என்ன நினைத்துக் கொண்டிருப்பார்கள் ?
வழக்கமாக நடை பயிற்சிக்கு
உடன்வரும் நண்பர்
ஊர் சென்றிருப்பதால்
தனியாளாக நடந்தேன் .
அன்றாடம் கடந்து போகிற நண்பர் குழுவில்
ஒருவர் திடீரென நிறுத்திக் கேட்டார் ,
“Are u non believer?”
நான் சிரித்துக் கொண்டே சொன்னேன்,
“ நான் மனித சக்தியை நம்புகிறேன்
அறிவியலைப் பின்பற்றுகிறேன்…”
“ சார் ! வேடிக்கை பண்ணாதீங்க உங்களை
ஒரு நாள்கூட கோவிலில் பார்க்கவில்லை
உங்கள் நண்பர் மட்டும்தான் வருகிறார்”
என்றார் அருகில் இருந்தவர்
“ எனக்கு அங்கே எந்த வேலையுமில்லை”
என்றேன் அவர் முகத்தைப் பார்த்தபடி
“ சார் ! ஓப்பணா கேட்கிறேன் நீங்க
கடவுளை நம்புகிறீர்களா இல்லையா ?”
கேட்டார் இன்னொருவர் ரொம்ப சீரியஸாக
நானும் சீரியஸாகச் சொன்னேன் ,
“ அறிவியல் ரீதியாக இல்லாத ஒன்றை
நான் ஏன் நம்பவேண்டும்
நீங்கள் நம்பினால் அது உங்கள் பாடு..”
” சார் ! இதை முதலிலேயே சொன்னால்
இவ்வளவு இழுத்திருக்க வேண்டாமே…”
என்றார் முதலாமவர் சிரித்தபடி …
“ நீங்கள் நம்பிக்கையில்லாதவரா ?
என மொட்டையாகக் கேட்டீர்கள்
எதை எனச் சுட்டவில்லை ஆகவே…”
முடிக்கும் முன்பே குறுக்கிட்டு,
“ சார் ! போதும் ஆளைவிடுங்க ..”
நடை பயிற்சி தொடர்ந்தது
“ மன அமைதிக்கு என்ன செய்கிறீர்கள் ?”
சந்தேகம் கேட்டார் ஒருவர்
“ புத்தகம் தராத அமைதியா ?” என்றேன்
அப்புறம் நடைபயிற்சி மவுன பயிற்சியானது .
புன்னகையுடன் விடை பெற்றேன் .
அந்த ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள்
’தீர்த்தம்’ அருந்த சோமபான கடைக்கு
மெல்ல நடைபோட்டனர் மனமகிழ்ச்சிக்காம்…
சரி ! என்னைப் பற்றி அவர்கள்
என்ன நினைத்துக் கொண்டிருப்பார்கள் ?
சுபொஅ.
23/08/25
No comments:
Post a Comment