Pages

Monday, 20 July 2020

கடவுளின் ஓட்டம்

உலகிலுள்ள
எல்லா கடவுளிடமும்
சரணடைந்து,
யாரும்
கடைக்கண்கூட
திறக்கவில்லை என
மனமுடைந்து
ஏழை
திகைத்து நின்றபோது
கண் எதிரே எல்லா கடவுளும்
தலைதெறிக்க
ஓடிக்கொண்டிருந்தனர்

மதவெறி பூதமும்
கார்ப்பரேட் பூதமும்
காவு கேட்டுத் துரத்துகிறது
நீயும் ஓடு என்றபடி
ஓடிக்கொண்டே இருந்தனர்
எல்லா கடவுள்களும்.

சுபொஅ.

சிம்மாசனங்களின் கதை




சிம்மாசனங்களின் கதை

சிம்மாசனங்கள்
உடைக்க முடியாதவை அல்ல.
வரலாற்றின் ராஜபாட்டை எல்லாம்
நொறுக்கப்பட்ட சிம்மாசனங்கள் மீதே
வென்றவர்களின் வரலாறு
தோற்றவர் மீதே எழுதப்படுகிறது
வென்றவர் சொல்லே வேதம் ஆகிறது

விக்கிரமாதித்தன்
சிம்மாசனம் மட்டுமல்ல
எல்லா சிம்மாசனத்திலும்
படியேற ஏற தலைக்கனம் ஏறும்
உச்சத்தில் உட்கார்ந்ததும்
ஆட்டம் துவங்கும் அழிவும்தான்

காலந்தோறும்
சிம்மாசனங்கள் தம் சவக்குழியையும்
தானே வெட்டிக்கொள்கின்றன

ஏழை சொல்லும் அம்பலமேறும்
பொன்னுலகக் கனவில்
மிதந்தால் கனவே மிஞ்சும்
சம்மட்டிகளால் சிம்மாசனங்கள்
உடைத்தெறியப்படும் நாள் வரும் !

கனவு மெய்ப்பட
உன் போர்நடைப்பாட்டை
உரக்கப்பாடு ! மேலும் ! மேலும் !
உரக்கப்பாடு ! இன்னும் பாடு !
கடைசிக்கும் கடைசியில் கிடப்பவன்
நெஞ்சங்கள் கொந்தளிக்கும் வரை
போர்நடைப்பாட்டை உரக்கப்பாடு !

சுபொஅ.




Wednesday, 8 July 2020

நன்றி கொரானா

நன்றி!!  கொரானா!!!



கொரானா! நீ  ஒன்றும்
அவ்வளவு கொடியவனல்ல!!


உன்னுள் இரக்கமிருக்கிறது
நீ கொலை நோயல்ல!
நைந்த துணி
உன்னை அணைக்கமுடியாமல்
கிழிந்துபோவது உன் குற்றமா?

திண்மையுற கட்டப்படாத வீடு
உன்னை தாங்க முடியாமல்
தகர்ந்து போவது உன் பிழையா?

நீ
சாதி பார்க்கவில்லை
மதம் பார்க்கவில்லை
மொழிபார்க்கவில்லை
நாடு, இனம், வர்க்கம்
எதுவும் பார்க்கவில்லை


நோயோடு வாழ்பவர்
உன்னால் சாகிறார்
ஆரோக்கியமானவர்
உன்னை விரட்டுகிறார் ..



கொரானா நீ ஒன்றும்
அவ்வளவு கொடியவனல்ல

கொரானா! 
உன் பெயராலும்
மதப் பகைமையை விசிறிய
வீணனை விட நீ கொடியவனல்ல

கொரானா!
நீ எங்கே தன் உடலுக்குள்
புகுந்துவிடுவாயோ என மிரண்டு
தேசமே திணறி நிற்கையில்
அடிமடியில் கைவைத்து
அனைத்தையும் சுருட்டும்
ஆட்சியாளரைவிட
கார்ப்பரேட் கொள்ளையனை விட
நீ  கொடியவனல்ல!


டெல்லி சுல்தானும்
தமிழக ஜமீனும்
தங்களின்
சகல தோல்விகளையும்
சகல அநீதிகளையும்
நியாயப்படுத்த
உன்னைத்தானே
உச்சாடனம் செய்கிறார்கள்
அவர்களைவிட நீ
ஒருபோதும் கொடியவனல்ல!

கொரானா நிச்சயம் நீ
விரைவில் விடைபெற்றுவிடுவாய்
சந்தேகமில்லை!
ஆயின்
சாதி, மத வெறி உச்சம் பெற்ற
கார்பரேட் லாபவெறிக்கு
விளக்கு பிடித்து மேளம் தட்டும்
மோடிஷா அடிமை எடுபுடிகளைவிட
நீ கொடியவனே அல்ல!

உலகத்தை மனிதர்களை
அன்பை வெறுப்பை
புதிய பார்வையின் தேவையை
அறிவியலை அறத்தை
சமத்துவமிக்க மானுடத்தை
தேட வைத்த கொரானாவே
நன்றி! நன்றி!


போய் வா என சொல்வது
மரபெனிலும் நீ
போ!  திரும்பி வரவே வேண்டாம்!
நாங்கள் திருந்த போராடுவோம்
போராடி திருத்துவோம் மானுடத்தை!!!

சுபொஅ.