சாதி மறுப்புத் திருமணங்களும் கம்யூனிஸ்டுகளும் …
சாதி மறுப்புத் திருமணங்களுக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் ஆன உறவு இன்று நேற்று உருவானதல்ல ; கட்சி தொடங்கிய காலம் தொட்டு அது கம்யூனிஸ்ட் கட்சியில் இயல்பானதாக இருந்து வந்த ஒன்றே .
இதை நான் சொல்லக் காரணம் “ சாதிமறுப்புத் திருமணங்களுக்கு சிபிஎம் கட்சி அலுவலக வாசல் எப்போதும் திறந்தே இருக்கும் “ என கட்சியின் மாநிலச் செயலாளர் ப.சண்முகம் கூறியதை எதிர்த்தும் ஆதரித்தும் பலர் கருத்து சொல்கின்றனர் .
எதிர்ப்பவர்கள் யார் என்பதை விளக்கத் தேவை இல்லை . ஆனால் ஆதரிப்போர் சிலர் சிபிஎம் இப்போதுதான் சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிப்பதாகவும் , தாங்கள் மட்டுமே பல்லாண்டுகளாக இப்பணியைச் செய்து வந்ததாகவும் பதிவு போடுகின்றனர் .இந்த நட்பு முரண்பாட்டிற்கு விளக்கம்தான் இந்தப் பதிவு .
தோழர் கே டி கே தங்கமணி , ஆர் நல்லகண்ணு , உமாநாத் , என்.சங்கரய்யா ,பி.ராமமூர்த்தி , ஷாஜாஜி கோவிந்தராஜன் , மைதிலி சிவராமன் ,உ.ரா.வரதராசன் , வாசுகி , பாலகிருஷ்ணன் , ப,சண்முகம் என காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் பட்டியல் போடத் துவங்கினால் பல நூறு பக்கங்கள் தேவைப்படும் . தோழர் என் சங்கரய்யா ஒவ்வொரு மேடையிலும் காதல் திருமணங்களுக்கு பகிரங்கமாக ஊக்கம் தருவார் .அது மட்டுமல்ல ’தன் சகோதரிகளின் காதல் திருமணத்திற்காக வீட்டில் போராடுக’ என வாலிபர் சங்க மாநாட்டில் அழைப்பு விடுத்தவர் என்.சங்கரய்யா . அவர் குடும்பம் சாதி மதங்களின் சங்கமம் .
நான் வாலிபர் சங்கச் செயலாளராக இருந்த போது டெல்லியில் ஓர் நிகழ்வில் மூத்த தோழர் பசவபுன்னையாவோடு தோழர்கள் கலந்துரையாடிக் கொண்டிருந்தபோது பீஹார் தோழர் ஒருவர் தாங்கள் ஒரு காதல் திருமணத்தை சாதிமறுப்பு திருமணத்தை நடத்தி வைத்ததை பெருமையோடு குறிப்பிட்டார்கள் .அப்போது தமிழ்நாடு ,கேரள தோழர்கள் இதெல்லாம் நாங்கள் தொடர்ந்து செய்வதுதானே இதை முன்னுதாரணமாகச் சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்று கேட்டோம் . அப்போது குறுக்கிட்ட தோழர் பசவபுன்னையா , “ தமிழ்நாடு கேரளாவில் சமூகசீர்திருத்தம் ஓரளவு நடந்துள்ளது ஆகவே இது புதுமையாகத் தோன்றாமல் இருக்கலாம் . பீஹார் ,உ.பி போன்ற மாநிலங்களில் இப்படிப்பட்ட திருமணங்கள் சவால்தான் .வாலிபர் சங்க செயல்பாட்டில் இத்தகைய திருமணங்களை ஊக்குவிப்பது மிக முக்கியம் . இந்துத்துவா தலை எடுக்கும் காலம் இது .ஆகவே வருங்காலத்தில் தமிழ்நாட்டிலும் இது முக்கிய கடமையாகும். வாலிபர் சங்கம் தம் கடமையில் இதையும் ஒன்றாகக் கொள்க” என்றார் .
நான் என் அனுபவத்தைச் சொல்லுகிறேன் . நாங்கள் சென்னையில் வாலிபர் சங்கத்தை துவக்கிய போது சந்தித்த முக்கிய பிரச்சனைகளில் காதல் திருமணமும் ஒன்று . அப்போது மாவட்டத் தலைவர்களாகத் திகழ்ந்த தோழர்கள் பி.ஆர்.பரமேஸ்வரன் , வி.பி.சிந்தன் , வே.மீனாட்சிசுந்தரம் ,கே.எம்,ஹரிபட் , மைதிலிசிவராமன் ,உ.ரா.வரதராஜன் ,தலைமையில் சென்னை மாவட்டக்குழு அலுவலகத்தில் சாதிமறுப்புத் திருமணங்கள் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கும் . அதில் பெரும்பாலோர் கட்சி உறுப்பினரகவோ கட்சி ஆதரவாளராகவோ கூட இருக்க மாட்டார்கள் ,கட்சித் தோழர்களின் நண்பர்களாக உறவினர்களாக பிரச்சனையோடு வருவார்கள் . கட்சி ஆதரவுக் கரம் நீட்டும். .எனக்குத் தெரியும் காதல் திருமணங்களுக்கு எதிராக கட்சிக்குள் யாராவது முணுமுணுத்தால் தோழர்கள் தோழர்கள் பி.ஆர்.பியும் விபிசியும் ,மீனாட்சிசுந்தரமும் ,மைதிலிசிவராமனும் அதை சீரியஸான பிரச்சனையாகப் பார்த்து உடனே தலையிட்டு சீர் செய்வார்கள் . காதல் திருமணத்தை எதிர்த்த ஒரிரு தோழர்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளானதும் உண்டு . நாங்கள் நடத்திவைத்த காதல் திருமணங்களில் நூற்றுக்கு தொண்ணூறு வெற்றிகரமான வாழ்வையே தந்தன . தோற்றவை மிக சொற்பம் . ஏற்பாட்டு திருமணங்களிலும் வென்றதும் தோற்றதும் இருக்கத்தானே செய்யும் .
நான் என் பொதுவாழ்வில் முதல்முறை ஓர் இரவு முழுவதும் போலிஸ் ஸ்டேஷனில் இருந்தது ஒரு காதல் திருமணத்தால்தான் . ஆம் .பின்னாளில் கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளராக இருந்த தோழர் சேகர் – கீதா காதல் திருமணத்தை நானும் என் நண்பர்களும் நடத்தி வைத்திட , கீதாவின் வீட்டார் புகார் கொடுக்க போலீஸ் எங்களை கைது செய்து போலீஸ் காவலில் வைத்தது . தோழர் உ.ரா.வரதராஜன் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி புகாரை திரும்பப் பெறச் செய்து திருமணத்துக்கு ஒப்புதல் பெற்றார் . அதன் பின் நான் செய்துவைத்த காதல் திருமணங்களுக்கு கணக்கில்லை .நிறைய . அப்படி திருமணம் செய்தவர் பிள்ளைகளுக்கும் திருமணம் செய்து வைத்துள்ளேன் .
நான் வாலிபர் சங்க மாநிலச் செயலாளராக செயல்பட்ட காலத்திலும் தீக்கதிரில் செயல்பட்ட காலத்திலும் நான் நடத்திவைத்த காதல் திருமணங்கள் ஏராளம் . என் மகன் ,மகள் திருமணங்கள் மட்டுமல்ல ; எங்கள் குடும்பத்திலும் பல நடத்தி வைத்துள்ளேன் . என் குடும்பத்தில் எல்லா சாதி மதங்களும் சங்கமம் .
இப்படி நிறைய குடும்பங்கள் எம் கட்சியில் உண்டு . தற்போது ஆணவப் படுகொலைகள் நடந்துவரும் சூழலில் எம் செயலாளர் தோழர் சண்முகம் சாதி மறுப்பு காதல் திருமணங்களுக்கு ஊக்கம் தரும் வகையில் பேசியது எம் வரலாற்றில் தொடர்ச்சியே . புதிதல்ல . எம் வரலாற்று வேர்அது .
ஆதலினால் காதல் செய்வீர் !
சுபொஅ.
0 comments :
Post a Comment