Pages

Tuesday, 16 August 2016

இன்னொன்றாகவும்….




இன்னொன்றாகவும்….

சு.பொ.அகத்தியலிங்கம்.

ரணம் என், உன் கதவைத் தட்டும் வரை
அடுத்தவர் மரணம் பற்றி பேசலாம் !

ஒவ்வொரு மரணமும் இழப்பு அவர் சார்ந்தவருக்கு
ஒவ்வொரு மரணமும் மகிழ்ச்சி எதிரிகளுக்கு
ஒவ்வொரு மரணமும் செய்தி ஏனையோருக்கு
எப்படியோ ஒவ்வொரு மரணத்திலும்
ஏதோ இருக்கிறது ஒவ்வொருவருக்கும் மெல்ல

அது என்னவோ  தெரியவில்லை  -இங்கே
மரணத்தை பற்றி பேசுவதே தத்துவம் ஆகிவிட்டது
ஆனாலும் இறந்தவரைத் தவிர யாருக்கும்
வாழ்க்கை எந்த மரணத்தோடும் முடிவதில்லை


பட்டினி சாவுகளும், கடன் தற்கொலைகளும்.
ஆணவக் கொலைகளும்,ஆதாயக் கொலைகளும்
பசு புனித படுகொலைகளும்,காதல் கொலைகளும்,
சாதி ,மத வெறிக் கொலைகளும்,
சிசுக் கொலைகளும் ,கருக்கொலைகளும்,
மருத்துவக் கொலைகளும் ,கல்விக் கொலைகளும்,
வழக்கம் போல் மரணப்  பட்டியலில் அடங்குமோ ?

ஆக, மரணங்கள் எல்லாம் ஒன்றல்ல
ஒவ்வொரு மரணத்திலும் ஒரு செய்தி உண்டு
ஒவ்வொரு மரணத்திலும் ஒரு துக்கம் உண்டு
ஒவ்வொரு மரணத்திலும் ஒரு விழிப்பு உண்டு
ஒவ்வொரு மரணத்திலும் ஒரு கோபம் உண்டு
ஒவ்வொரு மரணமும் இன்னொன்றாகவும் ஆவதுண்டு
எல்லாவற்றையும் அப்படியே கடந்து போவது நன்றன்று !

மரணம் மட்டுமே தத்துவத்தின் உள்ளுறை அல்ல
வாழ்வதற்கானது தத்துவம்
போராடுவதற்கானதே தத்துவம்
சமூகவாழ்வை தலைகீழாய் மாற்றும்
தத்துவம் உண்டு அதன் பெயர் மார்க்சியம் .

மரணத்தைப் பற்றிய கவலையை மிஞ்சட்டும்
வாழ்வதற்கான போராட்ட கலை !



ஆகஸ்ட் 15


ஆகஸ்ட் 15


இன்று துக்கநாளல்ல
ஆனாலும் சந்தோஷம் முன் போல் இல்லை…..

தியாகம் அளப்பரியது
அடிமை விலங்கொடித்தது
அரசியல் சுதந்திரம் ஆர்ப்பரித்தது
இது ஆரம்பம்தான்
சமூக சமத்துவமும்
பொருளாதார சமத்துவமும்
அடுத்தடுத்து விளையுமென
கனவுகள் இறக்கைகட்டின…

இன்று துக்கநாளல்ல
ஆனாலும் சந்தோஷம் முன் போல் இல்லை…..

வார்த்தைத் தோரணங்களில்
வாழ்க்கை மலராது!
வேதக் கனவுகளில்
விமோச்சனம் கிடைக்காது!
மதமும் சாதியும் மனிதனைக் கொல்ல
மாட்டின் புனித பஜனை கீதம்!
தேசத்தை விற்பவர்கள்
தேசபக்தியை உபதேசிக்கின்றனர்!

இன்று துக்கநாளல்ல
ஆனாலும் சந்தோஷம் முன் போல் இல்லை…..

நீதி ,நிர்வாகம்,காவல் ,ஆட்சி,அதிகாரம்
எதுவும் உழைப்பவனுக்காவும் இல்லை
ஒடுக்கப்பட்டவனுக்காகவும் இல்லை
வலுத்தவனும் வர்ணத்தின் உச்சியிலிருப்பவனும்
வகுத்ததே வாய்க்காலாகிறது ! அதிகாரம் வாலாட்டுகிறது !
ஊடகமும் கலைகளும் அதையே ஊதிமுழங்குகிறது
புழுவாய் நெழிந்தால் தீராது ! முக்கி முனகினால் முடியாது !
எழு ! சீறு ! பறை முழங்கு ! எக்காளம் ஊது ! கொதிநிலை எய்துக !

இன்று துக்கநாளல்ல
ஆனாலும் சந்தோஷம் முன் போல் இல்லை
ஒன்றை மட்டும் உறுதியாய்ச் சொல்லலாம்
எல்லாவற்றுக்கும் நிச்சயம் எதிர்வினை உண்டு !

ஜெய் பீம் ! லால் சலாம் !
இன்குலாப் ஜிந்தாபாத்!