சுற்றுச்சூழல் சீரழிவு குறித்து கம்யூனிஸ்டுகள் கவலைப்படுவதில்லையே ....
கேள்வி :
இன்றைய உலகின் முக்கிய சவால்களான புவிவெப்பமாதல் , பருவநிலை மாற்றம் , சுற்றுச்சூழல் சீரழிவு இவை குறித்து தன்னார்வலர் அமைப்புகள் பேசுமளவுக்குச் செயல்படும் அளவுமக்குக்கூட கம்யூனிஸ்ட் இயக்கங்கள் செயல்படுவதில்லையே ஏன் ? வெறுமே ஏகாதிபத்திய எதிர்ப்பு என உதட்டில் உச்சரித்தால் போதுமா ? இன்றைய மிகப்பெரிய அச்சுறுத்தலானச் சுற்றுச்சூழல் அழிவு மற்றும் பருவநிலை மாற்றத்திற்கு (Climate Change) மார்க்சியத்திடம் தீர்வு உள்ளதா?
பதில் :
மேலே உள்ள கேள்வி பலரால் கேட்கப்பட்டவை . வசதிகருதி ஒன்றாக்கி உள்ளேன் .ஆம் அல்லது இல்லை என்று பதில் சொல்வது எளிதாக இருக்கும் , ஆயின் உண்மையை நெருங்காது .இந்தப் பிரச்சனைகள் அனைத்தும் எண்ணற்ற உப கேள்விகளை உள்ளடக்கியது . பேசப்பேச விரிந்துகொண்டே போகும் பொருள் இது . இந்தக் கேள்வி பதில் எல்லைக்குள் தொட்டுக்காட்டுவதே சிரமம்தான் . முயல்கிறேன்.
கதாநாயகன் vs வில்லன்
தேவர்கள் vs அசுரர்கள்
பாவம் vs புண்ணியம்
தீட்டு vs புனிதம்
நல்லது vs கெட்டது
கடவுள் vs சாத்தான் அல்லது பிசாசு அல்லது பேய்
என்பதுபோல் எதிரெதிர் வைத்து விளக்கிவிட இயலாது . ஏனெனில் எல்லாவற்றையும் இப்படித்தான் புரிந்து கொள்ள நாம் பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறோம் . ஆனால் முழு உண்மையைக் காண அப்போக்கு உதவாது .அது மார்க்சிய அணுகுமுறையும் அல்ல.
புவிவெப்பமாதல் , பருவநிலை மாற்றம் ,சுற்றுச்சூழல் சீரழிவு போன்றவை ஒற்றை இரவில் யாரோ ஒருவரால் வெடித்து முளைத்த பிரச்சனைகள் அல்ல .அறிந்தும் அறியாமலும் தேவையின் நிர்ப்பந்தத்திலும் மனித குலம் சிறுகச் சிறுகச் செய்த பிழைகளின் கூட்டுத்தொகையே இன்று நாம் அனுபவிப்பவை.
காடழித்து நகருண்டாக்கிய போதே இயற்கையோடு முரண் துவங்கி விட்டது , ஆனாலும் மனித குலம் இயற்கையோடு மல்லுக்கட்டி மல்லுக்கட்டித்தான் முன்னேறி உள்ளது . தொழிற்புரட்சி எவ்வளவு நன்மைகளைக் கொண்டுவந்ததோ அவ்வளவு எதிர்காலச் சவால்களையும் கொண்டு வந்தது . மூலதனம் எனும் தம் மாபெரும் படைப்பில் காரல் மார்க்ஸ் எல்லையற்று கனிமச் சுரண்டல் ,சூழல் மாசு குறித்து எச்சரிக்கிறார் .
இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாட்டிலும் இயற்கையை பற்றிய நவீன அக்கறையை முதலில் வெளிப்படுத்தியவர்கள் கம்யூனிஸ்ட் எனில் மிகை இல்லை . 1935 அக்டோபர் ’புதுவுலகம்’ ஏட்டில் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் “ உலகம் வறண்டு போகிறதா ?” என கேள்வி எழுப்பி கட்டுரை தீட்டி உள்ளார். அதில், “ எரிகிற நெருப்பை ஏறித் தள்ளுவது போல்” நாம் நம் அறியாமையால் அக்கேட்டை விரைவு படுத்திக் கொண்டிருக்கிறோம் என எச்சரிக்கிறார் .இது போல் சில கட்டுரைகளை அன்றைக்கே எழுதி உள்ளார் .
1930 களில் சிறையிலிருந்து தன் மனைவிக்கு எழுதிய கடிதத்தில் தன் குழந்தைக்குச் சொல்லுமாறு ஒரு குட்டி நாடோடிக் கதையை எழுதுகிறார் இத்தாலியச் சிந்தனையாளர் , கம்யூனிஸ்ட் அண்டோனியா கிராம்ஷி .
“ ஒரு நாள் இரவு வீட்டில் அடுப்பின் மேல் குழந்தைக்கு பாலைச் சுடவைத்து மூடி வைத்துவிட்டு தாய் குழந்தை அருகே படுத்திருக்கிறார் . ஒரு எலி மெல்ல நுழைந்து பாலைக் கொட்டிவிடுகிறது . குழந்தை பசியால் வீறிடுகிறது .தாய் பாலை எடுக்க வருகிறார் . அங்கு கொட்டிக் கிடக்கிறது .தாய் குழந்தையை கொஞ்சி தூங்க வைக்க முயல்கிறார் .குழந்தை பசியால் துடிக்கிறது .இதை ஒளிந்திருந்து பார்த்த எலிக்கு வருத்தம் உண்டாகிறது .
எலி குடுகுடென ஓடி பசுவிடம் கொஞ்சம் பால் கேட்கிறது . ”நானும் பசியாய் இருக்கிறேன் .புல் கொடு ! பால் கொடுக்கிறேன்” என்றது பசு .
புல்லைத் தேடி எலி ஓடியது . பொட்டலாய் கிடக்கிறது . எலி வந்த கதையைச் சொல்கிறது .”சரிதான் . ஆனால் நான் தண்ணீர் இல்லாமல் காய்ந்து கிடக்கிறேன்... கொஞ்சம் தண்ணீர் கொடு புல் தருகிறேன்” என பொட்டல் சொன்னது.
எலி மழையைத் தேடிச் சென்று மேகத்திடம் கேட்டது . மேகம் சொன்னது, “ காடு இல்லாமல் மழை எப்படி சாத்தியம் ? ஒரு மரமேனும் நடு நான் மழை தருகிறேன்.”
எலி தன் சக எலிகளோடு சேர்ந்து மரங்கள் நட்டன .மழை பெய்தது .புல் தழைத்தது .பசு பால் கொடுத்தது .குழந்தை பசி ஆறியது.
இக்கதை கேட்டு வளரும் என் மகன் இயறகையை நேசிப்பான் . சுற்றுச்சூழலைக் காப்பான் என்று சொன்னார் .
ஆக , சுற்றுச்சூழல் ,புவிவெப்பமாதல் , பருவநிலை மாற்றம் உள்ளிட்ட இயற்கையோடான சமநிலை பேனும் விவகாரத்தில் கம்யூனிஸ்டுகள் தாம் உண்மையில் அக்கறை கொண்டவர்கள் . களத்தில் வேறு பலரும் கவர்ச்சியாய் உரக்கப் பேசுகிறார்கள் .ஆனால் அவை அனைத்தும் ஒரு பக்கப் பார்வை .அது தீர்வை நோக்கித் தள்ளாது .
நான் ஓர் எளிமைப் படுத்தப்பட்ட உதாரணம் சொல்லுகிறேன் . கொஞ்சம் நாடகத்தனமானதுதான் ; ஆயின் புரிதல் வசதிக்காக ..... ஒரு தெரு முனையில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன .பன்றிகள் அதை கிளறி நாலபக்கமும் இறைப்பதுடன் நாற்றத்தையும் உசுப்பிவிடுகிறது . பக்கத்து குடிசைப் பகுதியில் பன்றி வளர்ப்போர் உள்ளனர் . இப்போது பழியை மொத்தமாக அவர்கள் மீது போட்டு அவர்களை அங்கே இருந்து துரத்த ஏற்பாடு செய்யலாம் . அதுதான் நடக்கும் .
ஆனால் , தீர்வு அதுவல்ல ; காரணமும் அதுவல்ல . பக்கத்து பெரிய ஹோட்டல்களில் இருந்து கொட்டப்படும் உணவுக் கழிவுகளே அவை ; மேலும் அங்குள்ள கல்யாண மண்டபத்திலிருந்து கொட்டப்படும் கழிவுகளுமே அங்கு மலையாய்க் குவியும் . முதலில் அவற்றை தடுக்கவும் ; பாதுகாப்பாக அப்புறப்படுத்தவும் ஏற்பாடு செய்தால் குப்பை மலை தகர்ந்துவிடும் .அதன் பின் பண்றிகளுக்கு அங்கு எதுவும் கிடைக்காது . பொது மக்களுக்கும் குப்பையை முறையாக அப்புறப்படுத்தப் பயிற்சி அளிக்கலாம்.
ஆனால் ‘ குடிசையும் பன்றியையையும்’ குறிவைப்பதும் பிரச்சாரம் செய்வது எளிது .அதைத்தான் தன்னார்வலர்களும் மேலோட்ட அறிவு ஜீவிகளும் செய்வர் . “ குடிசை அவர்கள் வாழ்விடம் .பன்றி வளர்ப்பு ஓரு தொழில் ;அவர்களின் வாழ்வாதாரம் .பிழைப்பு .அவற்றை பாதுகாக்க வேண்டும் . முறைப்படுத்த வேண்டும் . சுகாதாரமாகச் செய்ய பயிற்சி கொடுக்க வேண்டும் .”- இப்படி கம்யூனிஸ்டுகள் கோரிக்கை வைத்தால் அது பிழையா ? சுற்றுச்சூழல் அக்கறை இன்மையா ?
இந்த உலகம் வெப்பமயமாவதற்கும் , பருவநிலை பொய்ப்பதற்கும் , புவி இயற்கை சமநிலை குலைவதற்கும் , சுற்றுச் சூழல் மாசு கெடுவதற்கும் பிரதானமாக யார் காரணம் ? சோற்றுக்கில்லாத ஏழையா ? அடுப்பெரிக்க விறகு வெட்டிய பெண்ணா ? இல்லை .இல்லவே இல்லை . வரைமுறையின்றி தன் லாபவெறிக்காக இயற்கையச் சுரண்டியதும் சுரண்டிக் கொண்டிருப்பதும் கார்ப்பரேட்டுகள் அல்லவா ? அவர்களைப் பாதுகாக்கும் அரசுகள் ,சட்டங்கள் ,நீதிமன்றங்கள் ,காவல்துறை போன்றவை அல்லவா ? இதை முதன்மைப் படுத்தி தீர்வைத் தேடாமல் புவியைப் பாதுக்காக்க முடியுமா ?
இந்த கார்ப்பரேட்டுகளுக்கு ‘ சமூகப் பொறுப்புணர்வு’ என்கிற பெயரில் தன் வருவாயில் சிறுபகுதியை வரி இல்லாமல் செலவு செய்ய வழிகண்டுள்ளனர் . அதில் தன்னார்வ அமைப்புகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் நிறுவி ‘ மரம் நடுதல் ‘ ‘ இயற்கைக்கு திரும்புதல் ‘ என்றெல்லாம் கண்துடைப்பு நாடகம் ஆடுவார்கள் . ஃபோர்ட் , பில் கேட்ஸ் ,டாட்டா இப்படி பல சொல்லலாம் . இவர்கள் தீவிரமாகப் பேசினாலும் விஷ விருட்சத்தின் வேரை அடையாளம் காட்டாமல் கிளைகளை வெட்டுவது , சருகுகளை அப்புறப்படுத்துவது என திசை திருப்புகிற பணியையே செய்வர் .
உலகநாடுகளின் பல்வேறு மாநாடுகளின் பேச்சுக்கும் செயலுக்கும் சம்மந்தமே இருப்பதில்லை . இயற்கையை சீர்குலைக்கும் அமெரிக்கா ,பிரிட்டன் போன்ற ஏகாதிபத்திய நாடுகள் தன் பங்கை நிறைவேற்றாமல் ஏழை நாடுகளை மிரட்டும் . இதுதான் முதலாளித்துவம் .
சுற்றுச் சூழல் சவால்கள் மிகவும் சிக்கலானது. இதனைப் புரிந்து கொள்ள தட்டையான பார்வை ஒருபோதும் உதவாது .ஒரு பக்கம் எவ்வளவு கடுமையான சூழலில் சிக்கி இருக்கிறோம் , இனி மனித குலம் அவ்வளவுதான் எனத் தோன்றுகிறது . மறு பக்கம் கடுமையான முடிச்சுதான் ஆயின் அவிழ்க்க முடியும் என்கிற நம்பிக்கை ஏற்படுகிறது.
ஒவ்வொரு பிரச்சனையையும் தீர்வை நோக்கி நகர்த்தும் மனிதகுலம் ; ஒவ்வொரு தீர்விலும் புதிய பிரச்சனைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது . ஆயினும் அங்கே முடங்கி விட முடியாது முயன்று முன்னேறி புதிய தீர்வை நோக்கி நகர வேண்டி இருக்கிறது . மீண்டும் புதிய பிரச்சனைகள் … இப்படித்தான் வளர்ச்சியும் இருக்கும் அறிவியலும் இருக்கும் …
’ஓசோன் படலத்தில் ஓட்டை’ என்கிற பிரச்சனை ஓங்கி இருந்த 2000 ஆம் ஆண்டு நான் ஒரு பத்திரிகையாளர் குழுவில் சீனா சென்றிருந்தேன் அங்கு உரையாடும் போது சீனர்கள் சொன்னார்கள் “ ஓசோன் படலம் ஓட்டைவிழுவது உண்மைதான் ;ஆயினும் மீள முடியும் . இயற்கை தீர்வையும் தன்னுள் கொண்டுள்ளது.நாம் கொஞ்சம் திருந்தினால் போதும் “ நாங்கள் நம்பவில்லை . சீனா அதீதமாகப் பேசுகிறது என்றே கருதினோம். அறிவியல் அறிஞர் த.வி.வெங்கடேஸ்வரன் ஒரு கட்டுரையில் இதனை உண்மையென தெளிவு படுத்தி இருக்கிறார் . ஆம். இன்று ஓசோன் படலத்தில் ஓட்டை கிட்ட்த்தட்ட இல்லை .
புவி வெப்பமயமாவதில் இருந்து ’மீள மரம் நடும் விழாக்கள்’ ,’சூரிய ஆற்றல் மின்சார பரப்புரை’ என பொதுவாய் நாம் பேசும் எளிய தீர்வுகள் மட்டுமே முழுமையானதுமல்ல சிக்கலில்லாததுமல்ல . ஒரு தீர்வு இன்னொரு பிரச்சனைக்கு வழி கோலுகிறது .
“இஸ்திரி செய்யாத கசங்கிய ஆடையை அணிவது குற்றம் அல்ல ;தவறும் அல்ல. ஆனால் இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் காலநிலை மாற்றத்தை தடுப்பதில் நாமும் பங்கு வகிப்போம் எனக் கூறுவது ஏமாற்றுவேலை” என த.வி.வெங்கடேஸ்வரன் தம் கட்டுரை ஒன்றில் சுட்டி இருப்பது மிகை அல்ல .உண்மை .
“மீண்டும் பழமைக்குச் செல்வோம்” , ”கோவணம் உடுப்போம்” போன்ற வாதங்கள் சிக்கலின் இறுக்கத்தை முடிச்சை அறியாமல் மேம்போக்காகப் பேசுகிறவையே . அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியால் உண்டான பிரச்சனைகளுக்குத் தீர்வை , கற்பனையாகவோ பழமையான முறையிலோ கட்டமைத்துவிட முடியாது , மாறாக அறிவியல் தொழில் நுட்ப முன்னேற்றத்தில் சுற்றுச்சூழல் பார்வையை இணைத்தே தீர்வு காண முடியும். அதுதான் கம்யூனிஸ்டுகள் சொல்லும் வழி ,மார்க்சியம் கற்றுத்தருவது . வெட்டொன்று துண்டு இரண்டு என்கிற தன்னார்வக் குழுக்களின் அணுகுமுறைக்கு நேர் எதிரானது .அறிவியல் பூர்வமானது .
பெருகும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு , உடை , வாழ்விடம் , கல்வி ,
வேலைவாய்ப்பு ,குடிநீர் போன்றவற்றை அளிக்கத் திட்டமிடும் போது நாம் இயற்கையை பகைத்துக் கொண்டு இதனை செய்துவிட முடியாது .
“ அறிவியல் விரோத சூழல் அடிப்படைவாதிகளையும்,ஆளும் வர்க்கங்களின் வளர்ச்சி மற்றும் சூழல் தொடர்பான மக்கள் விரோதக் கொள்கைகளையும் ...” ஒரு சேர அம்பலப்படுத்தி எதிர்க்க வேண்டும் என ஒரு கட்டுரையில் வெங்கடேஷ் ஆத்ரேயா கூறியிருப்பது மிகச் சரியான அணுகுமுறை ஆகும்.
பொதுவாய் மரபணு தொழில் நுட்பம் ஆபத்தானது என்பது பொதுபுத்தியில் உறைந்துள்ளது .ஆயின் அதே மரபணு மாற்ற தொழில் நுட்பம் அதீத வெப்பத்தை தாக்குப் பிடிக்கும் தாவரங்களை உருவாக்கவும் பயன்படுத்த முடியும் என்கிறது தற்கால அறிவியல் .
“ வருங்காலத்தை நேர்மறை எண்ணங் கொண்டு நவீன தொழில் நுட்ப உதவி கொண்டு எதிர்கொள்வோம்.புவி சூட்டைத் தணிக்கும் முயற்சியில் ஈடுபடுவோம்.” இதுவே நம்பிக்கையின் குரல் .மார்க்சிஸ்ட் குரல் .
பொதுவாய் சூற்றுச்சூழல் தூய்மைவாதிகள் மார்க்சியத்தை எதிராக நிறுத்துவார்கள் .ஆனால் மார்க்சியம்தான் சுற்றுச்சூழல் குறித்த மெய்யான அக்கறை கொண்டிருக்கிறது . ஒருதலைப் பார்வையை கொள்ளாமல் ஒருங்கிணைந்த பார்வையைத் தருகிறது .
சுற்றுசூழல் நெருக்கடியின் பல்வேறு முகங்களை முனைகளை சிக்கல்களை நாம் புரிய முயல வேண்டும் . பிரச்சனைகளும் எளிதல்ல .தீர்வுகளும் எளிதல்ல .பிரச்சனைகள் ஒரே நாளில் வெடித்ததல்ல காலவெளியில் நாம் அறிந்தும் அறியாமலும் செய்தவற்றின் எதிர்வினைகளாகும் . ஆகவே தீர்வு ஒரே நாளில் ஒரே கஷாயத்தில் கிடைத்துவிடாது . நெடிய போராட்டம் . அறிவியல் பார்வையுடன்தான் போராடியாக வேண்டும் .அதற்கு மாற்று ஒரு போதும் இல்லை .
பெருகும் மக்கள் தொகைக்கு வாழ்வளித்துக் கொண்டே புவியைக் காப்பாற்றி அடுத்த தலைமுறையிடம் கையளிக்க நாம் நேற்கொள்ள வேண்டிய போராட்டத்தில் மார்க்சியமே நம்மை வழிநடத்தும் .
இத்துறையில் குவிந்துள்ள ஆங்கில நூல்களில் ஒரு சிறு அளவுகூட தமிழில் வெளிவரவில்லை . அதற்கு முயல வேண்டும் ஆழமாகப் பயிலாமல் அடிப்படைத் தீர்வை கண்டடைவது சாத்தியமில்லை .
[ ஆழமான கேள்வி என்பதால் பதில் கொஞ்சம் நீண்டு விட்டது. அரசியல் பயிற்சிக்கு இது அவசியம்தானே! ]
சு.பொ.அகத்தியலிங்கம் .
05 /09/26.
குறிப்பு : ஒவ்வொரு சனிக்கிழமையும் ‘கேள்வி -பதில்’ வெளிவரும் . நீங்களும் கேள்விகளை அனுப்பலாம்.

