தினம் ஒரு சொல் .74 [ 19 /11/2018 ]
இரண்டு நண்பர்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சனையில்
தலையிட்டு சமரசம் செய்யப் போனால் ஒரு நண்பரை இழப்போம் .அவர் எதிரியாகிவிடுவார் .இரண்டு
எதிரிகளுக்கு இடையில் ஏற்படும் பிரச்சனையில் தலையிட்டு சமரசம் செய்யப் போனால் ஒருவர்
நண்பராகிவிடுவார் . இப்படி அலைபேசியில் உரையாடும் போது ஒரு தோழர் சொன்னார் .எவ்வளவு
அர்த்தச் செறிவும் அனுபவ கசப்பும் அடங்கிய உண்மை .
எல்லோருமே தன் தரப்பு மட்டுமே நியாயம் என்று
கருதுவது இயல்பு . மூன்றாம் நபர் பார்வையில் அவ்வாறு இருக்க வாய்ப்பு இல்லை .ஆனால்
அது ஒரு பக்க சார்பாகவே ஒரு சாரர் கருதுவர் .ஏனெனில் ஒன்று பிர்ச்சனையின் முழு உண்மையையும் யாரும்
ஒரு போதும் சொல்வதில்லை .அவரவருக்கு சாதகமானதை மட்டுமே சொல்வர் .இரண்டாவதாக ,முற்றி
வெடிக்கும் பிரச்சனை என்பது உடனடிக் காரணம் ஆனால் அதற்கு முன்பே ஏதோ புரிதல் கோளாறும்
,அணுகுமுறைக் குளறுபடிகளும் அதனால் ஊறிப்போயிருக்கும் கசப்புமே ஒரு பிரச்சனையில் வெடிக்கும்.மூன்றாவதாக
சமரசம் செய்துவைக்க முயலுவோர் மனதிலும் இருவர் குறித்த முன் மதிப்பீடும் ,அவரது பார்வைக்
கோணமும் இருக்கும் .
ஆக எந்த சமரசமும் ஒருவரை மகிழ்விக்கும் இன்னொருவரை
கோபப்படவே வைக்கும் .பிரச்சனை தற்காலிகமாக தீர்ந்தாலும் நீறு பூத்த நெருப்பாய் உள்ளுக்குள்
புகைந்து கொண்டே இருக்கும் . சுயவிமர்சனம் என்பதே இதிலிருந்து மீள முக்கிய ஆயுதம்
. அகத்தாய்வு எனவும் இதனைச் சொல்லலாம் .
முதலில் தன்னை சுயவிமர்சனம் செய்து கொண்டு
,பின்னரே அடுத்தவரை விமர்சனம் செய்ய வேண்டும் . கம்யூனிஸ்டு கட்சி கிளைகளில் ஆண்டுக்கொரு
முறை உறுப்பினர் புதுப்பித்தலின் போதும் இம்முறை கட்டாயம் கைக்கொள்ளப்படும் . ஆயினும்
வெறும் சடங்கு பூர்வமாக இதைச் செய்வதே பெரும்பாலும் நடைமுறையாக உள்ளதால்தான் பிரச்சனை
முற்றி கோஷ்டியாகிறது .
நிறுவனமோ .குடும்பமோ ,இயக்கமோ .தனிநபரோ அகத்தாய்வில்
தன்னை திருத்த பிழைகளை பகீரங்கமாக ஒப்புக் கொள்வதும் முதற்படி . இதனை உபதேசிப்பது எளிது
.அமலாக்கம் அப்படி அல்ல . என்னிடம் ,உங்களிடம் ,நம்மிடம் உள்ள ஈகோவே பெரும் தடைக்கல்
.
Su Po Agathiyalingam
No comments:
Post a Comment