Pages

Wednesday, 12 October 2022

இரண்டடி கதிர்க்குறள் ,

 



குறள் என்றதும் திருக்குறளோடு ஒப்பிட்டும் ஆய்வாகவும் விமர்சனம் எழுத வேண்டுமே எனத் தயங்கிய படியே நூலைப் புரட்டினேன்.
“ முப்பால் இதுவல்ல வள்ளுவனும் நானல்ல
ஒப்புயார் செய்தாலும் தப்பு”
என பாயிரத்தில் கனல்வனன் சொல்லிவிட்டதால் மனத்தடை நீங்கி உள்நுழைந்தேன்.
மருதுவர் ஆக முயல்வோர்க்கு நச்சு
மருந்தினை நீட்டுதிக் காடு”
என நீட்டுக்கு எதிராக பேசும் போதே நூலின் செல்வழி நிகழ்காலம் என்பது புலனாயிற்று .
“ சோற்றைவாங்கி உண்பதற்குச் சொந்தசாதி கேட்பவன்
காற்றையெண்ணி பார்ப்பானோ ஓய் !” எனவும் ,
“ நீரோடும் பாதையெலாம் வீடாக்கி வைத்துவிட்டு
ஊர்மூழ்கிப் போனதென்று பேச்சு” எனவும் ,
“ஆடுண்போம் மீனுண்போம் நாட்காலை நீராடி
மாடுண்போம் யார்தடுப்பார் வா” எனவும்,
“பெண்புகாத கோயிலும் பெண்செயாத பூசையும்
பெண்தொழாத தெய்வமும் பாழ்” எனவும்,
சீறிப்பாய்கிற குறள்கள் எல்லாம் சமகால அரசியல் சமூக கொந்தளிப்பின் வெடிப்பல்லவோ ?
நீரோ மன்னன் பிடில் வாசித்த கதையை நாம் அறிவோம் ; அதைத் தொட்டு கனல்வனன் சொல்கிறார் ;
“பிடில்மீட்டல் இன்றில்லை வாத்து வளர்த்தல்
மயிலூட்டல் என்றுமாறிப் போச்சு “
யாரைச் சாடுகிறார் தெரியுதா ?
“ என உரையெழுத வேண்டாத பளிச்சில்
உறை சுழற்றிய ஒருபிடியின் இருவாளாய்
ஒவ்வொரு குறளையும்
கனல்வனன்
உயிப்போடு
சுழற்றியிருக்கிறார்.”
என கவிஞர் அறிவுமதி மிகச்சரியாகவே மதிப்பிடுகிறார்.
“தமிழ்ப்பா படியுங்கள் .பாவெழிலில் நனையுங்கள்.” எனக்கவிஞர் மகுடேஷ்வரன் கூற்றை வழிமொழிகிறேன்.
“குறளை தன் சனாதன நோக்கில் சிதைப்போர் களம் இறங்கியுள்ள சூழலில் ; இந்த குறள்களையும் சிலர் தம் நோக்கிற்கு அதன்பகுதியாக்கி திசை திருப்ப வழி உண்டாகும் அல்லவா ? எனவே உலகம் போற்றும் குறள் வடிவத்தை நகலெடுக்காமல் இருப்பது நல்லதல்லவா ?” – இது என் தனிப்பட்ட கருத்து .
இரண்டடி கதிர்க்குறள் ,
ஆசிரியர் : கனல்வனன்,
வெளியீடு : பொள்ளாச்சி இலக்கிய வட்டம்,
தொடர்புக்கு : 90955 07547 / 98422 75662
பக்கங்கள் : 112 விலை : 100.
சுபொஅ.
re

No comments:

Post a Comment