Pages
▼
Wednesday, 12 December 2018
சொல்.94
தினம் ஒரு சொல் .94 [ 13 /12/2018 ]
பணம் மட்டுமே ஒருவரை மனிதர் ஆக்கிவிடாது என்பது போலவே கல்வித் தகுதி மட்டுமே ஒருவரை மனிதர் ஆக்கிவிடுவது இல்லை .இது வாழ்க்கை நெடுக கசப்பான உண்மை .
“படித்தவன் சூதும் வாதும் செய்தால்... போவான் போவான் ஐயோவென்று போவான்” என பாரதி குமுறினான் . இடஒதுக்கீட்டைப் பயன்படுத்தி கல்வி கற்று உயர் உத்தியோகம் பெற்றவர் பலர் தன் சமூகத்தை மறந்து சுயநலனில் திழைப்பது குறித்து அம்பேத்கரும் தன் கடைசி காலத்தில் வருந்தினார் .தமிழகத்திலும் அதே போல் பெரியாரின் சமூகநீதிப் போரால் பலன் பெற்ற பலர் பேச்சும் செயலும் கவலை அளிக்கிறது .எங்கும் இது போன்ற நிலையைக் காணலாம் .
உனக்கு கல்வி என்பது இச்சமூகம் கொடுத்த வாய்ப்பு .வரம் .அதை மறந்து தனது திறமை மட்டுமே தன் வெற்றிக்கு காரணம் என இறுமாப்புக் கொள்வது பொது இயல்பாக உள்ளது .நாம் தனி நபர் திறமையை நிராகரிக்கவில்லை . இந்த சமூகம் அவருக்கு வாய்ப்பும் ஒத்துழைப்பும் அளிக்காவிடில் அவர் திறமை துலங்கி இருக்குமா ? அவர் ஒரு துறையில் வல்லுனராக இருக்கலாம் .மறுக்கவில்லை .சமூகப் பார்வையைத் தொலைத்த வல்லுநரின் செயல் எப்படி ஊருக்கு உதவும் ?
அணுகுண்டை ஆராதிக்கும் எவரும் மனிதகுல அக்கறையைத் தொலைத்தவர்களே .படித்தவரில் பலரை இப்படிப் பார்த்திருக்கிறோம் .தன் கண் எதிரே நடக்கும் அநீதிக்கு எதிராய் ஒற்றை முணுமுணுப்பைக்கூட உதிர்க்காத பெரும் படிப்பாளிகள் உண்டு .தன் பதவிக்காக ,பணத்துக்காக ,அதிகார செல்வாக்குக்காக எதனோடும் யாரோடும் சமரசம் செய்து கொள்ளும் படிப்பாளிகளைப் பார்த்திருக்கிறோம் .
நம் குடும்ப வாழ்விலும் தன் நலனுக்காக எதையும் செய்யத் துணியும் பலர் நன்கு படித்தவர் என்பது வெறும் பேச்சல்ல அன்றாடம் நாம் சந்திக்கும் குரூர உண்மை .எழுதப் படிக்கத் தெரியாத பாமரனிடம் இருக்கும் மனிதநேயம்கூட இல்லாத படித்தவர் பலரைப் பார்த்திருக்கிறோம் . நம் கல்வி சமூகப் பொறுப்பை அக்கறையை கற்றுத் தருகிறதா ?
உன் படிப்பும் திறமையும் உன்னை பொறுப்பான சமூக மனிதராக்கும் எனில் நன்று .இல்லை எனில் அது விழலுக்கு இறைத்த நீராகும் .சில சமயங்களின் விஷப் பார்த்தீனியம் செடிக்கு இறைத்த நீராகவும் ஆகிவிடுமே ! ஆக ,உங்கள் கல்வியோடு சமூகத்தை ,மனிதரை நேசிக்கப் பயிலுங்கள் .பழகுங்கள் .
Su Po Agathiyalingam
No comments:
Post a Comment