Pages

Saturday, 4 January 2025

எது ஆன்மீகம் ? [5]

 

 எது ஆன்மீகம் ? [5]

 

1932 ல் சிந்தனைச் சிற்பி தோழர் .சிங்காரவேலர் எழுதிய கட்டுரை ஒன்றில் நியூஜிலாந்தில் நடந்த ஓர் நிகழ்வைச் சுட்டி இருப்பார் .அவர் சொன்ன அந்த நிகழவை நான் ஓர் கதையாக்கி பெயர் சூட்டி இங்கே சொல்கிறேன்.

 

நியூஜிலாந்த் எனும் தீவு நாட்டில் ஆக்குலாந்து நகரில் ஆல்பர்ட் பெர்ணாண்டோ என்பவர் வாழ்ந்துவந்தார்.அவருக்கு எலிசபத் எனும் அழகிய மனைவி இருந்தார் .பக்கத்துவீட்டில் வில்லியம் சார்லஸ் என்பவர் குடியிருந்தார் .அவரும் பேரழகன் . ஆலபர்ட்டுக்கு எப்போதும் தன் மனைவியை சார்லஸ் கொத்திக் கொண்டு போய்விடுவானோ என்கிற சந்தேகம் . இந்த சந்தேக நோய் தாம்பத்தியத்தை அபஸ்வரம் ஆக்கியது . இந்த நேரத்தில் சார்லஸ் பார்வையும் எலிசபத் பார்வையும் சந்திப்பதை ஆல்பர்ட் பார்த்துவிட்டான் . ஆத்திரத்தில் எலிசபத்தை கொலை செய்துவிடுகிறான் ஆல்பர்ட் .

 

இதனை அறிந்த சார்லஸும் தற்கொலை செய்து கொள்கிறான் . மேலுல கிலாவது எலிசபெத்தோடு சந்தோஷமாக வாழ தான் தற்கொலை செய்து கொள்வதாக குறிப்பு எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொள்கிறான் .

 

இச்செய்தியால் ஆல்பர்ட் அதிர்ச்சி அடைகிறான் .தற்கொலை செய்து கொள்கிறான் .தற்கொலைக் குறிப்பில் எழுதிவைத்தான் , “ மேலுலகத்தில் கூட எலிசபத்தை சார்லஸ் சேர விடமாட்டேன் .அதற்காகத்தான் தற்கொலை செய்து அங்கு செல்கிறேன்.”

 

இந்தக் கதையைத் தொடர்ந்து தோழர் .சிங்காரவேலர் சொல்வார் ,” அந்த நியூஜிலாந்தரைப் போல தங்கள் யுத்தியை ,புத்தியை தண்ணீரில் கரைத்துவிட்டு பகுத்தறிவைத் தற்கொலை செய்து கொள்வோரை எப்படித் திருப்தி செய்ய முடியும் ? யாரால் அவர்களைத் திருத்த முடியும் ? நண்பர்களுக்கு நாம் ஒரே விடைதான் அளிக்கக்கூடும் .அதாவது ‘ Who will absolve you from this ignorance ? Onely study and reflection.’ உங்கள் அறியாமையை யார் விலக்கூடும் ? கல்வியும் விசாரணையும்தான் உங்கள் அஞ்ஞானத்தை விலக்க முடியும் என்போம்.”

 

மதத்தையும் கடவுளையும் கட்டி அழுவோரைக் கேட்கிறோம் ;

 

எல்லா மதமும் ஏதோ ஓர் தத்துவத்தை சித்தாந்தத்தை முன்வைப்பதாக நம்பப்படுகிறது .ஆயின் அந்த தத்துவத்தை ஆழ்ந்தறிந்துதான் மதநம்பிக்கை இருக்கிறதா  ?

 

 நீ எந்த மதம் என்பதை உன் தத்துவ அறிவை நீட் தேர்வில் சோதித்தா முத்திரை குத்துகிறார்கள் ? இல்லவே இல்லை .நீ பிறந்த போதே உன் தாய் தந்தையிரின் மதமும் சாதியும் உன் அடையாளத்தில் ஒன்றாக்கப்படுகிறது .பிறந்த குழந்தை எந்த தத்துவத்தை தேர்ந்து தெளிந்து மதத்தில் உறுப்பினரானது ?

 

கிறுத்துவத்தில் ஞானஸ்தானம் பெறுவது பின்னர் நடக்குமெனினும் அப்போதும் தத்துவார்த்த தேர்வெழுதி வென்ற பின்னா நடக்கும் ? இல்லவே  இல்லை .அது ஓர் வெறும் சடங்கு .

 

பிராமணர்களுக்கு உபநயனம் நடக்கிறதே எந்தத் தேர்வை எழுதி அந்தத் தகுதியைப் பெறுகிறார்கள் ?  பிராமணாத்து குழந்தை . பிராமண தாய் தந்தைக்கு பிறந்ததைத் தவிர வேறென்ன தகுதி சொல்ல முடியும் ? பிராமணாத்து பெண் குழந்தைகளுக்கு ஏன் உபநயனம் மறுக்கப்படுகிறது ?

 

எல்லா மதங்களிலும் இதே நிலைதான் . மதம் சார்ந்த நூல்களின் தத்துவத்தை முறையாகப் படித்து அறிந்தவர்கள் எத்தனை சதவீதம் இருப்பார்கள் ?

 

வெறுமே சடங்கு ,சம்பிரதாயம் ,பழக்க  ,வழக்கம் ,கண்மூடிப் பழக்கங்கள் ,மூடநம்பிக்கை இவற்றின் தொகுப்பே பெரும்பாலோரின் மத நம்பிக்கை .

 

மாறாக 18 வயது நிரம்பப் பெற்ற ஒருவருக்கு வாக்களிக்க உரிமை வழங்கப்பட்டிருப்பதைப் போல ; தாங்கள் தத்துவார்த்த ரீதியாக சரி எனக் கருதுகிற ஒரு மதத்தை ஏற்கவோ மதம் சாராமல் இருக்கவோ 18 வயது நிரம்பிய ஒவ்வொருவருக்கும்  உரிமை வழங்கி மதத்தை தீர்மானிப் பதுதானே சரியாக இருக்கும் ? இதைச் சொன்னால் பொல்லாப்பு

 

ஆக ,மதத்தின் வேர் தத்துவம் எனச் சொல்லபடுகிறதே அந்த தத்துவம் என்பது யாது ? யோசித்தோமா ?

 

Philosophy is 'love of wisdom' என பண்டைய கிரேக்கத்தில் ஒரு பழமொழி உண்டு . அறிவின் மீதான காதல்தான் தத்துவம் . அதை அறிவோமா ?

 

அவர்கள் அறிவென்று கருதியது என்ன தெரியுமா ?நாம் எங்கிருந்து வந்தோம் ? எங்கு போகப்போகிறோம் ? மரணத்துக்கு பிறகு என்ன ஆவோம் ? நாம் ஏன் இப்படி இருக்கிறோம் ? ஏன் அப்படி இல்லை ? உலகம் ஏன் இப்படி இருக்கிறது ? இரவு பகல் எப்படி ? இப்படியாக கேள்வி எழுப்பி விடைகாண முயன்ற மனித குலம் பலவிதமான விடைகளைச் சொன்னது . இறுதியான விடையை யாராலும் சொல்ல முடியவில்லை . சிலவற்றுக்கு விடை கண்டார்கள் . அது வானவியலாக விரிந்தது .விடை தெரியா கேள்விகளை எல்லாம் கடவுள் மீது சுமத்திவிட்டு தத்துவம் பெருமூச்சு விட்ட இடம்தான் மதமானது.அதனை ஒட்டி மத மறுப்பும் பிறந்து விட்டது .

 

விடை தெரியா கேள்விக்கு விடைதேடி அலைந்த போது உருவான தத்துவங்கள் கணக்கில் அடங்கா .வேடிக்கை என்ன தெரியுமா கிட்டத்தட்ட 16 ஆம் நூற்றாண்டுவரை தத்துவம் ,அறிவியல் ,மதம் எல்லாம் ஒன்றாகக் குழம்பித்தான் கிடந்தன .

 

உலகெங்கிலும் பல்வேறு தத்துவப் பார்வை விரிந்தன . அவற்றை ஒரு பருந்துப் பார்வை பார்ப்போமா ?

 

தொடர்வோம்…

 

சுபொஅ.

25/10/24.

No comments:

Post a Comment