சிறுகதை – 2.
[ பிரச்சார சிறுகதையே என உறுதி அளிக்கிறேன்.]
அதிமருதம் ராமசுப்பு …
சு.பொ.அகத்தியலிங்கம்.
ராமசுப்புவை உங்களுக்குத்
தெரியுமா ? மகாயோக்கியர் .இதை அவரே பலமுறை சொல்லியிருக்கிறார் .
நெற்றியில் திருநீற்றுப்
முப்பட்டை ,அதன்மேல் ஒரு சந்தணப் பட்டை , நடுவில் குங்குமம் என தெய்வ கடாட்சமாய்த்
திகழ்வார்.
இந்த கோலமே அவருக்கு
ஒரு பெரிய மனிதத் தோரணையைத் தந்திருந்தது .
அதிகாலை 4.30 மணிக்கு
கதவைத் தட்டிய வேணு என்கிற வேணுகோபாலுக்கும் இப்படித்தான் காட்சி அளித்தார் .
முதல் நாள் இரவு
10.30 மணிக்கு வீட்டில் சந்தித்தபோதும் இப்படியேதான் இருந்தார் . இரவு தூங்குவாரா என்பதுதான்
வேணுவுக்குச் சந்தேகம் .
அலுவலகத்தில் இவரைச்
சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும் .யாராவது கேட்ட கேள்விக்கு புராணத்தில் இருந்தோ
ஆன்மீக குட்டிக்கதைகளோ இல்லாமல் பதில் சொல்லவே மாட்டார் .
கொஞ்சம் நகைச்சுவை,
லெளகீகம் எல்லாம் கலந்து அடிப்பார். பெண்களுக்கு சமையல் டிப்ஸ் ,சடங்கு பூஜை டிப்ஸ்
கொடுப்பதில் மன்னன் . பெண் ரசிகர்களுக்கு கேட்கவா வேண்டும் ?
ஓய்வு பெற இன்னும்
ஐந்து வருடங்கள் உள்ளன . அதற்குள் டிப்பார்ட்மெண்டில் ஏ டி அதுதான் அசிஸ்டெண்ட் டைரக்டர்
ஆகிவிட முயன்று கொண்டிருக்கிறார் .
எல்லா ஜி ஓ க்களையும்
கரைச்சு குடிச்சுகிட்டு இருக்கார் . ஒருத்தன் மட்டும் இவனுக்கு பத்துநாள் சீனியராக
குறுக்க நிக்கிறான் . எப்படி அவனத்தள்ளிட்டு
மேலவரதுன்னு மூளையைக் கசக்கிட்டு இருக்கார் .
அலுவலக உணவு இடை
வேளையில் இப்போதும் அதே யோசனையில் இருந்தவரை , வழக்கம்போல பெண்களின் வருகை கலைத்துவிட்டது
.
“என்ன சார் ! ஏ
டி கனவுதானா ?” என சியாமளா கலாய்க்க ,
“ இல்லை … இல்லை
…சும்மா கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணினேன்” ன்னு சமாளித்த ராமசுப்பு வழக்கமான ரீலுக்கு தயாரானார்
.
“ சார் ! எவ்வளவு காசு வந்தாலும் கையில தங்கவே மாட்டேங்குது … என்ன செய்றதுன்னு புரியல…”
என பத்மா பல்லவி வைக்க ,ஹேமா ,ரெஜினா எல்லாம் ஒத்து ஊதினார்கள்
.
“ நான் சொன்னா கேலி செய்வீங்க இவ்வளவு கஷ்டத்துகும்
காரணம் நம்ம வீட்டில பொம்பளைங்க செய்ற சின்னத் தப்புதான் . அதைச் செய்யாமலிருந்தால்
பாதி கிணறைத் தாண்டிடலாம் .
அப்புறம் ஒரு சின்ன
விஷயத்தை மட்டும் செஞ்சீங்கன்னு வச்சுக்குங்க கைப்பணம் குறையாது கூடிக்கிட்டே போகும்
…”
” சொல்லுங்க சார்
! சொல்லுங்க சார் !” என கோரஸாக பெண்கள் கேட்க ,ஞானத் திமிரோடு சுற்றி நோட்டம் விட்டார்
.
ராமசாமி நெருங்கி
வந்து ஓர் நமட்டுச் சிரிப்போடு பார்த்துவிட்டு கொஞ்சம் தள்ளி உட்கார்ந்து அரட்டைக்
கச்சேரியில் பட்டும்படாமலும் இருந்தான். .
“ நம்புறவங்களுக்குத்தான் சொல்றேன் .. மற்றவங்க இந்தக்
காதுல கேட்டு அந்தக் காதுல விட்டுருங்க…” என்றார் ராமசுப்பு .
இது ராமசாமிக்குன்னு
எல்லோருக்கும் தெரியும்.
வழக்கமாக இவர்
அடிக்கிற டயலாக்தான் எனவே அதைப் பற்றி சட்டை செய்யாமல் , “ சொல்லுங்க சார்!”ன்னு வாயைக்
கிளறியது பெண்கள் ஜமா .
“ யாரும் என்ன தப்பா நினைக்காதீங்க .. பொம்பளைங்க
ஆபீஸ் போற அவசரத்துல காலையிலே சமையலெல்லாம் முடிச்சிட்டு , ஒரு வாய் காபிய குடிச்சிட்டு
…”
“ அதுகூட நாங்க
குடிக்கிறதுக்குள்ளே ஆறிஅலந்து போகுது…”
“ சரி ! அத குடிச்சிட்டு அப்புறம்தான் குளிக்கிறீங்க
, ஆபீஸ் கிளம்புறீங்க… அதுதான் தரித்திரத்துக்கு மூல காரணம் ,
காலையில பிரம்ம
முகூர்த்ததில குளிச்சிடணும் … அதுக்கு முன்னாடி அடுப்படிய தொடைச்சி சுத்தமாக வச்சிடனும்
…”
“ பிரம்ம முகூர்த்தம்னா ?” பத்மா சந்தேகம் கேட்க
“ காலையில 4 -
4.30..”
“ சார் ! அது வேறொண்ணுக்கு நல்லதுன்னு அண்ணைக்குக்கு
கணேசனுக்கு உபதேசம் செஞ்சிங்க..” என ராமசாமி குறுகே புகுந்தான்.
“ ராமசாமி ! அது புதுசா கல்யாணமானவங்களுக்கான டிபஸ்…”
என நெளிய பெண்களும் புரிஞ்சுகிட்டு கமுக்கமா சிரிச்சாங்க…
“ ராமசாமி ! உனக்கு பிடிக்கைலைன்னா விடு ! குறுக்க
வராதே “ என ராமசுப்பு ஒரு தடா போட்டு பின் தொடர்ந்தார் .
“ பிரம்ம முகூர்த்தத்தில குளிச்சிட்டு மற்ற காரியங்கள
கவனியுங்க பிராப்ளம் பாதி ஓவர்..”
“ சார் ! மீதி ?” என சியாமளா கொக்கி போட , புன்சிரிப்போடு
தம் அஸ்திரம் வேலைசெய்ய துவங்கிவிட்ட திருப்தியில் தொடர்ந்தார் ;
“ அதிமருதம் அதிமருதம்னு ஒரு மூலிகை இருக்கு . அது உங்களுக்குத் தெரியும்
, அது எப்படி நம்ம முகத்தை சாப்டா வைக்க ஹெல்ப்பண்ணும்னு ஏற்கனவே சொல்லியிருக்கேன்
..
இந்த அதிமருதத்தை
பற்றி நம்ம வேதங்களிலே பிரம்மாதமா சொல்லி இருக்கு , அதை கொஞ்சம் வாங்கி சின்ன சின்னதா
வெட்டி ஒரு சுத்தமான கிண்ணத்தில போட்டு
…..
வெள்ளிக் கிண்ணம்மா
இருந்தா இன்னும் விஷேசம் , நெய்யில ஊறவச்சு
பூஜை அறையில வையுங்க மறு நாள் எடுத்து நல்ல தொடச்சி மஞ்சள் குங்குமம் வச்சி …”
“ இதை எல்லாம் குளிச்சிட்டு செய்யணுமா ?” – இது கிரிஜாவின்
சந்தேகம்.
“ கண்டிப்பா எல்லாமே குளிச்சதுக்கு அப்புறம்தான்
… சுத்தபத்தமா இருக்கச்சதான் செய்யணும் … அந்த நாட்களிலே செய்யக்கூடாது ..”
கிரிஜாவுக்கு எல்லாம்
விளங்க சிரத்தையோடு தலையாட்ட , தொடர்ந்தார்,
“ அந்த குச்சிகள குத்து விளக்கு மூன்னாடியோ சாமிபடம்
முன்னாடியோ வச்சு குலதெய்வம் நாமத்தை நூறுதரம் ஸ்தோத்திரித்து பூ தூவி வணங்கணும் .
இப்ப அது அதிமருதமல்ல
அபூர்வ சக்தி கொண்ட வஸ்து .அதை உங்க பீரோல ரூபாமேலேயோ நகையேலேயோ அரிசி பாணையிலேயோ வச்சிடுங்க
பணம் சேருமே தவிர குறையாது ,
ரெஜினா நீங்க இந்த
குச்சிய வச்சு ஒங்க ஏசுநாதரை கும்பிடுங்க அது போதும் எல்லா சாமியும் ஒண்ணுதான் ” சொல்லிகிட்டு
சிவ… சிவா என பக்தியோடு கன்னத்தில் போட்டுக்கொண்டார் .
“ சார் ! இத நம்ம பினான்ஸ் மினிஸ்டர் நிர்மலா சீத்தாராமண்ட்ட
சொல்லக்கூடாதா ? நம்மள இப்படி ஜிஎஸ்டி ,பெட்ரோல்விலை ,கேஸ்விலைன்னு தாளிக்காம இருப்பாங்கள்ள…
“
என்று ராமசாமி
வெடிகுண்டை வீச ,கூடியிருந்தோர் கொல்லென சிரிக்க
ராமசுப்பு மூஞ்சி அஷ்ட கோணலானது…
“ நீ எதையும் ஒத்துக்க மாட்டே … ஆளவிடு …”
கூட்டம் கலைந்தது
. “ஆபீஸ் போற பொம்பள கஷடம் தெரியாம பிரம்ம
முகூர்த்தம் சிவ முகூர்த்தம்னு கதை விடுறாங்கப்பா …
காலையில டிபனையே
பஸ்ல ரயிலிலே சாப்பிடுறதாப் போச்சு நம்ம பொளப்பு ..” பத்மா அங்கலாய்க்க எல்லோரும்
“ஆமாம்” போட்டபடியே நகர்ந்தனர்.
“ சார் ! அதைவிடுங்க காலையில என் சீட்ல வந்து தேடுனீங்களாமே..”
என ராமசாமி சாதாரணமாக பேச்சை மடைமாற்றக் கேட்டான் .
“ ஒண்ணுமில்ல ராமசாமி ! நம்ம அப்ளிகேஷன் எந்த நிலையில
இருக்குன்னு ..கேட்கத்தான் வந்தேன் ..” ராமசுப்பு யதார்த்தமாகச் சொல்ல …
“ அந்த லோண்
அப்பிளிகேஷன்தானே …நெக்ஸ்ட் மண்டே வந்திரும்னு” இப்படி சொன்ன ராமசாமி அத்தோடு நிக்காமல்
குறும்போடு ஒரு கேள்வியைக் கேட்டான் ,
“ ஏன் சார் ! உங்க
வீட்ல இந்த அதிமதுரக் குச்சி எல்லாம் இல்லையா ?”
பெண்கள் கூட்டம்
சிரித்தபடியே திரும்பிப் பார்த்தது .
ராமசுப்பு பல்லைக்
கடித்தபடி ராமசாமியைத் திரும்பிப் பார்த்தார்.
அப்புறம் ஓர்நாள்
வழக்கம் போல் ஆபீஸில் நுழைஞ்ச ராமசுப்பு கிரிஜாவைக் காணமால் துளாவினான் , “ சார் ! கிரிஜாவுக்கு ஜேண்டீசாம் …” சியாமளா சொல்ல
; மெல்ல எல்லோரும் அங்கே கூடனார் .
“ அதுக்கு பயப்படவே தேவையில்லை . உப்பில்லாம மோர்
ஊற்றி பழைய சாதம் சாப்பிடணும் ஒரு வாரம் கீழாநெல்லி சாற்றை மோர்ல கலந்து வெறும் வயிற்றில
குடிக்கணும் …
சுற்றி ஒரு முறை
பார்த்திட்டு … ஒரு தட்டுல கொஞ்சம் துளசி , வில்வம் ,சாமந்திப்பூ , குங்குமம் , ஒரு
எலுமிச்சம் பழம் ஐந்தையும் வைத்து சாமி முன்னால வைத்து கும்பிடணும் … எல்லா கஷ்டமும்
பறந்தே போயிடும்…” ஒரு பெரிய பிரசங்கமே அடித்து முடித்தார் ராமசுப்பு .
“ கீழாநெல்லி லிவருக்கு நல்லதுதான் . ஆனா எதையும்
மருத்துவ ஆலோசனை பெற்றே செய்யணும் .மஞ்சக்கா மாலை பல வெரைட்டி இருக்கு .சாதாரணமா வர்ற
ஜேண்டிஸ்க்கு கீழாநெல்லியும் பழைய சோறும் மோரும் போதும் ,…” என ராமசாமி முடிக்கும்
முன்பே…
“ அதத்தான அவரும் சொன்னாரு , கீழாநெல்லி சாப்புடுறதில
உங்களுக்கு என்ன பிரச்சனை…” என சியாமளா கேட்டார்
“ நான் அதை வேண்டாம்னு சொல்லலை ஆனால் ஒயிட் ஜெண்டீஸ்
ரொம்ப ஆபத்து ; இன்னும் பல இருக்கு …
நம்ம ஆபிஸிலேயே
மணிகண்டன் சார் மாதிரி சொன்னவங்க பேச்ச கேட்டு நடந்து நோய் முற்றி ஆஸ்பத்திரியில சேர்ந்து
அப்புறம் மீண்டார் தெரியுமில்லையா ?
நோய் பாதிப்பு
எவ்வளவுன்னு தெரிஞ்சு வைத்தியம் செய்யுங்க பிளட் , யூரின் செக் பண்ணச் சொல்லுங்க …
டாக்டர பார்த்து
யோசனை கேளுங்க.. எல்லோரும் வைத்தியராகிராதீங்க… வாட்ஸ் அப் வைத்தியம் ரொம்ப ஆபத்து…”
“ இதுக்கெல்லாம் இங்கிளீஸ் வைத்தியம் சரிப்பட்டு
வராது சார் ?” பத்மா சொன்னார் .
“ நான் இங்கிளீஸ் வைத்தியம் ,தமிழ் வைத்தியம் ,மலையாள
வைத்தியம்னு சொல்லலையே ..
மொறையா படிச்ச
வைத்தியரைக் கேளுங்க ..
இரத்த பரிசோதனை
, சிறுநீர் பரிசோதனை போன்ற மருத்துவ விஞ்ஞானம் இங்கிளீஸ் வைத்தியத்துக்கு மட்டுமானதல்ல
…
மருத்துவ விஞ்ஞானம்
எல்லோருக்குமானது…”
மெல்ல கூட்டம்
கலைந்தது .நாட்கள் வேகமாய் ஓடின .
நீண்ட மருத்துவ
விடுப்புக்குப் பின் கிரிஜா அலுவலகம் வந்தார் . எலும்பும் தோலுமாய் ஒட்டி உலர்ந்து
இருந்தாள் .ஒவ்வொருவராய் வந்து விசாரித்தபடி இருந்தனர் .ராமசுப்புவும் ராமசாமியும்
ஏதோ பேசிக்கொண்டே அருகே வந்தனர் .
“ ராமசாமி சார் ! ரொம்ப நன்றி ! நீங்க அண்ணைக்கு
கட்டாயபடுத்தி டாக்டர்ட்ட கூட்டிட்டு போகலைன்னே நான் இண்ணிக்கு உயிரோடு வந்திருக்க
மாட்டேன் .
அது வெறுமே மஞ்சள்காமாலை
மட்டுமல்ல என் லிவரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது … ஜெஸ்ட் எஸ்கேப்ன்னு சொல்லுவாங்களே
அதுபோல தப்பி பிழைச்சு வந்திருக்கேன் சார் !
நீங்க சொன்னது
நூற்றுக்கு நூறு உண்மைதான் சார் ! வாடஸ் அப் வைத்தியமும் வாய்ச்சவடால் வைத்தியமும்
சாவை வெற்றிலை பாக்கு வச்சு அழைக்கிறதுக்கு சமம் …”
ராமசுப்பு பேச்சற்று நின்றான்.
அலுவலகத்தில் விரைவில்
ஓய்வுபெறப்போகும் சியாமளாவுக்கு வழியனுப்பு விழா நடத்துவது பற்றி மாலையில் எல்லோரும்
கூடிப் பேசிக்கொண்டிருந்தனர்.
அங்கே வந்த ராமசாமி
, “ வாழ்த்துகள் ராமசுப்பு சார் ! தெரியுமா சேதி , வேணுகோபால் சார் விஆர்எஸ் கொடுத்திட்டாரு
..இனி நீங்க தான் ஏ.டி …” என புதுத்தகவலைச் சொல்ல எல்லோரும் வாவ் என சந்தோஷக் கூச்சலிட்டனர்
.
“ நான் செஞ்ச பூஜை என்ன கைவிடலை”,என சொல்லி வானத்தைப்
பார்த்து கும்பிட்டார் .
அந்த நேரம் பார்த்து
, வேணுகோபாலும் அங்கே வந்தார் .அவரைச் சுற்றி எல்லோரும் சேர்ந்தனர் . ஆளுக்காள் விசாரணை
.
வேணுகோபால் விளக்கம்
சொன்னார் , “ உங்களுக்குத் தெரியும் தானே ஒய்ப் நெல்லூர்ல டீச்சர் .நான் இங்கு வாரவாரம்
போய்வந்து போய்வந்து சோர்ந்து போயாச்சு .
அவ ரிட்டயர்ட்
ஆக இன்னும் பத்து வருஷம் இருக்கு எனக்கு ஐஞ்சு வருஷம்தான் .குழந்தையா குட்டியா ஏன்
ஆளுக்கொரு பக்கம் கிடக்கணும் ?
அவா ஸ்கூல்ல குழ்ந்தைகளோட
இருந்தாத்தால் சந்தோஷமாக இருப்பா .. அதனால பேசி நான் விஆர்எஸ் கொடுத்திட்டேன் …
நான் சிறிய அளவு
புக் டிரான்ஸ்லேஷன் செய்றது உங்களுக்குத் தெரியும்தானே இனி அதுல முழுசா இறங்கலாம்ன்னு இருக்கேன்…”
வேணுவின் முடிவில்
நியாயமும் தர்க்கமும் இருப்பதைக் கண்டு எல்லோரும் பாராட்டினர் .
கூட்டம் முடிகிற
நேரத்தில் வந்த அட்டண்டர் சாமிக்கண்ணு நேராக ராமசுப்பு காதில் ஏதோ கிசுகிசுத்தான்
.
“ அப்பாடா ! நிம்மதி!”ன்னு
ராமசுப்பு ஆசுவாசமானார் .
என்ன பேசியிருப்பார்
,கிட்டத்தட்ட எல்லோருக்கும் ரகசியமாக தெரிந்த சேதிதான் ,
வாங்கிய கடன் வட்டியும்
அசலுமாய் கழுத்தை நெரிக்க ராமசுப்பு திணறினார் இரண்டுநாளா வேணுவும் சாமிக்கண்ணும் ஈட்டிக்காரண்ட்ட
பேசி வட்டியத் தள்ளுபடி செஞ்சு அசல மட்டும் பத்து தவணையாக கொடுக்க வழி செய்தனர் .கடைசியாக
அத ஒப்புக்கொண்ட சேதிதான் அது .
ராமசுப்புவின்
புனிதம் மெல்ல கரைந்து கொண்டிருந்தது . பிள்ளகுட்டி இல்லாத ராமசுப்புவுக்கு அப்படி
என்னதான் செலவு , மாதமாதம் திருப்பதி போறாரா அந்த செலவோ பத்மாவும் ரெஜினாவுக் குசுகுசுவென
பேசிக்கொண்டிருந்தனர் .
இதற்கிடையில் ஓயுபெறப்போகிற
சியாமளா ஒவ்வொருவரிடமும் அந்நியோன்யமா பேசி அவரவருக்கு தனித்தனியாக மெஜேஸ் சொல்லிகிட்டு
வந்தா ராமசுப்பு அருகே வந்தவர்,
“ சார் ! நீங்க வேலையில சேரும் போது உங்க நாமனியா
உங்க அம்மாவ போட்டீங்க ,உங்க அம்மா இறந்தாச்சு இன்னும் நாமனிய மாற்றவே இல்லையே..”
“ அது என்ன மேடம் கேள்வி , செளமியா மாமிதானே சட்டப்படி
வாரிசு” – கிரிஜா அப்பாவியா தெரியாத மாதிரி கேட்க ,
“ அதெப்படி சட்டபூர்வமாக கல்யாணம் பண்ணிக்கிட்ட கனகா
மாமி திருப்பதியிலே இருந்து தடியோடு அடிக்க வரமாட்டாங்க..” என வேணு விஷயத்தைப் போட்டுடைக்க
, அலுவலகத்தில் லேசுமாசாக உலவின செய்தி முழுசா அம்பலமாச்சு …
ராமசுப்பு மெல்லவும் முழுங்கவும் முடியாமல் தவித்து
நின்றார் ..
திருப்பதி சமாச்சாரம் கடன் சமாச்சாரம்
என எல்லாம் ராமசுப்புவை மவுனமாக்க … ஆளுக்காள் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துகிட்டு சிரிப்பை
முழுங்கிகிட்டு நின்னாங்க .
“ சார் ! ஊருக்கெல்லாம் அதிமருத டெக்னிக்கை சொன்ன
நீங்க கனகா மாமி,செளமியா மாமி இரண்டு பேருக்கும் சொல்லவே இல்லையா ?” ராமசாமி நேரம்
பார்த்து வெடியை வீச
எல்லோரும் கொல்லென
சிரித்தனர் .
அதில் சிந்தனை
பொறந்திருக்குமோ ?
( அதிமருதம் விவகாரம் ஓர் வாட்ஸ் அப் குழுவிலும் முகநூலிலும் படித்தது.)
***
0 comments :
Post a Comment