கொலையின் வேர் சாதியத்தின் வழி கனிம வளத்தில் …
’ ஆர்ட்டிகிள்
29’ முஹம்மது யூசுப்பின் எட்டாவது நாவல் ; இரண்டு சிறுகதைத் தொகுப்பையும் சேர்த்தால்
பத்தாவது நூல் . பத்து நூல்களையும் வாசிக்க எனக்கு வாய்ப்பளித்துள்ளார் . எல்லாமே ஏதேனும்
நுட்பமான தகவல் சார்ந்து ஒரு வித்தியாசமான கோணத்தில் சமூக அலசலாககவே விரிந்திருக்கிறது
. அவர் பார்வையோடு ஒருவர் முரண்படலாம் அல்லது உடன்படலாம் .ஆயின் அவர் எழுத்து எல்லாமே
இலக்கு நோக்கி எய்யப்படுகிற அம்புதான் . டாக்குபிகேஷன் எனப்படும் ஆவணப் பதிவுதான்
.யூசுப்பின் எழுத்தின் தடம் இதுதான் .இந்நாவலும் அதன் சாட்சியே !
போலீஸ் இன்ஸ்பெக்டர்
வீரபத்திரன் கொலையை விசாரிக்க ஏ.எஸ்.பி ராகவன் என்கிற வீரராகவன் , சங்கரன்கோவிலுக்கு
வருவதில் நாவல் தொடங்குகிறது . ’நேர்மையின்
சிகரம்’ என பாராட்டுப் பத்திரம் வாங்கிய பலர் முகமூடி அணிந்த காவிக் கயவர்களாய் இருப்பது
நம் பொது அனுபவம் ; அதுபோலவே வீரபத்திரன் கொலை
விசாரணைப் போக்கில் அவரின் சாதி வெறி , சமூக விரோதிகள் சவகாசம் எல்லாம் வெளிப்படுவது
ஆச்சரியமல்ல வழக்கமானதுதான் .
ஆனால் முஹம்மது
யூசுப்பின் புலனாய்வு அதையும் தாண்டி பழங்குடியினர் வேர் ,பண்பாடு அவற்றின் மீதான ஆக்கிரமிப்பு
,சாதிய ஆணவம் என மெல்ல மெல்ல விரிந்து தொல்லியல் ஆய்வு வழி இன்னொரு சித்திரத்தை வரைந்து
காட்டுகிறது. நில உரிமைக்காகப் போராடிய பண்டைய
சித்திரமேழி என்ற சொல்லை எடுத்து ’சிமே’ என்கிற
அமைப்பாக்கி ஓர் பெரிய வரலாற்றோடு முடிச்சுப் போடுகிறார் .இதுதான் யூசுப்பின் கதை சொல்லும்
பாணி என்பது நாமறிந்ததுதானே !
ஆக ,வீரபத்திரன்
கொலை வழக்கு என அறியப்படினும் இறுதியில் சாதிய ஆதிக்கம் வழி , கனிமக் கொள்ளைக்கான நிலப்
பறிப்பு வரை அதன் சதிக்கரங்கள் நீள்வதும் ; சாதிய ஆதிக்கம் எந்த அளவு காவல்துறையிலும்
புரையோடிப் போயிருக்கிறது என்பதும் இந்நாவலின் பேசுபொருளாகி இருக்கிறது . கொலையாளி
என காவல் துறை முதலில் கைநீட்டும் இலஞ்சி கொலைகாரனல்ல ; தன் காதலி தொல்பொருள் ஆய்வாளர்
மைதிலியோடு கொலை செய்து புதைக்கப் பட்டுவிட்டார் என்பது கதையின் ஒரு முடிச்சு .
இந்த முடிச்சோடு
சமந்தப்பட்டவர் கஞ்சா வியாபாரி சமூகவிரோதி
ஆனால் பெரும் தோட்ட அதிபர் , கோயில் தர்மகர்த்தா , சகலத்தையும் ஆட்டுவிக்கும் பெரும்
சதிக்கரம் பத்மனாபன் . அவருக்கும் உயர் போலிஸ் அதிகாரி நகுலனுக்கும் இருக்கும் நெருக்கம்தான்
காவல் துறையின் லட்சணம் .
கோமதி என்ற
கோமதி நாயகம் எனும் காவலர் பாத்திரம் மூலம் காவல்துறையில் சாதியம் எப்படி
நுட்பமாய்ச் செயலாற்றுகிறது எனச் சித்தரித்திருக்கிறார் .ஆர்டர்லி முறை ஒழிக்கப்பட்டுவிட்டதாகக்
கூறிக்கொண்டே அதனைச் சாதிய ஒடுக்குமுறைக்குப் பயன்படுத்தும் அவலத்தை அம்பலப்படுத்துகிறார்
.
வாசுகி ,மைதிலி
, திவ்யா போன்ற ஒரிரு பெண் பாத்திரங்களே இந்நாவலிலும் உலவவிட்டுள்ளார் . இதில் மூவரையும்
மன உறுதியும் பரந்த பார்வையும் உள்ள பெண்களாகவே சித்தரித்துள்ளார் .
அதே நேரம்
இந்நாவலில் புழங்கும் நிலவியலை ஒரு எல்லையோடு
அளந்து அமைத்துவிட்டார் .வழக்கமாக இவர் நாவலில் ஒரு நெடும் பயணம் இருக்கும். கட்சி சார்பு அரசியல் குறியீடுகளையும் பெருமளவுத்
தவிர்த்துவிட்டார் ; அண்மை வரலாறு சார்ந்த கதையில் ஏன் இப்படி அடக்கி வாசிக்க நேர்ந்தது
என்பது புரியவில்லை .
மைதிலியின்
தந்தை வாசுதேவன் ,பேரின்பன் ,காளி ,சக்கரையாண்டி , நாகராஜ் , வழக்கறிஞர்கள் மாடசாமி மற்றும் ராஜகோபால் , காவலர் ஆவுடையப்பன்
,ரவி , இன்ஸ் பெக்டர் நவநீத கிருஷ்ணன் , வில்லன்
ஸ்டிக்கர் பாபு , கண் தெரியாதவராக நடிக்கும் முதியவள் ராக்காயி உள்ளிட்ட கதாபாத்திரங்கள் மூலம் பல செய்திகளை நம்மிடம்
கடத்துகிறார் . ஊர் கோவில் திருவிழா , லாரி
ஏற்றி 17 பேர் படுகொலை , சாதிப்பிரச்சனை ,
உரமாக்கப்படும் படுகொலைகள் ; சங்கரன் கோயில்
,தென்காசி, செங்கோட்டை வட்டார நிலவியல் மற்றும் பண்பாட்டு வரலாறு ; சமண
,சைவ ,வைணவ தொன்ம ஊடாட்டம் என பலவற்றைப் பிசைந்து ஒரு சித்திரம் தீட்டி இருக்கிறார் .
ஒரு கொலையை
விசாரிக்கப் புகுந்து பல கொலைகளைச் சமூகவிரோதச் செயல்களை வெளிக்கொணர்வது நடக்கிறது
. ஆயினும் சூத்திரதாரி பத்மனாபன் கைதாகாமல் வெளியேதான் நிறுத்தப்படுகிறார் . ஆனால்
அவரது வலது கரம் ஸ்டிக்கர் பாபு மேல் அனைத்து குற்றக் கணக்கும் எழுதப்படுகிறது .நாட்டு
நடப்பு அதுதானே !
” ஓ ! ஆர்ட்டிகிள்
29 [1] இந்தியாவில் சிறுபான்மை மக்கள் பின் பற்றும் சமயம் , பண்பாடு ,மொழி மற்றும்
எழுத்து முறையைப் பாதுகாக்கும் உரிமையைக் கொடுக்குது அதுக்காக இந்த டைட்டிலை வச்சிருக்கீங்களோ?”
என வாசுதேவனிடம் எஸ் பி ராகவன் கேட்கிற கேள்வி . இந்த ஆர்ட்டிக்கிளுக்கு நாவல் இறுதியில்
யூசுப் கொடுக்கும் விளக்கம் அதனுள் பலதைக் கொண்டு வருகிறது . ஒவ்வொரு மாநில எல்லையிலும்
பிரச்சனைகள் உண்டு என்பதும் உள்ளடக்கியது .இந்திய சமூகத்தின் பன்மையை உள்வாங்க இன்னும்
நெடும்பயணம் போயாக வேண்டும் .சரிதானே !
கடைசியில்
பேரறிஞர் அண்ணா உருவத்தில் சாமண்ணா என்கிற ஒருவரை அறிமுகம் செய்வதில் ஓர் அரசியல் இருக்கிறது
. தமிழ்தேசியத்தையும் பொருளாதார ,பண்பாட்டு மேலாதிக்கத்தையும் சார்ந்து யூசுப் சுட்ட
விரும்புகிற அரசியலின் குறியீடா அது ? இதில் மாறுபடவும் விவாதிக்கவும் நிறைய செய்தி
இருக்கிறது . இந்த 23 வது அத்தியாயமே நாவலின் பிற்சேர்க்கையாகத் தோற்றமளிக்கிறது எனக்கு
மட்டும்தானா ? “ பிராமணன் கறி திங்க ஆரம்பிச்சா நாட்டு வரலாறே மாறிடும்.” என்று போகிற
போக்கில் கடைசியில் சொல்லிவிட்டு செல்கிறார் ; நோக்கத்தோடுதான்.
ஆர்ட்டிகிள்
29 , முஹம்மது யூசுப் ,யாவரும் பப்ளிஷர்ஸ் , 90424 61472 , www.yaavarum.com; , www.be4books.com
, 246 பக்கங்கள் , ரூ.320 /
சு.பொ.அகத்தியலிங்கம்.
14/12/25.

No comments:
Post a Comment