Pages
▼
Wednesday, 11 May 2022
உரைச் சித்திரம் : 9
உரைச் சித்திரம் : 9
இசையும் அன்பும் இயற்கையோடு …
அந்த காட்டில் இயற்கை ஓர் இசைக் கச்சேரியையே நடத்திக் கொண்டிருக்கிறது …
அதோ ! புல்லாங்குழலின் மென்மையான இசை நெஞ்சை வருடுகின்றதா ? அது வேறொன்றுமில்லை . அசைந்தாடும் மூங்கிலை வண்டுகள் துளைத்துவிட்டன .அந்தத் துளையில் காற்று புகுந்து வெளியேறுகிற ஓசையே இசையாகிறது .
அதோ ! தேர்ந்த கலைஞர்கள் ஏராளமான மத்தளங்களை கேட்பவர் தாளமிட வாசிக்கின்றனர் . அதுவா ? வேறொன்றுமில்லை . அருவி மேலிருந்து கீழே ஒசை நயத்தோடும் தாள லயத்தோடும் கொட்டும் இன்னொலிதான் அது.
இதோ !யானைத் தும்பிக்கை போல் வளைந்த - நாதஸ்வர வகை சார்ந்த இசைக்கருவி பெருவங்கியத்தின் உரத்த அழுத்தமான இசை காற்றில் மிதந்து வருகிறதே ! அதுவா ? வேறொன்றுமில்லை ,கலைமான்கள் கூட்டமாக குரல் எழுப்புகிறது ; தாள லயத்தோடு அக்குரல் இசையாய் மிதந்து வருகிறது .
இதயத்தை வருடும் யாழின் இசை காதில் தேனாய்ப் பாய்கிறது . அதுவும் வேறொன்றுமில்லை .பூக்களைச் சுற்றி ரீங்காரமிடுகிறது வண்டுகள் .அந்த ரீங்காரமே யாழின் இசையென நெஞ்சை குளிர்விக்கிறது .
இந்த அற்புதமான இசைக் கச்சேரியில் மந்திக்கூட்டம் மயங்கி நிற்கிறது . அடர்ந்த மூங்கில் தோப்பருகே மயிலொன்று தோகை விரித்து ஆடுகிறது .இசை கேட்டு விறலியர் நாட்டியப் பெண்கள் நடனமாடுவதுபோல் இருக்கிறது .
இவ்வளவு அற்புதமாக எழில் கொஞ்சும் சேர நாட்டில் . தன் அகன்ற மார்பில் மாலை சூடிய சேரமன்னர் ,தன் கூர்மையான அம்பை யானை மீது ஏவுகிறார் .அந்த யானை காயத்தோடு பிழிறிக்கொண்டே வனத்தில் செல்கிறது .
அந்த யானையைப் பார்த்தீரா பார்த்தீரா எனக் கேட்டுக்கொண்டே மன்னர் வருகிறார் .தினைப் புனத்தில் வாயில் அருகிலும் நின்று கேட்டார் .
“ ஆம் ,எல்லோரிடமும்தான் கேட்டார் .ஆயின் அவரைப் பார்த்ததும் காதல் கொண்டு மயக்கத்தில் தோள் மெலிந்து நான் மட்டும் துவண்டு கிடப்பதேன் ?” எனத் தோழியிடம் நாயகி கேட்டாளாம்.
இப்படி ஒரு அற்புத இயற்கை காதல் சித்திரத்தை அகநானூறில் வரைந்து காட்டி இருக்கிறார் கபிலர் .
கிட்டத்தட்ட இது போன்றதொரு எழில் காட்சியினை கம்பரும் வரைந்து காட்டியிருப்பார் .
சோலைகளில் தோகை விரித்து மயில்கள் ஆடிக்கொண்டிருந்தன , விளக்குகளை ஏந்தி ஓர் மங்கை நிற்பது போல் தாமரை மலர்கள் பூத்துக் குலுங்கின, மழை மேகங்கள் மத்தளம் போலொலித்தன , குவளைக் கொடிகளின் மலர்கள் அழகிய கண்ணென விழித்துப் பார்த்தன, நீர்நிலைகள் தம் அலைகளையே திரைச்சீலையாய் விரித்து காட்டின , தேனொத்த மகர யாழிசை போன்று வண்டுகள் இனிது பாடின, அங்கே மருத நாயகி வீறு தோன்ற அமர்ந்திருப்பது போன்றிருந்தது மருத நிலம் என்பார் கம்பரும் .…
அகநானூற்றிலிருந்து ஒரு பெரும் சித்திரம் இதோ ,
ஒரு காட்சி : அது ஏரியா கடலா என பார்ப்பவர் வியப்பர் ? அவ்வளவு பரந்த ஏரிக்கரையில் ஓமைமரம் அடர்ந்து வளர்ந்திருக்கிறது .மரப்பட்டைகள் முதலைத் தோல் போல் கனத்து இருக்கும். கிளைகள் கருத்து விரிந்திருக்கிறது . அக்கிளையில் ஆந்தை ஒன்று குஞ்சு பொரித்திருந்தது . அப்போதுதான் வெளிவந்த குஞ்சுகளை தாய் ஆந்தை பேணி வந்தது . ஆந்தையின் இணை பொறுப்போடு வெளியே சென்று இரைதேடிக் கொணர்ந்து தன் இணைக்கும் குஞ்சுகளுக்கும் கொடுத்து மகிழ்ந்தது .
இன்னொரு காட்சி : நெருப்பைப்போல் சிவந்த நீண்ட செவியினை உடைய எருவை சேவல், பனங்கிழங்கைப் போன்ற தன் கால்களை கொண்டு மேட்டினை கிளறிக்கொண்டிருந்தது . விரும்பிய இரை கண்டவுடன், உற்சாகம் பீறிட கொத்தி விழுங்கி விட்டு மகிழ்ச்சியோடு கூவிக்கொண்டும் ஆடிக்கொண்டும் மலை உச்சியை நோக்கி ஓடியது .அந்த மலை உச்சியோ வானை உரசுவதுபோல் ஓங்கி உயர்ந்திருந்தது .
காட்சி மூன்று : அந்த மலைச்சரிவில் மரையா மானை அடித்து இரத்தத்தைக் குடித்த புலி ஒன்று , தான் ஏற்கெனவே அடித்து வீழ்த்தி குருதி ஒழுக புலால் நாறிக் கிடக்கும் விலங்கை கொள்ளையடிப்பவன் போல் வேகமாக இழுத்துச் சென்றது .
இலைகள் குறைவாக உடைய மரா மரங்களை அடர்ந்த கானகத்தினூடே பொன்னும் மணியும் ஈட்ட வேண்டும் என தலைவன் செல்கிறான் .அவனை அப்படி விரட்டியது தலைவியின் நெஞ்சமே ! ஏனெனில் தலைவின் எண்ணம் அவனை விரட்டுகிறது .
முள் முருங்கைப் பூவினைப் போன்ற சிவந்த இனிய வாய் ,அதினின்று கொட்டும் இனிய சொற்கள் , தேர்ந்தெடுத்து அணிந்திருந்த கனகட்சிதமாய்ப் பொருந்திய அணிகலன்கள் , காதிலே கம்மல் வளைந்து அழகு செய்கிறது ,பார்வையும் அதைப் போன்றே இருக்கிறது ; இப்படியாக தலைவியின நினைப்பு அவனை சீக்கிரம் பொருள் ஈட்டி ஊர் திரும்ப விரட்டிக் கொண்டே இருந்ததாம். மணம் முடித்துவிட்டான் . வாழப் பொருள் வேண்டும் ஓடுகிறான் , இளம் மனைவியின் நினைப்பும் வாட்டுகிறது ; அவனை விரைவு படுத்துகிறது .
எயினந்தை மகனார் இளங்கீரனார் என்பவர் எழுதிய அகநானூற்றுப் பாடல் இப்படி விவரிக்கிறது .
காதலைப் பேசும் போதும் , பிரிவைப் பேசும் போதும் ,நாட்டை வர்ணிக்கும் போதும் இயற்கையைப் பேசாமல் தமிழ்ச் சங்கப்புலவனால் பேச இயலாது .
இயற்கை எனில் வெறும் மரம் செடி கொடி மட்டுமல்ல ; அங்கு வாழும் உயிரினமும்தான் . இசையை ,அன்பை ,வாழ்க்கையை இயற்கையோடு இயைந்து கற்றார் எம் தமிழர்.
இசையும் அன்பும் இயற்கையோடு …
“ஆடு அமைக் குயின்ற அவிர் துளை மருங்கின்
கோடை அவ் வளி குழலிசை ஆக,
பாடு இன் அருவிப் பனி நீர் இன் இசை
தோடு அமை முழவின் துதை குரல் ஆக,
கணக் கலை இகுக்கும் கடுங் குரற் தூம்பொடு,
மலைப் பூஞ் சாரல் வண்டு யாழ் ஆக,
இன் பல் இமிழ் இசை கேட்டு, கலி சிறந்து,
மந்தி நல் அவை மருள்வன நோக்க,
கழை வளர் அடுக்கத்து, இயலி ஆடு மயில்
நனவுப் புகு விறலியின் தோன்றும் நாடன்
உருவ வல் விற் பற்றி, அம்பு தெரிந்து,
செருச் செய் யானை செல் நெறி வினாஅய்,
புலர் குரல் ஏனற் புழையுடை ஒரு சிறை,
மலர் தார் மார்பன், நின்றோற் கண்டோர்
பலர்தில், வாழி தோழி! அவருள்,
ஆர் இருட் கங்குல் அணையொடு பொருந்தி,
ஓர் யான் ஆகுவது எவன்கொல்,
நீர் வார் கண்ணொடு, நெகிழ் தோளேனே?”
அகநானூறு 82
குறிஞ்சி – கபிலர்
”தண்டலை மயில்கள் ஆட, தாமரை விளக்கம் தாங்க,
கொண்டல்கள் முழவின் ஏங்க, குவளை கண் விழித்து நோக்க,
தெண் திரை எழினி காட்ட, தேம் பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட, -மருதம் வீற்றிருக்கும் மாதோ.”
கம்பர் –கம்பராமாயணம் .
“ இரும் கழி முதலை மேஎந்தோல் அன்ன
கரும் கால் ஓமை காண்பு இன் பெரும் சினை
கடி உடை நனம் தலை ஈன்று இளைப்பட்ட
கொடு வாய் பேடைக்கு அல்கு இரை தரீஇய
மான்று வேட்டு எழுந்த செம் செவி எருவை
வான் தோய் சிமைய விறல் வரை கவாஅன்
துளங்கு நடை மரையா வலம் பட தொலைச்சி
ஒண் செம் குருதி உவற்றி உண்டு அருந்துபு
புலவு புலி துறந்த கலவு கழி கடு முடை
கொள்ளை மாந்தரின் ஆனாது கவரும்
புல் இலை மராஅத்த அகன் சேண் அத்தம்
கலம் தரல் உள்ளமொடு கழிய காட்டி
பின் நின்று துரக்கும் நெஞ்சம் நின் வாய்
வாய் போல் பொய்ம்மொழி எவ்வம் என் களைமா
கவிர் இதழ் அன்ன காண்பு இன் செம் வாய்
அம் தீம் கிளவி ஆய் இழை மடந்தை
கொடும் குழைக்கு அமர்த்த நோக்கம்
நெடும் சேண் ஆர் இடை விலங்கும் ஞான்றே”
அகநானூறு : 3 .பாடியவர்: எயினந்தை மகனார் இளங்கீரனார்
இசையும் அன்பும் இயற்கையோடு … எம் தமிழருக்கு …
சு.பொ.அகத்தியலிங்கம்.
No comments:
Post a Comment