Pages

Sunday, 29 May 2016

ஆதி மீறல்





ஆதி மீறல்





ஆதாமும் யோவாளும்
அன்று தேவ கட்டளையை 
மீறாமலிருந்திருந்தால்
நீ ஏது ? நான் ஏது ?
மனிதகுலமே ஏது ?
மீறல் பாவமல்ல ; 
காலத்தின் தேவை .

உலக போதை






உலக - போதை


தன்னையே சந்தைப்படுத்தும் கலை
அறிந்தவனே வெற்றியாளன்
என்றான் நண்பன்
மறுக்க நினைத்தேன்
அனுபவம் சுட்டது
உலகமயம்
ஊட்டிய போதை
ஒவ்வொரு இதயத்துக்குள்ளும்
என்ன செய்ய
மானுடத்தை மீட்க
தொடங்க வேண்டுமோ
குருஷேத்திரம் .


Thursday, 26 May 2016

பகலில் - இரவில்













பகலில் - இரவில்


நிலவு நேற்றே தற்கொலை செய்துகொண்டது
என
பகலில் சொன்னான்


சூரியன் செத்துவிட்டது
என
இரவில் சொன்னான்


கடல் இடம்மாறிவிட்டது
என
மழைக்காலத்தில் சொன்னான்


ஊரே எரிகிறது
என
கோடையில் சொன்னான்


வாழ்வைத்த தெய்வம்
என
வெற்றியில் கொண்டாடினான்


முதுகில் குத்திவிட்டான்
என
தோல்வியில் புலம்பினான்


தனக்கு மட்டுமே எல்லா துயரமும்
என
ஓயாது சலித்துக்கொண்டான்

எல்லாவற்றையும் எப்போதும்
மிகையாகவே பார்த்தான்

யதார்த்தத்தில் காலூன்றவே இல்லை .

சுரமும் அபசுரமும்








சுரமும் அபசுரமும்




காகங்கள் கரைகின்றன
அதற்குள்ளும் ஒரு லயம் இருப்பதை
எத்தனைபேர் அவதானித்திருக்கிறார்கள்?
எல்லாவற்றிலும்
ஏதோ ஒரு ஒத்திசைவு இருக்கத்தான் செய்கிறது
எல்லாம் அப்படித்தான் இருக்க வேண்டுமா ?
ஏற்ற இறக்க மில்லாத சுருதியில் இனிமையுண்டோ ?
இரண்டு கண்களின் பார்வையும் 
ஒரே தரத்தில் இல்லை
இரண்டு காதுகளின் கேட்கும் திறனும்
ஒருப்போல் இல்லை
இரண்டு கால்களின் வலுவும்
வித்தியாசப்படுகின்றன
இரண்டு கைகளும் ஒத்திசைவாய் இருப்பினும்
ஒருப்போல் இல்லை 
இரண்டு முலைகளும் கூட
வித்தியாசப்படுகின்றன
நகலலெடுத்ததிலும் சிறு
வித்தியாசம் இருக்கத்தான் செய்யும்
ஆனாலும் 
உன்னைப் போல் நானும்
என்னைப் போல் நீயும் 
ஒரே மாதிரி சிந்திக்க வேண்டுமென
எதிர்ப்பார்ப்பது
எந்தவிதத்தில் நியாயம் ?
சுரமும் அபசுரமும் அருகருகில்தான்
அளவின் மாறுபாட்டில்தான்
நீயும் நானும் சந்திக்கும் புள்ளி எது ?
புரிந்தால் சுரம் வசப்படும்
இல்லையேல்……