
கொள்ளுத்தாத்தா சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டு - பாதிக் கண்ணை மூடிக் கொண்டு-தன் கடந்த கால வாழ்வை அசைபோட்டுச் சொல்லுகிற கதைகளை கேட்டதுண்டா நீங்கள்?
விருப்பு வெறுப்பு கடந்துவிட்ட அவர், காய்தல் உவந்தலின்றி சொல்லு கிற சமாச்சாரங்கள் சில சுவையாக இருக்கும், சில சலிப்பூட்டும், சில அதிர்ச்சிக்குள்ளாக்கும், ஆயினும் அவை ஒவ்வொன்றிலும் ஒரு செய்தி இருக்கும்.
டாக்டர் எ.பி. கோபிக்கர் எழுதிய என் வாழ்க்கைக் கதையை படித்த போது அதே உணர்வு ஏற்பட்டது. ஹோமி யோபதியின் மூத்த வல்லுநர் நம்மோடு பேசுகிறார் என்கிற உணர்வைவிட நம் சொந்தத்தாத்தாவின் பாச உரை யாடலாகவே இந்நூல் அமைந்து விட்டது.
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஆயிரம் கதை உண்டு. அவரவருக்கு ஆயிரம் அனுபவங்கள். அவை ஒவ்வொன்றும் சொல்லும் பல படிப் பினைகள் இருப்பினும் அவை எல்லாம் சுயசரிதையாகிவிடாது.
ஒருவர் ஆத்திகரா, நாத்திகரா என் பதைவிட, அவர் மனிதரா என்பதுதான் முக்கியம். கோபிக்கரின் வாழ்க்கைக் கதை அதைத்தான் சொல்லுகிறது. இவர் இறைஉணர்வு மிக்கவர். வைதீக மரபில் வளர்ந்தவர்; வாழ்ந்தவர். அதே சமயம் ஜாதகம் போன்றவை மூடநம் பிக்கை என அனுபவத்தில் கண்டவர்; நிரூபித்தவர். இளம் வயதிலேயே வித வையாகிவிடுவார் என்று ஜாதகம் கணிக்கப்பட்ட மாலினியை கைப்பிடித்து 50 ஆண்டுகாலம் இல்லறம் நடத்தியவர்.
இவர் பிறப்பால் கர்நாடகாவைச் சார்ந்தவர். வாழ்க்கை போராட்டத்தில் கர்நாடகம், மும்பை, கொல்கத்தா என அல்லாடியவர்; அலைக்கழிக்கப்பட்டவர். அவற்றை இயல்பாக இந்நூலில் பதிவு செய்கிறார். வழக்கமாக நமக்கு யாரேனும் நன்மை செய்திருந்தால் அநேகமாக மறந்துவிடுவோம்; அப்படியே நினைவு வைத்திருந்தாலும் கூறுவது மிக அரிது. அடுத்தவர் செய்த தீமைகளை மீண்டும் மீண்டும் குத்திக்காட்டி சுகம் காண்பது மனித குணமாகிப் போன உலகில், தம் வாழ்நாள் முழுக்க தாம் சந்தித்த தமக்கு உதவிய, தம்மை ஆற் றுப்படுத்திய ஒவ்வொருவரைப் பற்றியும் நன்றியறிதலோடு நினைவு கூர்கிற இவரது பண்பு நிச்சயம் நமக்கு சுய உறுத்தலை உருவாக்கும். எனக்கு அவ்வுணர்வு ஏற்பட்டது.
தினைத் துணையாக செய்த உதவியையும் பனைத்துணையாக கொள்கிற இவரது இயல்பு அடடாவோ...அடடா...
பாசத்தை காசு பணத்தால் அளக்க முடியாது என்பதை ஊறுகாய், அப்பளம் அனுப்ப பார்சலுக்கு அதிக பணம் செலவிட்ட ஒரு சம்பவத்தை அசை போட்டு தாம் உணர்ந்ததை நாம் உணர வைத்துவிட்டார்.
அன்பைப்பற்றி சங்கர்மாம் மூலம் தாம் அறிந்து கொண்ட செய்திகளை நம்மோடு ஆத்மார்த்தமாக உரையாடுகிறார். ஹோமியோபதி மருத்துவர்கள் மனிதர்களை நன்கு வாசிப்பவர்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். இந்நூல் அதனை மெய்ப்பிக்கிறது.
இன்று ஹோமியோபதி மருத்துவம் உரிய இடத்தை பெறத்துவங்கிவிட்டது; ஆனால் அத்தகு நிலை இல்லாத காலத்தில் தேவிதா பப்பா என்றழைக்கப்பட்ட தன் சித்தப்பா - சுதந்திரப் போரால் ஈர்க்கப்பட்டு தாடி வளர்த்தவர் - தந்த ஆதர்சமும் அறிவுரையும் கோபிக்கரை ஹோமியோபதி மருத்துவராக உயர்த்திட உதவியது. இதனை வார்த்தை சிலம்பங்கள் இன்றி தன் போக்கில் சொல்லி இருப்பது குறிப்பிடத்தக்கது.
தன் மனைவி முதல் பிரசவத்தின் போது பிரசவவலி துவங்கிய அன்று கூட தாங்கள் இருவரும் சினிமா பார்க்கச் சென்றதையும் - தியேட்டரிலேயே வலி துவங்கியதையும் படிக்கிறபோது அவர் ஒரு திறந்த புத்தகம் என்பது புல னாகிறது.
அவரது அறிவின் பயன் மற்றும் மனிதாபிமானத்தை அதிகம் நுகர்ந் தது தமிழகம். அவர் வாழ்ந்து பயணி த்த தமிழ் மண்ணில் அவர் வரலாற்றை தமிழ்மொழியில் கொண்டு வருவது அவருக்கும் தமிழுக்கும் நாம் செய்ய வேண்டிய கடமையாகும் என்று இந் நூலின் பதிப்பாசிரியர் டாக்டர். பி.வி. வெங்கட்ராமன் கூறுவது மிகையல்ல.
தற்செயலாக அவருக்கு கிடைத்த உதவிகளே அவரை பலநேரங்களில் தாங்கிக் கொண்டது; விழுந்துவிடாமல் பாதுகாத்தது என்பது அவரது உறுதி யான நம்பிக்கை. ஒரு வகையில் இதன் மீது அதீத நம்பிக்கைகூட அவருக்கு இருந்ததோ என எண்ண வைக்கிறது.
ஆன்மீக நம்பிக்கைகளுக்கு அப் பால் சிறந்த மனிதநேயராக - சிறந்த வாழ்க்கைப் போராளியாக - புத்தகப் பிரியராக - கற்றல் என்பது ஒரு முடி வற்ற நிகழ்ச்சிப் போக்கு என்ற எண்ணத்தோடு தொடர்ந்து கற்பவராக - இவ்வுலகை அதன் அழகை இயற்கையின் வியப்புகளை தேடித் தேடி தரிசிப்பவராக, பழகியவர்களை அன்பால் பிணைப்பவராக என பன்முக எ.பி. கோபிக்கர் தன் சுய கதையில் ஹோமியோபதி மருத்துவம் இந்த வகையில் உயர்வானது... பயனுள்ளது. எல்லோரும் பின்பற்றத்தக்கது என எங் கும் உபதேசம் செய்யவில்லை. பிரச் சாரம் செய்யவில்லை. ஆனால், அவ ரது வாழ்க்கை கதையோடு பின்னிப் பிணைந்து ஹோமியோபதி மருத்துவம் இருந்தது. இந்நூலிலும் அப்படியே இயல்பாக வெளிப்பட்டுள்ளது.
நினைவுக் குறிப்புகளாய் நூல் நகர்வதால் நாவல் போன்ற ஒரு தொடர் ஈர்ப்பு இல்லை. துண்டு துண்டாய் ஒட்டி யும் ஒட்டாமலும் சம்பவங்கள், செய் திகள், நினைவுகள், அவற்றுள் போரா ட்டம், சுய முயற்சி, நம்பிக்கை, பாசம், இலட்சியம் எல்லாம் உள்ளது. நுட்ப மான வாசிப்புக்கு உரியநூல். மொழி பெயர்ப்பு நன்று.
டாக்டர். எ.பி. கோபிக்கர், என் வாழ்க்கை கதை, தமிழில்: கீதா கிருஷ்ணா. பாரதி புத்தகாலயம். 421, அண்ணாசாலை. சென்னை- 600 018. பக். 176, விலை ரூ. 120.
ரொம்ப முக்கியமான மனிதரை மிகச்சரியாக அறிமுகம் செய்து விட்டீர்கள் தோழர்.
ReplyDeleteச.தமிழ்ச்செல்வன்