Pages

Thursday, 19 December 2024

மூட்டைபூச்சி …

 



மூட்டைபூச்சி …

 

மூட்டைபூச்சி படுத்திய பாடுகளை

பேசியபடியே நடை பயிற்சி.

 இப்போதும் இருக்கிறதா மூட்டைபூச்சி

என்கிற சந்தேகம் வலுத்தது அப்போது

 

 

ரயிலில் ,பஸ்ஸில்

தியேட்டரில் ,லாட்ஸில்

கட்டிலில் ,பெஞ்சில்

பெட்டியில், படுக்கையில்

 

ஒட்டிக்கொண்டு வீடுவரும்

வீடுமுழுவதும் ஆக்கிரமிக்கும்

சுவர் முழுதும் மூட்டை பூச்சியைக்

கொன்ற கறைகள் மாடர்ன் ஆர்ட்டாய்

 

தூங்கவிடாது இரத்தம் குடிக்கும்

தோல் தடிக்கும் நோய் பரப்பும்

வேட்டியில் சட்டையில் பயணிக்கும்

விடாது கருப்பென துரத்தும்

 

மூட்டைப் பூச்சிக்கு பயந்து

வீட்டுக்கு தீ வைப்பார்களா ?

மூட்டைபூச்சி இல்லாத இடம்தேடி

முக்குடைபட்டதே அதிகம்

 

மூட்டைப்பூச்சி மருந்து குடித்து

செத்தவருண்டு ; மூட்டை பூச்சி

செத்ததில்லை ; போராடி போராடி

ஜெயித்தது நம் வரலாறு

 

Bedbug என்றால்தான் அடுத்த

தலைமுறைக்கு தெரியுமோ ?

அப்போதும் கூகுள் ஆண்டவர்தான்

அடையாளம் காட்டுவாரோ ?

 

மீண்டும் கொரானோ

மீண்டும் பிளேக் என்பதுபோல்

மீண்டும் மூட்டைபூச்சி வருமோ

ஆய்வறிஞர்கள் மிரட்டுவாரோ ?

 

நல்லவேளை மூட்டைபூச்சி

எந்த சாமிக்கும் வாகனமில்லை !

இருந்தால் எலிக்கு கட்டியது போல்

கோவில் கட்டியிருப்பார்கள் !

 

கொல்வது பாவமென எங்கும்

கும்பிட்டு தொழுதிருப்பார்கள்

மூட்டைபூச்சி வதை தடைகோரி

மூர்க்கர்கள் கொதித்திருப்பார்கள்!

 

மூட்டைபூச்சி படுத்திய பாடுகளை

பேசியபடியே நடை பயிற்சி.

 இப்போதும் இருக்கிறதா மூட்டைபூச்சி

என்கிற சந்தேகம் வலுத்தது அப்போது

 

 

குறிப்பு : ராஜஸ்தானத்தில் எலிக்கோயில் உண்டு .அங்கு தாரளமாய் எலி விளையாடும் .

எலிக்கோயில் : ராஜஸ்தான், பீகானேர் மாவட்டத்திலுள்ள தேஷ்னோக் கிராமத்தில். இங்கே எலி வழிபாடு பிரதானம். இங்கு இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட எலிகள் உள்ளன. [ தினமலர் , 04 மார்ச் 2014 ]

 

சுபொஅ.

19/12/24.


No comments:

Post a Comment