இரங்கற் குறிப்புகளில்

Posted by அகத்தீ Labels:

 

இரங்கற் குறிப்புகளில்

சொல்லப்படுபவை  எல்லாம்

உண்மைதானேன்று

இறந்தவரா சாட்சி சொல்லுவார்

 

அஞ்சலி உரைகளில்

உள்ளொன்று வைத்து

புறமொன்று பேசப்படவில்லை என

மரித்தவரா மறுமொழி சொல்லப்போகிறார்

 

நினைவுகூரும் சடங்குகளில்

வரலாறு திரிக்கப்படவில்லை என

வாக்குமூலம் தந்திட இறந்தவர்

மீண்டும் வரவா போகிறார் ?

 

மேடைகளில் சொல்லப்படும்

இறந்தவர் பெருமைகள்

பெரும்பாலும் கட்டுக்கதைகளாய்

சிறுத்துப் போனது எப்படி ?

 

நான் கேட்டுக்கொண்டிருந்த போது

இடைமறித்த இறந்தவர்,

 வாழும் போது மட்டும் புகழ்கையில்

உண்மையா பொங்கி வழிகிறது?” 

 

இருப்பவரோ இறந்தவரோ

அவரவர் தேவைக்கு

கூட்டியும் குறைத்தும்

கதை கட்டவேண்டியதுதான் .

 

ஆனாலும் 

அடுத்தவரால் நெய்யப்படும்

வாழ்க்கைக் கதையைவிட

சுயவரலாற்றில் பொய் குறைந்து

உண்மை கொஞ்சம் நெருங்குமல்லவா ?

 

[ சமூக வலைதளங்களில் பட்டி மன்ற பேச்சாளர்களும் ரீல்ஸ் பிரியர்களும் அவிழ்ந்துவிடுகிற பொய் மூட்டைகளுக்கு எதிர்வினையே இது . ]

 

சுபொஅ.

 

0 comments :

Post a Comment