Pages

Tuesday, 23 October 2018

சொல்.55




தினம் ஒரு சொல் .55 [ 24 /10/2018 ]
1968 ஆம் ஆண்டு எங்க குடும்பம் பிழைப்பு நிமித்தம் சென்னைக்கு இடம் பெயர்ந்த காலம் .நானும் குரோம்பேட்டை நேரு போர்டு உயர் நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பில் சேர்ந்த காலம் . பெரியாரைச் சந்திக்க ஆர்வம் கொண்டேன் . காரணம் நான் ஊரில் இருந்தபோதே பகுத்தறிவுவாதியாக மாறத் தொடங்கிவிட்டவன் .

மின்சார ரயில் ஏறி எழும்பூர் பெரியார் திடலுக்குச் சென்றேன் .பெரியாரைப் பார்க்க வதிருப்பதாய்ச் சொன்னேன் .அழைத்துப் போனார்கள் . பெரியார் என்னைப் பற்றி ,குடும்பத்தைப் பற்றி எல்லாம் விசாரித்தார் .

 “இப்பவே பகுத்தறிவா யோசிக்க ஆரம்பிச்சிருக்கீங்க ரொம்ப சந்தோஷம் .உங்க அம்மா அப்பா கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறாங்க ,மொதல்ல நல்லா படியுங்க,அப்புறம் எல்லாம் பார்த்துக்கலாம்…” என்று சொல்லி என்னை வழி அனுப்ப அந்த வயதிலும் எழுந்தார் .நான் உணர்ச்சி வசப்பட்டேன் .முதுகைத் தட்டிக் கொடுத்து அனுப்பி வைத்தார் .

நான் மெல்ல மெல்ல கம்யூணிஸ்ட்  ஆனேன் . பெரியார் ,அம்பேட்கர் தேவையை அன்றும் இன்றும் உள்வாங்கிபடியே கம்யூனிஸ்டாய் பயணம் தொடர்கிறேன் .யாராயினும் பயணம் தொடங்கிய இடத்திலேயே நிற்பதில்லை . எதெது இந்த சமூக அமைப்புக்குத் தேவையே எதெது சமூகம் முன்செல்ல தேவையோ அவற்றினூடே பயணிப்பது தவிர்க்க இயலாது.

ஆனால் திருநீற்றுப்பட்டை ,சிகப்பு பட்டுநூலில் கோர்த்த உத்திராட்சக் கொட்டை ,தலையில்முடிமுன்வெட்டு ,தேவாரம், திருவாசகம் என சைவப் பழமாய் வளர்க்கப்பட்ட சிறுவயதை அசைபோட்டுப் பார்க்கிறேன் .அதில் தேவாரம் ,திருவாசகம் ,வள்ளலார் வழி அறிந்த தமிழ் மட்டுமே என்னோடு இன்றும் தொடர்கிறது .

பொத்திப்பொத்தி வளர்த்தாலும் புத்தியைத் தீட்ட முயன்றால் முற்போக்கின் திசைவழி தவிர வேறில்லை . புத்தியை பக்திக்கு அடகு வைத்தால் குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டுவதைத் தவிர வேறு நாதியில்லை .முடிவு உங்கள் கையில் … இது என் அனுபவம் .உங்கள் அனுபவம் என்ன ?
Su Po Agathiyalingam




























































































No comments:

Post a Comment