்தானோ அந்த மூளை கிராம்ஷியின் மூளை சிறையில் கூட சிந்திப்பதை நிறுத்தவில்லை.

 

சிறையில் 11 ஆண்டுகளில் 33 குறிப்பேடுகளில் 2,848 பக்கங்களை எழுதினார் - அதுதான் பிற்காலத்தில் உலகப் புகழ் பெற்ற Prison Notebooks (சிறைக் குறிப்பேடுகள்) ஆனது.தமிழிலும் வெளிவந்துள்ளது.

 

 

வரலாற்றின் ஏடுகளை புரட்டிக்கூடப் பார்க்காத சிலர்  “திமாகி நக்சல்” என்கிற ரப்பர் ஸ்டாம்பு குத்தி கம்யூனிஸ்டுகளைக் கருவறுத்துவிடலாம் என பகல்க் கனவு காண்கிறார்கள் …

 

வரலாறு முடியவில்லை….. தொடரும்…..

 

 

சுபொஅ. 

தொடக்கநிலைக் கேள்வி - பதில் : [ 1]

Posted by அகத்தீ Labels:

 





தொடக்கநிலைக் கேள்வி - பதில் : [ 1]

 

ஐ போணும் அமெரிக்க பயணமும் கம்யூனிஸ்ட்டுகளுக்கு அழகா ?

 

 

கேள்வி [1] :

 

கம்யூனிஸ்ட் என்றால் ஏழையாகத்தான் இருக்க வேண்டுமா? அவர்கள் கம்யூனிஸ்ட் ஊழியர்கள் ஐபோன் (iPhone), பைக் போன்ற நவீனப் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாதா? என்றொருவர் கேள்வி கேட்கிறார்.  இன்னொருவர் கேட்கிறார் , “ ஏகாதிபத்தியம் ஒழிக !” ன்னு கோஷம் போட்டுவிட்டு தம் பிள்ளைகளை அமெரிக்காவுக்கு வேலைக்கு அனுப்பலாமா ? இன்றைக்கு கம்யூனிஸ்ட் அலுவலகமே கணினி மயமாகிறதே சரியா ?

 

பதில் :

 

நான் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பக்கம் நகரத் தொடங்கிய காலத்தில் என் அப்பாவின் நண்பர் கிருஷ்ண மூர்த்தி ஐயர் என்பவர் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார் , “ இவ்வளவு நாள் அந்த கறுப்புச் சட்டைக்காரன் பின்னாடி போய்த் தப்புத்தப்பாக உளறிக் கொண்டிருந்தாய் , இப்போது சிவப்பு சட்டையா ? யோசிக்கவே மாட்டயா ? உங்க மார்ஸும் லெனினும் சூட்டுக் கோட்டுப் போட்டப் பணக்கார வீட்டுப் பிள்ளைக … அவங்க கோமணத்துக்கே வழி இல்லாத தொழிலாளர்களுக்குத் தலைவனா ? “

 

அந்தக் கேள்வி , என்னை உலுக்கியது பதில் தெரியாமல் முழித்தேன் . அதன் பின் பல தோழர்களிடம் உரையாடி அவர் வாழ்ந்த நாட்டின் தட்ப வெப்பத்திற்கு ஏற்ற உடை அது என அறிந்தேன் . அவரிடமும் வாதிட்டேன் .

 

அவர் திதி சாப்பிடுவதைத் தொழிலாகக் கொண்டவர் . என் திருமணம் வரை எனக்கு வேட்டி சட்டை கொடுத்துக்கொண்டே இருப்பார் . எங்கள் அப்பாவுக்கு ஆதரவாக இருப்பார் . ஆனால் என்னிடம் இப்படி குதர்க்கமாக  ஏதேனும் கேட்பார்.

 

 “மேல் சாதியில் பிறந்த காந்தி அரையாடை அணிகிறார் ; தலித்தாகப் பிறந்த அம்பேத்கர் கோட்டு சூட்டு அணிகிறார் .” அவர் இப்படி சொன்ன போது உடன் பதில் சொல்ல முடியாமல் தயங்கினேன் .

 

உயர் சாதியில் பிறந்தவர் மக்களைத் திரட்ட அவர்களைப்போல் தம்மையும் மாற்றிக்கொண்டதும் சரி ; ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த அம்பேத்கர் - தோளில் துண்டு போடக்கூட உரிமை மறுக்கப்பட்ட - வேட்டியைக் கூட முழங்கால் அளவு தூக்கிக் கட்ட நிர்பந்தித்த- சமூகக் கொடுமைகளைச் சந்தித்த சமூகத்தில் பிறந்த அம்பேத்கர் ; கல்வியும் போராட்டமும் நம்மை மனிதனாக்கும் என தம் மக்களுக்கு நம்பிக்கை ஊட்ட கோட்டு சூட்டு அணிந்ததும் அணியச் சொன்னதும் சரியே ! இந்தப் புரிதல் எனக்கு மிகவும் பின்னால்தான் ஏற்பட்டது .

 

இது போன்ற கேள்விகளைக் குதர்க்கமாக வீசி கம்யூனிஸ்டுகளைப் பேசவிடாமல் செய்துவிட்டதாக சிலர் தங்களைத் தாங்களே மெச்சிக் கொள்கிறார்கள் . அவர்கள் மகிழட்டும் ! ஆயினும், உண்மைகளை இளையதலையினருக்குத் தெரிவிப்பது எம் கடன் அல்லவா ?

 

இது போல் ஒரு கேள்வியை தோழர் இஎம்எஸ் அவர்களிடமும் எழுப்பினார்கள் . சிந்தா வார தழில் இக்கேள்வி பதில் இடம் பெற்றிருந்தது . தோழர் பி.ஆர்.பரமேஸ்வரன் தழிழாக்கம் செய்து நூலாகவும் வெளிவந்துள்ளது . அதில் “ அன்றையக் கம்யூனிஸ்டுகள் எளிமையாக உடை அணிந்தனர் .இன்றைய இளைய தலைமுறையினர் மிடுக்காக உடை அணிகின்றனர் ,பைக்,ஸ்கூட்டர் ,கார் எனப் பறக்கின்றனர் . விமானத்தில் பறப்பதை விரும்புகின்றனர் . இதெல்லாம் கம்யூனிஸ எளிமை ஆகுமா ? என்பதே கேள்வியின் சாரம் .

 

அதற்கு தோழர் இ எம் எஸ் பதில் சொன்னார் . இதில் முரண்பாடில்லை . நானும் [ இஎம்எஸ் ] என் போன்றோரும் காந்தியினால் ஈர்க்கப்பட்டவர்கள் .நாங்கள் கம்யூனிஸ்டுகள் ஆன பின்னும்  காந்திய எளிமை எங்களைத் தொடர்ந்தது .  உடை ,உணவு , பயணம் எல்லாவற்றிலும் அது தொடர்ந்தது .அதுதான் உண்மை .

 

“ எல்லோரும் நன்றாக உடுத்த வேண்டும் . நன்றாக உண்ண வேண்டும் . விரைவாக பயணிக்க வேண்டும் .நன்றாகப் படிக்க வேண்டும் . எல்லோருக்கும் வேலை வேண்டும் . எல்லோருக்கும் கல்வி வேண்டும் . எல்லோருக்குக் வீடு வேண்டும் “ என்பதுதான் கம்யூனிசக் கனவே தவிர ; எல்லோரும் அரையாடையோடு அரைப்பட்டினி கிடக்க கம்யூனிஸ்ட்டுகள் ஒரு போதும் சொல்லவில்லை . சொல்லவும் மாட்டார்கள் .

 

இன்றைய தலைமுறை இளைஞர்கள் படித்தவர்கள் . அவர்கள் நன்றாக உடுத்துவதோ உண்பதோ பயணிப்பதோ பிரச்சனையே அல்ல . அவர்கள் யாருக்காகப் போராடுகிறார்கள் என்பதே கேள்வி . உழைக்கும் மக்கள் பக்கமும் ஒடுக்கப்பட்ட மக்கள் பக்கமும் நிற்கிறார்களா என்பதே அளவு கோல்.

நாலு முழம் வேட்டியோடு , காலில் செருப்புப் போடாமல் மதவெறி கலவரத்திற்கு துணை போவதைவிட , மிடுக்காக உடையணிந்து உழைப்பாளி மக்களுக்காகப் போராடுவது நூறு மடங்கு மேலானது அல்லவா ?

 

இதன் பொருள் கம்யூனிஸ்டு ஊழியர்கள் ஆடம்பரமாய் படோடோபமாய் வாழலாம் என்பதல்ல . தங்கள் வருவாய்க்கு உட்பட்டு செயல்பாட்டுகுத் தேவையான வசதிகள் செய்து கொண்டு வாழ வேண்டும் ; அதுவும் நேர்மையான முறையில் வாங்கப்பட்டதாக இருக்க வேண்டும் . கம்யூனிஸ்டு ஊழியர்கள் இப்படித்தான் நேற்றும் வாழ்ந்தனர். இன்றும் வாழ்கின்றனர் .நாளையும் வாழ்வர்.

 

கம்ப்யூட்டர் எதிர்ப்பு போராட்டங்கள் ஒரு காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியது உண்மையே ! நான் பொறுப்பேற்றிருந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் மின்வாரியத்தில் , வங்கியில் கம்யூட்டர் புகுத்தப்பட்டபோது , வேலை வாய்ப்பைப் பறிக்காதே! என்றே போராடினோம் .  மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாத இதழ்  ‘மின் கதிரில்’ அன்றைக்கு இது குறித்து நான் [ சு.பொ.அலி என்ற பெயரில் ] எழுதிய கவிதை பிரசுரமானது . யாராவது கைவசம் வைத்திருந்தால் அனுப்பவும் . இங்கு மறு பதிவு செய்கிறேன் .

 

கம்யூனிஸ்டுகள் நவீனத்துக்கு எதிரியல்ல ; அறிவியல் தத்துவமான மார்க்சியம் ; அறிவியல் கண்டு பிடிப்புகளுக்கு எப்படி எதிரியாக இருக்க முடியும் ? கத்தியின் மீது கோபம் இல்லை .அக்கத்தி காய்கறி பழங்கள் வெட்டப் பயன்படுகிறதா ? அறுவை சிகிட்சைக்கு பயன்படுகிறதா ? . நல்லது .இரண்டும் மானுடத் தேவைதான் .ஆனால் கொலை ஆயுதமாகக் கத்தி மாற்றப்படும் போதுதான் கம்யூனிஸ்டுகள் எதிர்க்கிறோம் . இப்போது செயற்கை நுண்ணறிவு குறித்து பேசும் போதும் இதே அணுகுமுறைதான் .

 

நவீன உலகில் - வீட்டுக்கு வீடு - ஆளுக்கு ஆள் நவீனத் தகவல் தொடர்பு சாதனங்களோடு உலா வருகையில் கம்யூனிஸ்டு ஊழியர்ளும் அதில் ஒரு பகுதியாக அவற்றைக் கற்பதும் கையில் ஏந்துவதும் பயன்படுத்துவதும் சரியே ! சரியே ! ஒதுங்கி இருப்பதுதான் தவறு !

 

எல்லாம் வேதத்தில் இருப்பதாய்ச் சொல்லி சமஸ்கிருத மந்திரத்தில் இந்தியாவை மூழ்கடித்திட சதா கொக்கரிக்கும் காவிகள் இந்த நவீன அறிவியல் கண்டு பிடிப்புகளை பயன்படுத்துவதுதான் நகை முரண் !

 

கம்யூனிஸ்டுகள் வீட்டுப் பிள்ளைகள் வெளிநாட்டில் வேலை செய்யலாமா ? ஏகாதிபத்தியம் என முழங்கிவிட்டு அங்கு போய் உழைக்கலாமா ? இப்படி என்னை நோக்கியும் கேள்வி வீசப்பட்டது உண்டு .

 

நான் பலமுறை சொல்லிவிட்டேன் . இப்போது சுருக்கமான நினைவூட்டல் . கம்யூனிஸ்டுகள் சர்வதேசவாதிகள் . எந்த நாட்டு மக்களுக்கும் எதிரி அல்ல . ஆட்சியாளர்களின் அரசியல் பொருளாதாரப் பண்பாட்டு ஆதிக்கக் கொள்கைக்குத்தான் எதிரி . அமெரிக்காவிலும் ஜப்பானிலும் இடதுசாரி மேயர்கள் வெற்றி பெற்றதும் உண்டு .

 

வெளிநாட்டுக்குப் படிக்கவும் வேலைசெய்யவும் மேல்தட்டு வீட்டுப் பிள்ளைகள் மட்டும்தான் போக வேண்டும் என்பது ஆதிக்க வெறிதான் . எல்லா பிள்ளைகளும் போகலாம் .எம் வீட்டுப் பிள்ளைகளும் போகலாம் .கம்யூனிஸ்ட் வீட்டுப் பிள்ளைகளும் போகலாம் . பிழையில்லை . அதுதான் சமூகநீதியும் சமநீதியும்

எங்கு போனாலும் அவர்கள் உலக சமாதனத்திற்கும் ஒருமைப்பாட்டிற்கும் நிற்கிறார்களா அல்லது போர்வெறிக்கும் பகைமை வெறிக்கும் இரையாகி நிற்கிறார்களா என்பதுதான் கேள்வி .

முதலாளித்துவத்தை எதிர்க்கிறோம் என்பதால் முதலாளிகளிடம் வேலை செய்யக்கூடாது எனச் சொல்ல முடியுமா ? நிலபிரபுத்துவத்தை எதிர்க்கிறோம் என்பதற்காக நிலத்தில் இறங்கி வேலை செய்யாமல் இருக்க முடியுமா ? ஊரில் நிலவும் சாதி ஆதிக்கத்தை எதிர்ப்பதால் அந்த ஊரிலேயே இருக்கக்கூடாது என சொல்ல முடியுமா ?

 

ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பது வேறு உலகெங்கும் சென்று கல்வி கற்று வேலை செய்து பிழைப்பது என்பது வேறு . எங்கு சென்றாலும் தம் உழைப்பை விற்றுத்தானே வாழ்கிறார்கள் . உள்ளூரில் தக்க கல்வியும் வேலையும் கிடைக்காத போது அதனைத்தேடி வெளி ஊர்களுக்கும் வெளி மாநிலங்களுக்கும் வெளிநாட்டுக்கும் போவதில் தப்பே இல்லை . உள்ளூரில் இவற்றைத் தர முடியாத அரசுதான் குற்றவாளியே தவிர போகிறவரோ அவர் குடும்பமோ அல்ல .

இன்றைக்கு வர்க்கப் போருக்கான - வர்ண ஆதிக்க எதிர்ப்புப் போருக்கான கருத்துக் களத்தை ; அனைத்து மட்டத்திலும் ,அனைத்து துறையிலும், அனைத்து வழிகளிலும், அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி முன்னெடுப்பதே சரியான வியூகம் ஆகும் .

 

“ புரட்சி என்பது எல்லோருக்கும் எல்லாவற்றுக்கும்  எதிரான கண்மூடிக் கலகம் என்றோ ; எல்லாவற்றையும் அழிக்கும் அராஜகம் என்றோ ; மார்க்சியவாதிகள் ஒரு போதும் எண்ணவில்லை . புரட்சி என்பது எல்லாவித சுரண்டலையும் , சமுதாயம் மற்றும் நாட்டின் ஒடுக்குமுறையின் எல்லா வடிவங்களையும் ஒழிப்பதற்கான போராட்டமாகும் . அறிவியல் ,தொழில்நுட்பம் ,பண்பாடு ஆகியவற்றின் கப்பெரிய சாதனைகள் அனைத்தும்  உழைப்பாளி மக்களின் உயர்வுக்குத் தொண்டாற்ற வேண்டும் .அவர்களுடைய வாழ்வை அதிகச் சுவையும் அதிகப் பொருளும் உடையதாக்க வேண்டும் என்பதற்கான போராட்டமே புரட்சி . சோவியத் புரட்சியின் வீரிய வெற்றி அது . ஆம் ! போர்க்களத்தில் இரத்தமும் வியர்வையும் சிந்தி ஈட்டியது மட்டுமல்ல ; சமூக வாழ்க்கை முழுவதையும் மனித நேயமிக்கதாய் மாற்றி அமைத்திட இடைவிடாது தொடர்ந்த முயற்சியுமாகும் .”  [ புரட்சியில் இளஞர்கள் எனும் புத்தகத்திலிருந்து ....]

 

சு.பொ.அகத்தியலிங்கம் .

29/08/26.

 

குறிப்பு : ஒவ்வொரு சனிக்கிழமையும் கேள்வி -பதில் வெளிவரும் . நீங்களும் கேள்விகளை அனுப்பலாம்.