ஒரு ரோஜாப் பூவின் ஆசை ….
சு.பொ,அகத்தியலிங்கம்.
*
டிசம்பர் .25
கீழ்வெண்மணி கிராமத்தை நோக்கி செல்லும் ஒடுங்கிய சாலை என்றுமில்லா வனப்புடன் எடுப்பாக பளிச்சிடுகிறது.
எங்கோ தொலை தூரத்தில் குளம்படிச் சத்தம் உற்றுக் கேட்கிறேன்.
மனிதர்கள் கூட்டம் கூட்டமாகப் பட்டாள நடைபோட்டு, படை நடைப் பாட்டுடன் அணிவகுத்து வருகிறார்கள். அந்த சத்தம் தான்…
என் காதுகளை கூர்மைப் படுத்துகிறேன். கண்களால் எதையோ தொலைத்துவிட்டவன் போல் துளாவுகிறேன்….
*
அதோ! அந்த சாலை நடுவில் ஒரு சிவப்பு ரோஜா உற்சாகமாய் கும்மாளமாய் உரக்கச் சிரித்துக் கொண்டிருக்கிறது.
“அய்யோ! அந்த மெல்லிய ரோஜா, மனிதர்களின் காலடியில் நசுங்கிப் போய்விடக்கூடுமே!” என இதயம் தந்தியடிக்கிறது. கை பரபரக்கிறது. ஓடிப்போய் ரோஜாவைத் தூக்குகிறேன்.
அந்த ரோஜாவின் சிரிப்பு எங்கோ தொலைந்துவிட்டது. அதன் இதழ் சிகப்பு மேலும் கடுமையாகிறது. என்னை முறைத்துப் பார்க்கிறது.
“என்ன ரோஜா! ரொம்ப கோபப்படுகிறாய்? நீ மனிதர்களின் காலடியில் நசுங்கிப் போய் விடக்கூடாது என்பதற்காகத் தானே உன்னைத் தூக்கினேன் இதற்குப் போய்க் கோபமா?
*
“ஆம், கோபம் தான். உன் சட்டைப் பொத்தானில் அலங்காரமாய் இருப்பதில் எனக்கு பெருமையே இல்லை.”
“நீ! ஏன்ன சொல்கிறாய்?”
“ நான் கோவில்களின் அர்ச்சனைப் பொருளாய் இருந்திருக்கிறேன். ஆனால் எனக்கு மகிழ்ச்சி இல்லை.”
“என்ன? தெய்வத்தின் சன்னதியில் கூட சந்தோசம் இல்லையா?”
“இல்லவே, இல்லை..”.
“மண மக்களின் தோள்களை அலங்கரித்திருக்கிறேன். அப்போது கூட, எனக்குப் பூரண திருப்தி ஏற்பட்டதில்லை...”
“மெய்யாகவா? விசித்திரமாக இருக்கிறதே உன்போக்கு”
“தலைவர்களின் தோள்களில் தொங்க விடப்பட்ட போது ; பிணத்துக்குள் விழுந்த ஈயைப் போல் அசுகைப்பட்டிருக்கிறேன்.”
*
“சரி உனக்கு ஆசைதான் என்ன? அதையாவது சொல்லிவிடு”
“நாட்டிற்காகவும்-மக்களுக்காவும் தொண்டாற்றுகிறார்களே அவர்களின் கல்லறையில் தூவப்படும்போது…
” மக்களுக்காக உழைப்பவர்கள் காலடியில் மிதிபடும் போது,,,”
ராமர் காலடிபட்டு விமோசனம் பெற்ற அகலியைப் போல் மனம் குதூகாலிகிறது. அதிலிருக்கும் இன்பம் வேறு எதிலும் இல்லை.”
*
“அது சரி!சற்று முன் சாலையில் ஏன் சிரித்துக் கொண்டிருந்தாய்?”
“ஓ! அதுவா!”
ரோஜாவின் முகத்தில் துக்கம், ஆனந்தம்.. கோபம்… எல்லாம் ஒருங்கே கொப்பளிக்க ரோஜா ஆவேசத்துடன் பேசியது.
“1968ல் அரைப் படி நெல் கூலி அதிகம் கேட்டார்கள், தங்கள் ஆதிக்கத்தை ஏற்க மறுத்தார்கள் என்கிற ஒரே காரணத்திற்காக.
44 மனித உயிர்களை,
ஆண்களை,
பெண்களை,
குழந்தைகளை,
சமூகரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் தாழ்த்தப்பட்ட ஏழை விவசாயத் தொழிலாளிகளை…
நீச நிலபிரபுக்கள் காவல்துறையின் சுற்றுக் காவலோடு உயிரோடு எரித்த கொடுமை…
செங்கொடி பிடித்தார்கள் என்பதற்காக துள்ளத் துடிக்க உயிரோடு எரிக்கப்பட்ட மனிதர்களுக்காக…
அஞ்சலி தெரிவிக்க… அதோ எனது தலைவர்கள், தோழர்கள், மக்கள் தொண்டர்கள், விவசாயக் கூலிகள் வருகிறார்கள்…
ஏன்னை சீக்கிரம் விடு! அவர்கள் வரும் பாதையில் விழுந்து கிடக்கிறேன்! அவர்களின் காலை முத்தமிடுகிறேன்”
*
கண்கள் பனிக்க
ரோஜாவை வீதியில் விட்டேன்!
நானும் அப்படி ஒரு ரோஜாவாக மாறிவிட முடியாதா?
[ 1987 ஆம் ஆண்டு dyfi இளைஞர் முழக்கத்தில் வெளிவந்தது ]
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment