Pages

Thursday, 17 July 2025

உதிரிலைகளில் மீந்த பச்சையம்

 





கவிஞர் .பழ.புகழேந்தியின் “ உதிரிலைகளில் மீந்த பச்சையம்” கவிதைத் தொகுப்பு குறித்து பொன்.குமார் எழுதிய நூலறிமுகத்தை  இரண்டு நாட்களுக்கு முன் இங்கு பகிர்ந்திருந்தேன். அன்றே கவிஞருக்கும் குறும் அஞ்சல் அனுப்பி இருந்தேன். உடனே நூலை அனுப்பி விட்டார் . நேற்றே கிடைத்து விட்டது . நான் வாசித்து நெகிழ்ந்தேன் . என் இணையரும் வாசித்துவிட்டார் .

 

“யதார்த்த வாழ்க்கையின் இயல்பை தத்துரூபமாக எழுதி இருக்கிறார் ,ஆயின் வாசிக்க வாசிக்கப் பயம் தொற்றிக் கொள்கிறது …” என்றார் என் இணையர் .

 

இதனை எதிர்பார்த்துத்தான் முன்னுரையில் பழ.புகழேந்தி எழுதியிருக்கிறார் ,” பெரும்பாலானவர்கள் ‘அழவைக்கிறீர்கள்’ என்றார்கள்.சிலர் ‘அச்சமூட்டுகிறீர்கள்’ என்றார்கள் . இரண்டுமே உண்மையாகக் கூட இருக்கட்டும் . நான் எழுதியதின் நோக்கம் அழவைக்கவோ ,அச்சமூட்டவோ அல்ல. வாசித்து முடித்தபின் ,முதியோர்களைக் கைவிடக்கூடாது என்று மூளையின் ஓரத்தில் ஓர் அக்கறையை ஏற்படுத்தினால் போதும்.”

 

புகழேந்தி எழுத்தின் வீரியமும் அக்கறையும் அதை நோக்கி நகர்த்தின் மகிழ்ச்சியே . ஆயின் வாழ்க்கைச்  சூழல் பெற்றோரைப் பிரிந்து வெகுதூரம் பிழைப்பு நிமித்தம் பிள்ளைகளை விரட்டிவிடுகிறதே! ” முதுமை “ வரமா ? சாபமா ?” எனும் சிறு நூலில் இது குறித்து நான் விவாதித்திருக்கிறேன் .  “முதியோர் இல்லங்கள்” காலத்தின் கட்டாயத் தேவை என்பது என் கருத்து .

 

இந்நூல் பேசுபொருள் முதுமைக் காதல் குறித்தல்லவா ? அதில் வெற்றி பெற்றுள்ளது . புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் முதியோர் காதலை டார்ச் லைட்டாகக் கையில் பிடித்துக் கொண்டு இந்நூலில் பயணித்திருப்பதாய் நூலாசிரியர் சொல்வது மிகை அல்ல.

 

முதுமையில் தோன்றும் கசடுகளற்ற காதல் குறித்து நூலின் ஒவ்வொரு காட்சியும் விரிகிறது . வாசலில் நிற்கும் மரணமும் படுக்கையில் இருக்கும் நோயும் வாழ்வின் வலியும் நூல் நெடுக விரிகிறது . ஏதேனும் ஒரு கவிதையை சுட்டிச் செல்லலாம் எனில் எல்லா கவிதைகளும் போட்டி போடுகின்றன .

 

“ அதிகாரம்தான் செலுத்தியிருக்கிறேன்

உன்னிடம்

முதல் முறையாகக் கெஞ்சுகிறேன்.

போவதெனில்

என்னையும் கூட்டிப் போயேன்.”

 

இருவரும் ஒன்றாய் போக முடியாது . யாரேனும் ஒருவர் முந்தித்தான் ஆக வேண்டும் . இது இயற்கை .ஆயினும்..

 

“நிச்சயமற்ற நாளையை

போர்த்துக் கொண்டுதான்

உறங்குகிறோம்.

 

அப்படியே கண்மூடி விடுவதில்

எந்தச் சிக்கலும் இல்லை.

 

போர்வையை விலக்கி எழப்போவது

நீயா ? நானா ?

என்கிற சந்தேகம்தான்

படுத்துகிறது பெரிதாய்.”

 

பல கவிதைகள் இதனைச் சுற்றியே உள்ளன . வாழ்வின் யதார்த்தம்தான் . ஆனால் அந்த நிச்சயமற்ற வேளையில்தாம்  முதுமையில் காதல் மெய்யாய் கனிகிறதோ?

 

“உலர்ந்து விட்ட

நம் உதடுகளில்

இன்னமும் மிச்சமிருக்கின்றன

நமக்கான முத்தங்கள் .

 

அத்தனை பரிசுத்தமாய் இருக்கும்

அவற்றில்

எச்சில் வாடையும் இல்லை

இப்போது .”

 

என்கிறார் . இன்னொரு இடத்தில்

 

“ நம் தோல்கள்

முற்றிலுமாகச் சுருங்கத் தொடங்கிய பிறகு

நம் காதல்

தன்னைத் தானே

சரி செய்து கொண்டு விட்டிருந்தது .”

 

இன்னும் சொல்கிறார்…

 

“இதயம் நின்று போகும்

அந்த கடைசி நாளில்

நீ மட்டும்தான் இருப்பாய்

மூளையின் மூலை எங்கும்.

கண் முன்னாலும் இருக்க வேண்டும்

என்கிற கவலைதான்

இப்போதெனக்கு .”

 

காதலும் காமமும் முதுமையில் வற்றிவிடுவதில்லை  பக்குவமடைகின்றன என்பது என் கருத்து . ஆயின் நெடுங்காலமாய் வயசாயிடிச்சு  ‘இன்னும் என்ன வேண்டிகிடக்கு’என அங்கலாய்க்கும் பொதுபுத்தி இங்கு நீடிக்கிறது .மேற்கத்திய சமூகத்தில் அப்படி இல்லை . இந்த பொது புத்தியை மாற்ற இன்னும் ஏராளமான முதுமைக் காதல் இலக்கியங்கள் வரவேண்டும் என்பது என் கருத்து மட்டுமல்ல வேண்டுகோளும்கூட.

 

இந்த முதுமையின் தவிப்பை ,ஏக்கத்தை , ஆசையை , அன்பை …. இளைய காதலர்களே ! கொஞ்சம் உள் வாங்குங்கள். ஆதிக்கமற்ற அதிகாரம் செலுத்தாத அன்பும் காதலும் உங்களிடம் இப்போதே முகிழ்க்கட்டும் ! அதுவே இந்நூலின் வெற்றியாய் அமையட்டும் .

 

நூலின் அச்சுக்கோர்ப்பும் வடிவமைப்பும் முகப்பும் படங்களும் ஈர்க்கின்றன.

 

உதிரிலைகளில் மீந்த பச்சையம், பழ.புகழேந்தி ,

மெளவல் பதிப்பகம் ,  nfayha@gmail.com  , mouvalpathipagam@gmail.com

97877 09687 , 94888 40898,    பக்கங்கள்: 96  , விலை : ரூ.130 /

 

சு.பொ.அ.

17/07/25.

 

 


No comments:

Post a Comment