Pages

Saturday, 4 January 2025

ஒரு கொலை …. பரபரப்பான ஒரு நூல் விற்பனை….

 






ஒரு கொலை  …. பரபரப்பான ஒரு நூல் விற்பனை….

 

26 வயது இளைஞன் பட்டப்பகலில் ஒரு ஹோட்டல் வாசலில் ஓர் தொழில் அதிபரை சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டில் 2024 டிசம்பர் 9 ஆம் நாள் கைது செய்யப்படுகிறார்  . ஆனால் அந்த கொலையைச் செய்த இளைஞனுக்கு ஆதரவாக அமெரிக்காவே குரல் கொடுக்கிறது . ஆச்சரியம் தான் .நடந்தது என்ன ?

 


அந்த இளைஞன் பெயர் லூயிஜி நிக்கோலஸ் மஞ்ஜானி [Luigi Nicholas Mangione ] .இந்த இளைஞன் நன்கு படித்தவன் . அறிவாளி .வசதியான குடும்பத்தில் இருந்து வந்தவன் . நல்லதோர் பணியில் இருப்பவன் . எந்த குற்றச் செயலிலும் ஈடுபடாதவன் .

 

சுட்டுக்க்கொல்லப்பட்டவர் பெயர் பிரைன் தாமஸ் [Thompson] . அமெரிக்க யுனைட்டெட் ஹெல்த் இன்சுரன்ஸ் [American united health insurance ] நிறுவனத்தில் உயர்  பொறுப்பில் உள்ள நிர்வாக இயக்குநர் . சுட்டுக்கொல்லப்பட்ட இடம் நியூயார்க்  மான்ஹாட்டனில் உள்ள ஹில்ட்டன் மிட்டவுன் ஹோட்டல் [New York Hilton Midtown hotel] வாயில் .சுட்டுக் கொல்லப்பட்ட நாள் டிசம்பர் 24 .

 

காரணம் என்ன ?

 

அமெரிக்காவில் மருத்துவரை அணுகுவது மிக சிரமம் .பெரும் பொருட்செலவு .இன்சுரன்ஸ் இல்லாதவர் மருத்துவ உதவி பெறவே இயலாது .கொரானாவின் போது அமெரிக்காவில் உயிர் இழப்பு அதிகம் ஆனதற்கு அங்குள்ள மருத்துவத்துறை ஏழை மக்களுக்கு எட்டாத உயரத்தில் இருந்ததே ஆகும் .

 

அமெரிக்காவில் 1கோடியே 40 லட்சம் பேர் மருத்துவக் கடனைத் தீர்க்க தன் சாப்பாட்டுச் செலவைக் குறைத்து வயிற்றை இறுக்கக் கட்ட வேண்டி இருக்கிறதாம் .

 

அங்குள்ள மருத்துவ இன்சுரன்ஸ் மிகவும் கெடுபிடியானது . 16 சதவீதம் இன்சுரன்ஸ் கோரும் மனுக்கள் தள்ளுபடி ஆகிவிடுகிறதாம். அமெரிக்க யுனைட்டெட் ஹெல்த் இன்சுரன்ஸ் நிறுவனத்திலோ 32 % சதவீத மனுக்கள் குப்பையில் எறியப்பட்டுவிடுமாம் .அதாவது மூன்றில் ஒரு பாகம் மனுக்கள் நிராகரிக்கப்படுகிறதாம்.

 

உலகில் மருத்துத்திற்கு தனிமனிதர் செலவிட நேரிடும் தொகை மிக அதிகமுள்ள நாடு என்பதில் முன்வரிசையிலும் ; உயிர் காப்பில் 42 வது இடத்திலும்தான் அமெரிக்கா இருக்கிறது .

 

மஞ்ஜானி தன் முதுகுத் தண்டுவட பிரச்சனைக்காக  சிகிட்சை எடுத்துக் கொண்டதற்காக மேற்படி இன்சுரன்ஸ் நிறுவனம் சரியாக நடந்து கொள்ளாததால் இந்தக் கொலை நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது .ஆயின் அதனை அந்நிறுவனம் மறுத்திருக்கிறது .

 

ஆனாலும் இந்த இளைஞனுக்கு ஆதரவாக அமெரிக்கா முழுவதும் குரல் கொடுக்கிறார்கள் .ஏன் எனில் அமெரிக்க மருத்துவ இன்சுரன்ஸ் நிறுவனங்கள் மீதான அதிருப்தியும் கோபமும் உச்சத்தில் மக்களிடம் உள்ளது .

 

இந்த இளைஞனுக்கு ஆதரவாக டிசம்பர் 4 சட்ட உதவிக் க்குழு [December 4 th Legal Committee] அமைத்து நிதி திரட்டுகின்றனர் . இதுவரை ஒரு லட்சத்து முப்பதாயிரம் டாலர் நிதி திரண்டிருக்கிறது . மஞ்ஜானியின் டுவிட்டர் பக்கத்தில் ஆதரவு குவிந்த வண்ணம் உள்ளது .மஞ்ஜானி குறித்து இணையத்தில் தேடுவோர் மிகவும் அதிகரித்து விட்டனர் . விக்கிபீடியா இப்போதே அவருக்கு ஒரு பக்கம் ஒதுக்கிவிட்டது .

 

தனிநபர் கொலை எந்தப் பிரச்சனைக்கும் தீர்வு அல்ல ; அதனை நியாயப்படுத்தவும் முடியாது .எனினும் மருத்துவ வசதிக்காக மக்களைக் கசக்கிப் பிழியும் கடன்காரனாக்கும் முதலாளித்துக் கொள்ளைக்கு எதிரான கொதிப்பே இப்பிரச்சனையில் கொப்பளிக்கிறது .

 

 "மறு", "தாமதி", " தூக்கி எறி",[“deny,” “delay” and “depose”, ] என்கிற தந்திரத்தை இன்சுரன்ஸ் நிறுவனங்கள் பின் பற்றுவதாகக் கூறப்படும் நிலையில் .கொலை செய்யப்பட்ட இடத்தில் இந்த வாசகங்கள் எழுதப்பட்டிருப்பது பெரும் பரபரப்பாகி விட்டது .

 

இந்நிலையில் இன்சுரன்ஸ் கொள்ளை குறித்து  ஜெய் எம் பெயின்மென்  [Jay M Feinman ] எழுதிய  தாமதி மறு அதை நியாயப்படுத்து என்கிற தாலைப்பில் Delay deny defend / Jay M Feinman ] எழுதிய நூல் பலவருடங்களுக்குப் பின் பரபரப்பாக விற்பனை ஆகிறதாம் .

 

ஒரு கொலை ஒரு நூல் விற்பனையைத் தூண்டியதா ? அல்லது மக்களின் உள்ளக் குமுறலின் வெளிப்பாடா ?

 

[இந்தச் செய்தியை சில வாரங்கள் முன் வாசித்தேன் .கடந்து போய்விட்டேன்.இந்த மாத “ காக்கைச் சிறகினிலே” மாத இதழில் எம். பாண்டியராஜன் எழுதிய நான்கு பக்கக் கட்டுரையை வாசித்தபின் முகநூலில் அச்செய்தியை பகிரத்தோன்றியது . என் மொழியில் பகிர்ந்துவிட்டேன் . இச்செய்தி சொல்லும் செய்தி நூறு !!]

 

சுபொஅ

05/01/25.

 

 


 


No comments:

Post a Comment