Pages

Friday, 6 October 2023

கண்ணுக்கு எட்டாத உலகம்.

 

கண்ணுக்கு எட்டாத உலகம்.

 


 

புது புத்தகத்தின் வாசம்

எப்போதும் கிறங்க வைக்கிறது .

வாசித்து அடுக்கிய புத்தகங்கள்

பார்க்கும் நொடியில் புன்னகைக்கிறது .

வீட்டில் இடமில்லாமல்

பராமரிக்க முடியாமல்

இடம் பெயர்ந்து விட்ட ,

இரவலாகப் போய்விட்ட

அன்பளிப்பாய் கைமாறிவிட்ட ,

தோழமையோடு ‘சுட்டு’ச் சென்றுவிட்ட

புத்தகங்கள் நினைவிலாடுகிறது.

வாசிக்காமல் கண்ணெதிரே

அடுக்கி வைக்கப்பட்ட புத்தகங்கள்

 “பழைய உன் வேகம் எங்கே ?”என

கேலி செய்கிறது என் முதுமையை.

ஒவ்வொரு புத்தகத்தையும்

வாசித்து முடிக்கும்போதும்

 ”கற்காதது உலகளவு” என உறைக்கிறது.

 “கை மண் அளவே” கற்ற எனக்கு

நேற்றைவிட இன்று என் வீட்டு

சாளரம் அகலமாய் திறந்திருக்கிறது

நேற்றைவிட இன்று வெளிச்சம்

வெகுதூரம் பரவுகிறது .

ஆனாலும் இன்னும் கண்ணுக்கு எட்டாத

உலகம் விரிந்து கொண்டே போகிறதே !

என்ன செய்ய ? என்ன செய்ய ?

 “படி ,படி ,படி ,படி மரணிக்கும் வரை !”

 

சுபொஅ.

7/10/2023.

 


No comments:

Post a Comment