மூளை வளர எதைச் சாப்பிடலாம்… ????
நேற்று எங்க வீட்டில் மஞ்சள் பூசனிக்காய் என இன்றைக்கு சொல்லப்படும் கல்யாண பூசனிக்காய் கூட்டு .
அதை ருசிச்சு சாப்பிடும் போது ஏதேதோ நினைவுத் திரையில் ஓடியது .
பெங்களூர் வந்த போது எலக்ட்ரானிக் சிட்டி நீலாத்திரி நகரில் என்னோடு தினசரி நடை பயிற்சிக்கு வந்த நண்பர்கள் நினைவுக்கு வந்தனர் .
குசேலர் ,கான் பாய் , பரமேஸ்வரன் மூவரும் விடை பெற்றுவிட்டனர் .நான் பொம்மசந்திராவுக்கு குடிபெயர்ந்துவிட்டேன். பல்வந்த ராவ் உடல் நலிவுற்றுவிட்டார் . சுப்பிரமணியம் ,பானர்ஜி இருவரும் என்னைப் போல் இடம் மாறிவிட்டனர் .நான் இங்கும் துரைசாமி அங்கு அடுக்கக மொட்டைமாடியிலும் நடை பயிற்சி செய்கிறோம் .அலைபேசியில் பேசிக்கொள்கிறோம் .எப்போதாவது சந்திக்கிறோம்..
ஒரு முறை நடை பயிற்சி முடித்து வரும் போது ,மஞ்சள் பூசனிக்காய் வாங்கிக் கொண்டு திரும்பிய மறைந்த அன்பர் பரமேஸ்வரன் சொன்னார் ,
“ பாலக்காட்டு ஐயர்களுக்கு மூளை ஜாஸ்தி .ஏன்னு சொன்னா அவங்க நிறைய மஞ்சப் பூசனிக்காய் சாப்பிடுவாங்க…”
அப்போது அவரோடு நானும் துரைசாமியும் பல்வந்தராவும் வாதிட்டது நினைவுக்கு வந்தது . ஏனைய நண்பர்கள் உடன் சேர்ந்தனர்.
“ எங்க ஊர்ல வெண்டைக்காய் அதிகம் சாப்பிட்டால் மூளைக்கு நல்லதுன்னு சொல்வாங்க ….”
”மயிலாப்பூர் போனால் புடலங்காய் வாங்காத பார்ப்பனரையே பார்க்க முடியாது …. அங்கே புடலங்காய் மூளைக்கு நல்லதுன்னு சொல்வாங்க… ”
“ஞாபக சக்திக்கு வல்லாரை லேகியம் … அஸ்வகந்தா லேகிய எல்லாம் கேள்விப்படிருக்கோம்…”
“எது மூளை பலத்தை கூட்டும் ? மஞ்சள் பூசனியா ? வெண்டைக்காயா ? புடலங்காயா ? வல்லாரையா ? எது?”
“அட ! குண்டூசியில் இருந்து வானொலி , தொலைகாட்சி , ராக்கெட் , கம்யூட்டர் எல்லாமே கண்டு பிடிச்சது மாட்டுக்கறி சாப்பிடுகிறவங்கதான் … ”
“அப்போ மாட்டுக்கறிதான் மூளைக்கு பலமா ?”
“ஒவ்வொருவரும் அவரவர் துறையில் விபரமானவர்களே …”
அந்த விவாதம் அப்படி நீண்டதும் பரமேஸ்வரன் சொன்னார் , “ ஆளுக்கொண்ணு சொல்லலாம் .ஆனால் எல்லாருக்கும் மூளை இருக்கு சார் ! அதை பயன்படுத்துறதிலதான் வித்தியாசம் இருக்கு !”
ஆக ,அவர் உண்மையை மிகவும் நெருங்கிவிட்டார்.
ஆம் .மூளை எல்லோருக்கும் கிட்டத்தட்ட ஒரே அளவுதான் . தொடர் பயிற்சிதான் உங்களை கூர்மையாக்கும் . தொட்டனைத்து ஊறும் மணற்கேனியே மூளை.
“சரி ! கிட்னி , உடல் உறுப்பு மாற்று சிகிட்சை போல் மூளை மாற்று சிகிச்சை வருமானால் ….. நம்ம மூளைக்கு அதிகபட்ச விலை கிடைக்கும்” என்றார் பல்வந்த ராவ் .
“ஏன்?” என நாங்கள் கேட்க .
” பயன்படுத்தாமல் ப்ரெஸ்ஸா இருப்பது நம்ம மூளைதானே!” என்றார் .
“ஹா ஹா” என எல்லோரும் சிரித்து விடை பெற்றோம்.
மஞ்சள் பூசனிக்காய் கிளறிய ஞாபங்கள் இவை.
23/8/24.
0 comments :
Post a Comment